Thanks to Sri BN Mama for the share…
பெரியவா பல ஏழை மாணவர்களுக்கு, அவர்களின் படிப்பைத் தொடர்வதற்கு, உதவி செய்துள்ளார். சுந்தரராமன் என்ற ஒரு ஏழைப்பையனுக்கு அவர் உதவிய வரலாற்றைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சுந்தரராமனின் பெற்றோர்கள் மிகவும் ஏழைகள்; மடத்திலேயே பணி புரிந்துகொண்டிருந்தார்கள். ஒருநாள், உயர்நிலைப் படிப்பை முடித்துவிட்ட சுந்தரராமனிடம், பெரியவா, அவன் கல்லூரிப் படிப்பைத் தொடர விருப்பமுண்டா என்று கேட்டார். தான் மிகவும் ஏழையாதலால், கல்லூரிப் படிப்பைப் பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று பதில் கூறினான்.
பெரியவா, சுந்தரராமன் அண்ணாமலைப் பலகலைக் கழகத்தில் தன் கல்லூரிப் படிப்பைத் தொடரவேண்டும் என்று தான் மிகவும் விரும்புவதாகவும், அதற்காக தானே எல்லா ஏற்பாடுகளையும் செய்வதாகவும் கூறினார். அவனைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்குமாறும் கூறினார். சிதம்பரத்தில் பல பக்தர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் மூலம் கல்லூரிச் செலவு, புத்தகங்களின் விலை, பரீக்ஷைப் பணம் எல்லாவற்றுக்கும் அவர்களைக் கொண்டே ஏற்பாடு செய்தார். தன் சகோதரி வீட்டில் தங்கியிருந்த சுந்தரராமனுக்கு அவனுடைய சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்யவேண்டியிருந்தது.
ஒரு நாள் சுந்தரராமன் வாடிய சோகமான முகத்துடன் பெரியவாளிடம் வந்தான். பின் வரும் சம்பாஷணை அவர்களுக்கிடையே நடந்தது:
பெரியவா—“ உன்னுடைய தினப்படி சாப்பாட்டுக்கு, ஆறு நாள்களும் ஆறு வேறே வேறே வீடுகளில் ஏற்பாடு பண்ணினது உனக்கு அவமானமாயிருக்கோ ? நான் செய்த இந்த ஏற்பாடு உனக்குப் பிடிக்கலைபோல இருக்கே?”
சுந்தரராமன்:—-“பெரியவா இப்படி என்னை தினம் ஒரு வீட்டுக்கு சாப்பாட்டுக்காகப் போகப் பண்ணியிருக்க வேண்டாம்.”
பெரியவா:—“-உனக்காக, உன்னுடைய சார்பில நான்தான் அந்த ஆறு குடும்பத்திலேயும் பிக்ஷைக்குப் போனேன்னு உனக்குத் தெரியுமா?”
இதைக் கேட்டவுடன் சுந்தரராமன் அடக்கமுடியாமல் அழத்தொடங்கினான்.
“என்னை மன்னிச்சுடுங்கோ பெரியவா ! எம்மேல உங்களுக்கு இருக்கும் பரிவையும் அன்பையும் நான் புரிஞ்சுக்கல. நான் சிதம்பரத்துக்குத் திரும்பப் போயி பெரியவா சொல்படியே கேட்டு நடக்கறேன்.”
ஸ்ரீ சுந்தரராமன், அன்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ‘மாஸ்டர்ஸ்’ படிப்பை முடித்தார். ‘ஃபுல்ப்ரைட் ஸ்காலர்ஷிப்’ கிடைத்து, அமெரிக்கா சென்று அங்கே பி.ஹெச்டி படிப்பை முடித்தார். வாஷிங்டனில் ஹோவர்ட் பல்கலைக் கழகத்தில் ‘டீன்’—ஆக ஓய்வெடுத்தார்.
1976—ஆம் வருடம், பெரியவா காஞ்சிக்கருகில் தேனம்பாக்கத்தில் தங்கியிருந்தார். அவர் செய்யும் ப்ரதோஷ பூஜையைக் காணவேண்டும் என்று எனக்கு ஆசை. ஒரு பிரதோஷ தினத்தன்று மாலை 5 மணிக்கு தேனம்பாக்கம் சென்றேன். பெரியவா ஸ்னானம் செய்வதற்குத் தயராக இருந்தார். அந்த சமயத்தில், அவருடைய அணுக்கத் தொண்டர் ஒருவர் ஓடோடி வந்து, பெரியவாளுடன் சில நிமிஷங்களுக்கு முன் பேசிக்கொண்டிருந்த பண்டிதர் ஒருவர் திடீரென்று விழுந்து விட்டதாகவும் மயக்கமாக இருக்கிறார் என்றும் கூறினார். பெரியவா நான் கார் கொண்டு வந்திருக்கிறேனா என்று கேட்க, நான் ‘ஆமாம்’ என்று சொன்னேன்.
பெரியவா என்னை உடனே போய் ஒரு டாக்டரை அழைத்துக்கொண்டு வரும்படி சொன்னார். நான், உடனே சென்று, வரதராஜப்பெருமாள் கோயிலருகே ஒரு ‘கிளினிக்’ வைத்திருந்த டாக்டர் ஒருவரை அழைத்து வந்தேன்.
நான் வந்தபொழுது, பண்டிதர் ஒரு பாயில் படுக்க வைக்கப்பட்டிருந்தார்; பெரியவா அவர் அருகில் அமர்ந்திருந்தார், முகத்தில் கவலையுடன். டாக்டர் அவரை சோதித்து விட்டு ஒரு ‘இஞ்ஜெக்ஷன்’ கொடுத்தார். அவருக்கு ‘ப்ளட் ப்ரெஷர்’ (ரத்த அழுத்தம்) அதிகமாக இருப்பதாகவும், இப்பொழுது கொடுத்த இஞ்ஜெக்ஷன்’ மூலம் அவர் சரியாகிவிடுவார் என்றும் கூறினார். பெரியவா என்னையும் இன்னும் சிலரையும், அவரை மெல்லத் தூக்கிக் காரில் வைத்து, வரதராஜப்பெருமாள் கோவிலருகே இருந்த அவர் வீட்டில் கொண்டு விடுமாறு பணித்தார். நான் திரும்பியதும், பண்டிதரின் உறவினர்கள் வந்து விட்டார்களா என்றும், அவருடைய வளர்ப்பு மகன் அருகில் இருக்கிறாரா என்றும் விசாரித்தார். பெரியவா மீண்டும் என்னை அங்கு சென்று, அவருடைய வளர்ப்பு மகனிடம் 300 ரூபாய் கொடுத்துவிட்டு வரும்படி சொன்னார்.
நான் திரும்பி வந்தபோது, மணி 8=30 ஆகியிருந்தது. நான் மிகவும் களைப்புடன் இருந்தேன்; பெரியவா பூஜையை செய்து முடித்திருப்பார் என்று நினைத்தேன். ஆனால், எனக்கு ஆச்சரியம் ! என்னுடைய வருகைக்குக் காத்திருந்தார்போல, பெரியவா அப்பொழுதுதான் பூஜையை ஆரம்பித்தார் ! பூஜை முடிந்தவுடன், ஒரு இக்கட்டான சமயத்தில், நான் ஒரு பண்டிதருக்கு உதவி செய்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். சுமார் பத்து மணிக்கு நான் என் அறைக்குத் திரும்பினேன்.
அடுத்த நாள் நான் சென்னைக்குத் திரும்பினேன். நான் வீட்டிற்குள் நுழையும்போது, என் தாயார், காஞ்சியிலிருந்து ஃபோன் வந்ததாகவும், நான் முதல் நாள் மாலை உதவிய அந்த பண்டிதர் இன்று அதிகாலை காலமாகிவிட்டதாகவும் கூறினார். நான் கொடுத்த அந்த சிறிய தொகை, அவருடைய ஈமக் கடன்களுக்கு உபயோகமாயிருக்கும் என்று நம்பினேன். அந்த நிகழ்ச்சியை நினைவுகூறும்பொழுது, அன்றைய தினம் அந்தப் பண்டிதருக்கு உதவுவதற்காக நான் அழைக்கப்பட்ட காரணம் என்னவென்று புரியவில்லை. என் உள்ளுணர்வு, ஏதோ என் வாழ்க்கையில் இருக்கும் ஒரு பாவ கர்மாவை அழிப்பதற்காகவே பெரியவா என்னை அன்று அங்கு செல்லும்படியாகச் செய்தார் என்றே கூறுகிறது.
அவரே சிவன் !
1976—இல் சில நண்பர்களுடன், பெரியவா முகாமிட்டிருந்த கலவைக்குச் சென்றிருந்தேன். அன்று சிவராத்திரி. நாங்கள் 10 மணி சுமாருக்கு அங்கு சென்றோம். பெரியவா சிவராத்திரி பூஜை (மானசீக பூஜை) செய்துகொண்டிருந்தார். நாங்கள் அந்த சிறிய வீட்டின் வெளியே அமர்ந்து, பூஜையைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அன்று திருமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்கள், திரு சதாசிவம், திருமதி. ராதா விஸ்வநாதன் ஆகியோருடன் வந்திருந்தார். ஒரு ஹார்மோனியம் பக்க வாத்யத்துடன், திருமதி எம்.எஸ்—ஸும் ராதாவும் சுமார் இரண்டு மணி நேரம் பெரியவாளின் முன்னிலையில் பாடினார்கள். பத்து பக்தர்களே இருந்தனர். எனக்கு அது ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் அநுபவமாகும் ! பெரியவா பூஜையை முடித்தவுடன், எம்.எஸ் “சம்போ மஹாதேவா” பாட்டைப் பாடினார்கள்.
பெரியவா ஒரு ஸ்டூலை இழுத்து, அதன் மேல் நின்றுகொண்டு தரிசனம் தந்தார்கள். எனக்கு அவர் அந்த சிவபெருமானாகவே தோன்றினார் ! அது வாழ்க்கையில் ஒரு முறையே வரும் ஒரு அநுபவம்.
மற்றும் ஒரு முறை, பாம்பேயில் இருக்கும் என் நண்பனுடன் காஞ்சிக்கு சென்றிருந்தேன். அவர் ஒரு சொந்த விஷயமாக பெரியவாளிடம் ஆலோசனை கேட்க வந்திருந்தார். ஒன்பது மணி சுமாருக்கு மடத்தை அடைந்தோம். பெரியவா ஒரு சிறிய மேனாவின் உள்ளே அமர்ந்துகொண்டு ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தார். படித்து முடித்தவுடன், அணுக்கத்தொண்டரை, மேனாவின் கதவை மூடிவிடச் சொல்லிவிட்டு தூங்கச் சென்றார். அடுத்தநாள் காலை 5 மணிக்கெல்லாம் நாங்கள் மடத்தில் இருந்தோம். மேனாவின் கதவு திறக்கப்பட்டது. பெரியவா அதனுள் உட்கார்ந்திருந்தார்; ‘ஃப்ரெஷ்’—ஆக இருந்தார். காற்றும் வெளிச்சமும் புக முடியாத ஒரு சிறிய மேனாவில் ஒருவர் எப்படி இரவு முழுவதும் இருக்கமுடியும் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் தன்னுடைய உடலை காலத்திற்கும் பிரபஞ்சத்திற்கும் அப்பால் தன்னுடைய இஷ்டம்போல் இருக்க வைக்க முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.
Categories: Devotee Experiences
Thanks for posting about Sri sundarraman. We are very close to their family and we were neighbours too in annamalainagar.
இவற்றை எத்தனை முறை படித்தாலும் அலுக்கவேயில்லை.
Periyava is incarnation of Shiva .