ஸ்ரீ சங்கர திருவடித் துதி

Thanks Sri Saanuputhran for this wonderful stuthi…

Periyava-vigraham1Periyava-vigraham2

These two photos are my recent  favorites 🙂

அரஹர சங்கர ஜயஜய சங்கர
காஞ்சி மடேச்வர செகத்குரு சங்கர
குருபர தேசிக குஞ்சித சங்கர
சசிசே கரகுரு பாத நமஸ்தே (1)

ஆதியு னாதியு மானசி காமணி
சோதி யனாகிய சுந்தர குருபர
திறமிகு திவ்விய தேவ மனோகர
சசிசே கரகுரு பாத நமஸ்தே (2)

இகபர சுகமதி லேயுறு வினைகளு
மோடிட வருள்புரி காஞ்சி யனாகிய
தண்டக மண்டல மேயுறு சிவகுரு
சசிசே கரகுரு பாத நமஸ்தே (3)

ஈசுர திருவரு ளாசிநல் புங்கவ
மா’தவ நாயக மஞ்சுள தாயக
வேதக சமரச விண்டிலர் பண்டித
சசிசே கரகுரு பாத நமஸ்தே (4)

உலகினி லேபிறப் பெய்திடு மடியவ
ருளமுடை மாசுகள் நீக்கிட வருள்தர
உமைசிவ மொன்றிட உருதனி லேகிய
சசிசே கரகுரு பாத நமஸ்தே (5)

ஊரணி மாந்தரும் துய்யுறு நிலைபெற
மதியரு ளாசியுந் தந்திடு குருவென
தென்னகந் தேறிய திருவுரு சங்கர
சசிசே சரகுரு பாத நமஸ்தே (6)

எண்குணத் தோனென புங்கவ னுருதனில்
புண்ணிய உத்தம பூரண மேயேமக்
கருளிடு குருசிவ சங்கர குருபர
சசிசே கரகுரு பாத நமஸ்தே (7)

ஏகம்ப நாயக என்குரு நாயக
தாரக நாயக சங்கர நாயக
காரக நாயக கதிதரு நாயக
சசிசே கரகுரு பாத நமஸ்தே (8)

ஐங்கர சோதர அம்பிகை காதல
மங்கள வல்லி மனோகர நாமத்தில்
இங்கெமைக் காத்திடு குருபர சங்கர
சசிசே கரகுரு பாத நமஸ்தே (9)

ஒருமுக மாயென தாழ்மனத் துட்பொரு
ளாகிடு மோர்பத மாயெமைக் காத்தரு
ளீசமஹே சனுமாயுறை சங்கர
சசிசே கரகுரு பாத நமஸ்தே (10)

ஓம்அர ஹரசிவ ஓம்சசி சேகர
ரீம்அர ஹரசிவ குஞ்சித சங்கர
ஸ்ரீம்அர ஹரசிவ திரள்பவம் ஒழிவளர்
சசிசே கரகுரு பாத நமஸ்தே (11)

அரஹர சங்கர ஜயஜய சங்கர
சிவசிவ சங்கர குருகுரு சங்கர
குருபர தேசிக குஞ்சித சங்கர
சசிசே கரகுரு பாத நமஸ்தே (12)

கோவில்களில் பிரதிஷ்டையாகியிருக்கிற மூர்த்திகளை நாலைந்து தினுசாகப் பிரித்திருக்கிறார்கள் என்று ஆகம ஆன்றோர்கள் கூறுகின்றனர். ஆதாவது – ஸ்வயம்வியக்தம், தைவிகம், மாநுஷம், ஆஸுரம், ஆர்ஷம் என்று.

இதனில் தெய்வமாகப்பட்டது ஒரு இடத்திலே தானாகவே லிங்கமாகவோ, விக்ரஹமாகவோ, ஆவிர்பவிப்பதற்கு “ஸ்வயம்வியக்தம்” என்று பெயர். ஸ்வயம்பு, சுயம்பு, தான் தோன்றி என்றும் அழைப்பர். அப்படியாக தானாக முன்வந்து நம் குருவாக அமைந்தவர் தாமே நம் செகத்குரு ஸ்ரீமஹாஸ்வாமிகள்!

அப்படியாக தேவர்கள் பிரதிஷ்டை பண்ணினது தைவிகம். நகரேஷூ காஞ்சி எனப் புகழ்படு காஞ்சீபுரத்தில் அம்பாளே மண்ணை லிங்கமாகப் பிடித்துவைத்தாள் என்றுரைக்கிறது புராணம். திருவீழிமிழலையில் மஹாவிஷ்ணுவே லிங்கப் பிரதிஷ்டை செய்தார் என்பதும் பண்டைய பொழுதிலிருந்து ஆன்றோர் உரைப்பது. அப்படியாக சதாசர்வ காலமும் ‘ததாஸ்து’ என மொழிந்து நம் நல்ல எண்ணங்கள் ஈடேற வைக்கின்ற தேவர்கள் தாமே நமக்கான செகத்குருவை அருளியதும் கூட!

அநேக ஸ்தலங்களில் இந்திரன் தோஷம் நீங்குவதற்காக ஈச்வரனையோ, விஷ்ணுவையோ பூஜை செய்ததாகச் சொல்வார்கள். இதெல்லாம் “தைவிகம்”. ஆம்! அனேகம் ஸ்தலங்களிலே சிவம் எனப்படுகிற சங்கரனானவனே ஸ்ரீசந்த்ரசேகர ஸரஸ்வதி எனும் சங்கரனாக அவதரித்து, பற்பல ஸ்தலங்களுக்கும் சென்று பூசித்து, நம்மையெல்லாம் இன்றளவிலும் பூஜிக்க வைக்கும் நம் மஹாஸ்வாமிகளுக்கு இந்த பதமும் பொருந்துவதாகவே மனம் நினைக்கின்றது. உங்களுக்கு…?
“தைவிதம்” என்பதற்கு நேர் எதிர் வெட்டாக திரிசரன், ஓணன் மாதிரியான அசுரர்கள் ஸ்வாமியைப் பிரதிஷ்டை செய்த இடங்கள்தான் திரிசிரபுரம் என்ற திருச்சினாப்பள்ளி, திருச்சி, காஞ்சீபுரத்தில் உள்ள ஓணகாந்தன் தளி முதலிய இடங்கள். அஸுரர் பிரதிஷ்டை செய்ததுதான் “ஆஸுரம்”.

இதனிலே “ஆர்ஷம்” என்றால் “ரிஷிகள் பண்ணினது” என்று அர்த்தம். குற்றாலத்தில் அகஸ்திய மஹரிஷி மூர்த்திப் பிரதிஷ்டை பண்ணியிருக்கிறார். சிக்கலில் வஸிஷ்ட மஹரிஷி, திருக்களரில் துர்வாஸர், ஜம்புகேச்வரம் என்ற திருவானைக்காவலில் ஜம்பு மஹரிஷி என்றபடியாக அநேக க்ஷேத்திரங்களில் ஆர்ஷப் பிரதிஷ்டை இருப்பதனை பெரியோர்கள் வாயிலாக அறிகின்றோமல்லவோ! அப்படியாக இந்த பரமாத்மாவினால் நேரடியாக அருள்பெற்று பல்வேறு இடங்களிலும் இந்த ப்ரகாசனை நமக்கு தரிசிக்க வைக்கின்ற ஸ்தலங்களைச் சொல்லவும் வேண்டுமோ…? சேலம் பெரியவா கிரஹம், ஹோசூர் பெரியவா இல்லம், நொச்சியம் பெரியவா த்யான பூமி, எல்லாவற்றையும் விட மிகவும் போற்றத்தக்க ஆதிசங்கரர் முதலாக ஸ்ரீ மஹாஸ்வாமிகள் வரையிலுமாக நம் காஞ்சி காமகோடி பீடத்தின் குருமஹாரத்தினங்களாக அலங்கரித்த நம் 68 பீடதிபதிகளும் ஒருசேர தரிசனம் தருவதாக அமைந்திருக்கும் கோவிந்தபுரம் ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிகள் தபோவனம்…. இன்னமும் நிறைய ஸ்தலங்கள். ஏதோ, இப்போது நினைவில் வருவது பற்றி இங்கே பகிர்கின்றேன்…!

அடுத்ததாக மநுஷ்யர்கள் – அநேக ராஜாக்களும் பக்தர்களும் – பிரதிஷ்டை பண்ணினதுதான் “மாநுஷம்” என்பதைச் சொல்லவும் வேண்டுமா என்ன? இப்படியாக மட்டுமல்லாமல், பற்பல சத்ஆத்மாக்களுக்கு தாம்மிலே காமாக்ஷியையும், திருப்பதி வேங்கடவனையும், ஸ்ரீராமசந்த்ர மூர்த்தியையும், சபரிகிரீசனையுமாக காட்டியருளிய ப்ரத்யக்ஷ பரமேஸ்வரனானவர் தாமே நம் மஹாகுருவான ஸ்ரீமஹாஸ்வாமிகள்! அதுமட்டுமா… இன்றளவிலும் சம்பூர்ணமாக நம்மையெல்லாம் ஆட்கொண்டு நமக்கு நல்வழிகளைச் சொல்லித் தருவதோடு நம்மையெல்லாம் காத்து ரக்ஷித்து அறவழிகளிலே நடத்துகிற ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதிகள், ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதிகள் போன்ற அருட்தெய்வங்களையும் நமக்குத் தந்துள்ள பரப்ரஹ்ம ஸ்வரூபத்தின் பொற்பாதங்களை அனுதினமும் எண்ணி, தியானித்து, போற்றி மகிழ்ந்து வாழ்வாங்கு வாழவேண்டுமல்லவோ! சங்கரா! அப்படியாக இன்றைய தினம் ஸ்ரீதௌத்தியம் போலே ஸ்ரீகுருவடி துதிதனை உங்கள் அனைவருடனுமாக ஒருசேர இருந்து த்யானித்து போற்றும் பாக்கியம் நல்கிய அந்த ப்ரத்யக்ஷ பரமேஸ்வர குஞ்சித சங்கரனை மனதார ப்ரார்த்தித்துக் கொண்டு இந்த குருப்புகழ் திருவடிதுதிதனை சமர்ப்பிக்கின்றேன்.
மிக நீண்டதோர் பகிர்வாக இது அமையப்பட்டுவிட்டது. இருப்பினும் என்ன….? நாம் குருவருளையும் திருவருளையும் ஒருசேர பெறவல்லதொரு ஸ்மரணையாகத் தானே அமைந்துள்ளது. இதுவும் அவருடைய ஆக்ஞை போலும்! அவர் அருளால் அவர் தாள் வணங்குகிறோமல்லவோ! சங்கரா!

குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை.

பெரியவா கடாக்ஷம்.

நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.Categories: Devotee Experiences

Tags:

2 replies

  1. அ௫மை அ௫மை,சங்கர தி௫ப்புகழ். மனதை கொள்ளை கொண்டுவிட்டது .பெரியவா க்௫பை அமோகம்.என்றென்றும் க௫னை விழிகளில்.நம்மேல் விழ பெரியவாளை ப்ரார்த்திப்போம்🙏

  2. Wonderful sthuthi and a very good write up
    Periyaval always in your thoughts or else how could such wonderful,lucid. Stothram could be written
    May Periava bless you to compose more slogas on Him
    Jaya jaya sankara

Leave a Reply

%d bloggers like this: