பேத்திக்கு வேணுமாம் தாழம்பூ – மஹாபெரியவா

Mahaperiyava-sketch-sudhan.jpg

கட்டுரை ஆசிரியர் – திரு. பிச்சை ஐயர் சுவாமிநாதன் அவர்கள்
தட்டச்சு: ஹாலாஸ்ய சுந்தரம் ஐயர் (Thanks Sri Sundaram)

அது ஒரு நவராத்திரி வெள்ளிக்கிழமை

காஞ்சி சங்கரமடமே கோலாகலமாக இருந்தது. வாழைமரங்களும் தோரணங்களும் வந்தோரை வரவேற்றன. சின்ன காஞ்சிபுரத்தில் பெருந்தேவித் தாயாரிடம் இருந்தும், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் இருந்தும் பலவிதமான புஷ்ப மாலைகள் அருட்பிரசாதமாக மடத்தை வந்து அடைந்தன. இதைத் தவிர மடத்தில் நடக்க இருக்கும் சந்திரமௌலீஸ்வரர் பூஜைக்கும் பல கூடைகளில் புஷ்பங்கள் வந்து சேர்ந்தன.

புனிதமான நவராத்திரி காலத்தில் மகா ஸ்வாமிகளைத் தரிசித்து அவரது ஆசி பெற வேண்டும் என்பதற்காக சென்னையில் இருந்தும், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் குடும்பம் குடும்பமாகப் பெண்கள் வந்தார்க்ள். எல்லோரும் ஒரு வரிசையில் நின்று, மெள்ள முன்னேறி பெரியவாளின் தரிசனம் பெற்று நகர்ந்து கொண்டிருந்தனர்.

அன்றைய தினம் மடத்துக்கு வரும் சுமங்கலிகள் அனைவருக்கும் குங்குமத்தோடு புஷ்பமும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இதற்காக பெரியவாளுக்குப் பக்கத்தில் ஏராளமான மூங்கில் தட்டுகளில் தொடுத்த புஷ்பங்கள் சின்னச் சின்ன கிள்ளலாக வைக்கப்பட்டிருந்தன. இவை எல்லாம் காஞ்சியில் உள்ள ஆலயங்களில் இறைத் திருவுருவங்களுக்கு சார்த்தியவை.

அப்போது பெரியவாளின் ஆசியைப் பெறுவதற்காக ஒரு குடும்பம் அவருக்கு முன்னால் நின்று கொண்டிருந்தது. ஆண், பெண் குழந்தைகள் என்று பெரிய குடும்பம் அது. இவர்களைப் பார்த்ததும் பெரியவா மூங்கில் தட்டுக்குள் கைவிட்டு ஒரு பூவைக் கையில் எடுத்தார். என்ன ஆச்சரியம். அவர் கையில் வந்தது ஒரு தாழம்பூ. பெரியவா அதைக் கையில் எடுத்த அடுத்த கணமே அங்கு அந்தப் பூவின் மணம் பலமாக வீச ஆரம்பித்து விட்டது.

பெரியவா தாழம்பூவைக் கையில் எடுத்ததைப் பார்த்த அந்தக் குடும்பத்தினர் சற்றே கலவரப்பட்டு மெள்ளப் பின்னோக்கி நகர்ந்தனர். அந்தக் குடும்பத்தினருக்கு ஏதோ ஒரு தோஷம் காரணமாகத் தாழம்பூ என்றாலே ஆகாது. ஒருவேளை தன் கையில் எடுத்த தாழம்பூ பிரசாதத்தைத் தங்கள் கையில் கொடுத்துவிட்டால் என்ன செய்வது என்கிற தயக்கத்தின் காரணமாகக் கண் கலங்கி பின்னுக்கு வந்தனர். பெரியவா கொடுத்து அதை வாங்க மறுத்தால் அது பெரிய அபசாரம் ஆகிவிடும் என்று குடும்பத்தினர் கலங்கினர்.

அப்போது ‘நாகசாமீ..’ என்று பெரியவா குரல் கொடுக்க அந்தக் குடும்பத்தில் இருந்து ஒரு ஆண்மகன் முன்னுக்கு வந்தார்.

‘பெரியவாளுக்கு என் பெயர் எப்படித்தெரியும்? என்று குழம்பிய அவர், ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு முன்னுக்கு வந்து, ‘சாமீ..நான் தான் நாகசாமீ’ என்றான் மரியாதையுடன்.

பெரியவா இடி இடியெனச் சிரித்து விட்டு ‘நாகசாமி.. உங்கள் குடும்பத்தினரிடம் கொடுப்பதற்காக என் கையில் நான் தாழம்பூவை எடுக்கவில்லை. இன்னும் அரை மணி நேரத்தில் இங்கு பதற்றத்துடன் ஓடிவரப்போகும் ஒரு மூதாட்டிக்காக இதை எடுத்து வைத்திருக்கிறேன். உங்கள் குடும்பத்தினர் யாரும் பயப்படவேண்டாம் என்று சொல்லிவிடு நாகசாமீ’ என்றார்.

அப்போது தான் அந்த நாகசாமியின் குடும்பத்தினருக்கு மூச்சே வந்தது என்று சொல்லலாம். தாழம்பூ அவர்களிடம் இருந்து தப்பிவிட்டது.

இன்னும் அரை மணி நேரத்தில் தாழம்பூ கேட்டு மூதாட்டி ஏன் இங்கு ஓடி வர வேண்டும்?
காஞ்சிபுரம் கடைத்தெருக்களிலும் பூக்கடைகளிலும் கிடைக்காத தாழம்பூவா?
பலரும் குழம்பினர். நிமிடங்கள் ஓட ஓட வெளியேயும் தங்கள் பார்வையை ஓட்டிக் கொண்டிருந்தனர்.

தாழம்பூவைத் தேடி எந்த மூதாட்டி சங்கர மடத்துக்கு இந்த வேளையில் ஓடி வரப் போகிறார் என்று மகா பெரியவாளின் முன்னால் அமர்ந்திருந்த பக்தர்கள் அனைவரும் ஆர்வமாக இருந்தனர். அவ்வப்போது வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டும் இருந்தனர். ஆனால் எவரும் வருவதாகக் காணோம்.

இதனிடையே நாகசாமியின் குடும்பத்தினரைத் தன் அருகே வருமாறு அழைத்த பெரியவா, அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ரோஜாப்பூ மற்றும் மல்லிகைப்பூ, குங்குமம் என்று மடத்துப் பிரசாதங்களைக் கொடுத்தார். அனைவரும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பலாம் என்று பெரியவாளிடம் உத்தரவு கேட்கும் போது கூடி இருந்த பக்தர்கள் இடையே ஒரு திடீர் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

அனைவரும் என்ன என்பது போல வாசல் பக்கம் பார்வையை நகர்த்தினர். அப்போது ஒரு மூதாட்டி வியர்க்க விறுவிறுக்க மடத்தினுள் நுழைந்து கொண்டிருந்தார். மூதாட்டியின் முகத்திலும் உடலிலும் ஒரு பரபரப்பு. ‘வழிய விடுங்க. வழிய விடுங்க. நான் பெரியவரைத் தரிசனம் பண்ணிவிட்டு உடனே ஊருக்குத் திரும்பியாகணும். கடைசி பஸ்ஸு புறப்படற நேரம் நெருங்கிடுச்சு’ என்று வாய் விட்டுத் தனக்குள் சொல்லிய வண்ணம், சில பக்தர்களை வலுக்கட்டாயமாகத் தள்ளிக் கொண்டு மகா பெரியவாளை நோக்கி முன்னேறினார். மூதாட்டியின் வயதுக்கு ஒரு மதிப்பு கொடுத்து கிட்டத்தட்ட அனைவருமே அவருக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தனர்.

இதோ பெரியவாளின் அருகே நெருங்கியும் விட்டார். இந்த மூதாட்டியைப் பார்த்ததும் பெரியவாளின் முகத்தில் ஒரு புன்னகை. தன் அருகே இருந்த தாழம்பூவை ஒரு முறை பார்த்துக் கொண்டார். யாருக்கு எந்த நேரத்தில் எது தேவை என்பது மகான்களுக்கு மட்டும் தானே தெரியும். அன்றைய தினம் மூதாட்டிக்குத் தாழம்பூ தேவை என்பது அந்தப் பரப்பிரம்மத்துக்குத்தானே தெரியும்.

‘தூசி மாமண்டூரில் இருந்து தானே வர்றே? பதட்டப்படாத. ஊருக்குப் போற கடைசி பஸ் பொறப்படறதுக்கு இன்னும் டைம் இருக்கு. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கோ’ என்று அந்த மூதாட்டியைப் பார்த்து பெரியவா சொன்னபோது அங்கே வேறு எந்த சத்தமும் எழவில்லை. பெரியவாளையும் மூதாட்டியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள் பக்தர்கள். “தாழம்பூ கேட்டு ஒரு மூதாட்டி வருவார் என்று சொன்னாரே, அது இந்த மூதாட்டி தானா? மூதாட்டியின் பரபரப்பையும், பெரியவாளின் முகத்தில் தெரியும் புன்னகையையும் வைத்துப் பார்த்தால், இவராகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறதே’ என்று ஆளாளுக்கு மிகச் சன்னமாகத் தங்களுக்குள் குசுகுசுத்துக் கொண்டிருந்தார்கள்.

பெரியவாளுக்கு முன்னால் நின்றிருந்த மூதாட்டி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். அவரது முகத்தில் இருந்த வியர்வைத்துளிகள் இப்போது ஓரளவுக்கு மறைந்திருந்தது. மூதாட்டியைப் பார்த்துப் பெரியவா கேட்டார்: ‘என்னது உம் பேத்திக்காக நீ தேடின தாழம்பூ காஞ்சிபுரத்துல கிடைக்கலையா?

‘ஆமா சாமீ.. எம் பேத்திக்குத் தலைல தாழம்பூ வெச்சு பின்னிக்கணும்னு திடீர்னு ஆசை வந்திடுச்சு. மழலைச் சொல் மாறாம அதை என்கிட்டே கேட்டுச்சு. ‘காஞ்சிபுரம் போறேன். வர்றப்ப வாங்கியாறேன்’னு சொல்லிட்டு வந்தேன். அங்கே இங்கேன்னு பல இடங்கள்ல அலைஞ்சேன். இன்னிக்குப் பார்த்து எந்த கடையிலும் தாழம்பூ இல்லை. ரொம்ப ஏமாத்தமா இருந்தது. சரி, இவ்ளோ தூரம் வந்தாச்சு. உங்களைப் பார்த்து விழுந்து கும்பிட்டுப் போகலாம்னு மடத்துக்கு வந்தேன் சாமீ’ என்று ஒரே மூச்சில் சொன்னவர், கடைசியில் குரலில் சுரத்து இறங்கிப் போய், ‘எம் பேத்தி கிட்டே வர்றப்ப தாழம்பூவோட வர்றேன்னு சொல்லிட்டுக் கிளம்பினேன். இன்னிக்குன்னு பார்த்து அவ தூங்காம தாழம்பூக்காக வீட்டு வாசல்ல கடைசி பஸ்ஸு வருகிற வரைக்கும் எனக்காகக் காத்திட்டிருப்பா. நான் வீட்டுகுள்ளே நுழைஞ்சவுடனே ‘எங்கே பாட்டி தாழம்பூ?னு அவ கேட்டா அவளுக்கு என்ன பதில் சொல்லப் போறேனோ? என்று குரல் இளகி மருகினார். அழவும் செய்தார்.

மடத்தில் கூடி இருந்த மொத்த பக்தர்கள் அனைவரும் நடந்த சம்பாஷணைகளைக் கவனித்து ஆடித்தான் போயிருந்தார்கள். எங்கோ ஒரு கிராமத்தில் இருக்கும் பெண்மணிக்கு இன்றைக்குத் தாழம்பூ தேவை என்பதை பெரியவா எப்படிக் கணித்தார்? அதுவும் இல்லாமல் தாழம்பூவைத் தேடி அந்த மூதாட்டி இங்கே வருவார் என்று எப்படி ஆரூடம் சொன்னார் என்று பிரமித்து பரப்பிரம்மம் இருக்கும் திசை நோக்கி விழிகள் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பரிதாபத்துடன் அந்த மூதாட்டியைப் பார்த்து கருணை தெய்வம் ‘நீ அழவேண்டாம்மா. காஞ்சிபுரத்துல இருக்கிற பெருந்தேவித் தாயாரே உனக்காக என் கிட்ட தாழம்பூவை அனுப்பி இருக்கா. அதைத் தர்றேன். கொண்டு போய் உன் பேத்தி கிட்டே கொடு. சந்தோஷப்படுவா’ என்று சொல்லி, தன் அருகே இருந்த காஞ்சிபுரம் தாயாரின் பிரசாதமான மணக்கும் தாழம்பூவை எடுத்து மூதாட்டியிடம் கொடுத்தார் பெரியவா. கூடவே ஒரு ஆப்பிளையும் எடுத்து அவள் கையில் கொடுத்து ‘பேத்தி கிட்ட கொடு’ என்றார்.

மூதாட்டியின் கண்களில் இருந்து பொலபொலவென்று நீர் கொட்டியது. உடல் பதறியது. ‘சாமீ…இந்தத் தாழம்பூவை என் கிட்டே கொடுக்கிறதுக்குத்தானே என்னை இன்னிக்கு மடத்துக்கு வரவழைச்சே.. தாயாரோட பிரசாதமான இந்தத் தாழம்பூவை என் கிட்ட தர்றதுக்காகத்தானா ஊர்லயே தாழம்பூ கிடைக்காம பண்ணிட்டே..’ என்றெல்லாம் அரற்றி, பரப்பிரம்மத்தின் கீழே விழுந்து நமஸ்கரித்தார்.

கைவசம் வைத்திருந்த ஒரு பைக்குள் அந்தத் தாழம்பூவை பத்திரப்படுத்திக் கொண்டு மூதாட்டி புறப்பட இருந்த போது ‘மெள்ளப் போ. கடேசி பஸ் பொறப்படறதுக்கு இன்னும் நாழி இருக்கு’ என்று பக்குவமாகச் சொல்லி அனுப்பினார் மகா பெரியவா. வாசல் வரை அந்த மூதாட்டியை வழியனுப்ப சில ஊழியர்களையும் பணித்தார்.

அதன் பின், அந்த மூதாட்டி தன் ஊரான தூசி மாமண்டூருக்குச் சென்றார். அன்று இரவே பேத்தியின் கையில் தாழம்பூவைக் கொடுத்து பெரியவா கொடுத்த பிரசாதமான ஆப்பிளையும் தந்த போது, பேத்தியின் முகத்தில் தெரிந்த பரவசத்தைக் கண்டு பூரித்து தான் போனாள் மூதாட்டி.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
காஞ்சி சங்கர காமகோடி சங்கர



Categories: Devotee Experiences

2 replies

  1. Mahaperiyavaa Sarvagznan. He knows everything. Hara Hara Sankara Jaya Jaya Sankara

  2. Don’t know what to say about such people who trivialise the greatness of Our Mahaan with such fictitious and dramatic stories! Jaya Jaya Shankara, Hara Hara Shankara!

Leave a Reply to Vijay SrinivasanCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading