அம்பாளோட சரணம்தான் கதி!

Thanks to Sri Lakshmanan Sankarasubramanian for FB posting… Very emotional posting..

mahaperiyava-praying.jpg

ஶ்ரீ பரணீதரனின் உறவுக்காரப் பையன் ஒருவன் அழகு, குணம், அறிவு என்று எல்லாவற்றிலும் உயர்வாக இருந்தான். I.A.S பரிக்ஷையில் நன்றாக ஶோபித்து, அரஸாங்கத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினான்.

யாருடைய கண் பட்டதோ! க்ஷணத்தில் ஒரு கொடூரமான கார் விபத்தில், அத்தனை பேரையும் ஶோகத்தில் ஆழ்த்திவிட்டு போய்ச் சேர்ந்துவிட்டான்!

பெற்றவர்களும், நண்பர்களும், சுற்றமும் அந்த பேரிடியிலிருந்து மீளவே முடியாமல் தவித்தனர். யாருடைய ஆறுதலான வார்த்தைகளும் அங்கு ஒரு க்ஷணத்துக்கு கூட எடுபடவில்லை!

தங்கமாக பொத்தி பொத்தி வளர்த்த தலைச்சனை இழந்து அந்த தாயார் கதறிய போது, அத்தனை பேருமே அந்த துக்கத்தை அனுபவித்தனர். துக்கம் அதிகமாகும் போது, உலகத்தில் உள்ள எப்பேர்ப்பட்ட உயர்ந்த ஸுக போகங்களும், துச்சமாகத்தான் தெரியும்.

ஆனால்….. அந்த துக்கம், அதுவும் “புத்ர ஶோகம்” என்னும் பெருந்துக்கத்தையும் ஸமனப்படுத்தி, மனஸை அமைதிப்படுத்தும் ஶக்தி…. மஹான்கள், தெய்வம்… இந்த ஸந்நிதானத்துக்கு மட்டுந்தான் உண்டு.

ஏனென்றால்….. நமக்கெல்லாம் ‘மனஸ்’ என்ற ஒன்று இருப்பதால்தான், அத்தனை அர்த்தமும், அதனால் வரும் அனர்த்தமும்! அதனால்தான், பந்தம், பாஶம், ஸுகம், துக்கம், இத்யாதிகள்…

பகவானின் ஸந்நிதியில், மஹான்கள் ஸந்நிதியில் மட்டுந்தான், இந்த மனஸால், தன்னுடைய கைவரிஸையை காட்ட முடியாது.

அதுவும் ஸந்தோஷமாக இருக்கும் நேரத்தை விட, நம்முடைய துக்கத்தில், கஷ்டத்தில்… நாம் பகவானை பிடித்துக் கொள்ளும் பிடிக்கு, [மர்கட கிஶோரம்-குரங்குப்பிடி] அதிக பலம் உண்டு! அவனும், அந்த ஸமயத்தில் நம்மை அணைத்துக் கொள்ளும் அணைப்புக்கு [மார்ஜாரம்-பூனையம்மா] அதிக வாஞ்சை உண்டு!

இந்த அம்மாவும், தன் புத்ரஶோக ரணத்துக்கு, மாமருந்தை நாடி, தேனம்பாக்கம் ஶிவாஸ்தானம் சென்றாள்.

பெரியவா அன்று அதிக கூட்டமில்லாமல், ஏகாந்தமாக இருந்தார். ஶ்ரீ பரணீதரன் அந்த பையனின் பெற்றோரை அழைத்துச் சென்று, பெரியவாளிடம் அவர்களுடைய துக்கத்தைச் சொன்னார்.

பெற்றவர்களுக்கும், அந்த லோக ஜனனியைப் பார்த்ததும், துக்கம் பீறிட்டுக் கொண்டு வந்தது. கதறி விட்டார்கள்!

பெரியவா எதுவுமே பேசவில்லை. பிறகு பரணீதரனிடம் கேட்டார்….

“எம்பிள்ளை ஆக்ஸிடென்ட்ல போய்ட்டானே!…. ஒனக்குத் தெரியுமோ?…”

என்னது? கோடானுகோடி ஜீவன்களின் தாயும், தந்தையுமான நம் ஸ்வாமி, தன்னுடைய எந்தப் பிள்ளையைப் பற்றி சொல்கிறார்!

பரணீதரன் முழித்தார்!

“அதாண்டா…! என் [பூர்வாஶ்ரம] அண்ணாவோட பிள்ளை…! மணி ஶாஸ்த்ரி….! அவனை நீ பாத்திருக்கியோன்னோ?..”

“ஆமா… மடத்ல பாத்திருக்கேன்….”

“அவன்… கொஞ்ச நாள் முன்னாடி, பெங்களூர்கிட்ட, ஒரு கார் ஆக்ஸிடென்ட்ல போய்ட்டான்! விடிகார்த்தால, நாலஞ்சு பேரோட, கார்ல வந்துண்டிருந்திருக்கான்! ரயில்வே லெவல் க்ராஸிங்ல நொழையறப்போ, ரயில் வந்து மோதி, காரைத் தூக்கியடிச்சுடுத்து! ரெண்டு, மூணு பேர்… on the spot செத்துப் போய்ட்டா! அதுல, மணியும் ஒர்த்தன்! தலை ஒரு பக்கம், கை ஒரு பக்கம், கால் ஒரு பக்கம்-னு ஒடம்பு செதறிப் போச்சு!….”

“பெரியவாளுக்கே பிள்ளையை பறிகுடுத்த ஶோகமா?…”

அங்கிருந்தோர் திகைத்தனர்.

அப்போது அம்மாக்காரி பெரியவாளிடம் அழுதாள்.

“எங்களால இந்த துக்கத்தை தாங்கவே முடியல.. பெரியவா! எதுக்காக இப்டியொரு தண்டனைன்னே புரியல! என் பஸங்க.. பெரியவா மேல உஸுரையே வெச்சிருக்கா…! காமாக்ஷி மேல, அபாரபக்தியும், நம்பிக்கையும் வெச்சிண்டிருக்கா! இப்டி நடந்ததுக்கு அப்றம், அவாளுக்கு எல்லாத்துலயும் நம்பிக்கை போய்டுத்து பெரியவா…! “நமக்கு ஏம்மா இப்டி நடந்துது? ஸாமியாவுது! பூதமாவுது!..”ன்னு ரொம்ப விரக்தியா பேசறா.! அவாளுக்கு என்ன ஸமாதானம் சொல்றதுன்னு எனக்குப் புரியல…! பெரியவாதான்.. எங்களுக்கு நல்ல வழி காட்டணும்”

பெரியவா கொஞ்ச நேரம் ஆழ்ந்த மௌனத்தில் இருந்தார். பிறகு மயில்தோகையைக் காட்டிலும் ம்ருதுவாக வருடும் குரலில், பெற்றுப் பறிகுடுத்த மனங்களை ஆற்றிக் கொடுக்கும் வகையில் சொன்னார்……

“நமக்கு ரொம்ப துக்கமோ, கஷ்டமோ வரச்சே, அம்பாள் பேர்ல கோபம் வர்றது ஸஹஜம். அம்பாள் நம்மள தண்டிச்சு கஷ்டம் குடுக்கற மாதிரி தோணினாலும், அவ மேல இருக்கற பக்தியை மட்டும் விட்டுடக்கூடாது! இன்னும் ஜாஸ்தியா நம்பிக்கை வெக்கணும். செல ஸமயம் அம்மா கொழந்தையை கோவிச்சுக்கறா.! ஓங்கி ரெண்டு அடி கூட வெக்கறா ! அப்போ, கொழந்தை நெஜமா துக்கப்படறது!… ‘ஓ’!-ன்னு அழறது…! ஆனா, ஒடனே எந்த அம்மா அடிச்சாளோ… அவகிட்டயேதான் அது போறது… அடிச்ச கையையே பிடிச்சிக்கறது. அவளோட காலையே கட்டிண்டு அழறது…

….அதுமாதிரி, அம்பாளோட கொழந்தேளான நாமளும், துக்கம் வந்தா… அம்பாள்தான் அந்தக் கஷ்டத்தை குடுத்தா-ன்னு நெனச்சா… “எனக்கேம்மா இந்த தண்டனையைக் குடுத்தே? என்னால தாங்க முடியலியே ! ஒன்னை விட்டா… எனக்கு வேற யாரு இருக்கா?..” ன்னு அவ பாதத்தையே பிடிச்சிண்டு அழணும்.! மறுபடியும் அவகிட்டதான் போயாகணும்! வேற வழியே இல்ல!…”

அத்தனை நாட்கள் பலரது தேறுதல் வார்த்தைகள் தராத ஒரு வகை அமைதியை, அன்று அந்தப் பெற்றோர், ஶ்ரீ மாதாவின் தெய்வீக வார்த்தைகளில் உணர்ந்தார்கள்.

கண்டிப்பதற்காக அடித்தபின், தன் காலையே கட்டிக்கொண்டு அழும் குழந்தையிடம் ஸாதாரண அம்மாவுக்கே, அன்பு பல மடங்கு பெருகும் எனும் போது, லோகமாதாவின் அன்பு எப்பேர்ப்பட்டதாக இருக்கும்!

“பெரியவா அந்தக் குழந்தையை ஸ்மரித்ததாலேயே, அந்தக் குழந்தைக்கும் நல்ல கதியை குடுத்துவிட்டார்! இனி அவன் அம்பாளுடைய குழந்தை” என்ற பேருண்மையை உணர்ந்த க்ஷணமே, அவர்களுடைய மலையளவு துக்கம்…. சிறு மருவைப் போல் சிறுத்தது.

ஜகத்குருவான, பகவான் க்ருஷ்ணனின் ஸஹோதரி, ஸுபத்ரையின் மகன் அபிமன்யு பாரதப் போரில் 16 வயதே நிரம்பியவனாக இருந்தும், ஸொந்த பெரியப்பா, சிற்றப்பாக்களால் கொடூரமாக கொல்லப்பட்டான்.

க்ருஷ்ணன் நினைத்திருந்தால், தன்னுடைய மருமகனை, அதுவும் குழந்தையிலிருந்தே தன் மார் மேலும், தோள் மேலும் தூக்கிக் கொஞ்சிய ப்ரியமான குழந்தையை காப்பாற்றியிருக்க முடியாதா?

அர்ஜுனன்தான், ஆப்த நண்பனாயிற்றே! தன்னுடைய ஆப்தர்களாக இருந்தாலும், விதிப்படி இன்னதுதான் நடக்கவேண்டும் என்று இருந்தால், அதை தனக்கு ஸாதகமாக செய்து கொள்ள மாட்டான் பகவான்!

க்ருஷ்ணனின் யாதவ குலத்துக்கே நாஶத்தை [அழிவை] கொண்டு வந்தது வேறு யாருமில்லையே! ஸாக்ஷாத் க்ருஷ்ணனின் புத்ரனான ஸாம்பன்தான்!

பெரியவாளிடமோ, மஹான்களிடமோ பக்தியும், ஶ்ரத்தையும் கொண்டிருப்பவர்களுக்கு கஷ்டமே வராது என்று அர்த்தமில்லை. நம்முடைய ப்ராரப்த கர்மாவை அனுபவித்துத்தான் கழிக்க வேண்டும்.

பகவானை, குருவை ஆஶ்ரயித்தவர்களுக்கு, எந்தவித கஷ்டத்தையும் தாங்கிக் கொண்டு, அதை அப்படியே குருவின் பாதங்களில் ஸமர்ப்பித்து விட்டு, நிஶ்சிந்தையாக, அமைதியாக இருக்கும் வல்லமை வந்து சேரும்.

பகவானின், குருவின் சரணத்தில் நம்முடைய ஸுக துக்கங்களை போட்டுவிட்டு, இனியாவது அமைதியை அடைவோம்.

ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்
Compiled & penned by Gowri SukumarCategories: Devotee Experiences

9 replies

  1. NOW IN OUR DISTRESS TIMES WE HAVE TO TOTALLY SURRENDER TO MAHAPERIVA. ONLY HE CAN RELIEVE US OF ALL OUR PROBLEMS.CHANT HIS NAMA AND GET PEACE OF MIND..MAHAPERIVA TIRUVADIGALE CHARANAM

  2. Maha Peryiavaa Saranam

  3. who else other than our periyava can reduce the pain of such a huge loss.

  4. OM NAMO BAGAVADHE KAMAKOTI CHANDRASEKHARENDRAYA.MAHAPERIVA TIRUVADIGALE CHARANAM

  5. MAHAPERIYAVA SARANAM! SARANAM !PRAPADHYE

  6. MAHA PERIYAVA SARAM !SARAM !PRAPADHYE!

  7. Mahaperiavaaa Thiruvadi Charanam Charanam !

  8. Guruve Thunai.Ambaal Thunai.

  9. Sri Periyava Saranam, Sri Periyava is Eswaran & Sri kamatchi ambal, surrender to Sri Periyava, and he will take care of all of us, Prabo saranam

Leave a Reply

%d bloggers like this: