பரமாச்சார்யாவை வணங்கிய ”பாலா திரிபுர சுந்தரி…”

Periyava_Bala_Tripurasundari

There are many incidents that talks about Periyava and Bala.. Found this in FB from a devotee recently…

காஞ்சி பரமாச்சார்யாவிற்கு அம்பாளின் வடிவான பாலா திரிபுர சுந்தரி மீது பக்தி அதிகம்.  அந்த பாலா திரிபுர சுந்தரியே காஞ்சி மஹா பெரியாவிடம் வந்து பேசியதாக கூறப்படுகிறது. அதுபற்றிய தகவல்:

ஒருமுறை தீபாவளியன்று, காஞ்சி சங்கரமடத்தில் மகாபெரியவர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருந்தார். பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள். அந்த வரிசையில், ஒரு ஒன்பது வயது மதிக்கத்தக்க சிறுமியும் நின்றாள்.  நீலநிற பட்டுப்பாவாடை, பச்சை நிற சட்டையுடன், நெற்றியில் திலகமிட்டு, தலை நிறைய பூச்சூடி “பால திரிபுரசுந்தரி’ போல், அவள் தோற்றமளித்தாள். அவளது கையில் மூன்று டப்பாக்கள் இருந்தன.

வரிசையில் நின்ற பக்தர்களின் பார்வை அந்தச்சிறுமியின் மீது பதிந்திருந்தது. எல்லாரும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். “இப்படிக்கூட திவ்ய அழகுடன் ஒரு பெண் இருப்பாளா!” என்பதே அனைவரின் ஆச்சரியப் பார்வைக்கு காரணம்.

திடீரென, பெரியவர் அந்தச் சிறுமியை அழைத்தார்…

“உன் பெயர் என்னம்மா? எங்கிருந்து வருகிறாய்?  உன் பெற்றோர் வந்திருக்கிறார்களா?” என்று பரிவுடன் கேட்டார்.

தீபாவளிக்கு என்னென்ன பட்சணம் சாப்பிட்டாய்?” என்று கேள்விகளை அடுக்கினார்.

அவள், “”ஒக்காரை, பஜ்ஜி, வடை…” என தான் சாப்பிட்ட பலகார வகைகள் பற்றி பெரியவரிடம் சொன்னாள்.

“சரி…  நிறைய  டப்பா வச்சிருக்கியே! அதில் என்ன இருக்கு?” என்று கேட்டார் பெரியவர்.

அதற்கு அந்த சிறுமி, “உம்மாச்சி தாத்தாவுக்கு பிடித்தமான  கோதுமை அல்வாவும், பால்கோவாவும் வச்சிருக்கேன்,” என்று சொல்லி, இரண்டு டப்பாக்களை மட்டும் பெரியவர் முன் வைத்து, அவரை வணங்கி எழுந்தாள்.

தன் மடியில், ஒரு சிறிய டப்பாவை வைத்திருந்த அந்த சிறுமியை நோக்கி, “சரி… இரண்டு டப்பா நிறைய பட்சணம் கொண்டு வந்து தந்திருக்கியே! இன்னொரு டப்பாவிலே என்ன வச்சிருக்கே! அதை ஏன் தரலை!” என்றார்.

“”இதிலா… இதிலே…  தீபாவளி மருந்து வச்சிருக்கேன்… உம்மாச்சி தாத்தா பட்சணத்தை சாப்பிட்டதும், இதையும் கொடுத்துட்டு போகலாமுனு இருக்கேன்…”  என்று மழலை மொழியில் பதிலளித்தாள் குழந்தை. பிறகு என்ன நினைத்தாளோ! அந்த டப்பாவையும் பெரியவர் முன் வைத்து விட்டு, அவரை வலம் வந்து வணங்கினாள். பிறகு அங்கிருந்து எழுந்து போய்விட்டாள்.

அவளுக்கு எந்த ஊர்? தாய் தந்தை யார்? என்ற விபரத்தை மட்டும் அவள் கடைசி வரை சொல்லவே இல்லை.

அந்தச் சிறுமியை பக்தர்கள் மடம் முழுவதும் தேடியலைந்தனர். உஹூம்… யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அன்னை பாலதிரிபுர சுந்தரியே அங்கு வந்து, பெரியவருக்கு பட்சணம் அளித்ததாகத்தான் எல்லாரும் பேசிக்கொண்டார்கள்.

பெரியவருக்கு அம்பாளின் வடிவான பாலதிரிபுர சுந்தரி என்றால் மிகவும் பக்தி. அவளே நேரில் வந்ததாகத்தான் அவரும் கருதியிருப்பார்.

“உம்மாச்சி தாத்தா’ என்றால், “அம்மாவைப் பெற்றவர்’ என்று பொருள். ஆம்…அந்த அம்பாளே மகாபெரியவரை தன் தந்தையாக ஏற்றிருக்கிறாள் என்று தான் இதற்கு அர்த்தம் கொள்ள வேண்டும்! ஆம்…நம்மைப் பெற்றது ஒரு தந்தை. நம் எல்லோருக்கும் தந்தை, நடமாடும் தெய்வமாய் விளங்கிய காஞ்சி மகாசுவாமிகள்.

நன்றி: வரகூரான் நாராயணன் – தினமலரில் வந்த கட்டுரை.

பின்குறிப்பு:

நாம் வழிபடும் அம்பிகையின் பல வடிவங்களில் ஒன்று  (ஒன்பது வயது )  குழந்தை வடிவமான பாலா திரிபுரசுந்தரி. பாலா திரிபுரசுந்தரியின் பெருமைகளைச்   சொல்ல  வார்த்தைகளே  இல்லை.  ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியாகிய  பராசக்தி தானே விரும்பி  எடுத்து கொண்ட வடிவம் தான் இந்த ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி வடிவம்.

பண்டாசுரனை வதம் செய்வதற்காக தோன்றினாள் பாலா தேவி . மன்மதனை ஈசன் எரித்த சாம்பலிலிருந்து தோன்றியவன் ” பண்டன் ” எனும் அரக்கன் . ஒரு பெண்ணை தவிர தனக்கு யாராலும் மரணம் நேரக்கூடாது என வரம் பெற்றான் . அந்த சந்தோஷத்தில் தேவர்களையும் ,மற்ற வர்களையும் துன்புறுத்தினான் .  அவர்கள் பராசக்தியை சரணடைய , தேவி தன்  சேனைகளோடு  போர் புரிந்து பண்டாசுரனை வதைத்தாள்.

லலிதையின் அங்கத்திலிருந்து  தோன்றியவள்.ஒரு கையில்  அபய  முத்திரையுடன் ஜெப மாலையும், புத்தகம் ஏந்தி அருள் புரிகிறாள்.

பாலா என்றால்  சிறுமி எனவும் பொருள்படும் .பொதுவாகவே , சிறுவர்கள் எவரிடமும் பேதமில்லாமல் இருப்பர் . தீய எண்ணங்கள் இருக்காது… அதே போல்  சிறுமியாக இருக்கும்  இவளும்  பேதம் பாராட்டாமல் அருள்வாள்.   இவளை தியானித்தயுடனே மனதில் பிரசன்னமாவாள்…  அன்பு மழை பொழிவாள்…



Categories: Devotee Experiences

1 reply

  1. Can I get all /any of the following:

    1. ஸ்ரீ பாலா ஸ்தோத்ரம் (10) சுமேதஸ் ரிஷி
    2. ஸ்ரீ பாலா கவசம் (15) ருத்திர யாமளம்
    3. ஸ்ரீ பாலா ஸ்தவராஜம் (12) மந்திர ரகஸ்யம்
    4. ஸ்ரீ பாலா அஸ்டோத்தர சத ‘நாமாவளி (14) ருத்ர யாமளம்
    5. ஸ்ரீ பாலா ஸஹஸ்ரநாமம் (125) விஷ்ணுயாமளம்
    6. ஸ்ரீ பாலா காயத்ரி ஸகஸ்ரநாமம்- தேவி பாகவதம்
    7. ஸ்ரீ பாலா சாரதா நவரத்ன மாலா (10) தேவி பாகவதம்
    8. ஸ்ரீ பாலா ஸ்தோத்ரம்- அனந்தானந்தர்
    9. ஸ்ரீ பாலா மூல மந்த்ராத்மக பாலாஸ்துதி (4)

Leave a Reply

%d bloggers like this: