Vinayagar Agaval – Part 36

Lord-Ganesh

விநாயகர் அகவல் – பாகம் 36

ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
 

வேடம் என்றால் சிவ வேடம்‘.  அதுவே திருவேடம்.  திருநீறு அணிதல், ருத்திராக்ஷம் அணிதல், ஜடாமுடி தரித்தல் – இவை முக்கிய சிவவேடங்கள்.  இந்த வேடம் பூண்டவர்களை, அவர்கள் எத்தன்மையினராயினும் அவர்களின் குற்றம் பாராது, அவர்கள் பூண்டிருக்கும் சிவவேடத்தைக் கருதி அவர்களை வழிபடல் வேண்டும்.  சிவவேடம் தரித்த அடியவர்கள், எதற்கும் அஞ்சத் தேவையில்லை. இவர்களைப் பூஜிப்பவர்களுக்கு கிடைக்காதது ஒன்றும் இல்லை.  இவற்றில் திருநீறு ஒன்றையே பிரதானமாகக் கொண்டு, அதற்காகவே தன் உயிரையும் துறந்து சிவபெருமானோடு ஐக்கியமானார் ஏனாதிநாதநாயனார்.  ஜடாமுடி ஒன்றையே காரணமாகக்கொண்டு, எரியும் தீயில் புகுந்து உயிர்நீத்து, சிவபெருமானோடு கலந்து முக்தியுற்றவர் புகழ்ச்சோழ நாயனார். திருநீறு, ருத்திராக்ஷம், ஜடாமுடி முதலிய அனைத்தும் கூடிய சிவவேடத்தை பொருளாகக் கொண்டு முக்தி பெற்றவர் மெய்ப்பொருள் நாயனார்.  இவர்கள் எல்லாம் புனிதர்கள்.  சிவவேடம்  பூண்டவர்களை சிவபெருமானாகவே கண்டு, அவர்களால் வஞ்சிக்கப்பட்டு, கபடமாகக் கொலையுண்டார்கள்.  இருப்பினும், சிவவேடத்தின் மீது கொண்ட பக்தி காரணமாக,சிவாநுக்கிரஹத்தால், சிவஜோதியில் கலந்து நாயன்மார்கள் ஆனார்கள்.  இந்தப் புண்ணியர்களை ஒருகணம் நினைத்தாலே நம் பாவங்கள் அகலும்.  இப்படியாக,சிவவேடத்தின் பெருமையை விநாயகப் பெருமான் ஒளவைக்கு விளங்கவைத்தாராம். “வேடமும் நீறும் விளங்க நிறுத்தி“.  இந்தப் புனிதர்களின் வாழ்க்கையை நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா? நமக்கும் கொஞ்சம் புண்ணியம் சேரட்டுமே.  வேடமும் நீறும் விளங்க நிறுத்திஎன்ற வரிகளுக்குச் சான்றாக நிற்கும் இந்த மூன்று நாயன்மார்களின் சரித்திரத்தை சுருக்கமாக அறிந்துகொள்வோம்.

 

மெய்ப்பொருள் நாயனார்:

தென்பெண்ணை ஆற்றின் தென் கரையில் சிறப்புடன் விளங்கும் திருகோவிலூரை ஆண்டு வந்தவர் மெய்ப்பொருள் நாயனார்.  சிவநெறியில் சிறந்து நிற்பவர். அடியார்கள் கருத்தறிந்து ஏவல் புரியும் தன்மை உடையவர்.  இவர் சிவனடியார்களின் திருவேடத்தையே மெய்ப்பொருள் (ஸத்யம் ) என்று கருதி வந்ததால் மெய்ப்பொருள் நாயனார் என்ற திருநாமம் பெற்றார். சிறந்த வீரர்.  அறநெறி வழுவாது ஆண்டுவந்தார்.  சிவனடியார்களை அனவரதமும் போற்றிப் பணியும் சிவநேசச் செல்வர்.   இம்மன்னனின் மனதில் சிவனடியார்களின் திருவேடமும் தோற்றப்பொலிவும் கல் மேல் எழுத்துபோல் எப்பொழுதும் நிலைத்து இருந்தது.  இவ்வாறு சிவபக்தியோடு வாழ்ந்துவந்த மன்னருக்கு ஒரு சோதனை. பகை அரசன் முத்தநாதன், இவருடன் போர் புரிந்து அதில் எல்லா முறையும் தோல்வியுற்று, புறமுதுகிட்டு ஓடியவன், மெய்ப்பொருள் நாயனாரை சூழ்ச்சியால் பழிவாங்க எண்ணம் கொண்டான்.

முத்தநாதன் சைவவேடம் பூண்டான். திருநீற்றை மேனிமுழுவதும் வாரிப் பூசிக்கொண்டு, கையில் ஓர் ஓலைச்சுவடியையும் அதில் ஒரு கத்தியையும் மறைத்து வைத்து திருக்கோவிலூர் மன்னர் அரண்மனையை அடைந்தான்.  சிவவேடம் பூண்டிருந்த அவனை ஒருவரும் அரண்மனையில் தடுக்கவில்லை.
 

மன்னனின் பள்ளியறை வாயில் வரை வந்துவிட்டான்.  அங்கு மன்னனின் மெய்க்காப்பாளன் தத்தன் என்பவன் வாளோடு காவலுக்கு நின்றுகொண்டிருந்தான். கபடமாக சிவவேடத்தில் இருந்த முத்தநாதன், மன்னனை உடனே பார்க்கவேண்டும் என்ற தோரணையில் தத்தனைப் பார்த்தான்.  குறிப்பறிந்து தத்தன், ‘ஐயா! மன்னவர் அந்தப்புரத்தில் அரசியாரோடு துயின்றுகொண்டிருக்கிறார்.  காலம் அறிந்து தேவரீர் உள்ளே எழுந்து அருளால் வேண்டும்என்று வேண்டிக்கொண்டான்.  அதை செவிமடுக்காத முத்தநாதன், தடையையும் மீறி, ‘மன்னருக்கு தருமத்தை உபதேசிப்பதற்காகவே இங்கு எழுந்தருளியுள்ளோம்என்று கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றான்.  சப்தம் கேட்டுத் துணுக்குற்றவறாய் எழுந்த அரசியார், சிவனடியார் வேடத்தில் ஒருவர் வருவதைப் பார்த்து, மன்னரையும் எழுப்பினார்.  மன்னரும் திடுக்கிட்டு எழுந்தார்.
 
கள்ளம் கபடமற்ற மெய்ப்பொருள் நாயனார், திருநீறு அணிந்து வந்த முத்தநாதனை வணங்கி தாங்கள் எழுந்தருளியது யாது காரணமோ?’ என்று பணிவுடன்  வினவினார்.  முத்தநாதன், கையில் வைத்திருந்த  ஓலைசுவடியைக் காட்டி, இந்த ஆகம நூலை உமக்கு உபதேசிக்கவே வந்தோம் என்று நா கூசாமல் கூறினான்.  முகம் மலர்ந்த அரசர், முத்தநாதனுக்கு உயர்ந்த ஆசனத்தைக் கொடுத்து, தாம் தரையில் அரசியோடு அமர்ந்துகொண்டார்.  முத்தநாதன், மன்னரையும் அரசியாரையும் மாறி மாறிப் பார்த்தான்.  தாம் அங்கே இருப்பதை இந்தச் சிவனடியார் விரும்பவில்லை என்பதைக் குறிப்பால் அறிந்த அரசியார் அங்கிருந்து வெளியேறினார்.  மன்னவரும்,முத்தநாதனை வேண்டி, சிரம் தாழ்த்தி அவன் பாதத்தில்  வணங்கினார். அந்தத் தருணம் பார்த்து, அந்த வஞ்சகன் ஓலைச் சுவடியில் மறைத்துவைத்திருந்த வாளைக் கையில் உருவி, தான் நினைத்தபடியே செய்தான்.  மன்னர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.  அந்த நிலையிலும், மன்னர் அவன் மீது வெறுப்போ கோபமோ கொள்ளவில்லை.  மாறாக, சிவவேடத்தில் இருந்த அவனை சிவபெருமானாக நினைத்துத் தொழுதார். வணங்கினார்இதைக் கண்ட மெய்க்காப்பாளன் தத்தன், தன் உடைவாளை உருவி முத்தநாதனைக் கொல்ல ஓங்கினான்.  ரத்தம் சொட்டச் சொட்ட தரையில் வீழ்ந்து கிடந்த மெய்பொருள்நாயனார், அந்த நிலையிலும்,தாங்கமுடியாத வேதனையிலும், “தத்தா! இவர் நம்மவர். இவருக்கு எந்த இடையூறும் நேராமல், நம் எல்லை வரையில் கொண்டு விட்டு விட்டு வருவாய்” என்று ஆணையிட்டார்.   தத்தனும் அவ்வாறே மன்னரின் ஆணையை நிறைவேற்ற்றிவிட்டு மிகவிரைவாக அரண்மனை திரும்பினான்.  அதுவரை மன்னர் உயிர் ஊசலாடிக்கொண்டு துடித்துக்கொண்டிருந்தது.  தத்தன் சிவனடியாரை பத்திரமாக எல்லையில் விட்டு விட்டுவந்த செய்தியை மெய்ப்பொருள் நாயனாரிடம்சொன்னான்.  அதைக் கேட்ட மன்னவர், நா குழறியபடியே நமசிவாயஎன்று சொல்லிக்கொண்டு தரையில் சாய்ந்தார்.  அவர் உயிர் பிரிந்தது.
 
அப்பொழுது, அந்த அறையில் ஒரு பேரொளி தோன்றியது.  ரிஷப வாகனத்தில் சிவபெருமான் உமையுடன் எழுந்தருளினார்.  சிவபெருமான் திருவருளால்,மெய்ப்பொருள் நாயனார், மீண்டும், உயிர் பெற்று, புதுப் பொலிவுடன் எழுந்தார்.  மெய்ப்பொருள் நாயனாருக்கும், அவர் அரசியாருக்கும், எப்பொழுதும் தம்மோடு வாழும் சிவப்பேற்றினை அருளினார் சிவபெருமான்.  உயிர் போகின்ற சமயத்திலும் கூட சிவனடியார்களிடத்தும், வெண்ணீறு அணிந்தவர்களிடத்தும் பக்தியுடைவராய் வாழ்ந்து கட்டி சிவசாயுஜ்யத்தை அடைந்த மெய்ப்பொருள் நாயனாரின் பக்தி எத்துணை சிறப்பு மிக்கது என்பதை எவர் அளவிடவல்லார்?
 
இந்தச் சரித்திரம் செய்யும் சூசனை:  1) சிவாலயங்களை விதி வழுவாது நடத்தல் வேண்டும்இது மன்னன் கடமை 2) சிவவேடமே மெய்ப்பொருள் என்று கொள்ளல் வேண்டும் 3) சரீரம் நீங்கும்போதும், சிவத்யானத்திலிருந்து நீங்காதிருக்க வேண்டும்.
 
ஏனாதி நாத நாயனார்

சோழ நாட்டில் எயினனூர் என்ற ஊரில் ஈழவர் மரபில் தோன்றிய ஏனாதிநாத நாயனார்
, திருவெண்ணீற்று பக்தியில் சற்றும் குறையாது, மெய்ப்பொருள் நாயனார் போலவே திருநீறு அணிந்தவர் யாராக இருந்தாலும் அவர்களை சிவபெருமானாகவே நினைத்து வழிபடுவார்.  பகைவர் மேனியில் விபூதி தரித்திருந்தால், பகைமையை மறந்து, அவரை வணங்கி வழிபடுவார்.  இவர் பெரிய வாள் வீரர். ஒரு வாள் பயிற்சி பள்ளிக்கூடம் நடத்தில் அதில் வரும் வருவாயை சிவத்தொண்டிற்கே அர்ப்பணித்து வந்தார்.  அதே ஊரில், அதிசூரன் என்பவன், ஏனாதிநாத நாயனாரிடம் பொறாமை கொண்டு, அவரை சண்டைக்கு அழைத்தான்.  வீரமும் பராக்ரமமும் உடைய ஏனாதிநாத நாயனார், அதிசூரனைத் தோற்கடித்தார்.  இதனால் அதிசூரனுக்கு பொறாமை அதிகமாயிற்று.  ஏனாதிநாத நாயனாரை, நேரிடையாக போரில் வெல்லமுடியாது என்று, வஞ்சனையால் அவரை வெல்ல முடிவெடுத்து ஒருநாள் அவரை மீண்டும் சண்டைக்கு அழைத்தான்.  அப்பொழுது, வஞ்சனையாக, உடல்,நெற்றி முழுதும் திருவெண்ணீறு தரித்துக்கொண்டு அதை கவசம், கேடயத்தால் மறைத்துக்கொண்டு சண்டைக்கு வந்தான்.  சண்டையின்போது ஏனாதிநாத நாயனார் கைகளிலே அதிவேகத்துடன் சுழன்றுகொண்டிருந்த வாள், அதிசூரனின் உடலைக் கிழித்து அவனைக் கொல்லவரும் தருணத்தில், அதிசூரன், தன் உடலை மறைத்துக்கொண்டிருந்த கவசத்தையும், கேடயத்தையும் விலக்கினான். வெண்ணீறு அணிந்திருந்த அதிசூரனின் நெற்றியைப் பார்த்து திடுக்கிட்டார் நாயனார். அவரது கைகள் தளர்ந்தன. வீரம், பக்திக்கு அடிமையானது.  ஆ! திருநீறு தரித்த சிவத்தொண்டரிடம்  நான் பகைவன் என்று நினைத்து போரிட்டேனே !  இத்தனை நாளாக,இவரிடம் காணாத பொலிவை, இப்பொழுது இவர் நெற்றியில் தரித்திருக்கும் திருநீற்றால் இப்பொழுது காண்கிறேன்!  இவர் சிவதொண்டரே தான்.  இவரிடம் இனியும் போரிடமாட்டேன்.  சிவபெருமான் என் பிழையைப் பொருத்தருளவேண்டும்.  இனிமேல் நான், இவர் உள்ளக் குறிப்பின் வழியே நிற்பேன்” என்று எண்ணி, தன் கையிலிருந்த வாளையும் கேடயத்தையும் கீழே போட எண்ணினார். அத்தருணத்தில், அவருக்கு வேறொரு எண்ணமும் பிறந்தது.  தாம் ஆயுதங்களைக் கீழேபோட்டுவிட்டால், நிராயுத பாணியான ஒருவரைக் கொன்றார் என்ற பழி, இந்த அடியாருக்கு வந்துவிடும்.  இந்த அபகீர்த்தி சிவனடியாருக்கு ஏற்படக்கூடாது” என்ற எண்ணத்தில், வாள் , கேடயத்தை கீழே போடாமல், போர் புரிவதுபோல் பாசாங்கு பாவனை செய்தார்.  பின்னர் நடந்ததை, நாம் சொல்லவும் வேண்டுமோபகைவன் அவன் நினைத்தபடி செய்தான். நாயனாரின் ஆவி பிரிந்தது.  ஆகாயத்தில் பேரொளி தெரிந்தது.  சிவபெருமான் உமையுடன் எழுந்தருளி, நாயனாருக்கு சிவசாயுஜ்ஜியத்தைத் தந்தருளினார்.
 
இந்த சரித்திரத்தால், நாம் அறிந்துகொள்ளவேண்டியது:  திருவெண்ணீறு அருள்மயமானது.  சிவனின் திருமேனியில் எந்நேரமும் பிரகாசித்துக்கொண்டேயிருக்கும் திருநீறு அணிவதால் மனிதர்களுக்கு அமர வாழ்வு கிட்டும். உய்யும் வழிக்கு உயர்ந்த மார்க்கம் பிறக்கும்.  இத்தகைய திருவெண்ணீற்றின் பெருமையை உணர்ந்திருந்த நாயனார், திருவெண்ணீற்றுக்கும், வெண்ணீறு அணிந்த அன்பர்க்கும் காட்டிவந்த பேரன்பைத்தான் எப்படி போற்றுவது?
 

புகழ்ச்சோழ நாயனார்:

கருவூரை ஆண்ட சோழ மாமன்னர்.  சிவபெருமானிடத்தும் அவருடைய அடியாரிடத்தும் எல்லையில்லா அன்பும் பக்தியும் பூண்டு இருந்தார்.  கருவூரில் எழுந்தருளியிருக்கும் பசுபதீஸ்வரர், புகழ்ச்சோழனின் பக்தியை உலகறியச் செய்ய திருவுளம் கொண்டார். அதற்காக ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது.
 

எண்ணற்ற அரசர்கள் புகழ்ச்சோழனுக்கு கப்பம் கட்டிவந்தனர்.  அதிகன் என்ற மன்னன் மட்டும், கப்பம் கட்ட மறுத்துவிட்டான். இதை அறிந்த புகழ்ச்சோழன்,அதிகனை வென்று வர தன் அமைச்சருக்குக் கட்டளையிட்டார்.  மன்னர் கட்டளைக்கு அடிபணிந்து அமைச்சரும், ஒரு பெரும் படையுடன் சென்று அதிகனை வென்று,பலவகை பொருள் குவியல்களையும், யானைகளையும், குதிரைகளையும், போரில் மாண்ட வீரர்களின் தலைகளையும்வெற்றிக்கு அடையாளமாக எடுத்துவந்தார்.  படைகளின் வீரம் கண்டு பூரிப்பு அடைந்த அரசர், ஒரு தலையில் சடைமுடி இருக்கக் கண்டார்.  சடைமுடி கண்டு அரசர் உள்ளம் நடுங்கியது.  உள்ளம் பதைபதைத்தார்.  அவர் கண்களின் நீர் நிறைந்தது.  பெரும் பிழை நடந்துவிட்டதாக மனம் வெதும்பினார்.  அவர் ” என் ஆட்சியில் சைவ நெறிக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டதே!  திருமுடியிலே சடை தாங்கிய சிவனடியார் ஒருவர் என்னால் கொல்லப்பட்டுவிட்டாரே, சிவபெருமானுக்கு எவ்வளவு பெரும் பாவத்தை செய்துவிட்டேன்நான் அரசன் அன்று.  ஒரு கொடுங்கோலன்.  இனியும் நான் உயிருடன் இருப்பதா?” என்றெல்லாம் சொல்லி மிகவும் புண்பட்டார்.  இதற்கு பிராயச்சித்தமாக தீக்குளித்து இறக்கவும் துணிந்துவிட்டார்.  ஒரு பெரிய நெருப்புக் குண்டத்தை ஏற்றி,   திருச்சடையை உடைய வெட்டுண்ட தலையை ஒரு தங்கத்தட்டில் சுமந்து கொண்டு, சிவாயநம என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே, குண்டத்தை வலம் வந்து, பொற்றாமரைக் குளத்தில் குளிப்பவர் போல், உள்ளக்களிப்போடு தீப்பிழம்பினுள்ளே புகுந்தார் மன்னன்.  அப்பொழுது தேவ துந்துபி மங்கல நாதம் எங்கும் கேட்டது. சிவபெருமானின் திருவடி நீழலை அடையும் பெறுவாழ்வைப் பெற்றார் மன்னர் புகழ்ச்சோழர் !
 
ஜடாமுடியுடன் இருந்த ஒரு தலையைப் பார்த்து, சிவனடியாருக்குச் செய்த அபராதம், சிவாபராதம் என்று எண்ணி, பஞ்சாக்ஷரத்தை சொல்லிக்கொண்டே தீயில் புகுந்து   தன் உயிரையும் மாய்துகொண்டு அழியாப் புகழ் பெற்று சிவபெருமானோடு கலந்த புகழ்ச்சோழரின் பக்தி மாண்பை அளவிடவும் வல்லவர் உண்டோ?
 
இந்த சரித்திரங்கள் எல்லாம் நமக்கு தெரிவிப்பது என்ன? சிவவேடத்தின் பெருமை. அடுத்தமுறை, நாம் சிவாலயம் சென்று 63 நாயன்மார்களை தரிசிக்கும்பொழுது,அவர்களின் வரலாறு முழுவதும் நாம் கண்முன் நிழலாட வேண்டாமாஎப்பேர்ப்பட்ட மஹான்கள், நம் தேசத்தில் அரசர்களாக இருந்திருக்கிறார்கள்!  பஞ்சாக்ஷரத்தை உயிர் மூச்சாகக் கொண்டு, சிவாலயங்களை போஷித்து, அடியார்களை வணங்கி, வீரத்துக்கு வீரமாகவும், பணிவுக்கு பணிவாகவும் இருந்து தம் மக்களை காப்பாற்றிய அரசர்கள் அவர்கள்.  நாயன்மார்கள் என்று நாம் வழிபடத் தகுந்த தெய்வ நிலைக்கு உயர்ந்துவிட்டார்கள். அவர்களை நினைவு கூர்ந்த நாமும் பாக்யசாலிகளே!
அடுத்த பதிவில் சிவவேடத்தின் பெருமையை ஞானசம்பந்தர் ஒரு பதிகத்தில் எப்படி புகழ்ந்து பாடியிருக்கிறார் என்பதைப்  பார்ப்போம்.
 
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி இதன் விளக்கம் நீண்டு கொண்டே போகிறதே!
 
மற்றவை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.


Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading