Thanks Sri Venkatasubramanian for this precious info. Kudos to those who have compiled this information.
(1992-ஸ்ரீ மடத்தில் ஆயாசம் தீர அமர்ந்து கொண்டு அருள்பாலித்துக் கொண்டிருக்க, வழக்கம் போல மகாமகத் தீர்த்தம் மகானைத் தேடி வர – ஸ்நானமா, வெறும் ப்ரோக்ஷணமா என்று தெரியவில்லை – நடந்து முடிநதிருக்கும். அந்த வைபவத்தைக் கண்டவர் யாரேணும் உண்டோ? சொல்லுங்கள்!)
கட்டுரையாளர்-த.கி.நீலகண்டன்.
நன்றி-இவ்வார கல்கி.
ஸ்ரீ பெரியவாளின் பூர்வாசிரமத்தில், சுவாமிநாதன் என்கிற மூன்று வயது பாலகனாக அவர் கண்ட முதல் மகாமகம் 1897ல் வந்தது. இது பற்றிய நேரடித் தகவல்கள் இல்லாதபோதும், அந்நாட்களில் தேப்பெருமாநல்லூர் சிவன் என்கிற அன்னதான சிவனின் மகாமகப் புகழ் சமாராதனைகளைப் பற்றிப் பேசுகையில் ஸ்ரீ பெரியவாள் கும்பகோணத்திலுள்ள ஸ்ரீமடத்தின் சிவன் நடத்திய அன்னதான விமரிசைகளை வியந்து பேசியிருக்கிறார் பின்னாளில்.
சுவாமிநாதன், சந்திரசேகரேந்திர சரஸ்வதியாக காமகோடி பீடமேறிய 1907ஆம் வருடத்துக்குப் பின் இரண்டு வருடங்களில் 1909ம் ஆண்டு மகாமகம் வந்தது. அந்த காலகட்டத்தில் காமகோடிபீடத்தின் தலைமை ஸ்தானம் காஞ்சிபுரமல்ல – கும்பகோணம்தான்!
அடுத்தடுத்த இரண்டு பீடாதிபதிகள் சித்தியடைந்தவிட, புதிதாகப் பட்டமேற்ற பால சுவாமிகளின் முதல் மகாமகமல்லவா! கோலாகலமாக யானை மீது அம்பாரி வைத்து ஊர்வலம் நடந்தது! தஞ்சை அரச குடும்பத்தார் ஊர்வலத்தின் முன்னணியில் நடந்து சென்றனர்! கீலக வருஷம் மாசி 23, சனிக்கிழமை 6.3.1909-காமகோடி பீடத்தின் புத்தம் புது ஸ்வாமிகள் கலந்து கொண்ட வைபவம்! அப்போதைய பிரிட்டிஷ் சர்க்கார் விசேஷமாக ஏற்பாடுகளைச் செய்தார்களாம். மடத்தில் அன்னதான சிவனின் அன்னதானம் வெகு விமரிசை! அதற்குச் சேர்ந்த அரிசி, பருப்பு, மளிகைச் சாமான்களின் மிச்சம் மீது அடுத்த ஒரு வருடத்துக்கு மடம் நடத்தப் போதுமானதாயிருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
ரௌத்திரி வருஷம் மாசி 11ம் தேதி செவ்வாய்க்கிழமையில் (22.2.1921) அடுத்த மகாமகம் வந்தது. அப்போது ஸ்ரீ பெரியவாள் காசி ராமேஸ்வரம், கங்கா யாத்திரைக்கு முறைப்படி சங்கல்பம் செய்து கொண்டிருந்தார். (1919ல் தொடங்கிய கங்கா யாத்திரை – பாத யாத்திரை 21 வருடங்களில் பூர்த்தியாயிற்று!). அதுவரை கும்பகோணத்திலுள்ள ஸ்ரீ மடத்தில் நுழைந்தால் யாத்திரை சங்கல்பத்துக்கு பங்கமாகிவிடும் என்று, ஸ்ரீ பெரியவாள் கும்பகோணத்துக்கு வெளியே பட்டீசுவரத்தில் முகாமிட்டுக் கொண்டு, ஸ்நானத்துக்கும் ஸ்வாமி தரிசனத்துக்கும் கும்பகோணத்துக்குச் சென்று வந்தார். ஆசார அனுஷ்டானங்களில் பிறருக்கு முன் உதாரணமாக நடந்து காட்டும் பெரியவாளின் செயல்பாடுகளில் சூட்சுமமான தர்மங்கள் வெளிப்படுவதற்கு இது ஓர் உதாரணம்! அப்போதுதான் மகாமகக் குளத்தின் மையத்தில் உள்ள நீராழி மண்டபம் கட்ட அருளாணையிட்டு, மடத்திலிருந்து முதல் கொடையாக ரூபாய் ஐநூறு கொடுக்கும்படி உத்தரவாயிற்று!
1921 வருஷத்து மகாமகத்தின் முக்கியமான அம்சம், ஸ்ரீ பெரியவாள் 200 முஸ்லீம் இளைஞர்களுக்கு அனுக்கிரகம் செய்தது! மகாமகக் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் சேவையில் சென்னையில் இருந்து முஸ்லிம் இளைஞர் சங்கத்தைச் சேர்ந்த 200 வாட்டசாட்டமான இளைஞர்கள் கும்பகோணம் சென்று ஈடுபட்டனர். சறுசுறுப்பாகவும் ஒழுங்காகவும் இயங்கிய அந்த குழுவின் மீது பெரியவாளின் அருட்கடாட்சம் விழுந்தது.
வைபவங்கள் எல்லாம் முடிந்தவுடன் ஆள் அனுப்பி அந்த இளைஞர்களை பட்டீசுவரம் முகாமுக்கு அழைத்து வரச் செய்தாராம். ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகப் பேசி அவர்கள் குடும்பம், கல்வி ஆகிய விவரங்களைக் கேட்டு ஆசிர்வதித்து அத்தனை பேருக்கும் மடத்திலேயே அறுசுவை விருந்தளித்து ஒரு வௌ்ளிக் கோப்பையையும் விருதாக வழங்கினார். அதைப் போலவே சேவை செய்த காங்கிரஸ் தொடர்களையும் பாராட்டிப் பரிசளித்தார்.
இன்னொரு சுவாரஸ்யமான சந்திப்பும் அப்போது நிகழ்ந்தது. தேச பக்தரான சுப்ரமணிய சிவம் உடல் நலம் குன்றிய நிலையில் மகாமக வைபவத்துக்கு வந்தார். அவர் பட்டீசுவரத்து முகாமில் பெரியவாளைத் தரிசிக்க கூட்டத்தோடு கூட்டமாக காத்திருந்தபோது, காவி உடையில் துறவி போல காட்சியளித்த அவரை அடையாளம் கண்டுகொண்டு, அருகில் வரவழைத்துப் பேசினார். பூரித்துப்போன சிவம் ஸ்ரீ பெரியவாளின் முன் சமர்ப்பித்த பிரார்த்தனை என்ன தெரியுமா ‘தேசம் விரைவில் விடுதலை பெற வேண்டும்’ என்பதுதான்! (How many of us truly pray for loka kshemam?!)
அடுத்த மகாமகம் ஆங்கிரஸ வருஷம் மாசி 27ம் தேதி வந்தது (10.3.1933) யுத்தம் ஓய்ந்து பஞ்சமும் தொலைந்து காலம் மிகவும் சுபிட்சமாக காலமாக இருந்தது என்று இந்த வைபவத்தைப் பதிவு செய்தவர் எழுதுகிறார். போக்குவரத்து வசதிகள் நன்றாகச் செய்யப்பட்டிருந்தன. விசேனு ரயில்களும் பஸ்களும் மகாமகத்தையொட்டி இயக்கப்பட்டன. ஏற்பாடுகள் தடபுடல், கும்பகோணத்துப் போலீஸ் திறமையாகக் கூட்ட நெரிசலைச் சமாளித்து நிர்வகித்தார்கள். அன்றைய நாளிலேயே சுமார் 6 லட்சம் பேர் திரண்டார்கள்.
அப்போதும் ஸ்ரீ பெரியவாளின் கங்கா யாத்திரை பூர்த்தியாகாத நிலையில் சென்னையில் முகாமிட்டிருந்த பெரியவாள் இநத முறை திருவிடைமருதூரிலேயே தங்கிக் கொண்டார். ‘கலைமகள்’ பத்திரிகை அதிபர் நாராயணசாமி ஐயரின் வீட்டில் ஸ்ரீ மடம் முகாமிட்டது. மகாமகத்தன்று அதிகாலை 4 மணிக்குத் திருவிடைமருதூரில் இருந்து புறப்பட்டு 5 மணியளவில் மகாமகக் குளத்தில் ஸ்ரீ பெரியவாள் ஸ்நானம் செய்து கொண்டார். தீர்த்தவாரிக்காக எழுந்தருளிய சுவாமிகளையும் தரிசனம் செய்து கொண்டார். திரும்பவும் திருவிடைமருதூருக்கே திரும்பிவிட்டார். ஸ்ரீமடத்தினுள் பிரவேசிக்கவில்லை! ஆனால் சிவனின் அன்னதானம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது மடத்தில்.
1945ல் நடந்த மகாமகத்தின்போது ஸ்ரீ பெரியவாளின் கங்கா யாத்திரை பூர்த்தியாகியிருந்தது. எனவே, இந்த முறை கும்பகோணம் மடத்திலேயே பெரியவாள் முகாம்! ஆனால், மகாமகம் என்றாலே சிவனின் அன்னதானம் என்ற அளவில் பிரசித்திப் பெற்ற வைபவத்தின் காரணபூதரான தேப்பெருமாநல்லூர் சிவன் 1939லேயே சிவகதி அடைந்துவிட்டது தான் ஒருகுறை! தாரண வருஷம் மாசி 15, திங்கட்கிழமை 26.2.1945 அன்று நடைபெற்ற மகாமகத்தின் போது தந்தச் சிவிகையில் எழுநதருளி மகாமகக் களத்தை அடைந்தார் ஸ்ரீ பெரியவாள். சூரியோதயத்துக்கு முன் ஒரு ஸ்நானம். உச்சி போதில் இன்னொரு ஸ்நானம்!
மடத்தில் அன்னதானச் சிவன் பெயரால் நடைபெற்ற அன்னதானத்தில் இரண்டு குறைகள். ஒன்று, சிவன் உயிரோடு இல்லை! இரண்டு, ப்போதிருநத ரேஷன் சட்டம். அன்னதானத்துக்கு ரேஷன் அதிகாரிகளிடம் விசேஷ அனுமதி வாங்கித்தான் அன்னதானம் நடத்த வேண்டியிருந்தது. இருந்தாலும் தடையில்லாமல் அன்னதானம் நடைபெற்றது. பத்திரிகைகளில் வெளியான விளம்பரங்களை பார்த்து நாடெங்கிலும் இருந்து நன்கொடைகள் திரண்டதாம். தஞ்சாவூர் மிராசுதாரர்களும் மக்களும் சேர்ந்து அன்னதானம் சிறப்பாக அமைய உதவினார்கள! 1945ம் வருடத்து மகாமகமே ஸ்ரீ பெரியவாள் நேரில் கலந்து கொண்ட கடைசி மகாமகம்!
அடுத்து 1957ல் வரவேண்டிய மகாமகம் குருபகவானது அவசரத்தால் 1956லேயே வந்து விட்டது! மன்மதவருடம் (கவனிக்க! இந்த வருடமும் மன்மத வருடம்) மாசி 13, (25.2.1956) சனிக்கிழமையன்று வந்த மகாமகத்துக்கு ஸ்ரீ பெரியவாள் நேரில் எழுந்தருள முடியவில்லை! உடல் நலம் சரியில்லாத நிலையில் காஞ்சிபுரம் தேனம்பாக்கம் சிவாஸ்தானத்தில் பெரியவாள் இருந்தார். அன்று விடியற்காலை மகாமகக் குளத்தில் இருந்து தீர்த்தத்தைக் குடங்களில் நிரப்பி எடுத்துக் கொண்டு காரில் பறந்து பகல் 12 மணிக்குள் பெரியவாள் முன் சமர்ப்பிக்கப் பட்டது. மகாமகத் தீர்த்தத்தில் இன்று மதியான்ன ஸ்நானம் கண்டருளினார் ஸ்ரீ பெரியவாள்.
14.2.1968 – பில்வங்க வருஷம் மாசி 2, புதன்கிழமையன்று நிகழ்ந்த மகாமகத்தின் போது ஸ்ரீ பெரியவாளும் ஸ்ரீ புதுப்பெரியவாளும் ஆந்திராவில் பத்ராசலம் கும்பாபிஷேகத்துக்காக யாத்திரை மேற்கொண்டிருந்தார்கள். மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூரில் ஸ்ரீ மடம் முகாம்! அந்த வருடம் ஸ்ரீ பெரியவாளின் அருளாணைப் படி கும்பகோணம் ஸ்ரீ மடத்தில் அதிருத்ர மகாயக்ஞம் (121 ரித்விக்குகளைக் கொண்டு 11 நாடகள், தினமும் 11முறை) ஸ்ரீ மகாருத்ர ஜபம், ஹோமங்கள் அதிவிமரிசையாக நடைபெற்றது.
மகாமகத்தன்று காலை 11மணிக்கு ஜபஹோம கலச தீர்த்தங்கள் மகாமகக் குளத்தில் சேர்ப்பிக்கப் பெற்று, புனித நீர் மேலும் புனிதமாயிற்று! அன்று ஸ்நானம் செய்த 10 லட்சம் பேருக்கு இரட்டை லாபம்!
வழக்கம்போல விமரிசையாக அன்னதானம் – ஆமாம் – சிவன் பெயரில்தான்! அன்றும் அதிகாலையில் இரண்டு குடங்களில் மகாமக தீர்த்தம், இரண்டு குடங்களில் காவேரி தீர்த்தம் இவற்றை நிரப்பிக் கொண்டு கும்பகோணத்திலிருந்து கார் பறந்தது! திருச்சி விமான நிலையத்தில் தயாராக இருந்த தனி விமானத்தில் ஏற்றப்பட்டு வானில் பறந்தது! விஜயவாடா அருகில் உள்ள கன்னவரம் விமான நிலையத்தில் இறங்கி, 60 கி.மீ. தூரத்தில் உள்ள ஏலூருக்குப் பிற்பகல் 12 மணிக்குப் புனிதநீர்க் குடங்கள் வந்து சேர்ந்துவிட்டன!
அவ்வூருக்கு அருகில் கோதாவரி – கிருஷ்ணா நதிக் கால்வாய்கள் சங்கமிக்கும் இடத்தில் ஸ்ரீ பெரியவாள் – புதுப் பெரியவாள் ஸ்நான விசேஷத்தோடு மகாமகப் புனித நீரும் காவிரி நீரும் சங்கமித்தன. கூடியிருந்த பக்தர்களுக்கு ஆறு மடங்கு (கோதாவரி – கிருஷ்ணா – காவிரி – மகாமகக்குளம் – ஸ்ரீ பெரியவாள் – ஸ்ரீ புதுப் பெரியவாள் ஸ்நானம் செய்த ஆறு புண்ய தீர்த்த விசேஷங்கள்) லாபம்!
1980 – சித்தார்த்தி வருடம் மாசி 18, சனிக்கிழமை (1.3.1980) அடுத்த மகாமகம். அப்போது ஸ்ரீ பெரியவாள் பண்டரிபுர யாத்திரையில் கர்நாடகத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள உகார் என்கிற ஊரில் முகாமிட்டிருந்தார்கள். வழக்கம் போல மகாமகத் தினத்தன்று அதிகாலையில் குளத்தில் தீர்த்தம் எடுத்து குடங்கள், கார் – விமானம் மூலமாகப் பெரியவாள் சன்னிதிக்குப் பறந்து வந்தன. கிருஷ்ணா நதிக்கரையில் பெரியவாள் மகாமக ஸ்நானம் செய்தார்கள்.
1992 பிரஜோத்பத்தி வருடம் மாசி 6, செவ்வாய்க் கிழமை (18.2.1992) நடைபெற்ற மகாமகம் நம்மில் எல்லோருக்கும் மனத்தைவிட்டு அகலாத மகாமகம்! (பல காரணங்களால்) தம் வாழ்நாள் எல்லாம் பாரத தேசத்தின் மண்ணில் கால்பதிய நடந்து நடந்து புனிதமாக்கிய நடமாடும் தெய்வம், 98 பிராயத்தின் முதிர்வில் தளர்ந்து மூங்கில் ஆசனத்தில் தம் சரீரத்தை முடக்கிக் கொண்டு விட்டபோதிலும் தம் அருட்கடாக்ஷத்தைப் பெரும் புனலாகப் பிரவகிக்கச் செய்த ஸ்ரீ மடத்தில் ஆயாசம் தீர அமர்ந்து கொண்டு அருள்பாலித்துக் கொண்டிருக்க, வழக்கம் போல மகாமகத் தீர்த்தம் மகானைத் தேடி வர – ஸ்நானமா, வெறும் ப்ரோக்ஷணமா என்று தெரியவில்லை – நடந்து முடிநதிருக்கும். அந்த வைபவத்தைக் கண்டவர் யாரேணும் உண்டோ? சொல்லுங்கள்!
Categories: Devotee Experiences
Blessed to read this great article…..
English translation please
ஸ்வாமி இதை போஸ்ட் பண்ணியதே நான் தான்
All Devotees who read this will have the Experience of Maha Magha Theertha Snaanam nine times along with Maha Periyava’s Abundant Blessings, though many of us might not have been born in early 20th century! Om Nama Shivaaya! Hara Hara Shankara, Jaya Jaya Shankara! Maha Periyava ThiruvadigaLe CharaNam!
ஜய ஜய சங்கர
ஹர ஹர சங்கர
Reblogged this on Gr8fullsoul.