நான் கண்ட நல்லார்

Thanks to Sri Ganapathy Subramanian for FB share.

Mahaperiyava-sitting-rare.jpg

“கௌசிகன்”
[1948ல் ஒரு வைஷ்ணவ பெரியார் மஹா பெரியவாளைப் பற்றி எழுதிய கட்டுரை.]
“ஸத் ஒன்று” என்று வேதம் அறிவுறுத்திய போதிலும், அந்தத் தனிப்பொருள் பலபடியாக விளங்குகின்றது. இது பற்றியே, “விஷ்ணு சஹஸ்ரநாம” த்திலே திருமாலுக்கு “ஸந்த” என்ற பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. “ஸந்த” என்ற சொல் பற்பல மூர்த்தங்களுடைய கடவுளைக் குறிப்பிடுவதாகும். ‘ஸத் என்பதற்கு ‘நல்லான்’ என்று பொருள் கூறலாம். ‘நல்லான்’ என்ற சொல், திருவாய்மொழியிலே ஸ்ரீராம பிரானுக்குரிய பெயராகக் கொள்ளப்பெற்றது. ‘தான்’, ‘தனது’ என்ற உணர்ச்சியற்று, எல்லாவுயிர்களையும் ஒன்றாகப் பாவித்து, நன் மார்க்கத்திலே தானும் சென்று, பிறரையும் செலுத்துவோனைக் கடவுளின் அவதாரமாகக் கொள்ளுதல் இயற்கை. அத்தகைய யதிசிரேஷ்டர் ஒருவரை நான் கண்டறிந்த அளவிலே அறிமுகப்படுத்தி என்னை கிருதக்ஞனாக்கிக் கொள்வேன்.

இப் பெரியார் இளமையிலே துறவறம் பூண்டவர்; அப்பொழுதே சிறிதும் மனஞ்சலியாமற் பரோபகாரச் செயல்களைச் செய்வதிலே பழகிக் கொண்டவர்; காயம் கிலேசத்தாலே நித்திரைக்கு வசப்பட்டுவிடும்; அப்பொழுது சிறிது நேரம் உடல் பலகையிலே கிடக்கும். சிறிது நேரத்திற்கெல்லாம், சிரமம் தீர்ந்து, தெளிவு பெற்ற மனதோடும் கரண பாவத்தோடும், மீண்டும் நித்திய கருமங்களிலே வேலை செய்யத் தொடங்குவார். சூர்யோதயத்திற்க்கு ஏழரை நாழிகைக்கு முன்பே எழுந்து ஸ்நானாதிகளாலே உடலைத் தூய்மை செய்துக் கொண்டு, ஜபதபங்களிலே ஆழ்ந்து விடுவர். பிறகெல்லாம், தம்மை நாடிவருஞ் சீடர்களுக்குப் பேரின்ப மூட்டுவதிலும் அவர்களுடைய பக்தி சிரத்தைகளை வளர்ப்பதிலுமே செல்லும்.
யாரிடமும் பற்று இல்லாதவர்களுக்கு எல்லாரிடமும் அன்பு அதிகம் இருக்கும் என்னும் உண்மையை புலப்படுத்துவது இப்பெரியாரின் சந்நிதி. ஒவ்வொருவரிடமும் இவர்களுக்குள்ள கருணை சொல்லிமுடியாது. எதுவும் இவர்களுக்குச் சிறியதாகத் தோன்றாது. ஒவ்வொருவரிடமும் அவரவர்களுடைய யோக க்ஷேமங்களைப் பற்றி விசாரிப்பார்; மனமுடைந்தவர்களும் இவருடய திருமுன்பு அமர்ந்திருந்து இவர் பிறரிடம் கூறும் மொழிகளைக் கேட்டுக் கொண்டிருந்தால் சாந்தமும் திடமுங் கொண்ட மனமுடையவர்களாவார்கள். நேருக்கு நேராக நின்று இவருடைய க்ஷேம விசாரணைக்குப் பாத்திரர்களாகி விட்டாலோ, அவர்கள் பெரும் பாக்கியத்தைச் சொல்ல வேண்டியதில்லை. பேச்சிலே தான் என்ன அன்பு, என்ன தெளிவு, என்ன வசீகரம்,”நாம் ஈசனை மறக்கினும் ஈசன் நம்மை மறக்க மாட்டார்” என்று பக்தர்கள் மனத்தைத் தைரியப் படுத்திக் கொள்வார்கள். இபெரியாரை நாம் எப்பொழுது பார்த்தோம், இவர் அப்போது என்ன சொன்னார் என்பதை நாம் மறந்து விடலாம். ஆனால் இவரைப் பல்லாண்டுகளுக்குப் பின்பு மீண்டும் தரிசிக்கும் பாக்கியம் ஏற்பட்டால், இவர் எதையும் மறக்கவில்லை என்பது கேட்கும் கேள்விகளாலேயே நன்கு விளங்கும். நம்மோடு ஒன்றி நம்முடைய சுகதுக்கங்களைத் தம்மேற் போட்டுக் கொண்டு நம்முடைய சங்கடங்களை யெல்லாம் போக்கியருளுகிறார் என்பதும் நன்கு விளங்கும்.

இப்பெரியாருடைய கண்ணொளியைக் கண்டு வியவாதவர் இல்லை. கருணைப் பிரவாகம் எண்பது கவியின் கற்பனை என்று இவரைக் காணாதவர்கள் கருதக் கூடும்; கண்டவர்கள் உண்மைக்கும் கற்பனைக்குமுள்ள ஏற்றத் தாழ்வுகளை நன்குணர்வார்கள். “வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் கானில்” என்று ஆர்வுற்று நம்மாழ்வார் திருக்காட்கரையப்பனைக் காண விரைந்தனராம்; அவருக்கு முன்னமே அவ்வப்பன் நம்மாழ்வாரைக் கண்களால் முற்றப் பருகிவிட்டானாம். அது போன்று பக்தன் அடிகளைக் காணுமுன், அடிகளின் கண்கள் அவனை முற்றப் பருகிவிடும்; பக்தனுடைய நெஞ்சம் உருகும்; வேட்கை பெருகும்; என்ன செய்வது என்று தோன்றாது; விண்ணப்பிக்க வந்த விஷயத்தை மறந்து போவான். ஆயினும் , கடாக்ஷம் பெற்றதும், தன் நினைவு மெல்ல…வரும். சலித்துத் தபித்த மனதிலே ஒரு சாந்தி பிறக்கும். அடிகள் திருவாய் மலர்ந்த மொழிகள் நெஞ்சிலே பதிந்து அழலை ஆற்றி விடும். சந்நிதியை விட்டுப் பிரிய மனம் வராது. அருளொழுகுந் திருமுகமண் உலகத்திலும் முறுவலிலும் சொக்கிப் போய் மனம் இலயித்துவிடும். மங்களாக்ஷதையும் விபூதி குங்குமப் பிரசாதங்களையும் ஸ்பரிசித்து விரல்களைக் கண்களோடு சேர்த்து அனுக்கிரகஞ் செய்த பின்பே, அவற்றைப் பற்றுக் கொண்டு, மீள்வதற்கு இயலும்.

மானிடவுருத் தாங்கிக் கடவுள் நம்மிடை வருவாரானால், இவரைபோலத் தான் வருவார் என்று நாம் உறுதி கூறலாம்படி இவருடய மேன்மைகளை உணர்வோம். இவரை ஒரு தரமேனும் தரிசிக்காதவர்கள், “இத்தகையோர்களுடைய பாததூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியஞ் செய்தது” என்பார்கள். இவரைச் சதா தரிசனஞ்செய்யும் பாக்கியத்தைப் பெற்றவர்களை அமரரோடு தான் ஒப்பிடலாம். இப்பெரியார் தோன்றி ஐம்பத்தைந்து திருநக்ஷத்திரங்கள் ஆகின்றன; துறவு பூண்டு நாற்பது வருஷங்களுக்கு மேலாகிவிட்டது. காசி முதல் கன்னியாகுமரி வரையிலும் இவர் சஞ்சரியாத ஊரே இல்லை. இவர் அறியாத செய்தி இல்லை; இவர் மேற்கூலாத நற்காரியம் இந் நாற்பது வருஷத்திலும் நடந்ததில்லை. உடுக்குந் துவரிடை கதர் துணி பேசும் பேச்செல்லாம் நல்லுபதேசம்; தம்மையடைந்தாரைத் திருத்திப் பணிகொல்வதே செயல்; எம்மதத்தினன் கண்டாலும் அவனுக்கு அம்மதத்திலே ஊக்கமும் உறுதிப்பாடும் மிகும்; எழுகின்ற ஐயங்கள் எல்லாம் நீங்கி விடும். முன்பிருந்த சஞ்சலங்கள் அனைத்தும் சிறிது காலமேனும் மனத்திலே எழாதிருக்கும். இவர்க்கு அடியுரையாக வைக்கப்படும் பொருளோ பன்மடங்கு பெருகிய பொருளாலேயும் சாதிக்க முடியாத காரியத்தைச் சாதித்துக் கொடுக்கும்.

[நன்றி சன்மார்க்கம் 9-6-1949]

With thanks to Sri BGS who originally shared this in his kamalalayam blog.Categories: Devotee Experiences

3 replies

  1. Jaya Jaya Sankara HARA hara Sankara. Janakiraman. Nagapattinam

  2. Very beautiful lines. Brings periyava in our eyes while reading.

  3. ஆஹா..அனுபவப் பூர்வமான வார்த்தைகள் இவை. மிக்க அருமை.

Leave a Reply

%d bloggers like this: