கிரிவல மகிமை பற்றி பகவான் ஸ்ரீ ரமணர்

கிரிவல மகிமை பற்றி பகவான் ஸ்ரீ ரமணர் கூறிய கருத்துக்களை
ஸ்ரீ குஞ்சு சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ பகவானைத் தரிசிக்க வந்த சாது ஒருவர் ஆசிரமத்தில் தங்கிக் கொண்டு தினம் தவறாமல் கிரிப் பிரதக்ஷிணம் செய்து வந்தார். அது தவிர வேறு தியானமோ, ஜபமோ ஒன்றும் செய்வதில்லை. அவர் ஒரு நாள் ஸ்ரீ பகவானிடம் ஒரு குறிப்பிட்ட புத்தகம் வேண்டும் என்று கேட்டார். ஸ்ரீ பகவானும் என்னைக் கூப்பிட்டு எடுத்துத் தரச் சொன்னார்கள்.

பிறகு
—-அவருக்கு புத்தகம் கொடுத்தாயா ? —-என்று கேட்டார்கள்.

நான் கொடுத்து விட்டதாகச் சொன்னேன்.

ஸ்ரீ பகவானிடம் மெதுவாக—-அவர்தான் பிரதக்ஷிணம் தவிர வேறு ஒன்றும் செய்வதில்லையே !
ஒன்றும் தெரியவும் தெரியாதே ! அவருக்கு புத்தகம் எதற்கு ? —-என்றேன்.

ஸ்ரீ பகவான் என்னைப் பார்த்துச் சொன்னார் :—-

பிரதக்ஷிணத்தை விட மேலானது வேறு என்ன இருக்கிறது ? அது ஒன்றே போதுமே ! ஒரே இடத்தில் அமர்ந்து தியானமோ, ஜபமோ செய்தால் கூட மனம் வெளியில் அலைபாயும். ஆனால் பிரதக்ஷிணம் செய்யும்போது கருவிகரணங்கள் வேலை செய்து கொண்டிருந்தாலும் மனம் ஒரே தாரையில் நிற்கும். வேறு ஒரு எண்ணமும் இல்லாமல் தியானமோ, ஜபமோ செய்து கொண்டு ஏகாக்ர சிந்தையுடன் செல்வதுதான் சஞ்சார சமாதி என்பதாகும். அதனால்தான் அந்தக் காலத்தில் எந்த ஒரு வாகன வசதியும் இல்லாமலே, நடந்தே யாத்திரை செல்வது என்பது முக்கியத்துவம் பெற்றிருந்தது. அதிலும் கிரி பிரதக்ஷிணம் மிக விசேஷமானதாகுமே ! இந்த மலையில் பலவித மூலிகைகள் இருப்பதால் அதன் காற்று உடம்பிற்கும் நல்லது. மலையில் பல சித்தர்களும் மஹான்களும் இப்பொழுதும் இருக்கிறார்கள். நம் கண்களுக்குப் புலப்படாமல் அவர்களும் கிரிவலம் வருகிறார்கள். ஆகையால் நாம் கிரி பிரதக்ஷிணம் செய்யும்போது நமக்கு இடது புறமாக ரோடு ஓரமாக நடக்க வேண்டும். அப்படிச் சென்றால் அந்த சித்தர்களுக்கு நாம் இடையூறாக இல்லாமலும் அவர்களையும் சேர்த்துச் சுற்றிய பலனும் கிடைக்கும். அவர்கள் ஆசியும் கிடைக்கும். உடலுக்கும், உள்ளத்திற்கும் ஆரோக்கியமும் ஆத்ம சாந்தியும் கிடைக்கிறது. ஆகையால் கிரி பிரதக்ஷிணம் சாமான்யமானது அல்ல —-என்றும், மற்றும் பல மகிமைகளையும்
ஸ்ரீ பகவான் சொன்னார்கள்.

கிரி பிரதக்ஷிணம் போவதில் ஆர்வமும், ஆனந்தமும் ஏற்பட்டது.

நன்றி :—-
எனது நினைவுகள் —-
ஸ்ரீ குஞ்சுசுவாமி
என்ற நூல்.

Thanks to Hariharasubramanian for the share..



Categories: Upanyasam

Tags:

3 replies

  1. கிரி ப்ரதக்ஷிணத்தின் மஹிமை பற்றி புராணங்களில் இருந்தாலும் அதன் மஹிமையை சமீப காலத்தில் நமக்கு எடுத்துச் சொன்னவரும் வாழ்ந்து காட்டியவரும் பகவான் ஸ்ரீ ரமணரே. 1896 செப்டம்பர் முதல் தேதி அருணாசலத்தை அடைந்தபின், ஒரு நாள் கூட அதைவிட்டுப் பிரியாமல் 54 வருஷங்கள் இருந்தார். மேலும். காலில் செருப்புகூட இல்லாமல் கொதிக்கும் வெய்யிலிலும் மலைமேலும் அதைச் சுற்றிலும் நடந்தார். நினைத்தபோது கிரி ப்ரதக்ஷிணம் கிளம்பிவிடுவார். நிறைமாத கர்பிணி ராணி போல் மெதுவாக நடப்பார். சில சமயங்களில் ஒரு ப்ரதக்ஷிணம் வர இரண்டு, மூன்று நாட்கள் கூட ஆகும்! பக்தர்களும் உடன் போவார்கள்.
    அவர் பெருமையும் புகழும் பரவி பக்தர்கள் கூட்டம் பெருகி, ஆஶ்ரமத்திற்கு வருவோரின் எண்ணிக்கையும் பெருகத்தொடங்கியதும் , அவர் கிரிப்ரதக்ஷிணம் போவதை நிறுத்தினார். அவர் ப்ரதக்ஷிணம் போன சமயத்தில் வரும் பக்தர்கள் ஆஶ்ரமத்தில் அவரைக்காணாமல் மனவருத்தம் அடைவர், அது கூடாது என்பதற்காக , பக்தர்களின் சௌகரியத்திற்காக அவர் இதைச் செய்தார்! இது அவரது ஈடில்லாக் கருணை.
    இப்போது எல்லோரும் பொதுவாக ‘கிரி வலம்’ என்கின்றனர். வலம் வருவது என்பது “ப்ரதக்ஷிணம்” என்பதன் சரியான மொழிபெயர்ப்பு ஆகாது. [தமிழில் சொல்லவேண்டும் என்பதற்காக ‘வலம்’ என்கின்றனர். ஆனால் ‘கிரி’ என்பது ஸம்ஸ்க்ருதம் தானே! ]
    உடல் அசைவைப்பொருத்தவரை, வலம் என்பது சரி; ஆனால் ப்ரதக்ஷிணம் என்பதன் பொருள் உடல் அசைவு மட்டும் அல்ல. இதை பகவான் ஸ்ரீ ரமணரே விளக்கியிருக்கிறார்.
    “The word ‘pradakshina’ has a typical meaning. The letter ‘Pra’ stands for removal of all kinds of sins; ‘da’ stands for fulfilling the desires;’kshi’ stands for freedom from future births; ‘na’ stands for giving deliverance through jnana.”

    இது அருணாசல புராணத்தில் சிவபெருமான் நந்திகேஶ்வரருக்கு விளக்கியதாக வருகிறது என பகவான் ஸ்ரீ ரமணர் சொன்னார். [இது 1949ம் வருஷம் ஜூன் மாதத்தில் ஒரு நாள் பகவான் சொன்னது, மேலும் கிரி ப்ரதக்ஷிணத்தை எப்படிச் செய்யவேண்டும் , அதன் பலன்கள் என்ன போன்ற பல விஷயங்களை பகவான் விளக்கினார்.இதை ஸ்ரீமதி சூரி நாகம்மாள் தான் எழுதிய கடிதத்தில் ( எண்.251) விவரமாகத் தந்திருக்கிறார்.
    [ Letters from Sri Ramanasramam. Fifth REvised Expanded Edition, 2006, page 599-601.]

    எனவே, ஆஸ்திகர்கள் வெறுமே ‘வலம்’ என்று சொல்வதைத் தவிர்த்து, ‘ப்ரதக்ஷிணம்’ என்றே சொல்லவேண்டும். மேலும் பகவான் கூறிய முறையிலேயே ப்ரதக்ஷிணம் செய்யவேண்டும்.
    இது போல் வேறு சில க்ஷேத்ரங்களிலும் கிரி ப்ரதக்ஷிணம் செய்வது புண்யமென புராணங்களில் சொல்லியிருக்கின்றனர். அவற்றில் முக்கியமான ஒன்று திருக்கழுக்குன்றம். இங்கு மலையே வேத உருவமாகக் கருதப்படுவதால் [ ஸ்வாமி பெயர் ஸ்ரீ வேதகிரீஶ்வரர்] இதை ப்ரதக்ஷிணம் செய்வது புண்யமாகக் கருதப்படுகிறது. தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் சிறந்த சிவபக்தர். அவர் இதை அறிந்திருந்தார். அதனால் இங்கு கிரிப்ரதக்ஷிணம் செய்பவர்களின் வசதிக்காக மலையின் பின்புறம் கிரிப்ரதக்ஷிணப் பாதையில் ஒரு தண்ணீர்ப் பந்தல் நிறுவினார். இது விளம்பரமில்லாமல் செய்த தர்மம்.

Leave a Reply

%d bloggers like this: