கருந்துளசிச் செடி பூஜை செய்!

Thanks to Sri Sundaram for the share…

 

adishtanam_alankaram1

ஸ்ரீமதி ஜெயலக்ஷ்மி அம்மாளின் ஸ்ரீ மஹா பெரியவாள் தரிஸன அனுபவங்கள்

மஹாபெரியவாளிடம் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் உள்ள பக்தியை எழுத்துக்களால் எழுதிக் காட்ட முடியாது.

நாங்கள் ஸ்ரீவைஷ்ணவர்கள் என்றாலும், பெரியவாளிடம் உரிமை கொண்டாடும் பக்தி இருக்கிறது. நான் வாழ்க்கையைத் தொடங்கிய காலத்தில் ஏராளமான கஷ்டங்கள். திக்குத் திசை தெரியாமல் அல்லாடினேன்.

அந்தச் சமயத்தில் ஒரு தீட்சிதர், புராணப் பிரவசனம் செய்வதற்காக செங்கற்பட்டுக்கு வந்திருந்தார். அவரிடம் சென்று என் குடும்ப நிலையை எடுத்துச் சொல்லி பரிஹாரம் கேட்டேன்.

ஒரு வெள்ளிக் குத்துவிளக்கில் லட்சுமி-சரஸ்வதி-பார்வதி ஆகிய மூன்று அம்பிகைகளை ஆவாஹனம் செய்து, பூஜை செய்து வரும்படி அவர் ஆலோசனை கூறினார். அப்படியே செய்து வந்தேன்.

ஒருநாள், ஒருவர் என் வீட்டுக்கு வந்து பிச்சை கேட்க சில்லரைக் காசு கொடுத்தேன்.

அவர் என்னை மேலும் கீழுமாகப் பார்த்துவிட்டு, குறி சொல்பவன் போல், “குத்துவிளக்குப் பூஜையெல்லாம் உபயோகப்படாது… காலின் கீழே இருக்கிற மூலிகை உன் கண்ணுக்குத் தெரியவில்லையே…” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்

தெருவில் வேறு எந்த வீட்டிலும் சென்று யாசிக்காமல் தெருவைக் கடந்து போய்விட்டார்

இது என்ன தெய்வ வாக்கா? இல்லை, வெறும் பிதற்றலா? அல்லது, இத்தனை நாட்களாகச் செய்த விளக்கு பூஜையின் பலனா? மனம் படாத பாடு பட்டுக் கொண்டிருந்தது.

‘காஞ்சிப் பெரியவாளை சேவித்துக் கேட்கலாமே’ என்று ஒரு யோசனை பளீரிட்டது.

பெரியவாளை தரிசித்து, சேவித்து, என் கஷ்டங்களை திருச்செவி சாற்றினேன்.

”கருந்துளசிச் செடி பூஜை செய்’” என்று அனுக்ரஹம் ஆயிற்று.

என் மனத்துக்குள் ஒரு சங்கல்பம்.

அந்தப் பரதேசி சொன்னபோது நான் தயங்கியதற்கும் காரணம் இருந்தது.

துளசி மாடத்தில் துளசியை வைத்து நான் பூஜை செய்தால், அந்தச் செடி சில நாள்களிலேயே பட்டுப் போய்விடும்.

பெரியவாளிடம் என் சங்கடத்தை விண்ணப்பித்தேன்.

நான் கூறி முடித்தபிறகும், “நீ, கருந்துளசி பூஜையே செய்” என்றார்கள்.

கருந்துளசிச் செடி நட்டு, பூஜை செய்யத் தொடங்கினேன்.

ஆச்சரியம்! செடி கப்பும் கிளையுமாக, சிறு ஆலமரம் போல் செழித்து வளரத் தொடங்கியது.

துளசிச்செடி வளர வளர என் துன்பங்கள் குறைந்து கொண்டே வந்தன. இன்றைக்கும் எங்கள் வீட்டில் கருந்துளசி நிறைய வளர்கிறது. கருந்துளசிச் செடி பூஜை செய்தால் கஷ்டங்கள் விலகும் என்று சொல்லி, நானும் மற்றவர்களைத் தூண்டிவிடுகிறேன்.

பெரியவாள் காட்டிய வழியாதலால் எல்லோரும் நல்ல பலன்களையே பெற்று வருகிறார்கள்.

ஒரு சமயம் ஒரு பெரிய இலையில் நிறைய தும்பைப்பூ எடுத்துக்கொண்டு வந்து பெரியவாளிடம் சமர்ப்பித்தார் ஓர் அடியார்.

தும்பைப்பூவைப் பார்த்ததும் பெரியவாள் ரொம்பவும் சந்தோஷப்பட்டார்.

அங்கிருந்த பக்தர்களைப் பார்த்து, தும்பைப்பூ வைத்திருந்த இலையைக் காட்டி, “இது என்ன இலை தெரியுமா?” என்று கேட்டார்கள்.

பலரும் வெவ்வேறு விதமாகச் சொன்னார்கள்.

“இதன் பேர் – பேத்தி இலை. இதில்தான் சந்நியாசிகள் பிக்ஷை செய்யணும். இது தங்கத்துக்கு சமானம்.
தினமும் இந்த இலை கிடைக்கலேன்னா, துவாதசியன்னிக்குப் பாரணையை இந்த இலையில் வைத்து பிக்ஷை செய்யணும். அவ்வளவு ஒஸத்தி ! அபூர்வம் ! எனக்குக் கூட ஒரு பாட்டி தங்கத் தட்டு பண்ணிக் கொடுத்தாள். ஆனா, நான் அதில் ஒரு தடவைகூட பிக்ஷை பண்ணியதே இல்லை… இப்போ அது ஸ்டோர் ரூம்லே இருக்கு.”

இதைக் கேட்டுக் கொண்டிருந்த நான் ‘பேத்தி’ இலைக்காக பைத்தியமாக அலையத் தொடங்கினேன்.

கடைசியில் அதைக் கண்டுபிடித்து, மந்தார இலையை ஈர்க்குச்சியினால் தைத்து போஜனத்திற்காக உபயோகப் படுத்துவதைப் போல, சில இலைகளைத் தைத்துக் கொண்டு காஞ்சிபுரம் போனேன்.

பெரியவாளிடம், தொண்டர் பாலு என்பவர், பேத்தி இலையைப் பற்றித் தெரிவித்து, “செங்கல்பட்டு ஜெயலக்ஷ்மி; வைஷ்ணவா கொண்டு வந்திருக்கா” என்றார்.

உடனே பெரியவா, “இவாளை ஸ்ரீவைஷ்ணவான்னு கூப்பிடணும்” என்றார்கள்.

எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்தை எவ்வாறு சொல்வேன் !

அன்று முதல் ஸ்ரீமடம் சிப்பந்திகள் என்னை ‘ஸ்ரீவைஷ்ணவா’ என்றே அழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

வாழ்க்கையில் இதைவிட வேறு என்ன பட்டம் வேண்டும் எனக்கு?



Categories: Devotee Experiences

2 replies

  1. MAHAPERIYAVA BLESS PANNATTUM .ALL OFUSOUR FAMILY.

  2. pethi elaina eppadi erukum

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading