அங்கேயும் த்ரிமூர்த்தி இங்கேயும் அதுதானே

Thanks Sri Ambi for sharing this in whatsapp group.

AS_Raman_Namaskaram

–  நன்றி மஹா பெரியவாள் தரிசன அனுபவங்கள்

சாட்சாத் சர்வேஸ்வரரே ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளெனும் ஞானியாய் சுகபிரம்மரிஷியின் யோக மேன்மையோடு மிக எளிமையாய் நம்மிடையே திருஅவதாரம் செய்து தன் பரமகாருண்யத்தை நமக்கெல்லாம் பொழிந்தருளுகிறார்.

தன்னை எப்போதுமே ஒரு சாமான்ய சந்நியாசியாகவே உலகோருத்து மறைத்து காட்டி வந்த போதிலும், ஒரு சில பக்தர்களுக்கு பேரனுக்கிரஹமாக தன் உண்மை சொரூபத்தை வெளிக்காட்டியருளிய சந்தர்பங்களும் நிகழ்ந்துள்ளன.

பொள்ளாச்சி ஜெயலட்சுமி அம்மாள் எனும் பக்தையும் அப்படி ஒரு பாக்யம் பெற்ற நிகழ்ச்சியை கூறுகிறார்.

ஒரு சமயம் ஸ்ரீ பெரியவா திருவானைக்காவில் அருளிக் கொண்டிருந்தபோது இவரும், கணவருமாக மகானை தரிசிக்கச் சென்றிருந்தார். பெரியவாளை தரிசித்துவிட்டு இருவரும் தஞ்சாவூருக்கு செல்வதாக இருந்தனர்.

மறுநாள் சோமவார அமாவாசை, ஆகவே அரசமர பிரதட்சிணம் செய்ய தஞ்சாவூரில் இருக்க வேண்டுமென்பது அவர்கள் திட்டமாக இருந்தது.

ஸ்ரீ பெரியவா பக்தர்களை ஒவ்வொருவராய் ஆசீர்வதித்து பிரசாதம் கொடுத்தனுப்புவார். ஆனால் இவர்கள் இருவரும் சென்று நின்றபோது மட்டும் இவர்களின் பிரார்த்தனையை தன் திருச்செவியில் விழாததுபோல் இருந்துவிடுவார். இவர்கள் முறை வந்ததும் உள்ளே எழுந்து சென்றுவிடுவார். இப்படியே காத்திருந்து மறுபடியும் க்யூவில் போனபோதும் இவர்கள் முன்னாடிவரைக்கும் பிரசாதம் கொடுத்துவிட்டு இவர்கள் நெருங்கியதும் உள்ளே போய்விட்டார்.

அன்று முழுவதுமே ஸ்ரீ பெரியவா இவர்களை பார்க்கவோ, இவர்களின் பிரார்த்தனையை காதில் வாங்கவோ இடம் கொடுக்காததில் தம்பதியினருக்கு சற்றே ஏமாற்றம். இருந்தாலும் சாட்சாத் பரமேஸ்வரரின் இச்செய்கைக்கு ஏதோ அர்த்தம் இருக்கவேண்டும் என்ற நம்பிக்கையில் அங்கேயே அன்று இரவு தங்கும்படியாகிவிட்டது.

சோமவார பிரதட்சணத்திற்கு தஞ்சாவூர் போக முடியவில்லையே என்று லேசான கோபத்துடன் அந்த பக்தை அன்றிரவு தன் கணவரோடு திருவானைக்காவிலிலேயே தங்கிட நேர்ந்தது.

மறுநாள் காலை ஸ்ரீ பெரியவாளின் விஸ்வரூப தரிசனம் கிடைக்கப் பெற்றனர். ஸ்ரீ மகான் அதற்குப்பிறகு ஒரு மணி ஜபம் செய்வதற்காக மேனா எனும் பல்லக்கிற்குள் அமர்ந்தபடி “முக்கால் மணி நேரம் கழித்து, நான் ஜபம் செய்துக் கொண்டிருக்கும் போதே, மேனாவை கொள்ளிடக் கரைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யுங்கள்” என்று மடத்து காரியதரிசியிடம் உத்தரவிட்டுவிட்டு ஜபம் செய்ய மேனாவின் கதவை சாத்திக் கொண்டுவிட்டார்கள்.

ஜெயலட்சுமி அம்மாளுக்கு அரசமர பிரதட்சிணம் அன்று செய்யமுடியவில்லையே, ஸ்ரீ பெரியவாளையாவது பிரதட்சிணம் செய்யலாமென்று மனதில் தோன்றியது. அது போலவே ஜபம் செய்யும் யோகி அமர்ந்திருந்த மேனாவை வலம்வர தொடங்கினார். ஸ்ரீ பெரியவா சொல்லியிருந்த முக்கால் மணி நேரமும் பக்தைக்கு மேனா பெரியவாளை பிரதட்சிணம் செய்த பாக்யம் கிட்டியது.

பின்பு, ஸ்ரீ பெரியவாளோடு மேனா கொள்ளிட கரைக்கு கிளம்பிற்று. இவர்களும் உடன் சென்று கொள்ளிடத்திலேயே ஸ்நானம் செய்தனர்.

ஸ்ரீ பெரியவா அனுஷ்டானம் செய்ய உட்கார்ந்ததும் பக்தையை கூப்பிட்டார் “எவ்வளவு பிரதட்சிணம் செய்தாய்?” என்றார். ஜெயலட்சுமி அம்மாளுக்கு திகைப்பாகி போனது, நேற்று முழுவதும் தாங்கள் வந்ததையோ, சொல்வதையோ பொருட்படுத்தாமல் திருநாடகமாடிய தெய்வத்திற்கு, மேனாவை சுற்றி தாங்கள் பிரதட்சிணம் செய்தது மட்டும் எப்படி தெரிந்திருக்கிறது என்ற வியப்பு மேலிட்டது.

“தொண்ணூறு” என்று தான் பிரதட்சிணம் செய்த எண்ணிக்கையை ஸ்ரீ பெரியவாளிடம் கூறியபோது, பாக்கி பிரதட்சிணங்களையும் முடிக்கச் சொல்லி ஸ்ரீ பெரியவா உத்தரவிட்டருளினார்.

சாட்சாத் பரமேஸ்வரரே இப்படி உத்தரவிட்டதில் அந்த பெரும்பாக்யத்தை உணர்ந்து ஸ்ரீ பெரியவாளை மீண்டும் வலம்வந்து குறிப்பிட்ட எண்ணிக்கையை பூர்த்தி செய்தனர்.

பிரதட்சிணம் முடிந்ததும் ஜெயலட்சுமி அம்மாளை கூப்பிட்ட ஸ்ரீ பெரியவா “என்ன சுலோகம் சொல்லிக் கொண்டு பிரதட்சிணம் செஞ்சே” என்றார்.

அதற்கு இவர் “குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு தேவோ மஹேஸ்வர:” என்று சொல்லிண்டே பிரதட்சிணம் செய்தேன்” என்றார்.

அப்போது ஸ்ரீ பெரியவா கேட்ட அடுத்த கேள்வியில் ஒரு பெரிய தெய்வ ரகசியம் வெளிபடுவதாய் அமைந்தது.

“அஸ்வத்த பிரதட்சணத்தின் போது என்ன சுலோகம் சொல்வாய்?” என்று ஸ்ரீ பெரியவா கேட்பாரென்று பக்தை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. தான் சோமவார அமாவாசை அரசமர பிரதட்சிணம் கிடைக்கவில்லையே என்று மனதிற்குள் ஆதங்கத்தோடு ஸ்ரீ பெரியவாளை பிரதட்சிணம் செய்து முடிந்திருக்க, அதை பற்றி அறிவேன் என்பதுபோன்று அரச மரத்தை சுற்றும் போது என்ன சுலோகம் சொல்வாய் என்றல்லவா ஸ்ரீ பெரியவா கேட்கிறார்? ஆச்சர்யமும், ஆனந்தமுமாக ஜெயலட்சுமி அம்மாள் பதில் சொன்னார்.

“அஸ்வத்த பிரதட்சிணத்தின் போது மூலதோ பிரம்மரூபாய, மத்யதோ விஷ்ணு ரூபிணே, அக்ரத: சிவ ரூபாய வ்ருக்ஷராஜாய தே நம; என்று சொல்லிண்டு சுத்துவேன்” என்று மகானிடம் கூறினாள்.

அப்போது ஸ்ரீ பெரியவாளின் திருவாக்கு இப்படி வெளிப்பட்டது.

“அந்த சுலோகத்திலும் த்ரிமுர்த்தி; இங்கேயும் அதுதானே” என்று ஸ்ரீ பெரியவாளெனும் மாபெரும் தெய்வம் சொன்ன மாத்திரத்திலேயே ஜெயலட்சுமி அம்மாளுக்கு மெய்சிலிர்த்தது.

தான் ஏங்கிய அரசமர பிரதட்சிணத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளும் அடக்கம் என்று அந்த சுலோகம் சொல்வதையே, சத்குருவாய் காட்சிதரும் பரப்பிரம்ம சொரூபமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளெனும் மும்மூர்த்திக்கும் பொருந்தும் என்றல்லவா மகானின் திருவாக்கு மெய்பித்துவிட்டது.

“அங்கேயும் த்ரிமூர்த்தி இங்கேயும் அதுதானே” என்று தன் அபார கருணையால் தன்னையே சூட்சமமாக வெளிப்படுத்தியல்லவா இப்பெருந்தெய்வம் அனுக்ரஹித்துள்ளது.  இப்பேற்பட்ட பாக்யம் வேறு யாருக்கு கிட்டும்?

இந்த மாபெரும் தெய்வ ரகசியத்தை உணர்ந்துவிட்ட பாக்யசாலியாய் இந்த பக்தை அதற்குப்பிறகு சோமவார அமாவாசையன்று ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளை மட்டுமே பிரதட்சிணம் செய்வதென்று நியமம் மேற்கொண்டுவிட்டதாக ஆனந்திக்கிறார்Categories: Devotee Experiences

1 reply

  1. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Janakiraman. Nagapattinam

Leave a Reply

%d bloggers like this: