Thanks to Smt Saraswathi Mami for this very touching incident – beautifully written in Tamil..Those who were born before 70s would have definitely heard about this wonderful “Gajarajan Kesavan”. Bagavatham repeats here – gaja moksham!
Ekadasi vrata mahimai can’t be explained beyond this!
Beautiful documentary film is also attached below…..
அது என்ன “குருவாயூர்” ஏகாதசி? “வைகுந்த” ஏகாதசி-ன்னு தானே எல்லா இடத்துலயும் சொல்லுவாங்க கேரளத்தில் மட்டும், அனைத்து ஆலயங்களிலும், ஏன் “குருவாயூர் ஏகாதசி”-ன்னு சொல்லணும்?
இத்தனைக்கும், குருவாயூர் பாடல் பெற்ற தலம் கூடக் கிடையாதே!
எல்லாத்துக்கும் காரணம் ஒரு வாரணம் = யானை தான் காரணம்!
அந்த யானையின் மனசு தான், மொத்த வைகுந்த ஏகாதசிக்கே, “குருவாயூர்” ஏகாதசி என்று பெயர் பெற்றுத் தந்தது!
1914 – வல்லிய ராஜா என்னும் நிலம்பூர் நாட்டு ராஜா! உள்நாட்டுக் கலகத்தில் அவஸ்தைப்பட்ட தன் குடும்பத்துக்காக வேண்டிக் கொண்டார்!
தன்னிடம் இருந்த பல யானைகளில் ஒன்றை, குருவாயூர் ஸ்ரீகோயிலுக்கு, தானம் அளித்தார்!
அந்த பத்து வயதுக் குட்டி யானை = கேசவன்! பின்னாளில் புகழ் பெற்ற “கஜராஜன் கேசவன்” ஆனது!
யானை என்னமோ குட்டி தான்! இருந்தாலும் சுட்டி!
அமைதியான துறுதுறுப்பான சுபாவம், சாப்பிடும் போதும், விளையாடும் போதும், ஸ்ரீகோயிலைப் பார்த்தவாறே தான் எதுவும் பண்ணும்! அங்கிருந்து தன் கண்ணை மட்டும் எடுக்கவே எடுக்காது! இத்தனையும் பத்தே வயசில்!
அவ்வப்போது ஊர்வலத்தில் கண்ணனை அதன் மேலும் ஏற்றுவார்கள்!
சக யானைகளெல்லாம், விளையாடுவதும், முரண்டு பிடிப்பதும்,குலைகுலையாய் நேந்திரம் பழம் உண்டு, ஜாலியாகக் கழிப்பதுமாய் இருக்க…
இது மட்டும், ஏகாதசி நாளில் சாப்பிடாமல் இருக்க, எப்படியோ கற்றுக் கொண்டது!
தியுலாவின் போது, வித்தியாசமாக நடந்து காட்டும்! முன்னும் பின்னும், வலமும் இடமும், நேர் வாட்டிலும், குறுக்கு வாட்டிலும், அசைந்து அசைந்து செல்வது ஏதோ டான்ஸ் ஆடுவது போல இருக்கும்!
குருவாயூரப்பன், திடீரென்று இதனால் அரங்கனைப் போல், நடையழகு உடையவன் ஆகி விட்டான்! 🙂
மக்களிடம், குறிப்பாகச் சின்னஞ் சிறார்களிடம் கேசவனுக்கு ஏக செல்வாக்கு கூடி விட்டது!
ஆனால்…ஆனால்…
பக்கத்து ஊர்களில் நடக்கும் உற்சவங்களுக்கு இது செல்லாது! முரண்டு பிடிக்கும்! அங்குசத்தால் அடி வாங்கும்! ஆனால் அலறாது! பிளிறாது! கண்ணீர் உகுக்கும்! நீர் பெருக்கும்! ஆனால் அப்பவும் குருவாயூரை விட்டு மட்டும் செல்லவே செல்லாது!
குருவாயூரப்பனை, சும்மா ஒப்புக்குச் சுமக்காமல், மனசிலே சுமந்து விட்டது போலும்!
குருவாயூரப்பன் ஊருலாச் சிலையை (உற்சவர்), மலையாளத்தில், திரு-வெளி என்பார்கள்! ஸ்ரீவேளி, சீவேளி என்று பின்னாளில் திரிந்து விட்டது!
தட்டையான பலகையில், மாயோனின் உருவம் பொறித்து, அதன் கீழே சின்னூண்டு இருக்கும்!அதுக்கு “திடம்பு”-ன்னு பேரு
நம்ம கேசவன், அந்தத் “திடம்பை“ யார் வைத்திருக்கிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே தன் முன்னங்காலை மடக்கும்! மற்ற யாராய் இருந்தாலும், பின்னங்கால் வழியாக ஏறித் தான், யானை மேல் உட்கார வேண்டும்!
எவ்வளவு தான் தேங்காய், பழம், கரும்பு இனாமாகக் கொடுத்தாலும், அவற்றை எல்லாம் ஒதுக்கி விடும்!
தன் முன்னங் கால்களை மட்டும், வேறு யாருக்கும் மடக்கவே மடக்காது!
உன் அந்தமில் சீர்க்கு அல்லால், வேறு எங்கும், அகம் குழைய மாட்டேனே-ன்னு ஆழ்வார் பாசுரத்தை நாமே படிச்சதில்லை! ஆனா இந்த யானை, இதை எங்கே போயி படிச்சிது/பிடிச்சிது-ன்னு தான் தெரியவில்லை!
செந்தழலே வந்து அழலைச் செய்திடினும், செங்கமலம் அந்தரம் சேர் வெங் கதிரோற்கு அல்லால் அலர் ஆவால்!! வெந்துயர் வீட்டா விடினும் வித்துவக்கோட்டு அம்மானே-உன் அந்தம் இல் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே!
கேசவனை, “திமிர் பிடித்த யானை” என்று பட்டம் கட்டி விட்டார்கள்! அது “நார்மலான” யானை இல்லை! “ஈகோ பிடிச்ச” யானை என்று பேர் வாங்கிக் கொண்டது!
முதலில் கரும்பைக் கொடுத்து ஆசை காட்டி யவர்கள், பிற்பாடு சாப்பாடு கூடச் சரியாகப் போடாமல் தண்டிக்கப் பார்த்தார்கள்! அப்பவும் கேசவன் – “வேறெங்கும்” அகம் குழைய மாட்டேனே!
மற்ற யானைகளிடம் இருந்து ஒதுக்கி வைக்கப் பார்த்தார்கள்!
சரி யானையின் “ஈகோ”-வை அதன் வழியிலேயே அடக்குவோம் என்று நினைத்தார்கள்!
குருவாயூர் அப்பனைத் தானே மனசால் சுமக்கிறாய்? அவனையே உனக்கு இல்லாமல் செய்து விட்டால்???
அன்றில் இருந்து, கேசவன் மேல் மட்டும் குருவாயூரப்பன் “திடம்பை” ஏற்றுவதில்லை!
கேசவனின் முறையே வந்தாலும் கூட, “திடம்பை” அவன் மேல் ஏற்றுவதில்லை! அவனோடு பேசுவதையெல்லாம் குறைத்துக் கொண்டார்கள்!
அவன் மிக அழகாக ஒதுக்கப்பட்டான்! ஒதுக்க ப்பட்டான்! உதாசீனம்! Ignore! – Thatz the Best Insult! அப்போவாச்சும் அந்தக் கேசவன் “திருந்தினானா”?
பிற யானைகளின் மேல் குருவாயூரப்பன் உலா வருவதைப் பார்க்கும் கேசவனுக்கு, தன்னை ஒதுக்குகிறார்கள் என்று நன்றாகத் தெரிந்து விட்டது! நேற்று வரை கண்ணனைச் சுமந்து வந்த கேசவன்,
இன்று கட்டையை மட்டுமே சுமப்பவன் ஆக்கப்பட்டான்! ஆனால்……ஆனால்…
யானை தனக்கென்று எந்த உரிமையும் கோரவில்லை! தன்னை மட்டும் தான் குருவாயூர் அப்பனின் உலாவுக்குப் பயன்படுத்த வேணும் என்று அடமும் பிடிக்கவில்லை! மதமும் பிடிக்கவில்லை!
அதன் மனதில் ஒன்றே ஒன்று தான்: குருவாயூர் அப்பனுக்கு வளைந்த கால்கள், வேறு எங்கும் வளையாமல் இருக்க வேண்டும்!
மற்றபடி, கண்ணன் யார் மீது வலம் வந்தால் என்ன? கண்ணன் ஆசைப்பட்டு வலம் வந்தால் போதாதா?
மயிற் பீலி அசைய அசைய, அவன் வலம் வரும் அழகே அழகு!
மானச சஞ்சரரே! மானச சஞ்சரரே!
அதை நானே கெடுப்பேனா? நானே கெடுப்பேனா?
கேசவன் பொறாமை பிடித்து, வீதியுலாவில் மற்ற யானைகளோடு, முரண்டும் பிடிக்கவில்லை! சண்டைக்கும் செல்லவில்லை! மற்ற பளு தூக்கும் வேலைகளுக்குத் தயங்காது வந்து நிற்கும்! வேலை செய்யும்!
ஆனால் அதன் கண்களில்? கண்களில்?……அது மட்டும் நிற்கவே இல்லை!
1970 மார்கழி மாசம் – குருவாயூர் ஸ்ரீகோயிலில் ஏகாதசி விளக்கு விழா! விளக்கு மாடம் முழுக்க டர்விடும் விளக்குகள்! அம்மே நாராயணா, தேவீ நாராயணா என்ற கோஷங்கள்!
நம்ம கேசவன் மேல் மாயக் கண்ணன் உலா வர வேண்டிய முறை!
ஆனால் ஸ்ரீவேளி உற்சவத்தை இன்னொரு யானையைக் கொண்டு முடித்து விட்டார்கள்! கோயில் நடை சார்த்தப்பட்டது!
கோயிலுக்கு வெளியே கொட்டடியில் படுத்துக் கொண்டான் கேசவன்!
ஈரமே வாழ்வாகிப் போன கேசவனின் தூங்கிய கண்களில் மெல்லிய ஈரம்…நீரில் இருந்து நெருப்பு வருமா என்ன?
அன்றைய ஏகாதசி இரவில் பற்றிக் கொண்டது! – தீ! தீ! தீ!
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்! – தீ! தீ! தீ!
மேற்குச் சுற்றம்பலத்தில் பிடித்துக் கொண்ட தீ, கூத்தம்பலத்துக்குப் பரவி, கிடு கிடுவென்று வளர்ந்து, நாலம்பல விளக்கு மாடங்களைப் பற்றிக் கொண்டது!
ஏதோ புகைச்சல் வாசனை பார்த்து, யாரோ கூவ, ஒரு சிலர் மட்டும் விழித்துக் கொண்டு பதறினார்கள்!
யானைகளை அவ்வளவு சீக்கிரம், அதுவும் தூக்கத்தில் இருந்து எழுப்ப முடியுமா என்ன?
அம்பலத்தைத் தன் பார்வையில் இருந்து அகற்றாத கேசவன் மட்டும், நெருப்பைக் கண்டு, அலறி அடித்துக் கொண்டு, எழுந்து ஓடினான்!
“ஐயோ! என் செல்வப் பிள்ளைக்கு என்ன ஆயிற்றோ? என் சின்னிக் கண்ணனுக்கு என்ன ஆயிற்றோ? ”
அதிகம் பிளிறாத கேசவன், அன்று நள்ளிரவில் படு பயங்கரமாகப் பிளிறினான்! –
“என்டே குருவாயூரப்பா”!
கேசவன் பிளிறலில் மொத்த குருவாயூரும் விழித்துக் கொண்டது! அவனோ நாலம்பல நடையைச் சுற்றிச் சுற்றி வருகிறான்!
புதிய மண்டபம் கட்டுவதற்காக வைக்கப் பட்டிருந்த மணல் மூட்டைகளை, ஒரே மொத்தமாய் தூக்கிக் கொண்டு வந்து, அவன் தொம் தொம் என்று போட…
ஊரே திரண்டது! மணல் கொண்டு வீசியது! தீயணைப்புத் துறை சற்று நேரம் கழித்து வந்து நீரைப் பாய்ச்ச, மொத்த அம்பலமும் மொத்தமாய்க் குளிர்ந்தது!
அனைவரும் உள்ளே சென்று பார்க்க…
இன்னும் மூனே மூனு அடி தான்! கருவறைச் சுவர்!
அது வரை அத்தனையும் மொத்தமாய் கருகி இருக்க…
ஸ்ரீகோயில் வாசல் மாலைகள் மட்டும் கருகாமல் இருக்க…
ஸ்ரீகோயில் தப்பியது!
சின்னிக் கிருஷ்ணன் தப்பித்தான்!
துவாரகையில் கண்ணனே வழிபட்டு, பின்னர் உத்தவர் வழிபட்டு, குருவும் வாயுவும் அந்த விக்ரகத்தைக் கொண்டு வந்து, அம்மையப்பனான பார்வதி பரமேஸ்வரன் அருளால் பிரதிட்டை செய்யப்பட்ட அந்த…..
குருவாயூரப்பன் தப்பித்தான்! குருவாயூரப்பன் தப்பித்தான்!
மக்கள், கேசவன் மனசைப் புரிந்து கொண்டார்கள்! கேசவன் “ஈகோ” பிடித்த ஜீவன் அல்ல! “கண்ணனை”ப் பிடித்த ஜீவன் – என்பதை லேட்டாகப் புரிந்து கொண்டார்கள்…….
என்ன பிரயோஜனம்?……அவனோ மனத்தளவில் மிகவும் தளர்ந்து போய் விட்டான்! – கேசவனைப் பாடவும், நீ கேட்டே, கிடத்தீயோ?
குருவாயூரப்பன் ஸ்ரீவேளியான “திடம்பு”, மீண்டும் கேசவன் மேல் ஏறியது!கேசவன் வெகு நாள் கழித்து, முன்னங் கால்களை மடித்தான்!
ஸ்ரீவேளி பிடித்தவர், அவன் கால் மேல் ஏறி, அவன் மேல் ஏறினார்! பின்னங் கால்கள் வழியாகப் பலரும் ஏறினார்கள்! குடை பிடிப்பவரும், சாமரம் ஆட்டுவரும், மயில்தோகை விசிறி வீசுவரும் ஏறினார்கள்!
நெடுநாள் கழித்து நடையழகு!
மீண்டும் கேசவன்-கண்ணன் உலா!
வண்ண மாடங்கள் சூழ் “குரு வாயூர்”
“கண்ணன்-கேசவன்” நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்து அளர் ஆயிற்றே!
Dec-1976……இன்றைய நாள்…அன்று! மோட்ச ஏகாதசி என்னும் வைகுந்த ஏகாதசி!
குருவாயூரப்பன் “திடம்பை”, கேசவன் மேல் ஏற்றுகிறார்கள்!
ஏற்றிய சில வினாடிகளிலேயே, கீழே, சரி சரி சரி எனச்…..சரிந்து விழுகிறான் கேசவன்! ஐயோ!!!
அவசரம் அவசரமாக, “திடம்பை”, இன்னொரு யானைக்கு மாற்றுகிறார்கள்! தொடங்கிய புறப்பாட்டை முடிக்கணுமே! சாஸ்திர விதி ஆயிற்றே!
மூச்சு இழுக்க இழுக்க……..ஹோய் கேசவா…..உனக்கா இந்த மரண அவஸ்தை?
இன்னொரு யானையின் மேல், குருவாயூரப்பன் உலா வரும் அழகை, இன்பமாகப் பார்த்து முடித்தான் கேசவன்! வீதியுலா முடிந்தது! ஸ்ரீவேளி முடிந்தது! மாறிலா அன்பும் முடிந்தது! வைத்த கண் வாங்கவில்லை! உயிரை மட்டும் வாங்கிக் கொண்டான்!
எம்பெருமான் ஸ்ரீவேளி முன்பாக,
அந்த மயிலிறகின் முன்பாக,
அந்த மதி வதனம் முன்பாக,
சிரித்த சிறு செவ்விதழ்கள் முன்பாக,
கலைத்த அந்த தலைமுடியின் முன்பாக,
துதிக்கையை நீட்டி விரித்தபடி,
துதிக்-“கையை” நீட்டி விரித்தபடி,
சரணம்” என்று வாயால் சொல்லக் கூடத் தெரியாது…
அனன்ய சரணஹ, த்வாம் சரணம், சரணம் அஹம் பிரபத்யே!
ஸ்ரீமன் நாராயண சரணெள, சரணம் ப்ரபத்யே!
ஸ்ரீமதே நாராயணாய நமஹ!
புகல் ஒன்று இல்லா அடியேன்….
மோட்ச ஏகாதசியான வைகுந்த ஏகாதசியும் அதுவுமாய்…..
அகலகில்லேன், உன்னை அகலகில்லேன் என்று உன்
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே!
தன் மேல் ஏற்றாவிட்டாலும் பரவாயில்லை, கண்ணன் வீதியுலா கண்டால் போதும் என்று இருந்த ஜீவன் அல்லவா? அதன் இயற்கையான கம்பீரம் குறைந்து, இப்படி மனத்தளவில் தளர்ந்து, அதன் கதி இப்படி முடிந்து விட்டதே!
தன் கால்களைத் தானே, வேறு யாருக்கும் மடக்காது இருந்தான்?
வேறு யாரும் கண்ணனிடம் செல்வதைத் தடுத்தானா என்ன?
மடக்காது இருத்தலுக்கும், தடுக்காது இருத்தலுக்கும் கூடவா, மாந்தர்க்கு வித்தியாசம் தெரியவில்லை?
அவன் மனத்திலா பொறாமை? ஆணவம்?
அவன் மனத்திலா “தனக்கு மட்டுமே” என்கிற ஒரு எண்ணம்?
தனக்கு ஒத்து வரவில்லை என்பதால், அவனைத் தள்ளி வைக்கும் அளவுக்கா, ஒரு பாழும் வெறி?
அவனையா ஒதுக்கி வைக்க முடிந்தது? உதாசீனப் படுத்த முடிந்தது?
அவனுக்கா பசியைக் கொடுத்து, தனிமையைக் கொடுக்க முடிந்தது?
மாயங்கள் செய்யும் மாயோனிடம் மனதைக் கொடுத்து, இப்படி மண்ணில் இன்று விழுந்து விட்டதே!
கேரள அரசு, கேசவனைக் “கஜராஜன்” என்று பிற்பாடு கொண்டாடி…
குருவாயூர் வீதியிலே, பன்னிரெண்டு அடிச் சிலையாக எழுப்பியது!
அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்!
ஆனை பரிமேல் அழகர் வந்தார் வந்தார்!
கச்சி தன்னில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார்!
கருத வரம் தரும், வரதப் பெருமாள் வந்தார்!
முக்தி மழை பொழியும் முகில் வண்ணன் வந்தார்!
”மூமூமூலம்” என ஓஓஓலம் இட, வல்லார் வந்தார்!
வாழைப்பந்தல் கிராமத்தின் கஜேந்திர வரதராஜப் பெருமாளே! ஆனைக்கு அருளிய அருளாளப் பெருமாளே!
ஹே பெருமானே,
இந்த யானைக்கு முக்தி கொடு! உன்னைக் கொடு!
(Abridged from KRS)
Categories: Devotee Experiences
Very touching incident.
Very nicely described about the relation between Sri Krishna of Guruvayur and the ‘Gaja Raja’ Kesavan. Well Naration…. The video on Kesavan in Malayalam is also very well presented. Thanks Mahesh Garu.
Excellent presentation!
Very nicely written. Read it twice. Kesavan is very much attached to Krishnan and Krishnan is attached to kesavan. Mamie is very much attached to Kesavan written this article in more descriptive manner like big poet Thanks to Mamie and to you for sharing.
laxman.