நடராஜ ஜோதி !


(சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயம், 21.12.2018, நள்ளிரவு 11.55 மணி முதல்)

கோயில் என்றாலே பொருள்படுவது. ஆனந்த நடராஜராஜர் எப்பொழுதும் ஆனந்த நடனமிடுவது. வேண்டும் வரங்களை உடன் அருள்வது. தரிசித்தால் முக்தி தருவது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாச ஸ்தலமாக விளங்குவது. சித்ஸபையில் நடராஜர் உருவம், அருவம், உருவ அருவமாக காட்சி தரும் ஸ்தலம். சிதம்பர ரகசியம் விளங்குவது. அனைத்து தெய்வங்களும் ஆனந்த நடனப் பெருமானை தொழுதெற்றும் தலமாக விளங்குவது.

ஸ்ரீ நடராஜ ராஜர் :  அனைத்து தெய்வங்களும் தொழுதேற்றக் கூடியவர். ஆயுதங்கள் ஏதும் ஏந்தாமல் வாழ்விற்கு மிக அவசியமாகிய ஒலிக் கருவியையும் (டமருகம்), ஒளிக் கருவியயும் (தீச் சுடர்) கரங்களில் ஏந்தியவர். கோடி சூர்ய பிரகாசராக விளங்குபவர்.

சிதம்பர ஸபாநாத ஆனந்த தாண்டவம் :
பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத மகரிஷிகளின் பெருந்தவத்திற்கு வரம் தரும் விதமாக, கைலாயத்திலிருந்த வந்த பரமேஸ்வரன், முன்னர் கொடுத்த வாக்கின்படி, தில்லை ஸ்தலத்தில், இரு திருவடிகளில் ஒன்றை முயலகன் எனும் அரக்கன் மீது ஊன்றி நிறுத்தி, மறு திருவடியைத் தூக்குவதில் தொடங்குகிறது ஆனந்த நடனம்.
அண்ட சராசரமனைத்தையும் ஆட்டுவிக்கும் நாயகன் தன் ஆட்டத்தைத் துவங்குகிறார்.

காலில் சிலம்புகள் சிலம்புகின்றன. வலக்கையில் உள்ள டமருக ஒலி அண்டம் எங்கும் பரவுகின்றது. இடக்கயில் உள்ள அக்னி ஒளி பால் வெளியெங்கும் திரள்கிறது. முகத்தில் புன்னக பூக்கின்றது. தனது ஆட்டத்தில் மயக்கம் கொண்ட, அருகிலிருக்கும் சிவகாமியை சற்றே திரும்பிப் பார்க்கும் பார்வை. தலையில் கொக்கிறகும், ஊமத்தம் பூவும் அலங்கரிக்க, உதரபந்தம் விரிய, மார்பில் துலங்கும் ஆதிவராகக் கொம்பு அசைய, பனியால் நனைந்த தலையிலிருந்து கங்கையின் நீர்த்திவலைகள் திசையெங்கும் சிந்த, உடல் முழுவது பூசிய வெண்ணீறு சிதற ஆட்டம் நிகழ்கிறது.
இந்திரன் புல்லாங்குழல் இசைக்க, தும்புரு கீதம் ததும்ப, பிரம்மா தாளம் போட, சரஸ்வதி வீணை மீட்ட, சிவகணங்கள் எழுப்பும் ஜம் ஜம் எனும் தாள சப்தம் எழ, ரிஷிகளின் வேத கோஷம் விண்ணை முட்ட, நந்தி மத்தளம் வாசிக்க, விஷ்ணு முரசு கொட்ட, லக்ஷ்மி மதுரகீதம் பாட, பானுகம்பன், பாணாசுரன் எழுப்பும் சங்கு முழக்கத்தினாலும், ஓங்கார நாதத்தாலும் விண்ணதிர, ஆனந்தத்தில் விநாயகராட, மயிலோடு குமரனாட, தேவ கன்னியராட, நட்டமாடும் நம்பெருமானின் ஆட்டத்தினை, நெஞ்சம் உருக, ஆனந்தக் கண்னீர் சொரிய, பரவச நிலையை சிரிப்பார், களிப்பார் என்பதன்படி, முன்னம் செய்த தவப்பயனின் விளைவாக அனைவரும் திருநடனத்தினைக் காணப் பெறுகின்றனர்.
நடராஜராஜரின் அற்புத ஆனந்த நடனம் இன்றும் என்றும் நடக்கிறது.

உத்ஸவம் : சிதம்பரத்தில் இரு பெரும் உத்ஸவங்கள் காலம் காலமாக நடைபெறுகின்றது. ஒன்று ஆனித் திருமஞ்சனம் மற்றொன்று மார்கழி ஆருத்ரா தரிசனம். ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பெரியோர்கள் வகுத்திருக்கிறார்கள். 1. தக்‌ஷிணாயணம், 2. உத்த்ராயணம். இந்த இரு அயன காலங்களிலும் நடராஜப் பெருமான் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
(ஆனித் திருமஞ்சன மஹோத்ஸவம் பற்றி மேலும் விபரங்கள் அறிய கீழ்க்கண்ட லிங்க் செல்லுங்கள்.http://natarajadeekshidhar.blogspot.com/2010/06/blog-post.html
&

மார்கழி ஆருத்ரா தரிசன மஹோத்ஸவம் பற்றி மேலும் விபரங்கள் அறிய கீழ்க்கண்ட லிங்க் செல்லுங்கள்.
http://natarajadeekshidhar.blogspot.com/2009/12/01.html)

ஆறு கால பூஜைகள் : நடராஜப் பெருமானுக்கு நாள் ஒன்றுக்கு ஆறு கால பூஜைகள் நடைபெறும். 1. காலசந்தி, 2. மதிய வேளை இரண்டாம் காலம், 3. உச்சிகாலம், 4. மாலை சாயரக்‌ஷை, 5. இரவு இரண்டாம் கால பூஜை, 6. இரவு பத்து மணிக்கு அர்த்தஜாம பூஜை.

ஒவ்வொரு கால பூஜையிலும்,  நடராஜப் பெருமான் தனது சந்திர கிரணங்களில் இருந்து திரட்டிப் பெற்று, நித்திய ஆறு கால அபிஷேக பூஜைக்காக         தீக்‌ஷிதர்களிடம் தந்தருளிய ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். (நித்யம் ஷட்கால பூஜாம் .. எனும் 15ம் செய்யுள், குஞ்சிதாங்கிரிஸ்தவம், உமாபதி சிவம்)

முன்பொரு சமயம், பிரம்மா அந்தர்வேதி எனும் இடத்தில், பூஜைகளையும் யாகங்களையும் சிறப்புற செய்திடும் தீக்‌ஷிதர்களைக் கொண்டு, சிறப்பு வேள்வி செய்ய, இடைப்பட்ட நேரத்தில் உணவு அருந்த அனைவரையும் அழைக்க, தீக்‌ஷிதர்களோ அம்பலவாணரைக் காணாமல் அன்னம் புசிக்க மாட்டோம் என கண்டிப்புடன் சொல்லிட, ஹோமம் செய்திட்ட பலன் கிடைக்காமல் போய்விடுமே என்று அஞ்சி, தீக்‌ஷிதர்களுக்கு குறைவு வராமல் இருக்க வேண்டுமே என்பதற்காக, சிவபெருமானை வழிபட, வேண்டுவோருக்கு உடனடியாக வரமளிக்கும் வள்ளற்பிரானாகிய சிவமூர்த்தி, அந்த யாக வேள்வியில் தோன்றி தீக்‌ஷிதர்களுக்கு காட்சி அளித்ததோடு நில்லாமல், தனது அம்சமாக ரத்ன ஸபாபதி எனும்  அற்புத வடிவை வழங்கினார். பிரம்மாவின் அந்தர்வேதி யாகம் சிறப்புற நடந்தேறியது. அந்த ரத்ன ஸபாபதியை தமது நித்ய அபிஷேக ஆராதனைகளுக்காக தில்லை கொண்டு வந்தனர் தீக்‌ஷித பெருமக்கள். (அந்தர்வேத்யாம் மஹத்யாம்.. எனும் 16ம் செய்யுள், குஞ்சிதாங்கிரிஸ்தவம், உமாபதி சிவம்)

இந்த அமைப்பிற்கு பதஞ்சலி மஹரிஷி வகுத்த முறைப்படி, நடராஜர் நடனமிடும் பொன்னம்பலத்திற்கு அடுத்த அழகிய மண்டபமாகிய கனகசபையில், ஒவ்வொரு நாளின் மதியம் இரண்டாம் வேளையில் அபிஷேகம் ஏற்பார்.
மரகத நடராஜர், மாணிக்க நடராஜர் என மக்களால் போற்றப்படும் ரத்ன ஸபாபதி வடிவம் மிக மிக அழகு வாய்ந்தது. சிறப்பு பெற்றது. நடராஜப் பெருமானின் அம்சமானதால் உலகின் மிக மிக மிக அரிய (மரகதமும் அல்ல மாணிக்கமும் அல்ல) ரத்தினத்தால் ஆனது.

விசித்திரமாக, ஒளி உடுறுவும் தன்மை கொண்டது. இயற்பியல் விதியின் படி ஒரு பொருளின் மேல் ஒளியைப் பாய்ச்சினால் பொருள் ஒளிர்ந்து, ஒளி ஊடுறவும் தன்மை கொண்டால் மறு புறம் ஒளி காட்டும்.
ஆனால், இந்த ரத்ன ஸபாபதி தனிமம் விசித்திரம் வாய்ந்தது. அபிஷேகம் முடிந்து, பூஜை செய்யும் தீக்‌ஷிதர் தீபாராதனை காட்டும் போது முன்புறம் தீப ஒளிபடு இடம் கருப்பாகவும், பின்புறம் ஜோதி மயமாகக் காட்சி தரும். ரத்ன ஸபாபதிக்குப் பின்புறம் தீபாராதனை செய்யும்போது முன்புறம் ஜோதிர்மயமாகக் காட்சி தரும்போது, பக்தர்களின்‘ஹரஹர மஹாதேவா’ கோஷம் விண்ணைப் பிளக்கும்.

ஜோதிர்மயமான காட்சியே ரத்ன ஸபாபதி தரிசனக் காட்சியாகும். வார்த்தைகளால் விவரிக்கவே இயலாத காட்சி. இதனைக் காண்பவர்களின் வாழ்க்கை ஒளிபெறும். வளம் பெறும். எண்ணங்கள் ஈடேறும்.
இந்த ரத்ன ஸபாபதி தரிசனக் காட்சி ஒவ்வொரு நாளிலும்  மதிய வேளையில் மட்டுமே நடைபெறும்.
ஆனால், (ஆனி & மார்கழி) உத்ஸவ சமயத்தில், முறை தவறாமல் பூஜை செய்யும் தகைமையால், எட்டாம் திருநாள் அன்றைய பூஜையின் அர்த்த ஜாம பூஜை நடைபெற்ற பிறகு, மறு நாள் தேருக்கு நடராஜர் எழுந்தருள இருப்பதால், அன்றைய அதாவது மறுநாள் பூஜைகள் (21.12.2018) இரவே நடந்தேறிவிடும்.

அர்த்தஜாம பூஜை முடிந்து, உடனடியாக மறுநாளுக்குரிய திருவனந்தல் எனும் பால் நிவேதன பூஜை, கால சந்தி பூஜை மற்றும் இரண்டாம் கால அபிஷேகங்கள் நடைபெறும். அந்த இரண்டாம் கால பூஜையில், ரத்ன ஸபாபதிக்கு நள்ளிரவில் பூஜைகள் நடக்கும்.

நடந்த பின், கனகசபையைச் சுற்றிலும் உள்ள செயற்கை விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு, இருள் சூழ்ந்த இடத்தில், ரத்ன ஸபாபதிக்கு மஹா தீபாராதனை நடைபெறும். நள்ளிரவில் நடராஜ ஜோதி தரிசனம். காணுதற்கரிய தரிசனம்.

ஸபாபதிக்கு தீபாராதனையைப் பின்புறமிருந்து பூஜக தீக்‌ஷிதர் காட்ட முன்புறம் நடராஜ ஜோதியாக காட்சி அளிப்பார். மூன்று முறை தீப ஜோதிக் காட்சி கிடைக்கப் பெறும்.

பொன்னம்பலம் நிலவொளியில் பொன்னிறத்தில் தகதகக்க, கனகசபை நடராஜ ஜோதியில் ஜ்வாஜ்ஜல்யமாக நிறைந்திருக்கும். இறைஜோதியில் நாம் அனைவரும் கலக்க வேண்டும் என்கிற நியதியை பிரதிபலிப்பதே நடராஜ ஜோதியின் தாத்பர்யம். நள்ளிரவு நடராஜ ஜோதி தரிசனம் ஆனித்திருமஞ்சனம் மற்றும் மார்கழி ஆருத்ரா தரிசன உத்ஸவ காலங்களில் நடைபெறும். வருடத்திற்கு இருமுறை நடக்கும் இந்நிகழ்வினைக் காண பக்தர்கள் பெருமளவு வருகை தருவார்கள்.

ஜோதியைக் காண்போம் ! நல வளங்கள் பெறுவோம் !!

–    நி.த. நடராஜ தீக்‌ஷிதர்


Categories: Devotee Experiences

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: