Thanks to Sri Sundaram Subramaniam for this great work!
ஸ்ரீ சந்திரசேகரேந்திரர் பதிகம்
1
விடையேறிடும் நடமாடிடும் பொடிசூடிய பெருமான்
அடியார்களின் வினைபோக்கிடும் அனல்தாங்கிய பெருமான்
மறைநூல்களும் தொழுதேத்திடும் மடமாதொரு பாகன்
பிறைசூடிய பெருமான் சந்திரசேகரேந்திரன் அடிதொழுவோம்!!
2
களைசூழ்ந்திட கலிமுற்றிட தடமாறியே நித்தம்
இளையோர்களும் நெறிநீங்கிட இருள்சூழ்ந்திடும் சித்தம்
கறைபோக்கிட மருள்நீக்கிட வந்தேகிய இறையாம்
பிறைசூடியின் பெயர்சூடிய சந்திரசேகரனடி தொழுவோம்!!
3
இருவினைகெட மும்மலம்கெட ஐம்புலன்களும் அடங்கி
ஒருமனதொடு திருவடிதொழ ஓடிடும் பவமிருகம்
அருட்புனலில் நீராட்டி கருத்துடனே காக்கும்
பெருங்கருணை பிறைசூடி சந்திரசேகரேந்திரன் அடிதொழுவோம்!!
4
மந்தகாச புன்னகையில் மாயமலம் அறுத்துச்
சிந்தையிலே சிவரூபம் சிறப்புறவே காட்டி
நொந்தமனத் துயரினையே நொடியினிலே நீக்கும்
எந்தைகுரு சந்திர சேகரேந்திரன் அடிதொழுவோம்!!
5
கச்சி திருநகர் காமகோடி கோட்டத்துள்
பிச்சை பெருமான் பிறந்து அருள்செய்ய
நிச்சயம் கொண்டிங்கு நின்றனன் சங்கரனாய்
மெச்சி அவனடி போற்றி வணங்குவோம்!!
6
முன்னே பலப்பல சென்மங்கள் எடுத்தநாள்
என்னே புண்ணியம் செய்தோமோ பெரியவா
இந்நாள் உமது திருவடி தொழு தேத்தவே?
எம்மை தடுத்தாட்கொண்டதை என்சொல்லி போற்றுவோம்!!
7
தூய்மைமிகு துறவினுக்கோர் சான்றாய் விளக்கமாய்
வாய்மையொடு கருணைமிக வாழ்ந்த அருள்வள்ளல்
சேய்மைநீங்கி மனத்தகத்தே சிவமதுவாய் நின்றார்
தாய்மைமிகு ஜகத்குருவாம் சந்திரசேகரன் தாள்தொழுவோம்!!
8
வேழமாய் கந்தனாய் விளங்குசக்தியாய் கோபியர்
தோழனாய் சுடராய் தோன்றிடுதேவர்கள் யாவரும்
சூழநின்று போற்றிடும் சுந்தரேஸ்வர சொரூபன்
தாழநின்று சந்திரசேகரேந்திரன் தாளடி பணிவோம்!!
9
அரன்வடிவும் அரிவடிவும் அயன்வடிவும் கூடி
நரவடிவம் தாங்கியிங்கு நடமாடிய தெய்வம்
கரம்குவிப்போர் துயரமெலாம் கனிவுடனே நீக்கும்
தரணிபுகழ் சந்திரசேகரன் தாளடியே பணிவோம்!!
10
சித்தமிசை குடிகொண்ட சிவரூபன் சேகரனை
நித்தமும் பத்திசெய்ய நேர்ந்ததொரு பதிகம்
முத்தனெவே முகிழ்த்ததுவே முதற்பொருளின் பேரருளால்
பத்தியுடன் பாடியந்த பரமாச்சார்யன் தாள்பணிவோம்!!
பாவாக்கம் : சுந்தரம் சுப்ரமணியன்
Plano, Texas
14/Sep/2016
Categories: Bookshelf
Maha Periyava ThiruvadigaLe charaNam! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!