Double bonanza – a beautiful poem & a brilliant painting in one post. Thanks to Sri Suresh and Ranganathan for your shares.
Periyava Sharanam.
அண்டமுடை வல்வினையு மகன்றிடவு மருளவரு
மஞ்சுகமுன் னாசிதனிலே
அலைகடலு மணையவுள அகிலமிதி லொளிதரவு
மதிமதுர அருளுந்தரவே
கண்டமிதி லொளிபடர கந்தர்கர வேல்ஒத்த
தளிரருளுந் தன்னொளியென
கலையருளு மதியெனவு மந்தமதை நீக்குவொளி
தந்தருளுந் தன்னொளிபட
தகதகென தந்தனன தானவொரு சோதிபத
மேற்றருளுஞ் சீவனிதிலே
டமடமக மேந்துகர மோடருள வேயுதித்த
ஆதியிறை யானகரமுள்
கதியெனவு மாகவரு மாதிபத வழியதனிற்
கனியுமுற வானகுருவாய்
கண்வளரு சோதிபத மறைபொருளு மானவுரு
கரம்வளரு தண்ட கொடியே! (1)
கண்டனவ னவதார சீர்குருவி னடிபேணி
சீலமிதுந் தழைத்தோங்கவே
தண்டமுடை கச்சித்தலகுருபரனி னருளேற்க
தண்டமென பணிந்தேகவே
சந்ததமுந் தந்தகுரு நாதனவ னடிபணிந்து
அனுதினமுங் கடைத்தேறவே
சிந்தையிலே தண்டகொடி புந்திதினந் தியானித்து
தொழிதிடவும் அருளேற்கவே
சிவசிவமும் அரியரியும் அனுதினமுந் தியானிக்கும்
அருட்பதமுந் தந்தகுருவே
அடியார்க்கு மதிசேர்க்கும் அதிஞான குருபீடத்
தெழில்போல நின்றகுருவே
கதியெனவு மாகவரு மாதிபத வழியதனிற்
கனியுமுற வானகுருவாய்
கண்வளரு சோதிபத மறைபொருளு மானவுரு
கரம்வளரு தண்ட கொடியே! (2)
சதுர்வேத பொருளீந்து சங்கரனின் அருள்கூடி
சந்ததமுந் தந்தகுருவே
சித்தமதிற் பத்தியொடு சங்கரனுன் சந்ததமுந்
சித்தம்பெற நாளுந்தொழுதே
நேயமுடன் நெறிசேர ஞானமருட் குருவுந்தன்
ஆசிபெற அடியாருமே
நாளுமுனை மனதேற்றி நாதனுந்த னருளாலே
நயங்கொண்ட வாழ்வும்பெறவே
தந்தனன தானனன தாளமுடன் ஆடுபத
பகவனவன் அவதாரியே
துந்துவிடும் சங்கடமுஞ் சங்கரனைத் தொழுதாலே
சந்தபத முணர்ந்தோர்க்குமே
கதியெனவு மாகவரு மாதிபத வழியதனிற்
கனியுமுற வானகுருவாய்
கண்வளரு சோதிபத மறைபொருளு மானவுரு
கரம்வளரு தண்ட கொடியே! (3)
மந்திரமுந் தந்திரமும் யந்திரமும் அறியாத
மானுடர்க்கு மருளவந்த
மா’தவனு மானகுரு நாதனுந்த னடிபணியு
மடியவரை காத்தருளவே
அன்புநெறி பண்புவகை பாசமொடு ஞானவழி
காட்டியரு ளாசிதரவே
கச்சிமடப் பீடமுறை ஞானகுரு பரனெனவு
மானசிவ ஞானபரமே
பத்தியுட னனுதினமும் பதகமலம் போற்றிவரு
பாக்கியமும் பெற்றிடவுமே
சிவஅரியு மானதொரு சீர்குருவுன் அருளாசி
தந்துமெமை காத்தருளவே
கதியெனவு மாகவரு மாதிபத வழியதனிற்
கனியுமுற வானகுருவாய்
கண்வளரு சோதிபத மறைபொருளு மானவுரு
கரம்வளரு தண்ட கொடியே! (4)
சித்தமதிற் பித்தமெனுஞ் சீழ்பத்துந் தூய்த்தருளும்
பத்திநிறை பாத்திரமுடன்
மெச்சுகுரு நாதனுந்த னறவுரையுந் தந்தபதம்
பேணிவாழ் கின்றநிலையே
கிட்டிடவும் பெற்றிடவும் கிள்ளையெம் புத்திதனில்
சித்தமதில் நிறையுமுருவே
பாதிமதி யணிகின்ற நன்னீருஞ் சடையேற்று
அருவுருவு மானஇறையே
வீதியந்த மாறுதெரு வீதிவிளை யாடுங்குரு
சோதியெனு மானவுருவில்
மெய்மதமு மறிந்திடவு மெய்பொருளு மேற்றிடவு
மெய்குருவு மா’தவனுமாய்
கதியெனவு மாகவரு மாதிபத வழியதனிற்
கனியுமுற வானகுருவாய்
கண்வளரு சோதிபத மறைபொருளு மானவுரு
கரம்வளரு தண்ட கொடியே! (5)
திருமறை போற்றிடவுந் திருமுறை செப்பிடவும்
நல்வளமுஞ் சேரும்பதமே
இம்மையிலு மறுமையிலு இமையோனி னருள்கூடி
இன்பமதைப் பெற்றுதரவே
சத்தியச் சொல்தந்து சித்தமுள் தூய்ப்பித்து
சித்தியதை யாமும்பெறவே
முன்னிற்கு மூவரும் அன்னையும் ஓர்உருவில்
மூலமென வந்தகுருவே
சிந்தையிற் சிரத்தையும் சீர்பத்தி மேவிடும்
செவ்வருள் தந்திடவுமே
அஞ்ஞான இருளகற்றி மெய்ஞான ஒளிகாட்ட
முன்நின்று அருளுந்தரவே
கதியெனவு மாகவரு மாதிபத வழியதனிற்
கனியுமுற வானகுருவாய்
கண்வளரு சோதிபத மறைபொருளு மானவுரு
கரம்வளரு தண்ட கொடியே! (6)
அடியாகி நடுவாகி முடியாகி மூலந்தனிற்
பதியாகும் மூலபொருளே
அதுவாகி இதுவாகி அவனளாய் ஏதுமென
அவனியிதை ஆண்டருளவே
மலராகி மணமாகி மதுவாகி வண்டாகி
மதுரமென எதுவுமாகி
மூலமெனு மாதார வட்டமதிற் கட்டவிழ
சுடர்பொருளு மருளுகுருவே
வையமிதி லேயுதிக்கும் வைகரை போல்வாய்த்த
வேதமறை ஞானப்பொருளே
வெந்துயர் யாவையும் ஓட்டிவுயிர் காத்திடும்
வைத்தியனு மானவுருவாய்
கதியெனவு மாகவரு மாதிபத வழியதனிற்
கனியுமுற வானகுருவாய்
கண்வளரு சோதிபத மறைபொருளு மானவுரு
கரம்வளரு தண்ட கொடியே! (7)
கங்கையுந் திங்களுஞ் சிகைதனில் சூடிவருஞ்
சிவனார்தம் சூலமிதுவோ!
சிவனார்த மிடப்பாகத் துமையாளிங் கரமேகுந்
திருவருட் திரிசூலமோ!
சூரவதஞ் செய்தருளு மாறுமுக மானகுரு
நாதன்கர வேலுமிதுவோ!
ஆள்வதாம் ஆணவம் அழுக்காறு கன்மமும்
மாயையும் வெகுண்டோடுதோ!
சாதிமத பேதமும் சாத்திரப் பிழைகளும்
சட்டெனவு மோடிவிடவே
திருத்தண்ட தரிசனம் குறையெலாம் நீக்கிடும்
இறையருள் நிறைவிக்கவே
நித்தமுந் தொழுதிடும் அடியவர் வாழ்வினிற்
சீர்வளஞ் செழிதோங்கவே
திருத்தண்ட விருத்தமுந் தந்திடுஞ் சத்தியம்
நித்தியம் சுகம்நிறையுமே! (8)
நிறையருளுந் தந்தருளும் நிமலனவன் கரம்வளரு
குறையகற்றுந் தண்ட கொடியே!
மனமுழுது மாகவுனை போற்றிப்பணி வோர்க்கென்றும்
நலமனைத்தும் நல்கிடுவையே!
கலைமிகவும் வளர்செல்வம் மதியறமுந்
தந்தருள
மனமுருகி போற்றுகின்றோம்!
நிலையிதனில் வளம்மிகவும் கைகூடித் திறம்மிகவுந்
தந்தருள வேண்டுகின்றோம்!
அண்டமுடை வல்வினையு மகன்றிடவு மருளவரு
மஞ்சுகனின் னாசிதனிலே
அலைகடலு மணையவுள அகிலமிதி லொளிதரவு
மதிமதுர அருளுந்தருவாய்!
கதியெனவு மாகவரு மாதிபத வழியதனிற்
கனியுமுற வானகுருவாய்
கண்வளரு சோதிபத மறைபொருளு மானவுரு
கரம்வளரு தண்ட கொடியே! (9)
கந்தற்கை வேலும், ஈசனின் சூலமும், அகிலமாளும் அன்னையின் திரிசூலமும் கொண்டுள்ள வல்லமைக்கு ஈடேதுமுண்டோ! அப்படியாக சிவசக்தி ஸ்வரூபியான சுவாமி நாதகுருவான நம் மஹாஸ்வாமிகள் திருக்கரத்திலே இருக்கும் தண்டத்திற்குண்டான மகிமைக்கு ஈடுமுண்டோ இவ்வுலகில்!
தண்டனென அந்த திருத்தாள்களிலே நமஸ்கரித்து அனுதினமும் திருத்தண்டத்தினை தொழுவோமானால் சர்வ நிச்சயமாக நமக்கு இருக்கும்படியான அனைத்து தீமைகளும் அகன்றிடும் என்பதும் சத்தியம்.
குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை.
பெரியவா கடாக்ஷம்
நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்
Categories: Bookshelf
The painting has come out really well. Superb. Lyrics has come out in thiruppugazh style. There is a thiruppugazh song sung by Smt.Jayasree. (ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவளரந்திபக லற்ற நினை …வருள்வாயே).
That stlyle will suit this song. Double bonanza indeed!
Dhanyosmi. Anugraheethosmi.
Sarvam Shri chandrashekaram.