காஞ்சி ஸ்ரீசங்குபாணி கணபதி!

p32b

காஞ்சிபுரத்தில் ஸ்ரீகாமாட்சியம்மன் கோயிலுக்குத் தென்கிழக்கிலும் ஸ்ரீஉலகளந்தபெருமாள் கோயிலுக்குத் தெற்கிலுமாகக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீசங்குபாணி விநாயகர். சப்பாணி விநாயகர் என்கிறார்கள் இங்குள்ள பக்தர்கள்! காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் 16 கணபதிகளில் குறிப்பிடத்தக்கவர் இவர்.

காஞ்சி மாமுனிவராம் மகா பெரியவா யாத்திரை கிளம்பும்போதும், யாத்திரை முடிந்து காஞ்சிக்குத் திரும்பிய பின்பும் இந்தப் பிள்ளையாருக்கு 108 தேங்காய்கள் (சிதறுத் தேங்காயாக) சமர்ப்பிப்பாராம். அது சரி… அதென்ன சங்குபாணி விநாயகர்? இந்தத் திருப்பெயருக்கான காரணக் கதை… சுவாரஸ்யம்!

தேவர்களுக்கும் அசுரர்களுக்குமான பகை பெரிதாக வலுத்த ஒரு தருணம். தேவர்கள், மறைகளின் (வேதங்கள்) மொழிகளையே படைகளாக்கி (அஸ்திரங் களாக்கி), அசுரர்களின்மீது செலுத்தி அவர்களை ஆற்றல் இழக்கும்படி செய்தனர்.

அசுரர்களில் ஒருவன் பேராற்றல் படைத்தவன்; சங்கு வடிவில் தோன்றிய வன் என்பதால், அவனுக்கு சங்காசுரன் என்று பெயர். இவனுடைய இளவலான கமலாசுரனும் சாதாரணன் அல்ல;  தமையனைவிட பல மடங்கு ஆற்றல் நிறைந்தவனாகத் திகழ்ந்தான். இவர்களைக் கொண்டு தேவர்களை முறியடிப்பதுடன், பிரம்ம தேவனிடம் இருக்கும் வேதங்களையும் கைப்பற்ற வேண்டும்  எனத் திட்டமிட்டனர் அசுரர்கள். வேதங்கள் தங்கள் வசம் வந்துவிட்டால், அவற்றைப் படைக்கலன்களாக்கி தங்களை பலவீனப்படுத்தும் தேவர்களின் செயல் முடக்கப்படும் அல்லவா?!

தங்களின் திட்டத்தை சங்காசுரனிடம் தெரிவித்தனர். அவன் தன்னுடைய தம்பி கமலாசுரனை அழைத்து, மறைகளைக் கைப்பற்றி வரும்படி பணித்தான். கமலாசுரனும் தனது மாயையினால் பிரம்மனின் இருப்பிடத்துக்குச் சென்று, அவர் அயர்ந்து உறங்கும் வேளையில், வேதங்களைக் கைப்பற்றிக் கொண்டு வந்து அண்ணனிடம் ஒப்படைத்தான். அவற்றைக் கடலுக்குள் மறைத்து வைத்துக் காவல் செய்தான் சங்காசுரன். இதனால் மூவுலகங்களில் வேத நெறி ஒழுக்கங்கள் மறைந்து போயின.

படைப்பைத் தொடர இயலாமல் வருந்திய பிரம்மன், சிவனாரைச் சரணடைந்தார். விநாயகரை வழிபட்டால் வினை தீரும் என அறிவுறுத்தினார் கயிலைக் கடவுள். அதன்படியே, பத்மாசனத்தில் (தாமரை ஆசனத்தில்) அமர்ந்து, விநாயகரை வழிபட் டார் பிரம்மன். இதனால் மகிழ்ந்து நான்முகனுக்குக் காட்சி தந்த ஐந்துகரத்தான், ”வருந்தற்க! உமது பிரச்னை விரைவில் தீரும்” என்று அருள்புரிந்தார்.

p33அதன்பொருட்டு, அந்தணராக உருவெடுத்தார். புதிதாக வேதாகமங்களை உருவாக்கி, ஆயிரம் சீடர்கள் சூழ்ந்து வர, அவற்றை எடுத்துச் சென்று பிரம்மனிடம் தந்தார். மேலும், ”இவற்றைக் கொண்டு பணியைத் தொடருங்கள். எனது பெயர் மல்லாலர். அசுரர்களை அழிக்க நான் துணை செய்வேன்” என்று அங்கிருந்த தேவர்கள் மற்றும் முனிவர்களிடம் தெரிவித்தார்.

மல்லாலர் என்பவரால் தேவர்களுக்கு வேதாகமங்கள் கிடைக்கப் பெற்றன என்ற தகவல், கமலாசுரனுக்கும் சென்றது. அவன் விஷயத்தை சங்கா சுரனிடம் தெரிவித்தான். கோபம் கொண்ட சங்கா சுரன், ”நீ விரைந்து சென்று மல்லாலரை அழித்து, மறை நூல்களைக் கைப்பற்றி வா!” எனக் கமலாசுரனுக்கு ஆணை யிட்டான். அவன் பெரும் படையுடன் புறப்பட்டான்.

மல்லாலரும் தயாரானார். தனது மாயையால் அளவற்ற படைகளை நொடிப் பொழுதில் உண்டாக்கினார். பெரும்போர் மூண்டது. கமலாசுரன் வல்லமைமிக்க அஸ்திரங்களைப் பிரயோகித் தான். அவற்றைத் தனது மழுப்படையால் அழித்தார் மல்லாலர். ஒரு நிலையில் தனது அஸ்திரங்கள் யாவும் அழிந்துபோக, மாயம் செய்து பெரும் பிரளயத்தை உருவாக்கினான் கமலாசுரன்.

அந்தப் பிரளய நீரை, தமது தீக்கணையால் உறிஞ்சச் செய்தார் மல்லாலர். தொடர்ந்து போரிட இயலாத கமலாசுரன் மாயமாக மறைந்து, கடலுக்குள் இருக் கும் சங்காசுரனைச் சென்று சந்தித்தான்.

அவனோ, ”புறமுதுகு காட்டி ஓடி வந்து, உனது வீரத்துக்கு இழுக்கு தேடிக் கொண்டு விட்டாய்! எனவே, நாளை மீண்டும் செல். எதிரியை வதைத்து வா!” என்று மீண்டும் தன் சகோதரனைப் போருக்கு அனுப்பி வைத்தான்.

இதற்கிடையே, மல்லாலர் வெற்றி பெறப் பிரார்த்தித்து, பெரிய வேள்வியைச் செய்தார் கர்க்க முனிவர். அதிலிருந்து மலையளவு பிரமாண்டமான மயில் ஒன்று தோன்றி, ‘கூ… கா’ என்று கூவி, பேரொலி எழுப்பியது. அதை மல்லாலரிடம் ஒப்படைத்தார் கர்க்க முனிவர். அந்த மயிலின் மீது ஏறிச்சென்று போர்க்களம் புகுந்தார் மல்லாலர். அவரது சூலப்படை, கமலாசுரனை அழித்தது. இதையறிந்த சங்காசுரன் வெகுண்டான். பெரும்படையுடன் போருக்கு வந்தான்.

ஆனால், அவனாலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சங்கு வடிவம் கொண்டு, கடலுக்கடியில் சென்று ஒளிந்துகொண்டான். மல்லாலராகிய விநாயகர் அசுரனைத் தேடிச் சென்று அழித்தார். அத்துடன், அவன் ஒளித்து வைத்திருந்த வேதங்களை மீட்டு வந்து பிரம்மனிடம் ஒப்படைத்தார்.

இப்படி மயில் வாகனத்தில் வந்ததால், விநாயகருக்கு ஸ்ரீமயூரேச விநாயகர், மயூர கணபதி என்றெல்லாம் பெயர் உண்டு. அசுரர்களை அழித்தாலும், அவர்களின் ஆன்மாக்களைப் புனிதப்படுத்தி கணநாதர்களாக ஏற்றுக்கொண்டாராம் கணபதி. சங்காசுரனை தமது வெற்றிச் சங்காக துதிக்கையில் தாங்கினாராம். சங்கு ஏந்தியவர் ஆதலால், அவருக்குச் சங்குபாணி விநாயகர் என்று திருப்பெயர் (பாணி – கை)!

கச்சியப்ப முனிவர் தம்முடைய கணபதி அஷ்டகத்தில்…

‘பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து சுரக்குமோ
சந்தமறை ஆகமங்கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்’

– என்று கணபதியைப் போற்றி வணங்குகிறார். அவர் வழியில் நாமும் காஞ்சி ஸ்ரீசங்குபாணி கணபதியை வழிபட்டு, சங்கடங்கள் நீங்கப் பெறுவோம்.

Source – vikatan.comCategories: Bookshelf

7 replies

 1. hara hara sankara jaya jaya sankara , jai ganesh ji

 2. Significance of Sri. SanguBhani Ganapathy heard first time. Thank you very much for information. Will go to this temple next time. Hara Hara Sankara

 3. Om Gam Ganapathaye Namaha! Hara Hara Shankara, Jaya Jaya Shankara! Maha PeriyavaL ThiruvadigaLe CharaNam!

 4. Had the opportunity to have Darsham twice. Once had Darshan of abhishekam and urchavam by His Grace

 5. While going from the bus stand to ulagalntha perumal temple in the right side this temple is situated. We can easily locate this temple by local people…! He may bless us all..!!

 6. மிகவும் அருமையான பதிவு. இந்த கணபதியை பற்றி இப்பொழுது தான் தெரிந்து கொள்கிறேன். அடுத்த முறை காஞ்சி சென்றால், ஸ்ரீ சங்குபாணி கணபதியை தரிசித்து வருகிறேன் . விநாயகர் நம் எல்லோருக்கும் அருள் மழை பொழியட்டும்

  லோகா சமஸ்தா சுகினோ பவந்து

  ராம் ராம் ராம்

 7. Excellent post ! Not heard about this story so far. Thanks for the post.

Leave a Reply

%d bloggers like this: