Vinayagar Agaval – Part 9

lord-ganapathi-at-varanasi-streets-varanasi-india+1152_12921578726-tpfil02aw-566

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Thanks to Sri Srinivasan for the article. Ram Ram

விநாயகர் அகவல் – பாகம் 9:

ஸ்ரீ மஹா பெரியவா சரணம், கணேச சரணம்.

11. இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்

பதவுரை:

இரண்டு செவியும் – இரண்டு திருச் செவிகளும்

இலங்கு பொன்முடியும் – சிரத்தில் விளங்குகின்ற பொன்னாலாகிய (தங்கத்தால் செய்யப்பட்ட ) மகுடமும்

எல்லோருக்கும் தான் இருக்கிறது இரண்டு செவி.  இருந்து என பயன்?  சிறிதும் பொருளற்ற ஓசையில் தொடர்பு கொண்டு, வாழ்க்கையை வீணடித்தததுதான் கண்ட பலன். விநாயகரின் இரண்டுதிருச்செவிகளின் பெருமை என்ன? அசைத்து அசைத்து, ஜீவர்களின் ஆன்ம முறையீட்டை ஏற்கும் அற்புதச் திருச்செவிகள் இரண்டு. நாம் உள்ளம் உருகிப் பாடும் ஸ்தோத்திரங்களை, அவற்றில்உள்ள முறையீட்டை, கேட்டுக் கேட்டு கணபதியின் திருவுளம் மகிழ்கிறது.  அருளின் அறிகுறியாக அவரின் திருச்செவிகள் அசைகின்றன. அந்த அசைவிலிருந்து எழும் பெருங்காற்று, எங்கும்பரவி, பிறவிக்கடலில் தத்தளிக்கும் ஆன்மாவை வாரிக்கொண்டு போய் முக்தி என்ற கரையில் சேர்ந்துவிடுகிறது.

இந்த இரு செவிகளின் பெருமையை ஸ்ரீ மஹா பெரியவா ‘ கஜகர்ணகர் ‘ என்ற நாமாவைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்கள்.

தெய்வத்தின் குரல் – 6 ம் பகுதி

கஜகர்ணகர்

கஜகர்ணகர் என்றால் யானைக் காது உள்ளவர். கஜமுகர் என்று முகம் முழுதையும் சொல்லிவிட்டால் போதாது. அவருடைய யானைக் காதும் யானைக் காதுதான் என்று பிரத்யேகமாகச் சொல்லவேண்டும் என்கிறார்போல் இப்படிப் பேர் சொல்லியிருக்கிறது.

யானைக் காதிலே அப்படி என்ன விசேஷம்? மற்ற ஸ்வாமிக்கெல்லாம் காதைச் சுற்றிப் பெரிஸாக ஒரு கால் வட்டம் மாதிரிப் போட்டுத் தோளோடு சேர்த்தே விக்ரஹங்கள் பண்ணியிருக்கும்.இந்த வட்டப் பிரபைக்கு உள்ளேயும், கிரீடத்துக்குக் கீழேயும் அந்த ஸ்வாமியின் காது எங்கே இருக்கிறது என்று நாம் தேடிக் கண்டு பிடிக்கும் படியே இருக்கும். அநேகமாக, பெரிஸாகத்தொங்கும் குண்டலத்தை வைத்துத்தான் காதைத் தெரிந்து கொள்ள முடியும். விக்நேச்வரர் ஒருத்தர்தான் இதற்கு விலக்கு. அவருடைய யானைக் காது அவருடைய பெரிய முக மண்டலத்துக்கு ஸமஅளவாக இரண்டு பக்கமும் விரித்து விசாலமாக ப்ரகாசிக்கிறது.

நாம் பண்ணும் பிரார்த்தனையெல்லாம், நம்முடைய முறையீட்டையெல்லாம் கேட்க வேண்டியது ஸ்வாமியின் காதுதானே? அந்தக் காது தெரிந்ததும் தெரியாமலும் இருந்தால்என்னவோபோல்தானே இருக்கிறது? கஜகர்ணகராக விக்நேச்வரர்தான் தன்னுடைய பெரிய காதை நன்றாக விரித்துக்கொண்டு மற்ற தெய்வங்களுடையதைப் போல் மண்டைப் பக்கமாக ஒட்டிக்கொள்கிற மாதிரி இல்லாமல் முன் பக்கமாக விரித்துக்கொண்டு – நம் ப்ரார்த்தனைகளை நன்றாகக் கேட்டுக் கொள்கிறார் என்ற உத்ஸாஹத்தை நமக்குக் கொடுக்கிறார்.

மற்ற எல்லாப் பிராணிகளுக்கும் காது குழிவாகக் கிண்ணம் மாதிரி இருக்கிறது. யானைக்குத்தான் FLAT -ஆக விசிறி மாதிரி இருக்கிறது. கேட்கிற சப்தம் சிதறிப் போகாமல் பிடித்து உள்ளேஅனுப்புவதற்காகவே மற்ற ப்ராணிகளுக்கு குழிந்து இருப்பது. யானைக்குக் கூர்மையான ச்ரவண சக்தி (கேட்கும் ஆற்றல்) இருப்பதால் சிதறாமல் பிடித்து உள்ளே அனுப்பணும் என்கிற அவசியம்இல்லை. பிள்ளையார் நம் வேண்டுதல்களை நன்றாகக் கேட்டுக் கொள்வார்.

யானை பெரிய காதை விசிறி மாதிரி ஆட்டிக் கொள்வது ரொம்ப அழகு. பிராணி வர்க்கத்திலேயே யானை ஒன்றால்தான் இப்படிக் காதால் விசிறி போட்டுக் கொள்ள முடிவது. ஏதாவது பூச்சிபொட்டை விரட்டுவதற்காக ஒரு தரம். இரண்டு தரம் வேண்டுமானால் மாடுகூடக் காதை ஆட்ட முடியுமே தவிர, யானை மாதிரி ஸதா பண்ண முடியாது. மாடு ஏதோ கொஞ்சம்ஆட்டுவதற்குக்கூட ஸ்ட்ரெயின் பண்ணிக் கொள்ள வேண்டியிருக்கிறது. யானைதான் அநாயாஸமாக, ரொம்ப இயற்கையாக எப்பப் பார்த்தாலும் காதை ஆட்டிக் கொண்டே இருப்பது.கஜாஸ்பாலம் (கஜ ஆஸ்பாலம்) கஜதாளம் என்றே அதற்குப் பேர் கொடுத்து வைத்திருக்கிறது. தாளம் என்றால் பனை, அதாவது விசிறி.  பாட்டுக்கு விரலால் போடுவதும் தாளம். ஆனை விசிறிமாதிரியுள்ள காதை ஒரே சீராகத் தாளம் போடுகிற மாதிரி அசைத்துக்கொண்டே இருக்கிறது.

மனிதர்கள் யானை மாதிரிக் காதை ஆட்டுவது சிரம ஸாத்தியமான ஒரு பெரிய வித்தை. அதைத்தான் கஜகர்ணம் போட்டாலும் நடக்காது என்று சொல்கிறோம். கஜகர்ணம் என்பதை கஜகரணம்என்று நினைத்துக்கொண்டு யானை மாதிரி குட்டிக் கரணம் போட்டாலும் நடக்காததாக்கும் என்று அர்த்தம் பண்ணிக் கொள்கிறார்கள். அது ஸரியில்லை. யானை மாதிரி காதை ஆட்டுகிறவித்தைத்தான் கஜகர்ணம்.

கஜகர்ணம், கோகர்ணம் போடுவது என்பது முழு வசனம். கோகர்ணம் என்கிற வார்த்தையில் கர்ணம் என்றால் காது என்று அர்த்தமில்லை. கர்ண என்பது க்ரியா பதமாக (வினைச் சொல்லாக)வரும்போது துளைப்பது, குத்துவது என்று அர்த்தம். ஒரு மாட்டின் உடம்பில் விரலாலோ தார்க்குச்சியாலோ குத்தினால் உடனே அதன் உடம்பு முழுக்க சுழிசுழியாக அலை மாதிரி ஒரு சலனம்பரவும். இதே மாதிரி ஒரு மநுஷ்யர் பண்ணிக் காட்டுகிற அபூர்வமான வித்தைத்தான் கோகர்ணம்.  கஜகர்ண வித்தையும் அதே மாதிரிதான், ஸுலபத்தில் கற்றுக் கொள்ள முடியாது.

நமக்கு ரொம்ப சிரமமாயிருப்பதை விக்நேச்வரர் விளையாட்டாகப் பண்ணுவதை கஜகர்ணர் என்ற பேர் காட்டுகிறது.

யானை காதை ஆட்டுவதில் அழகு இருப்பதோடு ஒரு பர்பஸும் இருக்கிறது. மதம் பிடிக்கிற காலத்தில் அதன் முகத்தில் கன்னப் பிரதேசத்தில் மத ஜலம் ஸதாவும் துளித்துக் கொண்டிருக்கும்.அதற்காக ஈ, எறும்புகள் ஏகமாக மொய்க்க வரும். அதுகளை விரட்டுவதற்கு வசதியாகவே பகவான் யானைக்கு விசிறிக்காதைக் கொடுத்து, அதனால் விசிறிக் விட்டுக் கொள்ளும் திறமையும்கொடுத்திருக்கிறார்.

விக்நேச்வரரின் கன்னத்தில் மத ஜலம் வழிந்து கொண்டு இருப்பதை ஆச்சாரியாள் கபோல தான வாரணம் என்று (கணேச பஞ்சரத்தினத்தில்) சொல்லியிருக்கிறார். கபோலம் என்றால் கன்னம்.தானம் என்றால் மத ஜலம். (குறிப்பு:  இதைத்தான், மும்மதத் சுவடு என்று போன வரியில் பார்த்தோம்)

பிள்ளையார் பெருக விடும் மத ஜலம் என்பது ஆனந்த தாரைதான், க்ருபா தாரைதான். பரம மதுரமாக இருக்கும் அம்ருதம் அது. அந்த மாதூர்ய மத நீரை ருசி பார்ப்பதற்காக வண்டுகள் ஏகமாகவரும். இதையும் ஆச்சார்யாள் ஒரு ஸ்தோத்திரத்தில் சொல்லியிருக்கிறார்.

கலத்-தான கண்டம் மிலத் ப்ருங்க ஷண்டம்

மத ஜலத்தை மொய்க்கும் வண்டுகளை விரட்டுவதற்காகப் பிள்ளையார் விசிறிக் காதை ஆட்டிக் கொண்டே இருக்கிறார். கோபத்தில் விரட்டுவதல்ல. குழந்தை ஸ்வாமிக்கும் இது ஒருவிளையாட்டுதான். வண்டுகளும் அவரிடத்தில் இந்த விளையாட்டுக்காகத்தான் வருவது. அவருடைய தர்ஸனமே அவற்றுக்கு அம்ருதமாக இருக்குமாதலால் மத ஜலத்தை குடிக்க வேண்டுமேஎன்பதில்லை. விளையாடனும், அவர் தங்களுக்கு விசுறனும் என்றேதான் அதுகள் கன்னத்துகண்டை வந்து மொய்க்கும். நாம் குழந்தை காதில் விளையாட்டாக ருர்ர் என்று கத்தி அதுமயிர்கூச்சலெடுப்பதைப் பார்த்து ஸந்தோஷப்படுகிறோல்லியோ? அந்த மாதிரிப் பிள்ளையாருடைய பெரிய காதிலே அதிர அடிக்கிற மாதிரி தங்களுக்கே உரிய ஜங்கார சப்தம் போட்டு வேடிக்கைபண்ணனும் என்றே வண்டுக் கூட்டம் வரும். அந்த வேடிக்கை விளையாட்டை புரிந்து கொண்டு அவரும் காதை ஆட்டி ஆட்டி அதுகளை விரட்டுகிற மாதிரிப் பண்ணுவார். அந்தக் காற்றிலேஅதுகள் மாற்றி மாற்றி ஒடிப் போவதும், மறுபடி வந்து மொய்ப்பதுமாக அமர்க்களம் பண்ணும், மதஜலத்திலே விசிறிக் காதின் காற்றுப் பட்டு ஸ்வாமிக்கு ஜில்லென்று ஆனந்தமாயிருக்கும்.

ராகவ சைதன்யர் என்று ஒருத்தர் மஹாகணபதி ஸ்தோத்திரம் என்று செய்திருக்கிறார். அதில் மந்த்ர சாஸ்திர விஷயங்களெல்லாம் வருவதோடு அழகான கவிதா வர்ணனையும் அழகான வாக்கில்வருகிறது. விக்நேச்வரர் விசிறிக் காதை ஆட்டி வண்டுக் கூட்டத்தை விரட்டுவது போல விளையாடுவதை அதில் நீள நெடுக வார்த்தைகளைக் கோத்து அழகாகச் சொல்லியிருக்கிறது.

தாநாமோத-விநோத-லுப்த-மதுப ப்ரோத்ஸாரணாவிர்பவத்
கர்ணாந்தோலன-கேலனோ விஜயதே தேவோ கணக்ராமணீ

‘தான ஆமோதம்’ என்றால் மதஜலத்தின் ஸுகந்தம். ஸ்வாமி பெருக்கும் மத ஜலம் கமகமவென்று வாஸனை அடிக்கிறது. அநேத விநோதமான, அதாவது இன்பமூட்டுகிற வாஸனையைமோந்ததில் வண்டுகளுக்கு ஒரே பேராசை உண்டாகிறது. மத ஜலத்தை அப்படியே குடித்துவிட வேண்டுமென்று, லுப்த மதுப என்றால் பேராசை கொண்ட வண்டுகள். அல்லது வாஸனையில்மயங்கிப்போன வண்டுகள் என்றும் அர்த்தம் பண்ணலாம். அந்த வண்டுகளை விரட்டணுமென்று ஒரு விளையாட்டு ஆவிர்பாவமாகிறது, விளைகிறது.

கேலனம் என்றால் விளையாட்டு. என்ன விளையாட்டு கர்ணாந்தோலன கேலனம் கர்ண ஆந்தோலனம் என்றால் காதை முன்னேயும் பின்னேயுமாக ஆட்டுவது.

ஊஞ்சலுக்கு ஆந்தோலம் என்று பெயர். தோலம் என்று மட்டும் சொன்னாலும் அதே அர்த்தம்தான். தோல உத்ஸவத்தைத்தான் டோலோத்ஸவம் என்று சொல்லி ஊஞ்சல் போட்டு ஸ்வாமியைஆட்டி ஸந்தோஷபப் படுகிறோம். டோலி கூட இதோடு ஸம்பந்தப்பட்டதுதான்.

காதை ஆட்டி வண்டை விரட்டி விளையாடும்போது விக்நேச்வரர் கூடுதலான அழகாக விளங்குகிறார். வெற்றி வீரராக விளங்குகிறார். படையெடுக்கும் வண்டுக் கூட்டத்தை விரட்டியடிக்கும்வெற்றி வீரராக விளங்குகிறார்.

இங்கே பிள்ளையாரை கணக்ராமணி என்ற பெயரில் குறிப்பிட்டிருக்கிறது. க்ராமணி என்றால் ஒரு குறிப்பிட்ட கூட்டத்துக்குத் தலைவர். கிராமம் என்றால் சின்ன ஊர் என்று பொதுவாக நாம்எடுத்துக் கொள்ளும் அர்த்தம். அதில் தலையாரியாக இருப்பவர் கிராமணி. அப்படியிருந்தவர்களின் வம்ஸத்தினர்தான் இப்போதும் ஜாதிப் பெயராக கிராமணி என்று போட்டுக் கொள்கிறார்கள். சிவ கணங்களுக்குத் தலைவராக, கணபதி-கணேசன்-கணாதிபன் கணநாயகன் என்றால்லாம் சொல்லப்படுபவரை இங்கே கணக்ராமணி என்று அழகான வார்த்தை போட்டுச் சொல்லியிருக்கிறது.

கணக்ராமணியாக ஏகப்பட்ட பரிவார கணங்கள் சூழ இருக்கிறவரானாலும், அவர்கள் யாரும் தனக்குச் சாமரம் போட வேண்டுமென்றில்லாமல் தானே தன் காதுகளையே ஆட்டிப் போட்டுக்கொள்கிறார். சாமர கர்ணர் என்று அதனால் பேர்.

மூஷிக வாஹன மோதக ஹஸ்த

சாமர கர்ண….”

 

கஜகர்ணராக இருப்பதால்தான் அப்படித் தனக்குத் தானே தன்னாலேயே சாமரம் போட்டுக்கொண்டு கரணம், காரணம், கர்த்தா, கருவி எல்லாமே தாம்தான் என்று காட்டுகிறார்.

 

(திருச்செவிகளின் பெருமையைப் பற்றிய நாமா மற்றொன்றும் இருக்கிறது)

தெய்வத்தின் குரல் – 6ம் பகுதி

வக்ரதுண்ட: சூர்பகர்ணோ ஹேரம்ப ஸ்கந்தபூர்வஜ:

“சூர்ப்பகர்ணர்’ என்பது அடுத்த பேர். அதற்கப்புறம் இரண்டு பேர்கள்தான்.

சூர்ப்பகர்ணர் என்றால் முறம் போன்ற காதுகளை உடையவர். சூர்ப்பம் என்பது முறம். சூர்ப்பணகை என்றால் முறம் போன்ற நகம் உடையவள். ‘சூர்ப்ப – நகா’ என்பது ஸம்ஸ்க்ருதப் புணர்ச்சிவிதிகளின்படி ‘சூர்ப்பணகா’ என்று ஆகும். நகமே முறத்தளவு என்றால் எவ்வளவு பெரிய ரூபமாக இருந்திருப்பாள் என்று ஊஹிக்கலாம்.

‘கஜகர்ணகர்’ என்று காதை வைத்து முன்னேயே ஒரு பேர் சொன்ன அப்புறம் ‘சூர்ப்பகர்ணர்’ என்று இன்னொரு பேர் வேறு சொல்வானேன்? ‘கூறியது கூறல்’ என்ற தோஷமாகாதா என்றால்,ஆகாது.

மடங்காத, குவியாத ஆனைக் காதை நன்றாக விரித்துக் கொண்டு ப்ரார்த்தனைகளையெல்லாம் விட்டுப் போகாமல் முழுக்கக் கேட்கிறார் என்பதால் கஜகர்ணகர் என்ற பெயர் ஏற்பட்டதாகப்பார்த்தோம். ஆனால் அவர் நம் ப்ரார்த்தனையை மட்டுந்தான் கேட்கிறாரா? எப்போதும் எங்கேயும் உள்ள அவர் நாம் பேசுகிற இதரப் பேச்சுக்கள் எல்லாவற்றையுங்கூடத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறார். அதிலே முக்கால்வாசிக்கு அசட்டுப் பேச்சாகத்தான் இருக்கும். வேண்டாத வியவஹாரமாகத்தான் இருக்கும். ஏன், நம்முடைய ப்ரார்த்தனையிலேயே அநேகம் அசட்டுவேண்டுதலாகத்தான் இருக்கும்! அதெல்லாவற்றுக்கும் அவர் காது கொடுப்பது, செவிசாய்ப்பது என்றால் எப்படியிருக்கும்? ஆகையால் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டாலும் கேட்கும்போதேஅவற்றில் தள்ள வேண்டியவற்றைத் தள்ளிவிட்டு, ஏற்க வேண்டியதை மட்டும் காதில் தங்க வைத்துக் கொள்வார். அதைக் காட்டத்தான் அவருக்கு சூர்ப்பகர்ணர், முறக்காதர் என்று ஒரு பெயர்ஏற்பட்டிருப்பது.

அதெப்படி?

முறம் என்ன பண்ணுகிறது?தான்யங்களைப் புடைத்து உமி, கல் முதலான வேண்டாத சரக்குகளைத் தள்ளிவிட்டு, வேண்டியதான தான்யமணியை மாத்திரந்தானே பிடித்து வைத்துக் கொள்கிறது?உருவ அமைப்பினால் முறம் மாதிரியுள்ள காதுகளை புடைக்கிறது போலவே அவர் ஸதாவும் ஆட்டிக் கொண்டு, இப்படித்தான் நம்முடைய வேண்டாத வம்பு தும்புகளைத் தள்ளிவிட்டுவேண்டிய — நாம் வேண்டுகிற — விஷயங்களை மட்டும் செவி கொள்கிறார். முதலில் ‘வேண்டிய’என்கிற இடத்தில் ‘வேண்டாம் என்று தள்ளுவதற்கில்லாத’, ‘ஏற்கவேண்டிய’என்று அர்த்தம். ‘நாம் வேண்டுகிற’என்கிற இடத்தில் ‘ப்ரார்த்திக்கிற’என்று அர்த்தம். இப்படி, ஏற்கக் கூடியதாக நாம் ப்ரார்த்திக்கிற விஷயங்களை மாத்திரமே காதில் தங்கவைத்துக் கொள்கிறார்.

அவர் காதை ஆட்டுவதை விசிறுவதோடு ஒப்பிடும் போது, கன்ன மத நீரில் ஜில்லென்று காற்றடிக்கப் பண்ணி, வண்டுகளை விரட்டி விளையாடுவதாகப் பார்த்தோம். அதையே முறத்தால்புடைப்பதற்கு ஒப்பிடும்போது தாம் ஸகலத்தையும் கேட்டுக் கொண்டிருப்பதில் அவசியமில்லாததைத் தள்ளி, நல்லதை மட்டுமே காதில் வாங்கிக் கொள்கிறாரென்று தெரிந்து கொள்கிறோம்.

“மற்ற மிருகங்கள் மாதிரிக் குவிந்த காதாயில்லாமல், விரித்த காதாக இருந்து எல்லாப் பிரார்த்தனையும் கேட்டுக் கொள்கிறார் என்பதால் என்ன அசட்டுப் ப்ரார்த்தனை வேண்டுமானாலும்ண்ணலாம்; நிறைவேற்றிக் கொடுத்து விடுவார் என்று நினைக்க வேண்டாம். எல்லாவற்றையும் கேட்பது வாஸ்தவம். ஆனால் கேட்கும்போதே எது ஸரியான ப்ரார்த்தனை, எது ஸரியில்லாதப்ரார்த்தனை என்றும் சீர்தூக்கிப் பார்த்து, ஸரியானதை மட்டுமே காதில் நிறுத்திக் கொண்டு மற்றதைத் தள்ளி விடுவார்”என்று புரிய வைப்பதற்குத்தான் சூர்ப்பகர்ணர் என்று தனியாக ஒருபெயரைச் சொல்லியிருக்கிறது.

மஹா பெரியவா சொல்லும் அழகே அழகுதான்.

இலங்கு பொன்முடி:

தேவகணம், மானுடகணம், பூதகணம், விலங்குகணம் முதலிய எல்லா கணங்களுக்கு முதல்வர் இவர்தான் என்று அறிவுறுத்துகிறது இவர் தாங்கியிருக்கும் தங்கமகுடம்.தகாதவர்களுக்குவிக்கினங்களை தருகிறார், தக்கவர்களுக்கு விக்கினங்களை விளக்குகிறார் என்பதே ‘விக்னேஸ்வர’ என்ற நாமம். பெருந்தலைவர், தனக்கு மேல் ஒரு தலைவர் இல்லாதவர் எனப் பொருள் தரும்’விநாயகர்’ என்ற நாமம் கொண்டவர் இவர்.  கணபதி ஒருவரே பொன்மகுடம் புனைவதற்கு உரிய முதல்வர் என்பதைக் காட்டுகிறது – இலங்கு பொன்முடி என்ற வாக்கியம்.

மற்றவை அடுத்த பதிவில் பார்க்கலாம்.  ஸ்ரீ மஹா பெரியவா சரணம், கணேச சரணம்



Categories: Deivathin Kural

3 replies

  1. Thanks for the part-9. Very informative. IT flows like the natural stream. Divine explanations. Hara Hara Shankara! .Jaya Jaya Shankara.!

  2. Sri Mahaperivaa’s preference towards divinic rituals, the MahaGanapathy Krama pooja. Being the customary way to start any ritual, it is the Prnava swaroopar’s worship. Also, his most liked priority to fulfill Vinayagaspooja in all the villages Area Mara Pillaiyar.

  3. SirThanks for sharing vinayakar ahaval with Sri Mahaperiyava’s explanation.Previously I have read it  but not saved/It is so much interesting and informative to read mahaperiyava’s explanation. Is it possible for you to send me the previous 1 to 8 to my email address NamaskaramLaxman.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading