நீ யாரு!

Thanks to Sri Venkatasubramanian for the article.

Only few days I was talking with some of my friends about Periyava’s famous “Who are you?” question !! Here is another incident!!

Periyava_Sitting_And_Pointing

விகடனில் உதவி ஆசிரியராக இருந்த ஸ்ரீதரும் சாவியும் நெருங்கிய நண்பர்கள். அன்று மஹா பெரியவர் ஒரு பங்களாவின் காம்பவுண்டுக்குள் மேனா என்கிற இருக்கையில் படுத்திருந்தார். ஸ்வாமிகள் கண் விழித்து எழும்போது அந்த விஸ்வரூப தரிசனத்துக்காக சாவியும் ஸ்ரீதரும் காத்திருந்தனர். மங்கலான வெளிச்சம். வேறு மனித சஞ்சாரமே இல்லை. ஸ்வாமிகள் துயிலெழுந்ததும் இவர்களைப் பார்த்து ‘யாரு?‘ என்பதைப் போல் சைகையால் வினவ நண்பர்கள் இருவரும் தரையில் விழுந்து வணங்கினார்கள். அடுத்த கணமே, ‘இவர் ஸ்ரீதர், விகடனில் உதவி ஆசிரியராக இருக்கிறார்” என்று அறிமுகம் செய்து வைத்தார் சாவி.

“நீ யாரு?” என்று கேட்டார் பரமாச்சார்யாள்.

“நானும் விகடனில் உதவி ஆசிரியராக இருக்கிறேன். என் பெயர் சாவன்னா விஸ்வநாதன். சுப்ரமணிய சாஸ்திரிகளின் புத்திரன். சாவி என்ற பெயரில் எழுதிக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

மஹா பெரியவரின் முகத்தில் எந்த ரியாக் ஷனும் இல்லை. ஆசீர்வாதமும் பண்ணவில்லை. மௌனமாகவே எழுந்து போய் அந்த வீட்டுக்குள் மறைந்து விட்டார். இரண்டு பேருக்கும் ஒன்றுமே புரியவில்லை.

“என்ன தவறு செய்தோம்? ஸ்வாமிகள் ஏன் நம்மைக் கண்டு கொள்ளவே இல்லை ?” என்று இரண்டு பேரும் கேள்வி கேட்டுக் கொண்டார்களே தவிர விடை கிடைக்கவில்லை.

“பரவாயில்லை. நாளைக்கு மறுபடியும் வந்து தரிசனம் செய்யலாம்” என்றார் ஸ்ரீதர்.

மறுநாளும் அதேபோலத்தான்.

“நீ யார்?” என்று மஹா பெரியவர் சாவியைக் கேட்க தான் முதல் நாள் சொன்ன விவரங்களை மறுபடியும் சாவி சொன்னார். “சாமா சுப்ரமணிய சாஸ்திரிகளின் மகன். சாவன்னா விஸ்வநாதன்” என்று மட்டும் சாவி சொன்னாரே தவிர, வேறு விவரம் ஏதும் சாவி சொல்லவில்லை. ஸ்வாமிகள் மறு நாளும் எதுவும் பேசாமல் எழுந்து போய் விட்டார். மீண்டும் இருவருக்கும் ஏமாற்றம்.

இப்படித் தொடர்ந்து பலநாட்கள் வரை இவர்கள் போவதும், “நீ யார்?” என்று ஸ்வாமிகள் கேட்பதும் என்று காலம் போய்க் கொண்டிருந்தது. அப்புறம் சில நாட்களுக்குள் மஹா பெரியவர் தமது முகாமை கோபாலபுரத்தில் இருந்து நுங்கம்பாக்கத்துக்கு மாற்றி விட்டார்.

“விடக்கூடாது, பெரியவர் மனசில என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார் ? நாம் என்ன தப்பு செய்தோம் ? ஏன் பேசாமல், ஆசீர்வாதமும் பண்ணாமல், மௌனம் சாதிக்கிறார் ? இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று இரண்டு பேரும் சங்கடப்பட்டார்கள். நுங்கம்பாக்கத்திலும் சில நாட்கள் இந்தக் கேள்வி-பதில் உரையாடல் தொடர்ந்தது.

கடைசியாக சாவி மிகவும் சலித்துப் போய், “ஸ்ரீதர், இன்னிக்கு நான் வரலை. நீங்க வேண்டுமானால் போய்ப் பாருங்கள்” என்றார். அப்படிச் சொல்லிக் கொண்டிருந்த தருணத்தில் மடத்தைச் சேர்ந்த ஒருவர் ஸ்ரீதர் வீடு தேடி வந்தார். காப்பி அருந்திக் கொண்டிருந்த சாவியும் ஸ்ரீதரும் ஒரு கேள்விக்குறியோடு அவரைப் பார்த்தார்கள்.

“பெரியவா சாவியை அழைச்சுண்டு வரச் சொன்னா” என்றார் வந்தவர்.

இரண்டு பேருக்கும் வியப்பு தாங்கவில்லை. சோதித்து போதும் என்று தெய்வம் மனம் இறங்கி விட்டதோ! ‘வாங்க வாங்க உடனே போவோம்’ என்று சொல்லிக் கொண்டே இருவரும் கிளம்பிப் போனார்கள்.

இவர்கள் சுவாமிகளைத் தேடிச் சென்றபோது மஹா பெரியவர் மேனாவில் திருவீதி உலா போய்க் கொண்டிருந்தார். இவர்களும் கூட்டத்துடன் சேர்ந்து மேனாவைத் தொடர்ந்து போனார்கள்.

“சாவியும் ஸ்ரீதரும் வந்திருக்கா” என்று மடத்து பிராமணர் சுவாமிகளிடம் வாய் பொத்திச் சொன்னதை பெரியவர் கவனிக்காதது போல் இருந்து விட்டார். இவர்களை அவர் கண்டுகொண்டதற்கான எந்தவித அடையாளமும் இல்லை.

காலை பதினொன்றரை மணி. வெயில் சுரீர் என்று கொளுத்திக் கொண்டிருந்தது. திருவீதி உலா முடிந்து மஹா பெரியவர் தங்கியிருந்த முகாமுக்குத் திரும்பிய போது அங்கே பக்தர்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது. அவ்வளவு பேரும் ஒவ்வொருவராக வந்து அவரை வந்தனம் செய்துகொண்டு பிரசாதம் பெற்றுச் சென்றார்கள்.

அவர்கள் எல்லோரும் போன பின்பு கடைசியாக சாவியும் ஸ்ரீதரும் பெரியவாளின் பதங்களில் வீழ்ந்து நமஸ்காரம் செய்தார்கள். பெரியவர் முகத்தில் லேசான புன்னகை! ”சாவன்னா விஸ்வநாதன். சாமா சுப்ரமணிய சாஸ்த்ரிகளோட புத்திரன். ம்..” என்று சொல்லி விட்டு, முதன் முதலாக கை உயர்த்தி இருவரையும் ஆசீர்வதித்ததோடு இருவருக்கும் குங்குமப் பிரசாதம் வழங்கினார்.

சாவிக்கு அந்த ஆசீர்வாதம் தந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. ஆனால், ‘ஏன் இப்படி இத்தனை நாட்கள் இழுத்தடிக்க வேண்டும்?” என்ற கேள்விக்கு மட்டும் பதில் கிடைக்கவில்லை. அப்புறம் அதைப் பற்றிப் பெரியவரும் எதுவும் பேசவில்லை.

“இன்றுவரை மகாபெரியவர் ஏன் உங்களை அப்படிச் சோதித்தார் என்று நீங்கள் தெரிந்து கொள்ளவே இல்லையா ?” என்று நான் சாவியைக் கேட்டபோது, “தெரிந்து கொண்டேன். ஆனால் மஹா பெரியவரைக் கேட்டு அல்ல. இந்தச் சம்பவத்தை, கற்றறிந்த பண்டிதர்கள் சிலரிடம் விவரித்துச் சொல்லி, “காரணம் என்னவாக இருக்கும்?” என்று கேட்டபோது, அவர்கள் சொன்ன பதில் இதுதான்:

ஒரு பிராமணன் மூத்தவர்களை வணங்கும்போது, ‘அபிவாதயே‘ சொல்ல வேண்டும் என்பது சாஸ்திரம். அந்த ‘அபிவாதயே‘வில் வணகுபவரின் பூர்வோத்தரமே அடங்கி இருக்கும். தான் யார், தன் கோத்திரம் என்ன, பூர்வீகம் என்ன என்கிற அத்தனை விவரங்களும் அதில் அடங்கி இருக்கும். முதலில் நான் யார் என்பதைச் சொல்லாமல் ஸ்ரீதரைப் பற்றிச் சொன்னது அதிகப்பிரசங்கித்தனம்” என்பதை உணர்த்தவே ஸ்வாமிகள் அப்படி அலைக்கழித்திருக்கிறார்.

“நான் மகாபெரியவரைப் பார்த்தவுடன் முதலில் என்னைப் பற்றிய விவரங்களைச் சொல்லாமல் ஏதோ மிகப் பெரிய மேதாவி போல ஸ்ரீதரை அறிமுகப்படுத்தியது முறையற்ற செயல், அதிகப்பிரசங்கித்தனம் என்பதை உணர்த்தவே பெரியவாள், “நீ யார்?” என்று என்னைக் கேட்டிருக்கிறார்.

சுவாமிகளை வணங்கும்போது ‘அபிவாதயே‘ சொல்லத் தேவையில்லை என்றாலும் என்னை நான் முதலில் அறிமுகப் படுத்திக் கொண்டிருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் தவறியதைச் சுட்டிக் காட்டவே அந்த மாதிரி இழுத்தடித்துச் சோதித்தார் என்ற முடிவுக்குத் தான் என்னால் வர முடிந்தது.”

அதே மகாபெரியவர் பின்னாளில் சாவியிடம் அன்பு காட்டியதும், ‘வேத வித்து‘ கதை எழுத ஆசி வழங்கியதையும், குங்குமம் பத்திரிகை தொடங்கிய போது கை நிறையக் குங்குமப் பிரசாதத்தை வாரி வழங்கி அரக்கோணம் பரசுராமன் மீனாக்ஷி தம்பதியர் மூலம் அனுப்பி வைத்ததையும் பற்றி சாவி சொல்லும்போது அவர் ஆனந்தக் கண்ணீர் பெருக்குவதைக் கண்டிருக்கிறேன்.



Categories: Devotee Experiences

4 replies

  1. My Thoughts, He has given opportunity more than one time to given dharshan and by installments he removed their bad karmas. Normally sadhus don’t expect anything including respect so that is the maturity of the person who understand.

  2. Sri Sridhar is Sri BharaNidharan, the author of Sri Sailaththil Sri Sankarar and Anbe AruLe, Great Works on Maha Periyava Experiences! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

  3. பெரிவா ஜோக் அடிப்பது மட்டுமில்லை… அப்பப்போ குட்டுவும் செய்வார் என்பதற்க்கு இதுவே நிதர்சன அநுபவம். ஆனால் எல்லாம் நம்ம நன்மை கருதிதான் செய்வார், அதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

Leave a Reply

%d