அருளே அறிவே அமுதே! – சுப்பு ஆறுமுகம்

Thanks to Sri Halasaya Sundaram Iyer for the share..What a great blessing to Sri Arumugam?!!! Don’t miss!!

subbu arumugam.jpg

எழுத்தாக்கம்: எஸ். சந்திரமௌலி –நன்றி கல்கி&பால ஹனுமான்

என் வாழ்க்கையில் நான் பெற்ற மிகப் பெரிய பேறு ஒன்று உண்டென்றால், அது ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி மஹா சுவாமிகளுடைய திருவருள்தான். திருநெல்வேலி மண்ணைச் சேர்ந்த இந்தச் சுப்பு ஆறுமுகம் வில்லுப்பாட்டு நடத்தி அதன் மூலமாக ஓரளவுக்குப் பெயரும் புகழும் பெற்றிருந்தேன்.
ஆனாலும், என் வாழ்க்கையில் ஏதோ ஒரு தேடல் இருந்தது. நான் தேடிக் கொண்டிருக்கிற பொருள் ஏதோ ஒரு பெரிய பொருள் என்பது மட்டும் எனக்குப் புரிந்தாலும், எதை நான் தேடிக்கொண்டிருக்கிறேன் என்பது எனக்குப் புரியவில்லை. அப்படிப்பட்ட கால கட்டத்தில் ஒருநாள் எதேச்சையாக கடைத் தெருவில் என்னுடைய நண்பர் ஒருவரைச் சந்தித்தேன்.

மிகுந்த ஆன்மிக நாட்டம் கொண்டவரான அவர் நான் சற்றும் எதிர்பாராதவகையில், காஞ்சிபுரம் போய் பெரியவாளை தரிசனம் பண்ணிட்டு வரலாம்னு இருக்கேன். நீங்களும் வரீங்களா?” என்று கேட்டார். நானும் உடனே ஓ! வரேனே!” என்று சொன்னேன்.

வீட்டுக்குப் போய் விஷயத்தைச் சோன்னபோது, என் மனைவிக்கு ஆச்சரியம். என்ன திடீர்னு காஞ்சிபுரம்?” என்று கேட்டார். நண்பர் கூப்பிட்டார். எனக்கும் போகணும்னு தோணிச்சு!” என்று பதில் சொல்லிவிட்டு நண்பரோடு மஹா பெரியவரை தரிசிக்க, காஞ்சிபுரத்துக்கு பஸ் பிடித்தேன்.

அப்போது, மஹா சுவாமிகள் காஞ்சி மடத்தில் இல்லாமல் தேனம்பாக்கத்தில் முகாமிட்டிருந் தார். தேனம்பாக்கம் செல்லும் வழியில் என்னைப் போலவே மஹா சுவாமிகளைத் தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். சிலர் உரக்க ‘ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர’ என்று முழங்கிக் கொண்டிருந்தார்கள். சிலர் மனத்துக்குள்ளேயே ஜபித்துக் கொண்டிருந்தார்கள். இதெல்லாம் எனக்குப் புதுசு என்பதால் வியப்புடன் சென்று கொண்டிருந்தேன்.

தேனம்பாக்கம் ஒரு சிற்றூர். மஹா சுவாமிகள் முகாமிட்டிருந்த இடத்தை நெருங்கிய போது அங்கே அரை கிலோ மீட்டருக்கு பக்தர்களின் கியூ. சங்கர கோஷம் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. நான் மெய்மறந்து அந்த வரிசையில் கரைந்தேன்.
அதற்குமுன் மஹா சுவாமிகளை நான் தரிசித்ததில்லை. அவரைத் தரிசிக்கும்போது ‘பேசலாமா? கூடாதா? பேசலாமென்றால் என்ன பேசுவது? ஏதாவது கேள்விகள் கேட்லாமா?’ எனக்குள்ளே விடை தெரியாத பல கேள்விகள்.

கியூ என்னை முன்னே அழைத்துக்கொண்டு போனது. சுமார் எட்டு மணிக்கு கியூவில் சேர்ந்த நான் மஹா சுவாமிகளை அருகில் கண்டபோது மணி பதினொன்று.
அந்த அறிவுச் சுடர் முன்னால் நான் ஒரு அறியாச் சிறுவனாக நின்றது மட்டுமில்லை, சாமி! நான் சுப்பு ஆறுமுகம். நமஸ்காரம் செய்யறேன்” என்று சொல்லி, அவரை நமஸ்கரித்து என் அறியாமையையும் வெளிப்படுத்தினேன்.

ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், இப்படி அறிவித்துவிட்டு நமஸ்கரிப்பதெல்லாம் அங்கே மரபில்லை. அவரை அண்மையில் தரிசித்த கணத்தில் எனக்கு மெய்சிலிர்த்தது. புதையல் கிடைத்ததோ, இல்லை முந்தைய பிறவியில் இழந்த ஒரு பொருளை நான் இப்போது கண்டெடுத்தேனோ என்று நினைக்கத் தோன்றியது. தேடிக் கொண்டிருந்த பொருள், என் மடியில் வந்து விழுந்தது போன்ற மகிழ்ச்சி.

திருநெல்வேலி நெல்லையப்பரா? காந்திமதி அம்மனா? ஏகாம்பரேஸ்வரரா? காஞ்சி காமாட்சியா? இல்லை அவர்கள் அனைவரும் ஒரு சேரக் காண்கிறேனா? ‘பித்தா பிறைசூடி’ என்பது போல பித்துப் பிடித்த நிலையில் நான் இருந்தேன். என்னையும் அறியாமல் என் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது. அந்த அழுகை கூட ஒரு வகை தொழுகைதானே?

அறியாப்பிள்ளையாக அறிவித்துவிட்டு நமஸ்கரித்தாலும் என்னை மஹா சுவாமிகள் தன் இருகரம் தூக்கி ஆசீர்வதித்தார்கள். தொடர்ந்து, பக்தர்களுக்குப் பிரசாதம் கொடுக்கத் தொடங்கினார். சற்றே தள்ளி நின்று கொண்டிருந்தேன். நம்மை அவர் கவனிக்கவில்லையே என மனத்துக்குள்ளே ஏக்கம். அதே நேரம், தரிசனத்துக்கு வருகிற பக்தர்கள் எல்லோரும் பழம், பூ, கற்கண்டு என்று வாங்கிக் கொண்டு வந்ததை அவர் முன் சமர்ப்பிக்கிறார்கள். வெறும் கையோடு வந்தவர் யாருமில்லை.

அப்போதுதான் எனக்கு உறைத்தது, ‘அடடா! நாம ஒண்ணும் வாங்கிட்டு வரலியே?’ குற்றஉணர்வில் சற்றே குறுகிய கணத்தில் மஹா சுவாமிகள் என்னைப் பார்த்துக் கேட்கிறார், ஆஹம, சிற்ப சதஸ் நடக்கிறதே! நோக்குத் தெரியுமா?” கேள்வி கேட்கிறவர் யார் என்பதை உணராமலேயே சட்டென்று பதில் சொல்லி விட்டேன். தெருவுல வால் போஸ்டர் ஒட்டி இருக்கு. பார்த்தேன்.”

லேசாகச் சிரித்துவிட்டு மௌனமாக மீண்டும் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கத் தொடங்கினார். சில நிமிடங்களுக்குப் பிறகு, மீண்டும் என்னை நோக்கி, அதுல நீ திருநாவுக்கரசர் சரித்திரம் சொல்லறே!” என்று உத்தரவு வந்தது. பெரும் புதையல் கிடைத்த சந்தோஷம் எனக்கு. ஒரு கணமும் தாமதிக்காமல், நிகழ்ச்சிக்கு சாமி வரணும் என்பது என் வேண்டுகோள்.”

அதற்கு அவரிடமிருந்து, வரேண்டா!” என்று பதில் வந்தபோது என் சந்தோஷம் இரட்டிப்பானது.

மஹா சுவாமிகளிடமிருந்து இன்றைக்கு உத்தரவு வந்தது. மறுநாள் கதைசொல்லவேண்டும். நான் வில்லுப்பாட்டில் பல கதைகள் சொல்லி இருந்தாலும், திருநாவுக்கரசர் கதையை அதுவரை சொன்னதில்லை.

வீட்டுக்கு வந்ததும் குளித்துத் தயாராகி, பூஜை அறையில் அமர்ந்து மஹா சுவாமிகளை தியானித்தேன். திருநாவுக்கரசர் கதையை எழுத ஆரம்பித்தேன். நாவுக்கரசர் கதையை நான் வில்லில் சொல்லவில்லை என்றாலும், மதுரை தமிழ்ச் சங்கத்தில் புலவர் படிப்புக்குப் படித்தபோது திருநாவுக்கரசர் சரித்திரம் படித்திருக்கிறேன்.

அது பரீட்சையில் மார்க் வாங்க வேண்டும் என்பதற்காகப் படித்தது. ஆனாலும் அதை ஒரு அடிப்படையாக வைத்துக் கொண்டு காமாட்சி அம்மனையும் மஹா சுவாமிகளையும் மனத்திலே இருத்திக்கொண்டு எழுத ஆரம்பித்தபோது, திருநாவுக்கரசர் கதை வில்லிலே பிறந்தது. எழுதி முடித்த நாவுக்கரசர் கதையில் நாற்பத்தாறு பாடல்கள் இடம்பெற்றன.

மஹா சுவாமிகள் திருவருளாலே அந்தப் பாடல்களில் பொருத்தமான இடங்களில் மிகவும் பொருத்தமான வார்த்தைகள் வந்து அமர்ந்துகொண்டன என்று சொன்னால் அது சற்றும் மிகையில்லை. உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். திருநாவுக்கரசரின் தமக்கையார்,

ஒரு கால் தூக்கி ஆடிடும் இறைவா
ஒருகால் இது உன் சோதனையோ?

என்ற வரிகளை கவனியுங்கள். முதலில் வருவது ஒரு காலைத் தூக்கி சிதம்பரத்திலே நடனம் ஆடிக் கொண்டிருக்கும் நடராஜப் பெருமான். அவரிடம் நாவுக்கரசரின் தமக்கை தன் சகோதரனுக்கு இத்தகையை ஒரு சோதனை வந்திருப்பது ஒருகால் உன்னுடைய சோதனையோ? என்று வினவுகிறார்.

அது மட்டுமில்லே, தொடர்ந்து தூக்கிய காலால் என் சகோதரனைத் தூக்கிவிடு (அதாவது மாற்று மதத்துக்குப் போன அவனை மன்னித்து, அவனுக்கு அருள் செய்துவிடு). இல்லையேல் உன்னுடைய தூக்கிய காலால் அவனைத் தாக்கிவிடு, அதாவது அவனை நீயே அழைத்துக்கொள்; அவன் கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை” என்று வரும். இப்படி பல ரசிக்கத்தக்க விஷயங்கள் அதில் இடம்பெற்றன.

மஹா சுவாமிகள் உத்தரவுப்படி, நாவுக்கரசர் சரித்திரத்தை எழுதி முடித்து, என்னுடன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆறு கலைஞர்களை அழைத்துக் கொண்டு காஞ்சிபுரத்துக்குப் புறப்பட்டேன்.

மஹா சுவாமிகளை முதல் முறையாகத் தரிசனம் செய்ததருணத்திலேயே இப்படி ஒரு அரிய வாய்ப்பினை அருளி இருக்கிறாரே என்ற மகிழ்ச்சி; நெகிழ்ச்சி ஒரு பக்கம். மஹா சுவாமிகள் முன்னிலையில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சி நல்லபடியா நடக்க வேண்டுமே என்ற லேசான கலக்கம், குழப்பம் இன்னொரு பக்கம். பாரத்தை மஹா சுவாமிகளின் பாதங்களிலேயே இறக்கி வைத்துவிட்டு, காஞ்சிபுரம் அடைந்தோம்.

கங்காபாய் தோட்டம் என்ற இடத்தில் நிகழ்ச்சி என்பதாக நினைவு. மாலை ஆறு மணிக்கு மற்ற கலைஞர்கள் மேடையில் அமர்ந்து நிகழ்ச்சிக்குத் தயாரானார்கள். நான் மட்டும், நுழைவாயில் பகுதியிலேயே மஹா சுவாமிகளை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

நிர்வாகிகள், நேரமாயிண்டிருக்கு; புரோகிராமை ஆரம்பியுங்கோ!” என்று சொன்னார்கள். சாமி வரேன்னு சொல்லி இருக்காரு; அதனால அவர் வந்ததும் ஆரம்பிக்கிறேன்” என்று நான் சொன்னதை அவர்கள் ரசிக்கவில்லை.

நீ வரணும்னு கேக்கிற போது, உன் மனசு நோகக் கூடா துன்னு அப்படித்தான் பெரியவா சொல்லியிருப்பா! உமக்கு ஒண்ணு தெரியுமா? பெரியவா, காஞ்சிபுரத்துலேர்ந்து, தேனம்பாக்கம் போனதுக்கப்புறம், இங்க மடத்துக்கு வரவேயில்லை! இன்னமும் லேட்டாக்கினா, உமக்குக் கொடுத்திருக்கிற நேரம் தான் குறையும்; டயத்தை வேஸ்ட் பண்ணாம சட்டுபுட்டுன்னு ஆரம்பியுங்க!” என்றார்கள்.

நான் அரைகுறை மனத்துடன் மேடைக்குப் போய் அமர்ந்து வில்லை எடுத்து வைத்து என் காலில் கட்டிக் கொண்டு (நிகழ்ச்சியின்போது வில் அப்படி, இப்படி அசையாமல் இருக்க அதைக் காலில் கட்டிக் கொள்வது மரபு) கனத்த மனத்துடன் நிகழ்ச்சியைத் தொடங்க ஆயத்தமானேன்.

அந்தக் கணத்தில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர” கோஷம் முழங்கியது.

அங்கே திரண்டிருந்த ஆன்மிக அன்பர்கள் மத்தியில் ஒரு பரபரப்புத் தொற்றிக் கொண்டது. நான் நாவுக்கரசர் கதையை ஆரம்பிக்காமல், நுழைவாயிலையே பார்த்தபடி உட்கார்ந்துகொண்டிருந்தேன்.

அடுத்த சில நிமிடங்களில் மஹா சுவாமிகள் அந்த இடத்தில் பிரவேசித்தார்கள். அவரது திரு உருவத்தைக் கண்ட மாத்திரத்தில் எனக்குள்ளே ஒரு இனம் புரியாத உணர்வு. ‘காஞ்சிபுரத்தைவிட்டு தேனம்பக்கத்தில் முகாமிட்டிருக்கும் சாமி, நம்ம திருநாவுக்கரசர் கதை கேக்கணும்னு வந்திருக்காரே!’ என்ற ஆனந்தத்தில் என் கண்கள் நீர் பெருக்கிட்டன.

மஹா சுவாமிகள் தனக்குரிய ஆசனத்தில் அமர்ந் தவுடன், நிர்வாகி அவசரம் அவசரமாக என்னிடம் வந்து, போய் பெரியவாளை நமஸ்கரிச்சிட்டு வந்து ஆரம்பிச்சிடுங்க!” என்று காதைக் கடித்தார்.

காலில் வில்லைக் கட்டிக் கொண்டு மேடையில் அமர்ந்த பிறகு எழுந்திருப்பது மரபில்லை; எனவே, இல்லை; நான் சாமியை இங்கிருந்தே கும்பிட்டுவிடுகிறேன்” என்று சொன்னதை அவர் ஏற்கவில்லை என்பதை அவரது முகம் சொல்லியது. ஆனாலும், மேடையிலிருந்தே அந்தக் காஞ்சி மஹானை அருளை, அறிவை, அமுதை வணங்கி விட்டு நிகழ்ச்சியைத் தொடங்கினேன்.

மஹா சுவாமிகளின் கைகள் மேடையை நோக்கி உயர்ந்து ஆசீர்வதித்தன. மேடையிலிருந்தே நான் அவரை வணங்கியதற்கு ஒரு விளக்கமும் அளித்தேன். அதை ஆமோதிப்பது போல இருந்தது அவரது ஆசீர்வாதம்!



Categories: Devotee Experiences

7 replies

  1. Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

  2. haran hara sankara jaya jaya sankara

  3. Jaya Jaya Shankara Hara Hara Shankara

  4. எனை ஆட்கொண்ட
    பெரியவா சரணம் போற்றி.

  5. our tireless efforts ,hard work and GOD’S blessings give big lift in our life.true.mr.subbu arumugam’s hard work and self confidence got MAHAPERIVA’S blessing in the biginning itself.his hard work has given success in his life he is a blessed person..he makes his programme lively with his own way of perfomance.

  6. கொடுத்து வைத்தவர் தான் சுப்பு ஆறுமுகம் அவர்கள்.

  7. மிக அற்புதம். அவா் அருளிருந்தால் நடவாதது எதுவோ

Leave a Reply to Cuddalore RamjiCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading