கேசவ

Thanks to Sri Venkatesan for FB share….

Sri Maha Kameshwara Kameshwari.jpg

எல்லா தேவர்களுக்குச் செய்யும் நமஸ்காரமும் ஒரே ஈஸ்வரனைத்தான் போய்ச் சேருகிறது என்று சாஸ்திரம் சொல்கிறது: ‘ஸர்வ தேவ நமஸ்கார: கேசவம் ப்ரதிகச்சதி’

ஒரே பரமாத்மாதான் பல ஸ்வாமிகளாக ஆகியிருக்கிறது. ஆஸாமிகள் அத்தனை பேராகவும் கூட அதுவேதான் ஆகியிருக்கிறது. ஆகையால், எந்த ஸ்வாமிக்குப் பண்ணும் நமஸ்காரமும்… எந்த ஆஸாமிக்குப் பண்ணும் நமஸ்காரமும் என்றும் சேர்த்துக்கொள்ள வேண்டும்… ஏக பரமாத்மாவையே சென்றடைகிறது. ‘கேசவம்’ என்று சொல்லியிருப்பதை கிருஷ்ணர் என்ற அவதாரம் என்றோ அல்லது அநேக தெய்வங்களில் ஒன்றாக இருக்கப்பட்ட விஷ்ணு என்றோ அர்த்தம் பண்ணிக்கொள்ளக்கூடாது.

க, அ, ஈச, வ என்ற நாலு வார்த்தை களும் சேர்ந்து ‘கேசவ’ என்றாகி யிருக்கிறது. ‘க’ என்றால் பிரம்மா; ‘அ’ என்றால் விஷ்ணு; வேத புராணாதிகளில் பல இடங்களில் பிரம்ம- விஷ்ணுக்களுக்கு இப்படி (முறையே ‘க’ என்றும், ‘அ’ என்றும்) பெயர் சொல்லியிருக்கிறது. ஈச என்பது சிவன் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. க, அ, ஈச மூன்றும் சேர்ந்து ‘கேச’ என்றாகும். அதாவது பிரம்ம, விஷ்ணு, ருத்ரர்களான த்ரிமூர்த்திகளைக் ‘கேச’ என்பது குறிக்கும். ‘வ’ என்பது, தன் வசத்தில் வைத்துக் கொண்டிருப்பதைக் குறிக்கும். த்ரிமூர்த்திகளை எவன் தன் வசத்தில் வைத்துக் கொண்டிருக்கிறானோ, அதாவது த்ரிமூர்த்திகளும் எவனுக்குள் அடக்கமோ, அவனே கேசவன்.

ஆசார்யாள் இப்படித்தான் பாஷ்யம் பண்ணியிருக்கிறார். ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹார மூர்த்திகளான மூவரையும் தன் வசத்தில் வைத்துக்கொண்டிருப்பவன் என்றால், அவன் ஏக பரமாத்மாவாகத்தான் இருக்க வேண்டும். எந்த ஸாமிக்கும் ஆஸாமிக்கும் செய்கிற நமஸ்காரத்தை அந்த ஸாமிக்குள், ஆஸாமிக்குள் இருந்துகொண்டு அவன்தான் வாங்கிக் கொள் கிறான். ஸர்வ தேவ நமஸ்கார கேசவம் ப்ரதிகச்சதி.

நமஸ்காரம் என்றால் என்ன? உடம்பினாலே தண்டால் போடுகிற மாதிரி காரியமா? இல்லை. இங்கே காரியம் இரண்டாம் பக்ஷம். பாவம்தான் முக்கியம். பக்தி பாவத்தைப் பலவிதமாகத் தெரிவிக்கத் தோன்றுகிறது. அப்போது, பகவானுக்கு முன்னால் தான் ஒண்ணுமே இல்லை என்று மிக எளிமையோடு விழுந்து கிடப்பதைக் காட்டவே நமஸ்காரம் என்ற க்ரியை. ஆக, நமஸ்காரம் என்று க்ரியையைச் சொன்னாலும், அது பக்தி என்ற உணர்ச்சியைக் குறிப்பதுதான். எவருக்குச் செய்கிற நமஸ்காரமும் ஒரே பரம்பொருளான கேசவனுக்குப் போய்ச் சேரும் என்று சொன்னால், எவரிடம் செலுத்தும் பக்தியும் பரமாத்மா என்ற ஒருவனுக்கே அர்ப்பணமாகும் என்றே அர்த்தம்.

(தெய்வத்தின் குரல் நூலில் இருந்து)



Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading