விநாயகர் அகவல் – பாகம் 5

Thanks to Sri B.Srinivasan for the article.

 

mukkuruni-vinayagar

 

ஸ்ரீ மஹா பெரியவா சரணம், கணேச சரணம்.

7.  அஞ்சு கரமும் அங்குச பாசமும்

பதவுரை:

அஞ்சு கரமும் – ஐந்து திருக்கைகளும்

அங்குச பாசமும் – அவைகளில் இரு கரங்களில் இருக்கும் அங்குசம், பாசம் என்ற இரு கருவிகளும்

விளக்கம்:

அங்குசம் ஒரு கரத்தில்; பாசம் மற்றொரு கரத்தில் – என்று வெளிப்படையாக சொன்னவர், ஒரு கரத்தில் மோதகம்,

ஒரு கரத்தில் எழுத்தாணி, துதிக்கையில் அமுத கலசம் – என்பவைகளை வெளிப்படையாக கூறாமல் குறிப்பால் காட்டுகின்றார்.

ஐந்து கரங்களைக் கொண்டு, ஐந்து தொழில்களை ஆனந்தமாக, அனாயாசமாக செய்கிறார் கணபதி.

ஐந்து தொழில்கள் என்பவை:  1) படைத்தல், 2) காத்தல் 3) அழித்தல் 4) மறைத்தல், 5) அருள் புரிதல்.

1) கணபதியின் எழுத்தாணி இருக்கும் திருக்கரம் – படைத்தல் தொழில் (சிருஷ்டி)

2) மோதகம் ஏந்திய திருக்கரம் – காத்தல் தொழில் (ஸ்திதி)

3) அங்குசம் ஏந்திய திருக்கரம் – அழித்தல் (சம்ஹாரம்)

4) பாசம் ஏந்திய திருக்கரம் – மறைத்தல் (திரோதனம்)

5) அமுத கலசம் ஏந்திய திருக்கரம் – அருள் புரிதல் (அனுக்ரஹம்)

ஆஹா: நினைத்தாலே நெஞ்சு நெகிழ்கிறதே!

இதனால், இவர் முழுமையாக சிவஸ்வரூபி என்றல்லவா விளங்குகிறது.

கஜமுகனை அழிக்க தன் தந்தத்தை ஒடித்தார்.  அதையே எழுத்தாணியாக் கொண்டு மஹாமேரு பர்வதத்தில் மகாபாரதத்தை

எழுதினார் ஹேரம்பர். உலகம் முழுவதும் அழியும் பிரளய காலம் ஒன்று வரும்.  அப்பொழுது அழிந்த உலகை மீண்டும் உருவாக்க

முன்கூட்டியே உலகப்படத்தை எழுதிவைக்கவும் உதவுகிறது அந்த எழுத்தாணி.

மீண்டும் ஒரு கஜ முகன் தோன்றி தேவர்களுக்கு தொல்லை கொடுக்காதபடி அச்சுறுத்தி க்கொண்டே இருக்கிறது அந்த எழுத்தாணி.

ஏன்.  நம்மையும் பல இடர்பாடுகளிலிருந்து ரக்ஷிப்பதும், அந்த எழுத்தாணிதான்.

ஐங்கரன் செய்யும் ஐந்தொழில்களை இன்னும் கொஞ்சம் விளக்கலாம்:

1) 36 கருவிகளுடன் உடல் போகங்களை அனுபவிப்பது – ஜாக்ரத அவஸ்தை – (சிருஷ்டி)

2) ஜாக்ரதத்தில் அனுபவித்ததை கனவில் காண்பது – ஸ்வப்ன அவஸ்தை – (ஸ்திதி)

3) கனவுபோல் சிறிது நிழல் மாதிரி தோன்றி உடனே மறைவது – சுஷுப்தி (சம்ஹாரம்)

4) பிராண வாயு இயக்கம் இல்லாமல் அப்படியே நிற்பது – துரீய அவஸ்தை  (திரோதனம்)

5) ஒரு கருவியும் இல்லாமல் அஞ்ஞானம் நீங்கி குருமுகம் காட்டி ஆனந்த மயமாதல் – துரியாதீத அவஸ்தை  (அநுக்ரஹம் )

இவ்வாறு  5 அவஸ்தை  நிலைகளில் 5 தொழில்கள் .  இவற்றை ஊன்றிப் படித்தால் உள்ளம் உருகுகிறது.  மேலோட்டமாக

படித்தால் ஒன்றும் புரிவதில்லை.  குருவருள் இருந்தால் தான் இதன் தாத்பர்யத்தை அறியமுடியும்.

இன்னும் ஒரு விதமாக பார்த்தால், உடலில் மூன்றும், உயிரில் இரண்டும் – ஆக ஐந்துதொழில்களும் உள்ளன.  அவை:

உடல் தோன்றுவது (படைத்தல்), உடல் நிற்பது (காத்தல்), உடல் அழிவது (அழிதல்)

உயிரில் மயக்கம் தோன்றுவது (மறைத்தல்), அதன் பின் தெளிவு வருவது (அருள் புரிதல்)

பொறிகளால் வரும் ஐந்து தொழில்களும் உண்டு.  அவை:

1) பொறிகளால் ஆத்மா தொடர்பு கொள்ளல் – சிருஷ்டி

2) அதனால் அறிந்தவைகளை அனுபவித்தல் – ஸ்திதி

3) அதன்மயமாய் அழுந்தல் – சம்ஹாரம்

4) அதனின் இன்பமயமாதல் – திரோதனம்

5) அதிலிருந்து விடுபட்டு தெளிவு பிறத்தல் – அநுக்ரஹம்

கரண நிலையிலும் ஐந்து தொழில்கள் நடைபெறுகின்றன:  அவை:

1) மனத்தால் ஒரு பொருளை நினைத்தல் – ஸ்ருஷ்டி

2) அப்பொருளின் மீது ஆசை கொள்ளுவது – ஸ்திதி

3) அது எப்பொழுது கைகூடுமோ என்று திகைத்து நிற்பது – சம்ஹாரம்

4) அப்பொருளின் மேல் மயங்கி நிற்பது – திரோதனம்

5) அதன் ஸ்வரூபத்தை தெரிந்து கொள்வது – அநுக்ரஹம்

முக்தியில் அருள் வடிவாக ஆவது – ஸ்ருஷ்டி – படைத்தல்

ஆனந்த பேறு அடைவது – ஸ்திதி – காத்தல்

அந்த ஆனந்தத்தினின்றும் அதீத படுவது – சம்ஹாரம் – அழித்தல்

காண்பவன், காட்சி, காணப் படும் பொருள் – இவை மூன்றும் தோன்றாமல் மறைவது – திரோதனம் – மறைத்தல்

இந்த நான்கும் எக்காலமும் இருந்துகொண்டே  இருப்பது – அநுக்ரஹம் – அருள் புரிதல்

இவ்வாறு, எல்லா தத்துவ நூல்களும் ஐந்தொழில்களை விளக்குகின்றன.

கணபதியின் ஐந்து கரங்களுக்கு இவ்வளவு மஹத்துவமா?

அடுத்ததாக அங்குசமும் பாசமும்:

தான் என்ற ஆணவத்தால் அல்லல் படும் ஜீவன்கள்:  அது அவ்வளவு லேசில் தானாகவும் விலகாது,

விலக்கிகொள்ளும் வழியும் தெரியவில்லை. இந்த சூழ்நிலையில் நாம் விடும் அபயக்குரலைகேட்டு ஆணவத்தை, அங்குசத்தால் அடக்கி,

பாசக்கயிற்றால் நன்றாக கட்டி, நமக்கு விடுதலையை (மோக்ஷம்) அளிக்க வல்லவர் ஸ்ரீ மகாகணபதியே.

இவரை ஸ்மரித்தால் அஹங்காரம் (ஆணவச் செயல்) எல்லாம் ஓம்காரத்தில் அடங்கி, உள்முக நாதம் உண்டாகும்.  இது கணபதி உபாசகர்களுக்கு ப்ரத்யக்ஷம்.

(மற்றவை அடுத்த பதிவில் பார்க்கலாம்.  ஸ்ரீ மஹா பெரியவா சரணம், கணேச சரணம்)Categories: Devotee Experiences

Tags:

8 replies

 1. Maha Ganapathaye Namaha! Maha Periyava ThiruvadigaLe CharaNam! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

 2. Namaskaram. Some portion of the text on the RIGHT side are trimmed. For sake of completeness, please see the whole text below:

  ஸ்ரீ மஹா பெரியவா சரணம், கணேச சரணம்.
  விநாயகர் அகவல் – பாகம் 5:
  7. அஞ்சு கரமும் அங்குச பாசமும்
  பதவுரை:
  அஞ்சு கரமும் – ஐந்து திருக்கைகளும்
  அங்குச பாசமும் – அவைகளில் இரு கரங்களில் இருக்கும் அங்குசம், பாசம் என்ற இரு கருவிகளும்
  விளக்கம்:
  அங்குசம் ஒரு கரத்தில்; பாசம் மற்றொரு கரத்தில் – என்று வெளிப்படையாக சொன்னவர், ஒரு கரத்தில் மோதகம், ஒரு கரத்தில் எழுத்தாணி, துதிக்கையில் அமுத கலசம் – என்பவைகளை வெளிப்படையாக கூறாமல் குறிப்பால் காட்டுகின்றார்.
  ஐந்து கரங்களைக் கொண்டு, ஐந்து தொழில்களை ஆனந்தமாக, அனாயாசமாக செய்கிறார் கணபதி.
  ஐந்து தொழில்கள் என்பவை: 1) படைத்தல், 2) காத்தல் 3) அழித்தல் 4) மறைத்தல், 5) அருள் புரிதல்.
  1) கணபதியின் எழுத்தாணி இருக்கும் திருக்கரம் – படைத்தல் தொழில் (சிருஷ்டி)
  2) மோதகம் ஏந்திய திருக்கரம் – காத்தல் தொழில் (ஸ்திதி)
  3) அங்குசம் ஏந்திய திருக்கரம் – அழித்தல் (சம்ஹாரம்)
  4) பாசம் ஏந்திய திருக்கரம் – மறைத்தல் (திரோதனம்)
  5) அமுத கலசம் ஏந்திய திருக்கரம் – அருள் புரிதல் (அனுக்ரஹம்)
  ஆஹா: நினைத்தாலே நெஞ்சு நெகிழ்கிறதே!
  இதனால், இவர் முழுமையாக சிவஸ்வரூபி என்றல்லவா விளங்குகிறது.
  கஜமுகனை அழிக்க தன் தந்தத்தை ஒடித்தார். அதையே எழுத்தாணியாக் கொண்டு
  மஹாமேரு பர்வதத்தில் மகாபாரதத்தை எழுதினார் ஹேரம்பர். உலகம் முழுவதும்
  அழியும் பிரளய காலம் ஒன்று வரும். அப்பொழுது அழிந்த உலகை மீண்டும்
  உருவாக்க முன்கூட்டியே உலகப்படத்தை எழுதிவைக்கவும் உதவுகிறது
  அந்த எழுத்தாணி.
  மீண்டும் ஒரு கஜ முகன் தோன்றி தேவர்களுக்கு தொல்லை கொடுக்காதபடி
  அச்சுறுத்தி க்கொண்டே இருக்கிறது அந்த எழுத்தாணி. ஏன். நம்மையும்
  பல இடர்பாடுகளிலிருந்து ரக்ஷிப்பதும், அந்த எழுத்தாணிதான்.
  ஐங்கரன் செய்யும் ஐந்தொழில்களை இன்னும் கொஞ்சம் விளக்கலாம்:
  1) 36 கருவிகளுடன் உடல் போகங்களை அனுபவிப்பது – ஜாக்ரத அவஸ்தை – (சிருஷ்டி)
  2) ஜாக்ரதத்தில் அனுபவித்ததை கனவில் காண்பது – ஸ்வப்ன அவஸ்தை – (ஸ்திதி)
  3) கனவுபோல் சிறிது நிழல் மாதிரி தோன்றி உடனே மறைவது – சுஷுப்தி (சம்ஹாரம்)
  4) பிராண வாயு இயக்கம் இல்லாமல் அப்படியே நிற்பது – துரீய அவஸ்தை (திரோதனம்)
  5) ஒரு கருவியும் இல்லாமல் அஞ்ஞானம் நீங்கி குருமுகம் காட்டி
  ஆனந்த மயமாதல் – துரியாதீத அவஸ்தை (அநுக்ரஹம் )
  இவ்வாறு 5 அவஸ்தை நிலைகளில் 5 தொழில்கள் .
  இவற்றை ஊன்றிப் படித்தால் உள்ளம் உருகுகிறது.
  மேலோட்டமாக படித்தால் ஒன்றும் புரிவதில்லை.
  குருவருள் இருந்தால் தான் இதன் தாத்பர்யத்தை அறியமுடியும்.
  இன்னும் ஒரு விதமாக பார்த்தால், உடலில் மூன்றும், உயிரில் இரண்டும் –
  ஆக ஐந்துதொழில்களும் உள்ளன. அவை:
  உடல் தோன்றுவது (படைத்தல்), உடல் நிற்பது (காத்தல்), உடல் அழிவது (அழிதல்)
  உயிரில் மயக்கம் தோன்றுவது (மறைத்தல்), அதன் பின் தெளிவு வருவது (அருள் புரிதல்)
  பொறிகளால் வரும் ஐந்து தொழில்களும் உண்டு. அவை:
  1) பொறிகளால் ஆத்மா தொடர்பு கொள்ளல் – சிருஷ்டி
  2) அதனால் அறிந்தவைகளை அனுபவித்தல் – ஸ்திதி
  3) அதன்மயமாய் அழுந்தல் – சம்ஹாரம்
  4) அதனின் இன்பமயமாதல் – திரோதனம்
  5) அதிலிருந்து விடுபட்டு தெளிவு பிறத்தல் – அநுக்ரஹம்
  கரண நிலையிலும் ஐந்து தொழில்கள் நடைபெறுகின்றன: அவை:
  1) மனத்தால் ஒரு பொருளை நினைத்தல் – ஸ்ருஷ்டி
  2) அப்பொருளின் மீது ஆசை கொள்ளுவது – ஸ்திதி
  3) அது எப்பொழுது கைகூடுமோ என்று திகைத்து நிற்பது – சம்ஹாரம்
  4) அப்பொருளின் மேல் மயங்கி நிற்பது – திரோதனம்
  5) அதன் ஸ்வரூபத்தை தெரிந்து கொள்வது – அநுக்ரஹம்
  முக்தியில் அருள் வடிவாக ஆவது – ஸ்ருஷ்டி – படைத்தல்
  ஆனந்த பேறு அடைவது – ஸ்திதி – காத்தல்
  அந்த ஆனந்தத்தினின்றும் அதீத படுவது – சம்ஹாரம் – அழித்தல்
  காண்பவன், காட்சி, காணப் படும் பொருள் – இவை மூன்றும் தோன்றாமல் மறைவது – திரோதனம் – மறைத்தல்
  இந்த நான்கும் எக்காலமும் இருந்துகொண்டே இருப்பது – அநுக்ரஹம் – அருள் புரிதல்
  இவ்வாறு, எல்லா தத்துவ நூல்களும் ஐந்தொழில்களை விளக்குகின்றன.
  கணபதியின் ஐந்து கரங்களுக்கு இவ்வளவு மஹத்துவமா?
  அடுத்ததாக அங்குசமும் பாசமும்:
  தான் என்ற ஆணவத்தால் அல்லல் படும் ஜீவன்கள்:
  அது அவ்வளவு லேசில் தானாகவும் விலகாது, விலக்கிகொள்ளும் வழியும் தெரியவில்லை.
  இந்த சூழ்நிலையில் நாம் விடும் அபயக்குரலைகேட்டு ஆணவத்தை,
  அங்குசத்தால் அடக்கி, பாசக்கயிற்றால் நன்றாக கட்டி, நமக்கு விடுதலையை (மோக்ஷம்)
  அளிக்க வல்லவர் ஸ்ரீ மகாகணபதியே. இவரை ஸ்மரித்தால்
  அஹங்காரம் (ஆணவச் செயல்) எல்லாம் ஓம்காரத்தில் அடங்கி,
  உள்முக நாதம் உண்டாகும். இது கணபதி உபாசகர்களுக்கு ப்ரத்யக்ஷம்.
  (மற்றவை அடுத்த பதிவில் பார்க்கலாம். ஸ்ரீ மஹா பெரியவா சரணம், கணேச சரணம்)

 3. Namaskaram. Part 3 & 4 are combined. Please see the below link for Part 3&4.

  https://mahaperiyavaa.wordpress.com/2016/04/21/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4/

  The subsequent parts are still under preparation.

  Sri Mahaperiyava Charanam. Ganesa Charanam.

  B.SRINIVASAN

 4. I have received 4 but not 3. Would be grateful if you could arrange to send 3 and 4.

  • Sirs,

   I have located விநாயகர் அகவல்-5 but would be keen to receive 3 of the same series. I don’t have any intention to unsubscribe from the post or unfollow your glorious messages.

   Thanks and Regards,

   S N Ananthasubramanian Practising Company Secretary President-ICSI-2013 10/26, Brindaban-Thane-(W)-400601 09223450551/09867338880 Sent from my iPad

   >

   • Namaskaram: Below you can see Part 3 and Part 4.

    ஸ்ரீ மகாபெரியவா சரணம்
    ஸ்ரீ கணேச சரணம்
    அநுபூதி பெற்ற அவ்வைப்பாட்டி கரிமுக வரதனின் பாதாதி கேசாந்த வர்ணனையை தொடர்கிறாள்.
    இதுவரை பார்த்தது: குளிர்ச்சியும் நறுமணமும் கூடிய செந்தாமரைப் பூ போன்ற பாதத்தில் அணிந்துள்ள சிலம்பு பலவிதமான இசைகளைப் பாட, தங்க அரை ஞாணும் வெண்பட்டு ஆடையும் அழகிய இடையில் நன்கு பொருந்தி அழகை வீசிக் கொண்டிருக்க…….. இனி அடுத்த வரிகளை பார்க்கலாம்:
    5. பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
    பதவுரை:
    பேழை வயிறும் – மிகவும் பெருத்த வயிறும்
    பெரும்பாரக் கோடும் – மிகவும் கனமான, உறுதிமிக்க ஒற்றை தந்தமும்
    பேழை: அருமையான தமிழ்ச்சொல். பேழை வயிற்றின் பெருமையை யார் விளக்கினால் நன்றாக இருக்கும்? ஸ்ரீ மஹாபெரியவா விளக்கினால் தான் நன்றாக இருக்கும். கணேசரின் ஷோடஸ நாமாக்களின் பெருமையை விளக்கிக்கொண்டு வரும் ஸ்ரீ மஹாபெரியவா, ‘லம்போதர’ (பேழை வயிறு) என்ற நாமாவுக்கு தரும் விளக்கம்: தெய்வத்தின் குரல் – 6ம் பகுதி)
    லம்போதரர்.
    அடுத்த பேர் லம்போதரர் தொங்குகிற வயிற்றுக்காரர் என்று அர்த்தம். லம்பம்-தொடங்குகிறது. உதரம்-வயிறு. அதாவது தொந்தியுள்ளவர். பிள்ளையார் என்றாலே வெள்ளைக்காரர்கள் pot-bellied என்று அவருடைய பானை வயிற்றைத்தான் சொல்கிறார்கள். பேழை வயிறும் என்று அகவலில் வருகிறது. கையில் பூர்ணமுள்ள மோதகத்தை வைத்திருப்பவர், தாமே பூர்ணவஸ்து என்று காட்டத்தான் பானை வயிற்றோடு இருக்கிறார். நல்ல நிறைவைக் காட்டுவது அது. அண்டாம்டங்கள் அதற்குள்ளே இருப்பதால் அதுவும் அண்ட ரூபத்தில் உருண்டையாயிருக்கிறது.

    மோதகத்தில் தித்திப்புப் பூர்ணத்தை மா (வு) மூடியிருக்கிறது. மோதகம் என்றால் ஆனந்தம். ஆனந்தம் தருவது. விக்நேச்வரரே அப்படிப்பட்ட ஒரு மோதகம்தான். ஆனந்தமாயிருப்பவர். அன்பு என்ற தித்திப்பான வஸ்துவை (ப்ரேமையை மதுரம் என்று சொல்வது வழக்கம். அப்படிப்பட்ட மதுரமான ப்ரேமையை) மற்றவர்களுக்கும் வழங்கி ஆனந்தமூட்டும் மோதகம் அவர். மா என்றால் ஆணை யானை என்று அர்த்தம். மோதகத்தில் மதுரமான வெல்லப் பூர்ணத்தை மூடிக்கொண்டு மா (வு) ச் சொப்பு இருக்கிற மாதிரி ப்ரேம ரஸம் நிறைந்த பூர்ண வஸ்துவான ப்ரம்மத்தின் மேல் ஆனை என்ற மாவின் ரூபத்தை வைத்து மூடிக்கொண்டு ஆனந்த ஸ்வரூபியான விக்நேச்வரர் உருவமெடுத்துக் கொண்டிருக்கிறார். உள்ளே பரம மதுரமான அன்புப் பூர்ணத்தை வைத்துக் கொண்ருப்பதைக் காட்டவே உருண்டைக் கொழுக்கட்டை உருவத்தில் வயிற்றை லம்போதகராக வைத்துக் கொண்டிருக்கிறார். உருண்டைக்கு ஆரம்பம், முடிவு சொல்ல முடியாது. அதனால் அது ப்ரம்மத்துக்கு ரூபகம் (உருவகம்) அதைக் காட்ட உருண்டையான தொப்பை வயிற்றோடு லம்போதரர் என்று விளங்குகிறார்.

    தொப்பையும் தொந்தியுமாக உள்ள ஒருத்தைப் பார்த்தாலே நமக்கு ஒரு புஷ்டி, ஸந்துஷ்டி உண்டாகிறது. அதிலும் ஒரு குழந்தை அப்படி இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். எலும்பும் தோலுமாக நோஞ்சானாக உள்ள ஒருவரைப் பார்த்தால் நமக்கு இப்படி ஸந்தோஷம் உண்டாவதில்லை. ஸ்தூல சரீரம், க்ருசமான (ஒல்லியான) சரீரம் ஆகியவற்றை குணங்கள் ஸம்பந்தப்படுத்தியும் சொல்கிறோம். தொந்தியும் தொப்பையுமாக இருப்பவரைப் பார்த்தாலே வேடிக்கையாக இருக்கிறது. சிரிப்பாக வருகிறது. ஸுமுகரான பிள்ளையார் நாமெல்லாமும் சிரித்துக்கொண்டு ஸுமுகமாக இருக்க வேண்டுமென்றே தொப்பையப்பராக இருக்கிறார். எத்தனையோ தினுஸுக் கஷ்டங்களில் மாட்டிக் கொண்டு ஜனங்கள் தின்டாடுகிறதுகளே! அவர்களுக்கு ஃபிலாஸஃபி, கிலாஸஃபி சொல்லிக் கொடுத்தால் ஏறும், ஏறாதிருக்கும். அதனால் பார்த்த மாத்திரத்தில் ஒரு வேடிக்கை விநோதமாக அவர்கள் சிரித்து மகிழும்படி நாம் இருப்போம் என்றும் பிள்ளையார் லம்போதரராக இருக்கிறார்.

    அதிலும் குழந்தைகளுக்குத்தான் பஹுஸந்தோஷம். தொப்பைக் கணபதியைப் பார்ப்பதில், அதற்கேற்றாற்போல் (புரந்தர) தாஸர் ஸங்கீதத்தில் பால பாடம் ஆரம்பிக்கும் போது பிள்ளையார் கீதத்தை லம்போதர லகுமிகரா என்றே ஆரம்பித்திருக்கிறார். லகுமிகரா என்றால் ‘லக்ஷ்மிகரா’;ஸெளபாக்கியங்களை உண்டாக்குபவர்.

    அடுத்து வருவது வதன தந்தம்: ஒடிந்த தந்தம் ஒரு கையில் இருக்க, மற்றொரு தந்தம் திருமுகத்தில் இருக்க அதிலிருந்து பல அதிசயங்கள் வெளியாகின்றன.
    ‘ஒற்றைக் கொம்பன் விநாயகனை தோழ
    துள்ளி ஓடும் தொடர்ந்த வினைகளே’

    ஸ்ரீ மஹா பெரியவாளின் விளக்கம்: (தெய்வத்தின் குரல் – 6ம் பகுதி)
    (பெரும் பாரக் கோடு – ஒற்றை கொம்பர்) ஏகதந்தர்: ‘ என்பும் பிறர்க்குரியர்’
    அடுத்தாற்போல், ஏகதந்தர் ஸுமுகச்-சைகதந்தச்ச. இரண்டாவது பேர் ஏகதந்தர். அப்படியென்றால் ஒரே தந்தமுடையவரென்று அர்த்தம். ஒற்றைக் கொம்பன். பொதுவாக ஆண் யானைக்கு இரண்டு கொம்பு இருக்கும். பெண் யானைக்குக் கொம்பே கிடையாது. இவருக்கோ ஒரே கொம்பு.

    முதலிலே இவருக்கும் இரண்டு (கொம்பு) இருந்து, அப்புறம் வலது பக்கம் இருப்பதை இவரே ஒடித்துக் கொண்டு விட்டார். அதை விக்ரஹங்களில் வலது பக்கக் கீழ்க் கையில் வைத்துக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

    ஏன் ஒடித்துக்கொண்டார்? புராண ரீதியில் இரண்டு கதை சொல்கிறார்கள்.

    வியாஸர் பாரதம் சொல்லுகிறபோது அதை உடனே விக்நேச்வரர் அவஸரமாக ஹிமாசலப் பாறைகளில் எழுத வேண்டியிருக்கிறதென்றும், அப்போது எழுத்தாணிக்காகத் தேடிக்கொண்டு ஒடாமல் தந்தங்களில் ஒன்றையே முறித்து அதனால் எழுதினாரென்றும் ஒரு கதை. அறிவு வளர்ச்சிக்காகத் தம்முடைய பஹு அழகான அங்கத்தை யானையின் அங்களுக்குள்ளேயே இறந்தாலும் ஆயிரம் பொன் என்று ரொம்பவும் மதிப்புள்ளதாயிருப்பதை – உயிரோடு இருக்கும்போதே தியாகம் செய்த உத்தம குணத்தைக் காட்டும் கதை.

    இன்னொரு கதை, மற்ற எந்த அஸ்திரத்தாலும் வதம் பண்ண முடியாத கஜமுகாஸுரனைத் தம்முடைய ஒரு தந்தத்தையே முறித்து ஆயுதமாக்கிப் ப்ரயோகித்து வதம் பண்ணினாரென்பது. லோக ரக்ஷணத்துக்காக என்பும் உரியர் பிறர்க்கு என்று காட்டிய கதை. ஸாதாரணமாக அந்தக் குறளுக்கு ததீசியைத்தான் த்ருஷ்டாந்தம் காட்டுவார்கள். தந்தமும் யானையின் எலும்புதான். அதனால் பிள்ளையாரும் என்பும் பிறர்க்கு உரிய’ரான அன்புடையார் தான்!

    பெண்ணாகவும் இருப்பவர்

    அவர் ஏகதந்தராக இருப்பதற்குத் தத்வார்த்தமும் உண்டு. ஆண் யானைக்குத்தான் தந்தம் உண்டு. பெண் யானைக்குக் கிடையாது. தாம் ஆண், பெண் இரண்டும்தான். அதாவது ஈச்வர தத்வம் என்பது ஆண்தான், பெண்தான் என்று ஒன்றாக மாத்திரம் வரையறுக்க முடியாமல் இரண்டுமாக ஆகியிருக்கும் ஒன்று என்று காட்டவே முகத்திலே ஒரு பக்கம் யானை (களிறு என்றும்) மாதிரி தந்தத்துடனும், மறு பக்கம் பெண் யானை (பிடி என்பது) மாதிரி தந்தமில்லாமலும் இருக்கிறார். மாதா பிதாக்கள் பப்பாதி (பாதிப் பாதி) ஸ்திரீ புருஷர்களாக அர்த்த நாரீஸ்வர ரூபத்தில் இருக்கிற மாதிரியே புத்ரரும் கொஞ்சம் இருந்து காட்டுகிறார். அப்படியே காப்பி பண்ணினதாக இருக்க வேண்டாமென்று அங்கே வலது பக்கம் புருஷ ரூபம், இடது ஸ்த்ரீ என்றிருந்தால் இவரோ வலது பக்கம் தந்தமில்லாமல் பெண் யானையாகவும் இடது பக்கம் தந்தமுள்ள ஆண் யானையாவுமிருக்கிறார்!
    விக்நேச்வர காயத்ரீ
    ஒவ்வொரு தெய்வத்திற்கும் உரியதாக ஒரு காயத்ரீ மந்த்ரமுண்டு. உபநயனம் பண்ணி, ப்ரஹ்மோபதேசம் என்று செய்கிற காயத்ரீ மந்த்ரம் சூர்ய ஜ்யோதிஸ்ஸில் இருக்கப்பட்ட பரமாத்ம சக்தியான ஸவிதா என்கிற தெய்வத்திற்கான காயத்ரீ. காயத்ரீ என்பது 24 எழுத்துக் கொண்ட ஒர் மந்த்ரம். அந்த எண்ணிக்கையில் எல்லா தேவதைகளுக்கும் மந்த்ரங்கள் இருக்கின்றன. இந்த மந்த்ரங்கள் எட்டெட்டு எழுத்துள்ள மூன்று பதங்களாகப் பிரியும். ஒவ்வொரு பாதத்திலும் அந்த மந்த்ரம் எந்த தேவதைகளுக்கானதோ அந்த தேவதையின் ஒவ்வொரு பெயரைச் சொல்லியிருக்கும். முதல் பாதத்தில் ஒரு பெயரைச் சொல்லி, அப்படிப்பட்டவரை அறிவோம் என்று வரும். இரண்டாம் பாதத்தில் அந்த தெய்வத்திற்கே இன்னொரு பெயரைச் சொல்லி, அப்படிப்பட்டவரை தியானிப்போம் என்று வரும். மூன்றாம் பாதத்தில் மூன்றாவதாக இன்னொரு பெயரைச்சொல்லி, அப்படிப்பட்டவர் நம்மை நல்ல வழியில் தூண்டி விடட்டும் என்று ப்ரார்த்தனை வரும். மஹா நாராயணோபநிஷத்தில் உள்ளபடி, லோக வழக்கில் பிரஸித்தமாகியுள்ள இந்த காயத்ரி மந்த்ரங்களில் பரமசிவன், விக்நேச்வரர், ஸுப்ரமண்யர், நந்திகேஷ்வரர் ஆகிய நாலு பேரின் காயத்ரிகளிலும் முதல் பெயராக தத்புருஷ என்பதைத்தான் சொல்லியிருக்கிறது. ஆனால், விக்நேச்வரரைக் குறித்ததாகவே அதர்வ வேதத்தில் ஒரு உபநிஷத் இருக்கிறது. கணபத்யதர்வசீர்ஷம் என்று அதற்குப் பெயர். அதில் ஒரு கணபதி காயத்ரீ கொடுத்திருக்கிறது. இந்த காயத்ரீயில் முதல் பெயராக ஏகதந்த என்பதைத்தான் சொல்லியிருக்கிறது.
    அடுத்து யானைத் திருமுகமும் அதில் ஒளிவீசும் சிந்தூரத்தையும் – அடுத்த பதிவில் பார்க்கலாம்.
    ஸ்ரீ மகாபெரியவா சரணம்

    விநாயகர் அகவல் – பாகம் 4
    ஸ்ரீ மகா பெரியவா சரணம், கணேச சரணம்
    இந்தப் பதிவில் விநாயகர் அகவலின் அடுத்த வரியைப் பற்றிய விளக்கத்தைப் பார்ப்போம்.
    விநாயகரின் திருமுகத்தையும் அதில் கம்பீரமாக மெருகு ஏற்றிகொண்டிருக்கும் சிந்தூரத்தையும் அடுத்த வரியில் விளக்குகிறார் ஔவையார்:
    வேழ முகமும் விளங்குசிந் தூரமும் (6)
    பதவுரை:
    வேழ முகமும் – யானை முகமும்
    விளங்கு சிந்தூரமும் – அத்திருமுகத்தில் ஒளிர்கின்ற செந்நிறப் பொட்டும்
    விநாயகர் என்றாலே உடனே நம் சிந்தைக்கு வருவது அவரது வேழ முகம் தான். இயற்கையாக யானைகளுக்கு இரண்டு தந்தம். ஆனால், நம் கணபதியான ஓம்கார யானைக்கோ ஒரு கொம்பு. ‘பிரசன்ன வதனம் ‘ என்பது இந்த வேழ முகமே ஆகும். இப்பெருமானே தியானத்துக்கு உரியவர் ஆதலால் ‘பிரசன்ன வதனம் த்யாயேத்’ என்று சொல்கிறது சுருதி. தான் என்றும் மங்கள மூர்த்தி என்று அறிகுறியாக சிந்தூரப் பொட்டு பளிச் என்று விளங்குகிறது. பார்த்த கண் வாங்காமல் பூரித்துக்கொண்டு அவரையே பார்த்துக் கொண்டிருக்க தோன்றுகிறது.
    அந்த வேழ முகத்தின் பெருமையை ஸ்ரீ மஹாபெரியவா அழகாக விளக்குகிறார்கள்:
    (தெய்வத்தின் குரல் – 6-ம் பகுதி)
    கஜானனர்
    யானையின் சிறப்புக்கள்
    கஜானனர் என்பது அடுத்த பெயர். யானை முகர் என்று அர்த்தம். “கோலஞ் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே!”என்று ஒளவையார் கூப்பிட்ட கரிமுகர்.
    ஆனைக்கு ஏகப்பட்ட சிறப்புக்கள். சரீர பலம்;புத்தி பலம்; தன்னுடைய பெரிய பலத்தினால் ஒரு தொகை தொகைத்தால் (துவை துவைத்தால்) சட்டினியாகப் போகிற மனிதனிடம் எளிமையாக அடங்கி அவன் பழக்குகிறபடி லோகோபகாரமாக பெரிய பெரிய மரங்களைத் தூக்கி வருவது, யுத்தத்தில் எதிரிப்படையை அழிப்பது, கோட்டை வாசலை மோதி உடைப்பது என்றிப்படியெல்லாம் கடினமாக உழைக்கிற பண்பு; ஸத்வ ஆஹாரமாகத் தாவரங்களைத்தான் புஜிக்கிறது;தான் செத்தாலும் அழியாத தந்தத்தால் ‘இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்ற கீர்த்தி பெற்றிருப்பது – என்றிப்படி யானைக்கு உள்ள சிறப்புக்கள் எண்ணி முடியாது.
    கையின் ஸ்தானத்தில் தும்பிக்கை என்ற விசேஷ அங்கத்தைப் பெற்றுள்ள மிருகம் அது ஒன்றுதான். வேறே எந்த மிருகமாவது ஸ்வாமிக்கு யானை சாமரம் போடுகிற மாதிரிப் போட முடியுமா?தும்பிக்கையைத் தூக்கி ஸலாம்தான் போட முடியுமா?
    மற்ற மிருகங்கள் ஒருத்தரை முட்டித் தள்ளத்தான் முடியும்; தன் மேல் ஏற்றி வைத்துக் கொள்ள முடியாது. யானைதான் தும்பிக்கையால் அன்போடு அணைத்து ஒருத்தரைத் தனக்கு மேல் உசந்த ஸ்தானம் கொடுத்து ஏற்றி வைத்துக் கொள்ள முடியும். மஹா பலம், மஹா காயம் படைத்த அது இப்படி இருப்பது மிகவும் விசேஷம். போகிற வழியில் ஒருத்தர் குறுக்கே நின்றாலும் மோதித் தள்ளுவது தவிர வேறு வழியில்லை என்று இல்லாதது யானையே. அவரைத் தும்பிக்கையால் வளைத்தெடுத்து ஹிதமாக ஒரத்தில் போட்டுவிட்டு அது போகும்.

    அதற்கு ‘த்விபம்’என்று ஒரு பெயர். த்வி-பம் என்றால் இரண்டு தரம் குடிப்பது, சாப்பிடுவது என்று அர்த்தம். யானை எப்படி த்விபம்?முதலில் தும்பிக்கை நுனியால் ஜலத்தையோ, மற்ற தீனியையோ எடுக்கிறது. அப்புறம் அதை வாய்க்குள் செலுத்திக் கொள்கிறது. மிருக புத்திப்படி நேரே வாயால் விழுந்து பிடுங்காமல், இரண்டு ஸ்டேஜில் மனிதர்கள் கையால் எடுத்து வாயில் போட்டுக் கொள்வது போல் அது செய்வதாலேயே த்விபம். ஆனால் உமிழ்கிறபோதோ த்ருட பதார்த்தமானால் வாயால் மட்டுமே உமிழும். ஜலமானால் தும்பிக்கை நுனியால் மட்டும் ஃபௌண்டன் மாதிரிப் பீய்ச்சியடிக்கும். இதில் ஒரு பெரிய தத்வமே இருக்கிறது. நாம் ஒன்றை எடுத்துக் கொள்வதானால் ஒரு தரத்துக்கு இரண்டு தரம் ஆராய்ந்து பார்த்தே ஏற்க வேண்டும்; ஆனால் தள்ள வேண்டியதை ஒரே மூச்சில் இஷ்கா பிஷ்கா இல்லாமல் தள்ள வேண்டும் என்ற பெரிய தத்வத்தை யானை த்விபமாக இருந்து காட்டுகிறது.
    ஆச்சரியமாக ஒரு விஷயம் ஒருத்தர் எழுதியிருக்கிறார். இந்த நாளில் இல்லாத கருவிகளே இல்லை. ஆனாலும் இத்தனூண்டு ஊசியையும் கொந்தி எடுக்கக் கூடியதாகவும் எத்தனாம் பெரிய தேக்கு மர Beam -ஐயும் வளைத்துச் சுருட்டித் தூக்கக் கூடியதாகவும் இருக்கும் ஒரே கருவி உண்டா என்றால் இல்லை. பகவான் ஸ்ருஷ்டித்த யானையின் தும்பிக்கைதான் இரண்டையம் பண்ணுகிறது. சின்னது, பெரிசு எல்லாவற்றையும் நிர்வஹிக்கக் கூடியவர் பிள்ளையார் என்பதால்தான் அவர் கஜமுகராக இருக்கிறாரென்று அவர் எழுதியிருக்கிறார்.
    லோகத்தையே எட்டு திசைகளிலும் எட்டு யானைகள்தான் முட்டுக் கொடுத்து நிறுத்தி வைத்திருக்கின்றன. அஷ்ட-திக்-கஜங்கள் என்பார்கள். இது பௌதிக பலம். புத்தி பலத்துக்கும் அஷ்ட-திக்-கஜங்கள் தான். ‘எண் பேராயம்’என்று ராஜாங்க நிர்வாகத்திற்கு எட்டு statesmen -ஐ, ராஜதந்திர நிபுணர்களை வைத்துக் கொள்வதுபோல், சில ராஜாக்கள் எட்டு மஹா வித்வான்களைக் கொண்ட வித்வத் ஸதஸ் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். க்ருஷ்ணதேவராயர் அப்படி வைத்துக் கொண்டிருக்கிறார். அதிலுள்ள எட்டு மேதைகளை அஷ்ட திக் கஜம் என்றே சொல்வது வழக்கம்.
    எல்லாவற்றுக்கும் மேல் அழகு, காம்பீர்யம் வாய்ந்த அழகு. ‘கஜகதி’என்று அதன் நடை விசேஷித்துச் சொல்லப் படுகிறது. ஆண்மை, பெண்மை இரண்டும் அதிசயமாகக் கலந்தது கஜகதி. அதனால்தான் காம்பீர்ய புருஷர்களின் நடையை அதற்க ஒப்பிட்டு வர்ணிப்பது மட்டுமில்லாமல் உத்தம ஸ்த்ரீகளின் நடையழகையும் அப்படியே சொல்லி, அவர்களை “கஜகாமினி”என்பது.
    தான் அழகாகவும் கம்பீரமாகவும் இருப்பது மாத்திரமில்லை. தனக்கு மேல் ஒருவன் உட்கார்ந்தால் அவனுக்கும் ஒரு புது சோபையை ஊட்டி விடுவதாக யானையின் கம்பீர ஸெளந்தர்யம் இருக்கிறது. அதனால்தான் யானை மேல் அம்பாரி வைத்து ஒருத்தரை ஊர்வலம் விடுவது. ஸ்வதாவாகவே கம்பீர அழகு கொண்ட ஸ்ரீராமசந்த்ர மூர்த்தியைக்கூட ராஜாவாக்கிப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்ட மந்த்ரி ப்ரதானிகளும் குடிபடைகளும் தசரதரிடம் குறிப்பாக, “கஜேந மஹதா யாந்தம்”என்று, அதாவது “யானை மேல் அவர் பவனி வரும் காட்சியைப் பார்க்க விரும்புகிறோம்”என்று சொன்னதாக ராமாயணத்திலிருக்கிறது. ஆனைமேல் பவனி வருகிற ராமனுடைய முகத்திற்கு மேலே வெண்கொற்றக் குடை அழகாக கவிந்திருக்க வேண்டுமென்றும் சொல்கிறார்கள். ‘கஜேந மஹதா யாந்தம் ராமம் சத்ராவ்ருதானனம்’- நம்முடைய ஆனை ஸ்வாமிக்கோ சத்ர (குடை) உபசாரம் முக்யமாக இருக்கிறது. பிள்ளையாரோடேயே சேர்த்துக் குடையும் வாங்கி வந்துதான் பூஜை செய்கிறோம்.
    கன்னங்கரேல் என்றிருக்கும் ஆனையின் பரந்த நெற்றியில் விபூதியோ, திருமண்ணோ பெரிசாகப் போட்டு விட்டால் எத்தனை அழகாயிருக்கிறது?அல்லது முகடாம் பூட்டினால் எப்படியிருக்கிறது? ப்ராணி வர்க்கத்தில் வேறு எதற்காவது அப்படி உண்டா?

    இன்னொன்று, முத்து. சிப்பயில் உண்டாவதாகவே நினைக்கிறோம். ஆனால் இன்னும் சில இடங்களிலும் அபூர்வமாக முத்து உண்டாகிறது. மூங்கிலுக்குள் முத்து விளைவதுண்டு. மிகவும் உத்தமமான முத்து எங்கே உண்டாகிறதென்றால் கஜ கும்பத்தில்தான். ஆனை மஸ்தகத்தில் (தலையில்) இரண்டு பக்கமும் அதன் காம்பீர்யத்தை மேலும் உயர்த்துவதாக புடைத்துக் கொண்டு முண்டுகள் இருக்கிற தல்லவா? அதற்குத்தான் கஜ கும்பம் என்று பெயர்.
    இன்னொரு பெரிய சிறப்பு, தெய்விகமான சிறப்பு, யானையின் மஸ்தகம் மஹாலட்சுமியின் வாஸ ஸ்தானமாயிருப்பது. தாமரைப் பூவின் உள்பக்கம், பில்வ இலையின் பின்பக்கம், ஸுமங்கலிகளின் வகிடு, பசுமாட்டின் பின்பக்கம், யானையின் மஸ்தகம் ஆகிய ஐந்தும் லக்ஷ்மி நித்ய வாஸம் செய்வதால் நித்யஸ்ரீயுடன் கூடிய மங்களமான இடங்கள்.
    முன்னந்தலைக்கு இப்படிப் பெருமை இருக்கிறதென்றால் ஆனையின் பின்னால் தொங்கும் வாலின் மயிருக்கும் பெருமை இல்லாமலில்லை. அந்த ரோமம் ஆவி சேஷ்டைகளுக்குப் பெரிய ர¬க்ஷ. ஆரோக்ய ப்ரதமும் (ஆரோக்யமளிப்பதும்) அதனால் அதன் நறுக்கை மணி மாதிரி வைத்து மோதிரம் முதலிய நகைகள் செய்து போட்டுக் கொள்வதுண்டு. நகைக்கு நகை, ரக்ஷைக்கு ரக்ஷை! ஸாதாரணமாக ரோமமும் நகமும்தான் ரொம்பவும் தோஷமானவை. அவற்றை வைத்தே துர்மாந்த்ரிக ப்ரயோகம் பண்ணுவதுண்டு. ஒரு உடம்பிலுள்ளவரைதான் அவற்றுக்கு தோஷம் கிடையாது. உடம்பிலிருந்து ரோமம் உதிர்ந்தாலோ நகத்தை வெட்டி எடுத்தாலோ குப்பையில் தூரக்க (தொலைவில் போட்டு விட வேண்டும். ஆனால் விதி விலக்காக யானையின் ரோமம் துர்மாந்திரிகத்திற்குப் பரிஹாரமாக இருக்கிறது. அதே போலத்தான் புலி நகமும். தஞ்சாவூர் கிருஷ்ணன் படத்தில் ஸ்வாமிகூட புலிநகம் கோத்த சங்கிலி போட்டுக் கொண்டிருப்பார்.

    மற்றவை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
    ஸ்ரீ மகா பெரியவா சரணம்

 5. I have also not received the parts 3 and 4. Kindly mail the same.

  jaya jaya sankara hara hara sankara

 6. Can you please send me Part 3 and 4 of the above and oblige. Also the ones that will come hereafter. I intend, by the Anugraham of Kanchi Periyaval, print and distribute them during the ensuing Vinayaka Chathurthi in September at the Local Pillaiyaar Koil.Jaya Ganesa Jaya Ganesa Paahi MaamJaya Ganesa Jaya Ganesa Raksha Maam.Jaya Jaya SanakaraHara Hara Sankara.
  Date: Thu, 28 Apr 2016 03:12:58 +0000
  To: nagarajan_sr32@hotmail.com

Leave a Reply

%d