Vinayagar Agaval – Part 30

Vinayaka--my first W.C painting
Many Jaya Jaya Sankara to Shri B Srinivasan for the share. Ram Ram

விநாயகர் அகவல் – பாகம்
30


ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.
 

63.  சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
64.  சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
 
பதவுரை:

சத்தத்தின்  உள்ளே – வெளியில் உள்ள அண்டத்தில் உள்ள சூக்ஷ்மமாக உள்ள தன்மாத்திரையான சத்தத்தின் (சப்தத்தின்) உள்ளே

சதாசிவம் காட்டி – அங்கே வ்யாபகமாக இருக்கும் சதாசிவ தத்துவத்தை த்யானம் செய்யும் முறையை விளங்கச் செய்து
சித்தத்தின் உள்ளே – (பிண்டத்துள் இருக்கும்)  இதய கமலத்தில் விளங்கும்
சிவலிங்கம் காட்டி – சிவலிங்க மூர்த்தியை பூஜிக்கும் முறையை உபதேசித்து
 
விளக்கவுரை:

கருணையே உருவான பரம்பொருள், ஆன்மா உய்யும் பொருட்டு உருவத்துக்கு அருவத்துக்கும் இடையான, அருவுருவமான தன் இயல்பை சதாசிவ தத்துவம் மூலம் அறிவிக்கும்.  சிவம், சக்தி, விந்து, நாதம் – இவை நான்கும் அருவுருவமான திருமேனிகள்.  ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோதானம், அநுகிரஹம் என்ற ஐந்தொழிகள் [படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ] ஆற்றும் சிவசக்தி, சுத்த மாயையில்  உள்ள சதாசிவத்தின் மூலம் இந்த தொழில்களை செய்யும்.   சிவசக்தியும் சதாசிவமும் ஒன்றுக்கொன்று அங்கமும் அங்கியுமாக கூறுவர் பெரியோர்.

 

சாந்தியாதீத கலையில் சத்தம் (சப்தம்) என்னும் சூக்ஷ்மமான பூதம்அதற்கான இடம் ஸ்தூலத்தில் – ஆகாயம்.  ஆகாயத்தின் அதிதேவதை (அதிபர்) சதாசிவர்.  உள்ளும் புறமும் இருந்து அருள் செய்பவர் சதாசிவர்.  ஐந்து தொழில்களை பொதுவாக செய்தாலும், ஜீவ கணங்களுக்கு “அருளுதல்” (அனுக்கிரஹம்) இவருடைய சிறப்புத் தொழில்.  ஆகாச மண்டலத்தின் அதிதேவதையான சதாசிவர் புறவுலகில் சத்தம் (சப்தம்) என்ற தன்மாத்திரையாகப் பொலிகிறார்.  சத்தம் என்பது சூக்ஷ்மமான வாக்கை உள்ளடக்கிய ஓசை.  இந்த ஓசை அகர, உகர, மகர மாகிய ஓம் என்ற பிரணவமே வேத ஒலிகளாய் விரித்துப் பெருகும்.  இந்த ஒலியிலிருந்தே எல்லாம் மீண்டும் தோன்றும்.  சிவசக்தியே நாத விந்துவாய் (ஒலி -ஒளியாய்) விருந்து எங்கும் நிறையும்.  விந்து என்னும் ஒளி, நாதம் எனும் ஒலியில் அடங்கி பின் நாதாந்தம் ஆகும்.   இந்த ஓசை இல்லை எனில் உயிர்களுக்கு சிவபோகம் இல்லை.  இதை அடைவது எப்படி?

கீழ்நோக்கியே செலுத்தி விரயமாகும் விந்துவை, குண்டலினி யோகத்தால் கட்டி மேல்நோக்கி ஏற்றி சாதனை செய்தால் புருவ மத்தியில் கண் திறக்கும் ஒரு க்ஷணநேரம்.   இதைத் தான் வேதமும் “ஊர்த்வ ரேதம் விரூபாக்ஷம்” என்று சுட்டிக் காட்டும்.  இந்த சாதனையில்தான் அங்கிருக்கும் சந்திர மண்டலத்தில் அமுத ஊற்று பெருக்கெடுக்கும்.  இப்படி விந்துவைக் கட்டி அதை நாதத்தில் ஒடுக்குவது ஒரு பெரும் யோக சாதனை.
 

இதையே திருமந்திர பாடல் ஒன்று விளக்குகிறது:

விந்துவும் நாதமும் விளைய விளைந்தது
வந்தஇப் பல்லுயிர் மன்னுயி ருக்கெல்லாம்
அந்தமும் ஆதியு மாமந் திரங்களும்
விந்து அடங்க விளையும் சிவோகமே  (திருமந்திரம் 7-ம் தந்திரம் பாடல் 1969)


ஆதி சங்கர பகவத்பாதர் நிர்வாண ஷடகத்தில்
, இதையே “சித்தானந்த ரூபா சிவோஹம் சிவோஹம்” என்கிறார்.

சதாசிவம் என்றாலும்  சிவலிங்கம் என்றாலும் ஒன்றுதான்.  அண்டத்தில் சத்தம்; சத்தத்தில் சதாசிவம்.; பிண்டத்தில் சித்தம்; சித்தத்தில் சிவலிங்கம்.  புறத்தில் சதாசிவம்; அகத்தில் சிவலிங்கம்.

இந்த அற்புத தத்துவத்தை காட்டினான் கணபதி பெருமான் ஒளவைக்கு.  சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்  சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி இதை நினைத்தால், நம் அகமும் ஆனந்திக்கும்.  புருவ மத்தியில் சதாசிவத்தையும், இதய கமலத்தில் சிவலிங்க மூர்த்தியையும் பூஜிப்பது மரபு.

மற்றவை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.


Categories: Deivathin Kural

Tags:

1 reply

  1. Guru Arulalan Upadesam Samighya in the year 1977 on Vinayagar Agaval, to this Adiyan, the Vinayagar Agaval still has the great blessings even now, the good and bad balance of happenings in my life a great Boon. His Upadesam to read and do the Parayanam with the help of book only. MahaPerivaa Padarakamalam Saranam.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading