விநாயகர் அகவல் – பாகம் 7

Thanks to Sri Srinivasan for this share….

pillayar_arugampul

ஸ்ரீ மஹா பெரியவா சரணம், கணேச சரணம்.

9. நான்ற வாயும் நாலிரு புயமும்

பதவுரை:

நான்ற வாயும் – தொங்குகின்ற திருவாயும்
நால் இருபுயமும் – நான்காகிய பெரிய திருத் தோள்களும்

நான்ற வாய்: தொங்குகின்ற வாய். பக்தர்களுக்கு அருள்பாலிக்கவே பல சூக்ஷ்ம மந்திரங்களை தன்னுள்ளே அடக்கிக்கொண்டு கீழ் நோக்கி தொங்கி தோன்றுகிறது. இந்த விநாயகத்தின் நான்ற வாயின் பெருமை என்ன? அதை, ஸ்ரீ மஹாபெரியவாள் ட்டதான் கேட்கணும்

ஸுமுகர் – என்ற நாமாவை பற்றி ஸ்ரீ மஹா பெரியவா சொல்லுவதைக் கேட்போம்:
( தெய்வத்தின் குரல் – 6- ம் பகுதி)

நல்ல வாய் உடையவர்

முகம் என்பது முழு மூச்சிக்கு மட்டுமில்லாமல் அதிலே உள்ள வாய்க்கும் பேர். ஸம்ஸ்கிருதத்தில் வாய்க்குத் தனியாக பேர் கிடையாது. அத்தனை பேர்களையும் சொல்கிறதாகவும், பேச்சுக்கே கருவியாகவும் இருக்கிற வாய்க்குத் தனிப்பேர் இல்லாமல் முகம் என்றே தான் அதையும் சொல்ல வேண்டியிருக்கிறது.

வேடிக்கையாக, தமிழிலே வாய்க்கு, வாய் என்று பேர் இருந்தாலும் முகத்துக்குப் பேரே இல்லை. முகம் என்பது ஸமஸ்கிருத வார்த்தை. மூஞ்சி என்பது பேச்சு வழக்கிலே மட்டுமுள்ள கொச்சைதான். இலக்கண – இலக்கிய வார்த்தை இல்லை. அதனாலே, அந்தக் காலத்தில் ஸம்ஸ்க்ருத கடிகையில் படிக்கும் வித்தியார்த்திகளும் தமிழ்ப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் பரஸ்பரம் பரிஹாஸம் பண்ணிக் கொள்வார்களாம். இவன் அவனை முகம் இல்லாதவன் என்பானாம். அவன் இவனை வாய் இல்லாதவன் என்று திருப்புவானாம்.

பரிஹாஸமென்றாலும் இந்த நாள் மாதிரி ஒருத்தருக்கொருத்தர் பாஷா த்வேஷத்தில் ஏசிக்கொண்டார்களென்று அர்த்தமில்லை. Good- humoured banter என்கிறார்களே, அப்படி நல்லெண்ணத்தோடு சேர்ந்த ஹாஸ்ய உணர்ச்சியில் ஸ்வாதீனமாகக் கேலி பண்ணிக் கொள்வார்கள்.
முகம் என்றாலே வாய் என்று சொல்ல வந்தேன். ஸுமுகம், நல்ல வாய் என்றால் எது நல்ல வாய்? நல்ல விஷயங்களை, ஸத் வித்யைகளைச் சொல்கிற வாய்தான் நல்ல வாய். அதனால் நல்ல வித்வானுக்கு ஸுமுகர் என்று பேர் உண்டு. ஸுமுகர் எனறால் கற்றறிந்தவர். இந்த அர்த்தத்திலேயும் பிள்ளையார் ஸுமூகர். அவர் நல்ல வாயை உடைய மஹா வித்வான். ப்ரஹ்மணஸ்பதி, ப்ருஹஸ்பதி என்று வேதங்களில் சொல்லப்படும் மஹா மேதாவிக்கும் அவருக்கும் பேதம் கிடையாது.

அவருடைய அநேக ரூப பேதங்களில் ‘ வித்யா கணபதி’ என்றே ஒருத்தருண்டு. 21 கணபதி பேதங்களைச் சொல்லி, ஒவ்வொருத்தனுக்கும் ஒரு புஷ்பமாக 21 தினுஸு புஷ்பங்களை அர்ச்சனை பண்ணும்படியாக சதுர்த்தி பூஜா கல்பத்தில் விதித்திருக்கிறது. அதிலே வித்யா கணபதி என்ற பேரைச் சொல்லி அவருக்கு ரஸாள புஷ்பம் போடணும் என்று இருக்கிறது.

ரஸாளம் ( ரஸாளு என்று பொதுவாகச் சொல்கிறது) தான் மாம்பழங்களுக்குள்ளேயே பரம மதுரமாக இருக்கப்பட்ட தினுஸு வித்யை என்பது அப்படிப்பட்ட ஆத்ம மாம்பழம். யார் லோகத்தை முதலில் சுற்றிக் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு என்று நாரதர் கொடுத்த பழத்தை வைத்துப் பரமசிவன் பந்தயம் நடத்தி அதிலே விக்நேச்வரர் ஜயித்துப் பெற்றுக் கொண்ட ஞானப்பழம் அந்த மாம்பழம்தான்! வித்வத், வித்யை, அதனால் அடையும் ஞானம் இவற்றை உடையவர் ஸுமூகர்.

யானை வாயின் சிறப்பும் தத்துவப் பொருளும்

யானையின் வாயில் ஒரு விசேஷம். நமக்கும் இன்னும் ஆடு, மாடு மாதிரி எந்த ப்ராணியானாலும் அதற்கும் வாய் என்பது இந்தக் கோடிக்கு அந்தக் கோடி உதடு எப்போதும் வெளியில் தெரிகிற விதத்திலேயே இருக்கிறது. கண் என்ற ஒரு அவசியத்துக்குத்தான் அவசியமான ஸமயங்களுக்காக ரப்பை எனறு முடிபோட்டு வைத்திருப்பதே தவிர காது, மூக்கு, வாய் ஆகியவை நன்றாக வெளியில் தெரிகிற விதத்திலேயே இருக்கின்றன. ரப்பை கண்ணை மூடுகிற மாதிரி உதடு நாக்கும் பல்லும் தெரியாமல் மூடுகின்றதென்றாலும் இவற்றுக்குள் வித்யாஸமும் இருக்கிறது. கண்ணின் கார்யமான பார்வை என்பதில் ரப்பைக்கு வேலையில்லை. பார்வையை மறைப்பதற்கே ஏற்பட்டது அது. உதடு அப்படியில்லை. பேச்சு என்ற கார்யத்திலேயே நேராக நிறையப் பங்கு எடுத்துக் கொள்வது அது. நாக்கு, பல், உதடு, மூன்றுமே சேர்ந்துதான் பேச்சு என்பதை உண்டாக்கு கருவியான வாய். ‘ ப’, ‘ ம’ முதலான சப்தங்கள் உதட்டாலேயே முக்யமாக உண்டாவதால் ‘ ஓஷ்ட்யம்’ என்றே அவற்றுக்குப் பெயர். இங்கிலீஷிலும் ‘Lip’ – ஐ வைத்து ‘Labial’ என்கிறார்கள். நமக்கெல்லாம் வாயின் அங்கமாக உதடு எப்போதும் வெளியே தெரிகிறது.

யானை ஒன்றுக்குத்தான் வாயை மூடிக்கொண்டு தும்பிக்கை இருக்கிறது. வாயைக் கையால் பொத்திக்கொள்வது அடக்கத்திற்கு அடையாளம். நாம் கையை மடித்துக் கொண்டுபோய் ஒரு கார்யமாக வாயைப் பொத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. யானைக்கானால் ஸ்வாபாவிகமாகவே ( தன்னியற்கையாகவே) அதற்குக் கையின் ஸ்தானத்தில் உள்ள தும்பிக்கை வாயை ஸதாவும் மூடிக் கொண்டிருக்கிறது. தும்பி என்றால் யானை. அதன் கை தும்பிக்கை. தும்பிக்கையால் ஆஹாரத்தை எடுத்து அது வாய்க்குள்ளே போட்டுக் கொள்கிறபோதும், தும்பிக்கையை உசரத் தூக்கிக் கொண்டு பிளிறுகிறபோதும் மட்டுந்தான் அதன் வாயைப் பார்க்க முடியும். இப்படிப்பட்ட வாய்க்காரராகப் பிள்ளையார் இருப்பதில் பெரிய தத்வார்த்தம் இருக்கிறது. எத்தனை வித்வானின் லக்ஷணம் என்று காட்டவே தும்பிக்கையினால் வாயை மூடிக் கொண்டிருக்கும் கஜ ரூபத்தில் இருக்கிறார். அத்தனை வித்வத்துக்கும் முடிவு மௌனம் தான் என்று காட்டுகிறார். விக்நேச்வரர் நிஜமான ஸுமுகர்.

நாற்புயம்: நான்கு பெரிய திருத்தோள்கள்.

என்ன? ஐந்து கரங்களுக்கு நான்கு தோள்களா? ஆமாம். வ்யாப்யம் என்பது வ்யாபகத்துள் அடங்கும். அந்த வகையில், கைகள் ( வ்யாபியம்), தோள்களில் ( வியாபகம்) அடங்கும். ‘ சுக்லாம் பரதர’ ஸ்லோகமும் சதுர்புஜம் என்றே கூறுகிறது.Categories: Bookshelf

Tags:

2 replies

  1. Any update on the next publication of Vinayagar agaval ? (part 8 onwards)

  2. Dear Sri Mahesh

    Namaskars.

    Once this entire chapters are completed can you pl consider posting all of them together in a PDF file and upload…

    Pranams
    Ramanan

Leave a Reply

%d bloggers like this: