காஞ்சி முனிவருடன் என் அனுபவங்கள் – சங்கரன் சந்திரன் – பகுதி 5

Thanks to Sri BN Mama and Sri venkatasubramaniam for the share….

Periyava_with_mattai_coconut

காஞ்சிக்குத் திரும்பிய பின் அவர் ‘குருவார சதஸ்’ என்ற ஒரு ‘சதஸைத் தொடங்கினார். ஒவ்வொரு வியாழக்கிழமையும் சுமார் 30 வேத பண்டிதர்கள் அவர் முன்னிலையில் கூடி வேதத்திலோ சாஸ்த்ரத்திலோ ஒரு தலைப்பில் விவாதிப்பார்கள். அந்த விவாதம் முழுவதும் சமஸ்கிருத மொழியிலேயே இருக்கும். ஒவ்வொரு வாரமும் பண்டிதர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும். ஒவ்வொரு பண்டிதருக்கும் அளிக்கப்பட்ட தொகை அப்பொழுது பெரியவாளின் வயதுக்கு சமமாக இருக்கும். உதாரணமாக, அவருக்கு வயது 90 என்றால், பண்டிதருக்கு வாரம் 90 ரூபாய் வழங்கப்பட்டது. அடுத்த வருடம் அது ரூபாய் 91 ஆகும்.

ஒவ்வொரு வாரத்திய விவாதமும் பதிவு செய்யப்பட்டது. பெரியவா செய்த மிகப்பெரும் ஒரு கைங்கைர்யம் வேதத்திற்கும் சாஸ்த்ரங்களுக்குமாகும். அவரைப் பொறுத்த வரை, வேதம் என்பது சிவபெருமானின் மூச்சுக் காற்றாகும். வேதங்களைக் காப்பாற்றினால், மனித சமுதாயம் முழுவதும் ரக்ஷிக்கப்படும் என்றே அவர் எப்பொழுதும் கூறுவார். ‘வேத ரக்ஷண நிதி’ என்ற ஒரு அறக்கட்டளை நிறுவப்பெற்றது—அதன் முக்கிய நோக்கம் பல வேதபாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கு இயன்ற உதவி செய்வதாகும். அண்ணாதுரை ஐயங்காரும் இன்னும் சிலரும் அதை நிர்வகித்து வந்தார்கள். பெரியவா அடிக்கடி அண்ணாதுரை ஐயங்காருடன் பாடசாலைகளைக் குறித்து ஆலோசனை நடத்துவார்.

அவர் மஹாராஷ்டிராவில் பாதயாத்திரை செய்துகொண்டிருந்தபொழுது, மஹாபெரியவா “வேத பாட நிதி டிரஸ்ட்” என்ற ஒரு அறக்கட்டளையை 1983—ஆம் ஆண்டில் ஆரம்பித்தார். பாம்பேயில் பிரபல சட்ட வல்லுனர் திரு நானி பால்கிவாலா அவர்கள் இந்த அறக்கட்டளையின் ‘சேர்ம’னாக நியமிக்கப் பட்டார். இந்த அறக்கட்டளையின் முக்கிய நோக்கம், வேதம் சொல்லிக்கொடுக்கும் பண்டிதர்களுடைய நலனுக்காக ஒரு ‘கார்பஸ்’ நிதியை உண்டாக்குவது.

நான் இப்பொழுது சொல்லவிருக்கும் நிகழ்ச்சி, மஹாபெரியவா வேதம் போதிப்பவர்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை விளக்க ஒரு நல்ல உதாரணம். நான் அவரைத் தரிசிக்க மஹாராஷ்டிராவில் இருந்த ஒரு முகாமுக்குச் சென்றிருந்தேன். பெரியவா, நான் ஒரு மிகப்பெரிய தப்பைச் செய்துவிட்டதாகக் கூறினார்; அது சென்னைக்கு அருகில் உள்ள நசரத்பேட்டையில் இயங்கி வந்த ஒரு பாடசாலையின் நிர்வாகம் குறித்ததாகும்.

அதற்கான காரணம் இதுதான் :—

‘ஆதிசங்கர அத்வைத ரிசர்ச் சென்டெர்’, நசரத்பேட்டையில் ஒரு வேதபாடசாலை நடத்திக் கொண்டிருந்தது. அதனுடைய நிர்வாகத்தை, செகரட்டரி என்ற முறையில் நான் மேற்பார்வை செய்துகொண்டிருந்தேன். அங்கே, ருக், யஜுர், மற்றும் சாம வேதங்கள் போதிக்கப் பட்டன; நான்கு வேத பண்டிதர்கள், 75 வித்யார்த்திகளுக்கு வேதம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தனர்.

சிவராமகிருஷ்ண கனபாடிகள் என்பவர் (அவருக்கு சுமார் 83 வயது) ருக் வேதம் போதித்துக் கொண்டிருந்தார். அவருக்குத் தொழுநோயின் அறிகுறிகள் தென்படலாயின. தர்மகர்த்தாக்கள் அவரை நீக்கி விட்டு புதிய ஒரு பண்டிதரை நியமித்தனர்.

எனக்கும் பெரியவாளுக்கும் பின் வரும் சம்பாஷணை நடந்தது:

பெரியவா:– “சிவராமகிருஷ்ண கனபாடிகளோட சேவையை ஏன் திடீர்னு நிறுத்திட்டேள்?”

நான்:——— “கனபாடிகளுக்கு தொழுநோயின் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்ததால், வித்யார்த்திகளின் நலனைக் கருதி அவரை நீக்கிவிட, தர்மகர்த்தாக்கள் முடிவு செய்தனர். ருக் வேதம் போதிப்பதற்கு புதிய ஒரு பண்டிதரை நியமித்துள்ளனர்.”

பெரியவா:— “அவர் எவ்வளவு பெரிய ருக்வேத பண்டிதர்னும், எத்தனை பிரபலமான பண்டிதர்களை அவர் பயிற்றுவித்திருக்கிறார்னும் உனக்கு தெரியுமா? இந்தமாதிரி ஒரு முடிவு எடுக்கறத்துக்கு முன்னாலேயே, பாடசாலையை நிர்வகிக்கும் பொறுப்புள்ள ஒருவர், ஒரு பிரபல வேத பண்டிதரின் அருமை பெருமைகளைப் பற்றித் தெரிஞ்சுண்டிருக்கணும்.”

ஒரு மிகப்பெரிய தவறு நடந்திருக்கிறது என்று எனக்குள் உணர்ந்தேன். பெரியவாளிடமிருந்து இதற்கு ஒரு தீர்வை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

பெரியவா:—– “அந்த பண்டிட்டுக்குக்கீழே 12 வித்யார்த்திகள் படிச்சிண்டிருந்தா. எல்லோரும் அவாளோட பொழைப்புக்கு வைதீஹத்துக்குப் போயிருப்பா; இன்னும் ரெண்டொரு வித்யார்த்திகள் படிப்பைத் தொடரவும் இருப்பா. சிவராமகிருஷ்ண கனபாடிகள் நங்காநல்லூர்லதான் இருக்கார். இன்னும் கொஞ்சம் வித்யார்த்திகளைச் சேர்த்துண்டு, ,அவர் வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு வீட்டை வடகைக்கு எடுத்துண்டு, அவாளையெல்லாம் அங்கே தங்கி படிப்பை முடிக்கச்சொல்லு.

கனபாடிகளுக்கு வரும்படியைக் கொடுக்கணும்; அங்கு படிக்கும் வித்யார்த்திகளுக்கும் வரும்படி கொடுக்கணும். மேலும், கனபாடிகளுக்கு அவருடைய மருத்துவச் செலவுக்காக மாதம் 300 ரூபாய் உன்னுடைய வருமானத்துலேந்து கொடுக்கணும்.”

சென்னை வந்தபிறகு, ‘டிரஸ்ட்’ மானேஜர், மேலும் இரண்டு (சகோதரர்கள்) வித்யார்த்திகளைச் சேர்த்தார். அவர்கள் இருவரும் கனபாடிகளிடம் படிக்கத் தயாராக இருந்தனர். நங்காநல்லூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் தங்கிப் படித்தனர். 12 மாதங்களில் அவர்களுடைய படிப்பை முடித்தனர்.

சில மாதங்களுக்குப்பின் சிவராமகிருஷ்ண கனபாடிகள், தனது 85—ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

பெரியவாளுக்கு வேதங்களைக் காப்பாற்றுவதிலும் பரப்புவதிலும் இருந்த அக்கறை, இந்த நிகழ்ச்சியின் மூலம் தெரியும்.

பெரியவா திருப்பதியிலிருந்து இரண்டு வேத பண்டிதர்களைக் கண்டு, அவர்களை, அதர்வண வேதத்திலிருந்த ஒரு அபூர்வ ‘சாகா’—பிப்பிலத சாகா—வைக் கற்றுக் கொள்வதற்காக, குஜராத்தில் உள்ள ஒரு வேத பாடசாலைக்கு அனுப்பிவைத்தார்.

வேத ரக்ஷணமும் அதைப் பரப்புவதிலும் தவிர பெரியவாளுக்கு வேறொரு விஷயமும் மனதிற்கு அத்தனை உகந்தது அல்ல.Categories: Devotee Experiences

Tags:

3 replies

  1. PRANAMS

  2. சரணம் சரணம் எம் குருவே! நீர்

    வரணும் வரணும் எம் அகமே!

    தரணும் தரணும் உம் அருளே!

    தருணம் தருணம் இதுவல்லவோ!

Leave a Reply

%d