பெரியவாளை அழைக்கவே ஸ்ரீ காமாக்ஷி இங்கு வந்திருக்கிறாள்

Thanks to Smt Saraswathy Thyagarajan mami for this article.

Kamakshi_Periyava

ஸ்ரீ ஸ்ரீ மஹா ஸ்வாமிகளுடன் எனக்கு ஏற்பட்டுள்ள அனுபவங்கள் ஏராளமாக உள்ளன. எவ்வளவோ MIRACLES நிகழ்ந்துள்ளன.

இதுவரை அவ்வாறான என் அனுபவங்கள் எதையும் நான் யாரிடமும் பகிரங்கமாகப் பகிர்ந்து கொண்டது இல்லை.

எனக்கு மட்டுமல்ல. தரிஸனத்திற்குச் சென்று வந்த எவ்வளவோ பக்தர்களுக்கு அவர்களின் அருளால் எவ்வளவோ மறக்க முடியாத நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.

இவ்வாறான பலரின் சுகானுபவங்களையெல்லாம் தொகுத்து ‘கவிஞர் நெல்லை பாலு’ என்பவர் 1995 இல் “தெய்வ தரிஸனம்” என்ற தலைப்பினில் ஸ்ரீ பரமாச்சார்யார் ஸ்வாமிகளின் முதலாண்டு நினைவஞ்சலிக்காக ஓர் சிறப்பு நூல் வெளியிட்டிருந்தார்கள்.

அந்த நூலில் ஸ்ரீ ஸ்வாமிகளுடனான தங்களின் அனுபவங்களை பலரும் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். அதில் முன்னாள் இந்திய ஜனாதிபதி [PRESIDENT OF INDIA] திரு. ஆர். வெங்கட்ராமன் அவர்களில் ஆரம்பித்து நூற்றுக்கணக்கான பிரபலங்கள் எழுதியுள்ள அனுபவக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

அடியேன் எழுதியதோர் அனுபவமும் அதில் பக்கம் எண்கள்: 155-157 இல் இடம் பெற்றுள்ளது. அந்தப் புத்தகத்தை இன்றும் நான் மிக உயர்ந்த பொக்கிஷமாக என்னிடம் வைத்துள்ளேன். நான் அந்த புத்தகத்தில் எழுதியுள்ள பகுதியை மட்டும் இங்கு கீழே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பரமாச்சாரியார் உத்தரவு

நான் என் குடும்பத்தாருடன் ஸ்ரீ ஸ்வாமிகளை தரிஸிக்கச் சென்றிருந்தேன். அதுசமயம் ஸ்ரீ பரமாச்சார்யாள் அவர்கள் குண்டக்கல்லுக்கு அருகில் உள்ள ‘ஹகரி’ என்ற சிற்றூரில் ”பண்யம் சிமிண்ட் ஃபேக்டரி ” வளாகத்தில் முகாமிட்டு சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்து வந்தார்கள்.

அங்கு ஸ்ரீ மஹாபெரியவா ஆக்ஞைப்படி மிகவும் துரிதமாக ஓர் சிவன் கோயில் கட்டப்பட்டு முடியும் தருவாயில் இருந்தது. வழக்கப்படி நான், என் தாயார், என் மனைவி என் முதல் இரு குழந்தைகள் [வயது முறையே 4-1/2 மற்றும் 3] தரிஸனத்திற்குச் சென்றிருந்தோம்.

எனக்குப் படம் வரைவதில் சிறுவயது முதற்கொண்டே ஆர்வம் உண்டு. என் கையால் நானே சிரத்தையாக வரைந்து வர்ணம் தீட்டி மிகப்பெரிய அளவில் ஒரு காஞ்சி காமாக்ஷி அம்மன் ஓவியத்தை அட்டை மடங்காமல் வெகு ஜாக்கிரதையாகச் சுற்றி எடுத்துச்சென்றிருந்தேன்.

நாங்கள் அங்கு போய்ச்சேர்ந்தபோது மாலை சுமார் 4 மணி இருக்கும்.

சுமார் 100 பக்தர்கள் மட்டுமே ஸ்ரீ பெரியவா தரிஸனம் செய்து கொண்டிருந்தார்கள். அதிகமாகக் கூட்டம் இல்லாத நேரம்.

ஸ்ரீ மஹா பெரியவாளை நெருங்கி நாங்கள் நான்கு நமஸ்காரங்கள் செய்து விட்டு, கொண்டு சென்ற ஸ்ரீ காமாக்ஷி அம்மன் படத்தை பழத்தட்டுடன் சமர்ப்பித்தோம்.

அருகில் உதவியாளர்களாக இருந்த **’ராயபுரம் ஸ்ரீ பாலு’** அவர்களும், **’திருச்சி ஸ்ரீ. ஸ்ரீகண்டன்’** அவர்களும் ஸ்ரீ பெரியவாளிடம் படத்தைப் பிரித்துக் காட்டினார்கள்.

[** இவர்கள் இருவரையும் பற்றி கீழே தனியே எழுதியுள்ள்ளேன் ** ]

அதை தன் திருக்கரங்களால் வாங்கிக்கொண்ட ஸ்ரீ மஹா பெரியவா அவர்கள், தன் திருக்கரங்கள் இரண்டையும் அந்தப்படத்தில் நன்றாக ஊன்றிய வண்ணம், கீழே தரையில் அமர்ந்த நிலையில், வெகு நேரம் சுமார் 10-15 நிமிடங்கள் நன்றாக ஊன்றிப்பார்த்து, மிகவும் ரஸித்து, சந்தோஷத்துடன் புன்னகை புரிந்தார்கள்.

நான் அந்தக்காட்சியைக் கண்டு மெய்சிலிர்த்துப்போய் ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்தேன். பிறகு தன் உதவியாளர்களிடம் ஏதோ சில விபரங்கள் என்னைப்பற்றி கேட்டது போல உணர்ந்து கொண்டேன்.

பிறகு அங்கு கூடியிருந்த பக்தர்களில் சிலர், “ஸ்ரீ மஹா பெரியவா திரும்பவும் காஞ்சீபுரத்திற்கே வந்து விட வேண்டும். ஸ்ரீ மஹா பெரியவாளை அழைக்கவே ஸ்ரீ காமாக்ஷி அம்மன் இங்கு இப்போது வந்திருக்கிறாள்” என்று தங்கள் ஆசையை மிகவும் பெளவ்யமாக வெளிப்படுத்தினார்கள். ஸ்ரீ மஹா பெரியவாளும் சிரித்துக்கொண்டார்கள்.

ஸ்ரீ மஹாபெரியவா தமிழ்நாட்டிலிருந்து புறப்பட்டு வட இந்திய பாத யாத்திரை மேற்கொண்டு, சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாகி, தமிழ்நாட்டுப்பக்கம் எப்போ திரும்பி வருவாரோ என பக்தர்களை ஏங்க வைத்திருந்த காலக்கட்டம் அது.

நான் வரைந்து எடுத்துச்சென்ற படத்தை அனுக்கிரஹம் செய்து திரும்பத் தந்து விடுவார்கள், அதை ஃப்ரேம் செய்து நம் கிருஹத்தில் பூஜையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்த எனக்கு, மேலும் ஓர் இன்ப அதிர்ச்சி அங்கு காத்திருந்தது.

ஸ்ரீ மஹாபெரியவா யாரோ ஒருவரை குறிப்பாக அழைத்து வரச்சொல்லியிருந்தார்கள். வந்தவர் அந்த பண்யம் சிமிண்ட் ஃபேக்டரியின் மிக உயர்ந்த அதிகாரியோ அல்லது மேனேஜிங் டைரக்டரோ என்று நினைக்கிறேன்.

அவர், பஞ்சக்கச்சத்துடன், உத்திரியத்தை இடுப்பில் சுற்றிக்கொண்டு, மேலாடை ஏதும் அணியாமல், மிகவும் பெளவ்யமாக வந்து, ஸ்ரீ மஹாபெரியவாளை நமஸ்காரம் செய்து கொண்டார்.

அவரிடம் மேற்படி படத்தை ஒப்படைத்து பெரியதாக FRAME செய்து, அங்கு கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ள சிவன் கோயிலில் மாட்டிவிடும் படி ஆக்ஞை செய்தார்கள்.

எனக்கு ஒரு 9 x 5 வேஷ்டியும், என் மனைவிக்கு 9 கெஜம் நூல் புடவையும், என் தாயாருக்கு குளிருக்குப் போர்த்திக்கொள்ளும் சால்வையும், என் குழந்தைகள் இருவருக்கும் பழங்கள் + கல்கண்டு + குங்குமப்பிரஸாதம் போன்றவைகளையும் ஒரு மூங்கில் தட்டில் வைத்து, ஸ்ரீ மஹாபெரியவா நன்றாக ஆசீர்வதித்து அனுக்கிரஹம் செய்து கொடுத்தார்கள். அனைவரும் நமஸ்கரித்து விட்டுவாங்கிக்கண்களில் ஒத்திக்கொண்டோம்.

மறுநாள் விடியற்காலை, விநாயக சதுர்த்திக்காக, அந்த ஊர் கலைஞர் ஒருவரால் மிகப்பெரிய விநாயகர் சிலை களிமண்ணால் வெகு அழகாகச் கையினாலேயே வடிவமைக்கப்பட்டு, செய்யப்பட்டதை அருகில் நின்று கவனிக்கும் பாக்யம் பெற்றேன்.

விநாயக சதுர்த்தி பூஜை ஸ்ரீ மஹாபெரியவா சந்நிதானத்திலேயே மிகச்சிறப்பாக நடைபெற்றதை நேரில் காணும் பாக்யம் பெற்றோம்.

இந்த நிகழ்ச்சிகள் என் வாழ்நாளில் என்றும் மறக்கவே முடியாத ஒரு நல்ல பேரின்ப அனுபவம் ஆகும்.

By V. கோபாலகிருஷ்ணன் BHEL திருச்சி.



Categories: Devotee Experiences

5 replies

  1. Periyava paatham saranam

  2. Hara Hara Shankara Jaya Jaya Shankara! Kamakshi CharaNam!

  3. enna punniyam panninello gopal anna

  4. Hara Hara Sankara Jaya Jaya Sankara. Getting such blessings from Sri Maha Periyava is really a BAGYAM.Sri Gopalakrishnan is really a blessed soul. Janakiraman. Nagapattinam.

  5. You are a very blessed person! Hara Hara Sankara! Jaya Jaya Sankara!

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading