காஞ்சி முனிவருடன் என் அனுபவங்கள் – சங்கரன் சந்திரன் – பகுதி 6

With a cow

 

Thanks Sri Venkatasubramanian.

கோ சம்ரக்ஷணமும்(பசுவுக்குப் பாதுகாப்பு) மற்ற பெரிய திட்டங்களும்.

பெரியவாளின் மனதிற்குகந்த வேறொரு காரியம் பசுக்களைக் காத்துப் போஷிப்பது. பசுக்களைக் காப்பாற்றவும் போஷிக்கவும் நாடு முழுவதும் கோசாலைகள் தொடங்கப்பெற்று நடத்தப்பட்டன.

பெரியவா பசுக்களைக் காப்பாற்றுவதற்கு எந்த அளவுக்கு முயற்சிகள் எடுத்தார் என்பதற்கு ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்கிறேன்.

ஜெர்மனியில் ஆயிரக்கணக்கான வயசான பசுக்களைக் கொல்லுவதற்கு ஒரு திட்டம் இருந்ததை பெரியவா அறிந்தார். டாக்டர். டி.எம்.பி. மஹாதேவனின் மாணவியாக இருந்த ஜெர்மனி இளவரசி ஐரினைக் கூப்பிட்டனுப்பி, அவரால் எவ்வளவு பசுக்களைக் காப்பாற்ற முடியுமோ அத்தனை பசுக்களயும் காப்பாற்றி காஞ்சீபுரத்துக்குக் கொண்டுவந்து ஒரு கோசாலை அமைக்க முயற்சி செய்ய முடியுமா என்று கேட்டார்,.

இளவரசி ஐரின் உடனேயே அதற்கு வேண்டிய காரியங்களைத் தொடங்கி, ஜெர்மனிக்குச் சென்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி எத்தனை முடிந்ததோ அத்தனை பசுக்களை தன் வசம் எடுத்துக் கொண்டு, ஒரு சரக்கு ஏரோப்ளேனை ஏற்பாடு செய்து, அத்தனைப் பசுக்களையும் இந்தியாவுக்குக் கொண்டு வந்தார். பெரியவாளின் மனது நிறையும்படி, காஞ்சிக்கு அருகிலேயே ஒரு கோசாலை அமைக்கப்பட்டு ஜெர்மனியிலிருந்து காப்பாற்றிக் கொண்டுவரப்பட்ட பசுக்கள் அதில் வைத்து பராமரிக்கப்பட்டன.

மற்ற பெரும் திட்டங்கள்.
1978—க்கும்1984—க்கும் இடையே, அவர் பாதயாத்திரையில் இருந்தபொழுது, பெரியவா இரண்டு மிகப்பெரும் திட்டங்களை எடுத்து நிறைவேற்றினார். ஒன்று, மஹாராஷ்டிராவிலுள்ள சதாராவில் ‘வடசிதம்பரம்’ கோவில் கட்டுவதற்கு ஏற்பாடு; இன்னொன்று, ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் கட்டுதல்.

தமிழ்நாடு, ஆந்திரபிரதேஷ், கர்னாடகா மற்றும் மஹாராஷ்டிர மாநிலங்களின் அரசாங்கங்களை இவற்றில் ஈடுபடுத்தி, பெரியவா, இந்த திட்டங்களுக்கு நல்லதொரு தொகையை நன்கொடைகளாக வழங்க ஏற்பாடு செய்தார்.
ஸ்ரீரங்கம் ராஜகோபுரத் திட்டத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்த அஹோபீலமட ஜீயர் அவர்கள், மஹாபெரியவரின் ஆசீர்வதங்களில்லாமல் இந்த பெரும் திட்டத்தை நிறைவேற்றியிருக்கவே முடியாது என்று கூறுவார்.

சிதம்பரம் கோவிலின் அசல் அதே பாணியில் வடசிதம்பரம் கோவில் கட்டும் வேலையில் ஈடுபட்டிருந்த ஸ்ரீ முத்தையா ஸ்தபதி பெரியவா இருந்த முகாமுக்கு அடிக்கடி சென்று அவருடன் ஆலோசனைகள் நடத்துவார்.

முத்தையா ஸ்தபதி என்னிடம் ஒரு நிகழ்சியைப்பற்றிக் கூறினார். ஒரு முகாமில் பெரியவாளை சந்தித்தார். பெரியவா கிராமத்தில் ஒரு குடிசையில் தங்கியிருந்தார். ஸ்தபதியும் பெரியவாளும் குடிசைக்கு வெளியே நின்றுகொண்டு கோவில் சம்பந்தப்பட்ட ஒரு வரைபடத்தை வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார்களாம். திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. முத்தையா ஸ்தபதி, பெரியவாளைக் குடிசைக்குள்ளே சென்றுவிடும்படி வேண்டிக்கொண்டார். அப்பொழுது, பெரியவா வானத்தை நிமிர்ந்து பார்த்து, கையை அசைத்தார். மழை நின்றுவிட்டது !

பெரியவாளின் பரிவு.

கல்வியைத் தொடர்வதற்கும், கல்யாண செலவுகளை சமாளிப்பதற்கும், மற்றும் மத சம்பந்தமுள்ள வைதீக கார்யங்கள் செய்வதற்கும், ஏழை பக்தர்களுக்கு பெரியவா உதவி புரிந்த நிகழ்ச்சிகள் ஏராளம்.

வேதபுரி அவர்கள் என்னிடம் கூறிய ஒரு நிகழ்ச்சியை இங்கு விவரிக்கிறேன்.

ஒருநாள் பெரியவா வேதபுரியின் முதல் பெண்ணின் கல்யாணத்தைப்பற்றிப் பேச ஆரம்பித்தார். சம்பாஷணை கீழ் வரும் விதம் தொடர்ந்தது:–

பெரியவா——“ஒன்னோட பொண்ணுக்கு எத்தனை வயசாறது ?”

வேதபுரி——12 வயசு.

பெரியவா—அவளுக்குக் கல்யாணம் பண்ணவேண்டாமா?

வேதபுரி—–நான் அதைப்பற்றி நினைக்கக்கூட இல்லே. நான் ரொம்ப ஏழை. பொண்ணுக்குக் கல்யாணம் பண்ண ஒரு சௌகர்யமும் இல்லே.

பெரியவா—நாளைக்கு அவளுக்கு இங்கே மடத்திலே கல்யாணம் பண்ணிவைக்க நான் ஏற்பாடு பண்ணட்டுமா? நாளைக்கு பங்குனி உத்திரம்; அன்னிக்குத்தான் சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் கல்யாணம் நடந்தது.

வேதபுரி—–பெரியவா என்னை சோதிக்கறேள். இத்தனை சீக்கிரம் கல்யாணம் நடத்த முடியாது.

அப்புறம் என்ன நடந்தது என்பது ஒரு ஆச்சரியமான விஷயம் !

பெரியவா வேலூருக்கு ஒரு பக்தரைக் காரில் அனுப்பி, அங்கு வேதபாடசாலையில் படித்துக் கொண்டிருந்த ஒரு பையனை அவனுடைய பெற்றோர்களுடன் மடத்துக்கு அழைத்து வரச் சொன்னார். மடத்தில் பணிபுரியும் அன்பர்கள் கல்யாணத்திற்கு வேண்டிய மற்ற எல்லா ஏற்பாடுகளையும் செய்தனர். அடுத்த நாள், பெரியவாளுக்கு முன்னிலையில் அந்தக் கல்யாணம் நடந்தேறியது!

சில வருஷங்களுக்குப்பின், வேதபுரியின் இரண்டாவது பெண்ணுடைய கல்யாண செலவுகளை ஒரு பக்தரை ஏற்றுக்கொள்ளப் பண்ணினார்.

ஏழைகளின்மேல் அத்தனை ஒரு பரிவு பெரியவாளுக்கு !



Categories: Devotee Experiences

Tags:

3 replies

  1. Mr.Mahesh,

    I am short of words to give my comment. So many cows from Germany saved by Mahaperiyava and undoubtedly all those cows should have shed tears and me too.

    When Mahaperiyava looks up the sky, the rain stops.” Mahaperiyava is Cosmic God” my new title for my second series.

    Wonderful efforts of your’s is priceless Mahesh.

    with kind regards,
    Gayathri Rajagopal

  2. Please check the facts again, i don’t think Dr. T M P Mahadevan was married. The princess that is being referred is from Spain

Leave a Reply

%d bloggers like this: