ஸ்ரீ மஹா பெரியவா சரணம், கணேச சரணம்.
8. நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
பதவுரை:
நெஞ்சிற் குடிகொண்ட – பக்தர்கள் உள்ளத்தில் எப்பொழுதும் தங்கி இருக்கின்ற
நீல மேனியும்- நீலத் திருமேனியும்.
ஜிலு ஜிலு என்று மின்னுகிறது நீலத் திருமேனி. கண்களுக்கு குளிர்ச்சி தரும் நிறம் நீலம்.
காண்பவர் உள்ளதைக் கவரும் நிறம் நீலம். கருணை கணபதியின் குளிர்சியான நீலநிறம், நம் தாபத்தை தணிக்கிறது.
த்வம் வாங் மயஸ்த்வம் சின்மய:, த்வம் ஆனந்த மயஸ்த்வம் ப்ரஹ்மமயஹ, த்வம் சச்சிதானந்தாத்விதீயோஸி, த்வம் ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி, த்வம் ஜ்ஞானமயோ விஞ்ஞானமயோஸி என்றெல்லாம் கணபதியை ஸ்ருதி வர்ணிக்கிறதே! அது இந்த ஸ்வரூபத்தை தான்.
அவருக்கு சசிவர்ணர் என்றொரு மற்றொரு பெயர் உண்டு. ‘சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்’ என்கிறோமே! சசம் என்றால் முயல். சசி – முயல் போன்ற ஒரு களங்கம் / நிழல். முயல் போன்ற ஒரு களங்கத்தை (நிழலை) உடையவர் யார்? வெண்மை நிறச் சந்திரன். இயற்கையான வெண்மை நிறத்தில் ஒரு சிறு முயல் போன்ற களங்கம்: இந்த வெண்மை கருமை – இருநிறக் கலப்பே சசிவர்ணம். இந்த ஸ்வரூபத்தை நம் மனத்தில் நிறுத்துவதுதான் ‘நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனி’
அவருக்கு வேறு சில நிறங்களும் சொல்லியிருக்கிறது. இப்பொழுது ஸ்ரீ மஹா பெரியவாளை ஆஸ்ரயிப்போம். கணபதியின் ஷோடஸ நாமாக்களைப் பற்றி பேசும் பொது ‘கபில:’ என்ற நாமாவிற்கு மஹா பெரியவா சொல்கிறார்.
(தெய்வத்தின் குரல் – 6-ம் பகுதி)
மூன்றாவது நாமா – கபிலர். பழுப்புச் சிவப்பு நிறமாக இருப்பவரென்று அர்த்தம்.
பல ரூப பேதங்களில் வெவ்வேறு நிறங்களாக விக்நேச்வரர் இருக்கிறார். சுக்லாம்பரதரம் ச்லோகத்தில் சசிவர்ணம் என்று நிலா மாதிரி வெளுப்பாகச் சொல்லியிருக்கிறது. கும்பகோணத்திற்கு கிட்டே இடும்பாவனத்திலும் வெள்ளைப் பிள்ளையார் – ச்வேத விநாயகர் இருக்கிறார். ஒளவையார், அகவலிலோ அவரை நீலமேனி என்று சொல்லியிருக்கிறாள். ஆவளே வாக்குண்டாம் பாட்டில் துப்பார் திருமேனி என்று பவள வர்ணமாகவும் பாடியிருக்கிறாள். பல ரூபங்களிலும் குழந்தை ஸ்வாமி அந்தக் கிழப்பாட்டிக்கு தர்சனம் தந்திருப்பார்.
வடக்கேயெல்லாம் விக்நேச்வரர் என்றாலே ஒரே சிவப்பாக ஸிந்தூரத்தைப் பூசித்தான் வைத்திருப்பார்கள்.
நம் சோழ தேசத்தில் கணபதீசுவரம் என்றே பேர் பெற்றிருக்கிற கோவில் இருக்கிற ஊருக்கு செங்காடு முன்னே திரு’வும் பின்னே குடி’யும் சேர்த்துக்கொண்டு திருச்செங்காட்டாங்குடி என்று பேர். டா ‘வைக் குறிலாக்கித் திருச்செங்கட்டான்குடி என்று தமிழ் நூல்களில் இருக்கும். அது செங்காடு ஆனதற்குக் காரணம் விக்நேச்வரர் கஜமுகாஸுரனை ஸம்ஹாரம் செய்தபோது அவனுடைய ரத்தம் அந்தக் காடு முழுதும் பாய்ந்ததுதான். அப்போது பிள்ளையாரும் செக்கச்செவேலென்று ஆகிவிட்டார். இல்லை. செக்கச் செவேல் இல்லாமல் கறுப்பான ஆனை உடம்பில் ரத்த வர்ணம் தோய்ந்து கபில நிறமாகி விட்டாரென்று வைத்துக் கொள்ளலாம்.
ஒரு மஹாவீரனை அடியோடு ரத்தம் போகப் பண்ணிக் கொன்றதால் தமக்கு வீரஹத்தி தோஷம் வந்ததாக விக்நேச்வரர் நினைத்தாராம். அவருக்கேது தோஷம்? நமக்கு வழிகாட்டத்தான் தெய்வங்களும் இப்படி எல்லாம் நடிப்பது!ராவணனைக் கொன்றதால் ராமர் தோஷம் வந்துவிட்டதாக நினைத்து ப்ராயச்சித்தமாக ராமலிங்கம் ஸ்தாபித்திருந்தாரல்லவா?அந்த மாதிரி பிள்ளையாரும் இந்தச் திருச்செங்காட்டாங்குடியில் லிங்கம் ஸ்தாபித்து சிவ பூஜை பண்ணி தோஷத்தைப் போக்கிக் கொண்டாராம். அதனால் ராமர் சிவ பூஜை பண்ணிய இடம் ராமேச்வரம் ஆனது மாதிரி அந்தக் கோயிலுக்கு கணபதீச்வரம் (தமிழிலக்கணப்படி கணபதீச்சுரம்) என்று பேர் ஏற்பட்டுவிட்டது.
(மற்றவை அடுத்த பதிவில் பார்க்கலாம். ஸ்ரீ மஹா பெரியவா சரணம், கணேச சரணம்)
Categories: Bookshelf
Maha Ganapathi Adhi KadavuL. Hanumar comes at the End Andham! Great Dharshan of VaraNasi Ganapathi as per legend.! Hara Hara shankara, Jaya Jaya Shankara!
பிள்ளையாரை பிடிக்கப்போய் குரங்காக முடிந்தது என்று விளையாட்டாக சொல்லுவார்கள். இங்கு விநாயகர் மகிமையை சொல்லிக்கொண்டே ஸ்ரீ ஹனுமாரின் சிவப்பு விக்ரஹ தரிசனம் கிடைக்கிறது.
Will plan to have a dharsan of this temple at திருச்செங்காட்டாங்குடி