ஜாதி, மதம் அனைத்தையும் கடந்த புதுப் பெரியவா

 

Pudhu_Periyava_Sitting

நமஸ்காரம்.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

நான் வசித்து வரும் கிழக்கு தாம்பரத்தில் என் இல்லம் அருகே வசித்து வரும் திரு ஸுவாஸினி கிருஷ்ணமூர்த்தி மாமா (காஞ்சி மடத்து பக்தர்) ஒரு நாள் என்னை அழைத்தார்.

‘‘புதுப் பெரியவாளோட சம்பந்தப்பட்ட பக்தாள் அனுபவங்களை எல்லாம் ஒரு மலரா மும்பைல தயார் பண்ணிண்டு இருக்கா. அதுல என்னோட எக்ஸ்பீரியன்ஸையும் கேட்டுக்கா. இது என் பாக்கியம். நான் அப்படியே விஷயத்தைச் சொல்றேன். நீ கோர்வையா எழுதிக் கொடேன்’’ என்று கேட்டார்.

குருவுக்கு கைங்கர்யம் செய்வது பாக்கியம் அல்லவா? ‘‘சொல்லுங்கோ மாமா’’ என்று குறிப்பெடுத்துக் கொண்டேன்.

புதுப் பெரியவா சம்பந்தப்பட்ட மூன்று அற்புதமான நிகழ்வுகளை அவர் சொன்னார். அதை பக்தகோடிகள் அனைவரும் படித்து, புதுப் பெரியவாளின் ஆசி பெற வேண்டும் என்பதற்காக இங்கே தந்துள்ளேன்.

இந்த பாக்கியத்தை எனக்குக் கொடுத்த மாமாவுக்கு நன்றி.

மகா பெரியவா சரணம்.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்
*********************************

ஜாதி, மதம் அனைத்தையும் கடந்தவர்கள் மகான்கள்.

‘ப்ரம்மம் ஏகம்’ என்பதுதான் பக்தியின் நிலைப்பாடு. எத்தனையோ தெய்வங்கள் இருந்தாலும், எல்லா தெய்வங்களும் ஒன்று போல்தான் அருளுகின்றன.

அதுபோல் இந்த பூமியில் எத்தனையோ மகான்கள் அவதரித்தாலும், அவர்கள் அனைவருமே நம்மை ஆசிர்வதிக்கப் பிறந்தவர்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

புனிதமும் பாரம்பரியமும் நிறைந்த காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடத்தின் ஒரு பக்தன் என்ற முறையிலும், புதுப் பெரியவா என்று அன்புடன் அழைக்கப்படும் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுடன் நெருங்கி பல சத் கார்யங்களை செய்தவன் என்ற முறையிலும், நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

என் நினைவில் என்றென்றும் நிழலாடிக் கொண்டிருக்கும் மூன்று முக்கியமான சம்பவங்களை – புதுப் பெரியவாளின் பரிபூரண ஆசியுடன் இந்த வேளையில் உங்களுடன் பகிர்ந்து கொள்வது நான் பெற்ற பேறாகக் கருதுகிறேன்.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் உற்பத்தி ஸ்தானமான தலைக்காவிரியில் ஒரு முறை புதுப் பெரியவாளுடன் இருந்தேன். என்னுடன் ஓரிரண்டு மடத்து அன்பர்கள்.

அன்றைய தினம் அதிகாலை மூன்று மணிக்கு காவிரி ஸ்நானத்துக்காக புதுப் பெரியவாளுடன் நாங்களும் போனோம்.

பொதுவாக, கடும் குளிர் எடுக்கக் கூடிய அந்த வேளையில் எவரும் ஸ்நானம் செய்ய வர மாட்டார்கள். ஆனால், அன்றைக்கு வழக்கத்துக்கு மாறாக கசகசவென்று கூட்டம். விடிந்தும் விடியாத அந்த வேளையில் டூரிஸ்ட்டுகள் போல் கூடி இருக்கும் இவர்கள் யாராக இருக்கும் என்று உற்றுப் பார்த்தால் ஆச்சரியம்!

தலைக்காவிரியை ஒட்டி இருக்கக் கூடிய பகுதிகளில் வசிக்கக் கூடிய பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மக்கள்.

அவர்கள் அனைவரும் புதுப் பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்து விட்டு, ‘சாமீ… நாங்கல்லாம் இங்க குளிக்கக் கூடாதுன்னு எங்களுக்கு அனுமதி மறுக்கறாங்க… காவிரி எங்களுக்கும் தாய் மாதிரிதானே! நாங்களும் இந்தக் காவிரில குளிக்கறதுக்கு நீங்கதான் அரசுகிட்டேர்ந்தும், உயர்ஜாதியினரிடம் இருந்தும் அனுமதி வாங்கித் தரணும்’ என்று கோரஸாக சொன்னார்கள்.

‘நீங்க எல்லோரும் நாளைக்குக் கார்த்தால இங்கே வாங்க… எல்லாருமே குளிக்கலாம். உங்களோட சேர்ந்து நானும் ஸ்நானம் செய்யறேன்’ என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்த புதுப் பெரியவா, அன்றைய தினம் பகல் பொழுதில் அந்த மாவட்டத்தின் கலெக்டர் முதற்கொண்டு அனைத்து அரசு அதிகாரிகளுக்கும், உயர் ஜாதி வகுப்பினருக்கும் தகவல் சொல்லி அனுப்பினார். அடுத்த நாள் காலை வேளையில் அனைவரும் அங்கு இருக்கும்படி செய்தார்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களும் ஏற்கெனவே பேசியபடி அங்கே திரள… ‘காவிரியில் அனைவருக்கும் உரிமை உண்டு. நதி என்பவள் அனைவருக்கும் தாய் மாதிரி. எந்த விதமான பேதமும் வேண்டாம்’ என்று அனைவரிடமும் எடுத்துச் சொல்லி பிற்படுத்த வகுப்பினரோடு தானும் ஸ்நானம் செய்து, அனைவரையும் ஆசி செய்து அனுப்பினார்.

இத்தகைய பேறு பெற்ற அந்த மக்கள், காலாகாலத்துக்கும் இந்த வரத்தை மறக்க மாட்டார்கள்.

இரண்டாவது நிகழ்ச்சி – மதம் சம்பந்தப்பட்டது.

தற்போது காஞ்சியின் மையப் பகுதியில் ஸ்ரீசங்கர மடம் அமைந்திருக்கக் கூடிய இடம் எல்லோரும் அறிந்ததே. ஆனால், பல வருடங்களுக்கு முன் இந்த இடம் காஞ்சி ஸ்ரீமடத்துக்கு சொந்தமானது அல்ல. அப்போது இந்த இடத்தை ஸ்ரீமடத்தின் செயல்பாட்டுக்கு தானம் வழங்கியவர் – ஆற்காடு நவாப்பாக இருந்தவர். இப்போது ஆற்காடு நவாப் பரம்பரையினர் சென்னை ராயப்பேட்டையில் பிரபலமான அமீர் மஹாலில் வாழ்ந்து வருகிறார்கள்.

நான் இப்போது சொல்லப் போகிற இந்த நிகழ்வு சுமார் 25 வருடங்களுக்கு முன் நடந்தது.

காஞ்சி ஸ்ரீமடத்துக்கு எந்த நவாப் இடத்தை வழங்கினாரோ, அவருக்குத் திடீரென உடல் நலம் குன்றியது. ‘இன்னும் ஒரு சில நாட்களில் அவரது உயிர் பிரிந்து விடும்’ என்று மருத்துவர்களும் ஒரு காலக் கெடுவை நிர்ணயித்துச் சொல்லி இருந்தார்கள்.

இந்த வேளையில், ஸ்ரீமடத்துக்கு இடத்தை தானம் வழங்கிய அந்த நவாப், தன் கடைசி வேளையில் புதுப் பெரியவாளை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். தனது ஆசையை குடும்பத்தினரிடம் சொல்லி இருக்கிறார்.

‘இப்போது இவரது உடல் இருக்கிற நிலையில் காஞ்சிக்கு எப்படி அழைத்துச் செல்வது? அந்த மகான் காஞ்சியில் அல்லவா இருக்கிறார்’ என்று குடும்பத்தினர் யோசித்தார்கள். இருந்தாலும், இந்த விஷயம் அவரது மகன் மற்றும் இரண்டு நண்பர்கள் மூலம் புதுப் பெரியவாளுக்குத் தெரிவிக்கப்பட்டது. ‘நாங்கள் சக்கர நாற்காலியில் அவரை எப்படியாவது அமர்த்தி அழைத்து வந்து விடுகிறோம். கூட்டிக் கொண்டு வருவதற்குத் தாங்கள் உத்தரவு வழங்க வேண்டும்’ என்று கேட்டிருக்கிறார்கள்.

புதுப் பெரியவா யோசித்தார். ‘இந்த நிலையில் அவரை இங்கு அழைத்து வர வேண்டாம். மேலும் சிரமம் தரக் கூடாது. அடுத்த வாரம் சென்னை சங்கராலயத்துக்கு வருகிறேன். அப்படியே நானே நேரில் வந்து பார்க்கிறேன்’ என்று அவர்களிடம் சொன்னார் புதுப் பெரியவா.

அதன்படி சென்னை சங்கராலயத்துக்கு அதிகாலையில் வந்து விட்டார் புதுப் பெரியவா. என்னை பகல் 11 மணிக்கு அழைத்து, ‘பிற்பகல் 3 மணிக்கு அமீர் மஹால் வருகிறோம் என்று ஆற்காடு நவாப் குடும்பத்துக்குத் தகவல் சொல்லி விட்டு, இதற்கான ஏற்பாடுகளைக் கவனி’ என்று எனக்கு உத்தரவிட்டார்.

அனைத்தையும் செய்யும் பாக்கியம் கிடைத்தது. ஸ்ரீமடத்து வரலாற்றிலேயே இல்லாத வழக்கமாக புதுப் பெரியவாளின் வேன் அமீர் மஹாலில் நுழைந்தது. இன்னமும் நன்றாக நினைவில் இருக்கிறது… வேன் உள்ளே நுழைந்தவுடன் உடல் நலம் பாதிக்கப்பட்ட ஆற்காடு நவாப்பின் மகன் (இளவரசர்) அந்த வேனை உணர்ச்சிப் பெருக்குடன் பிடித்தபடியே வேகமாக உள்ளே வந்தார்.

அமீர் மஹாலின் மிகப் பெரிய ஹாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் புதுப் பெரியவா. அங்கே பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. அங்கே அமர்ந்தார் புதுப் பெரியவா.

மேடைக்கு முன்புறம் பார்த்தால் புதுப் பெரியவா உட்பட நாங்கள் அனைவரும் பிரமித்துப் போனோம். ஆற்காடு இளவரசர் குடும்பத்துக்கு மிகவும் வேண்டப்பட்ட – சென்னையில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள இஸ்லாமியப் பிரமுகர்கள் தங்கள் குடும்பத்துடன் அங்கே அமர்ந்திருந்தார்கள். எப்படியும் சுமார் 500 பேராவது இருப்பார்கள்.

எங்களை எல்லாம் உணவருந்தச் சொன்னார்கள். ‘சைவ உணவு வகைகளை மிகவும் சுத்தமான முறையில் தயாரித்திருக்கிறோம்’ என்றார்கள்.

மேடையில் புதுப் பெரியவாளுக்கு முன் ஏராளமான பழங்கள். ஒவ்வொரு குடும்பத்தவராக புதுப் பெரியவாளிடம் வந்து பிரசாதமாக பழங்களைப் பெற்றுச் சென்றார்கள். அவர்களின் நலம் விசாரித்தார் புதுப் பெரியவா.

அதன் பின் அங்கிருந்து அவர்கள் வசிக்கின்ற இடத்துக்குச் செல்லும்போது உடல்நலம் பாதிக்கப்பட்ட முதியவர் (ஸ்ரீமடத்துக்கு இடம் தானம் செய்தவர்) சக்கர நாற்காலியில் கைகளைக் கூப்பிக் கொண்டு கண்களில் நீருடன் காணப்பட்டார்.

அவர் அருகே சென்று சக்கர நாற்காலியில் கையை வைத்துக் கொண்டு ஐந்து நிமிடம் பேசி விட்டு, ஆப்பிள் பழத்தைப் பிரசாதமாகத் தந்து, அங்கிருந்து புறப்பட்டார் புதுப் பெரியவா.

அனைத்து இஸ்லாமியத் தோழர்களும் வேனுடன் வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்த காட்சியை இன்றும் மறக்க முடியாது.

‘பாவம்டா… கடைசி காலத்துல இருக்கார். இன்னிக்கு மடம் இந்த அளவுக்கு வளர்ந்திருக்குன்னா அதுக்கு இந்தப் பெரியவரும் ஒரு காரணம். இவாதான் இடம் கொடுத்தா… அவாளுக்கு நாம செய்யற நன்றிக் கடன்டா இது’ என்று என்னிடம் நெகிழ்ச்சியுடன் சொன்னார் புதுப் பெரியவா.

மூன்றாவதாக நான் சொல்லப் போவது இந்தியாவின் மிக முக்கியமான ஒரு கிறிஸ்துவ அன்பருக்கு புதுப் பெரியவா ஆசி வழங்கிய சம்பவத்தை! அந்தப் பிரமுகர் – உயர்திரு பி.ஏ.சங்மா அவர்கள். அப்போது டெல்லி லோக்சபா சபாநாயகராக இருந்தார்.

புதுப் பெரியவா டெல்லியில் முகாம். நானும் உடன் இருந்தேன்.

பி.ஏ.சங்மா அவர்கள், லோக்சபாவைப் பார்வையிடுவதற்காக (சபா நடைபெறாத ஒரு நாளில்) புதுப் பெரியவாளை அன்புடன் அழைத்திருந்தார்.

புதுப் பெரியவாளும் இதை ஏற்றுக் கொண்டு உடன் நானும் இன்னும் ஒரு சிலரும் போனோம்.

லோக்சபா முழுவதும் சங்மாவே சுற்றிக் காண்பித்தார். அவரது (சபாநாயகர்) இருக்கைப் பகுதிக்கு வந்ததும் புதுப் பெரியவாளிடம், ‘ஒரு முறை இந்த இருக்கைல நீங்க உக்காரணும்’ என்று திடீரென்று சங்மா ஒரு வேண்டுகோள் வைத்தார்.

புதுப் பெரியவா உட்பட அனைவரும் அதிர்ந்து போனோம். ‘இல்லப்பா… இது உன்னோட இருக்கை. அந்தந்த ஸ்தானத்தில் உள்ளவர்கள்தான் சம்பந்தப்பட்ட இருக்கைகளில் அமர வேண்டும். இதுதான் மரபு’ என்று புதுப் பெரியவா நாசூக்காக மறுத்தார்.

‘இல்லை… புதுப் பெரியவா ஒரு முறை உக்காரணும்… தாங்கள் ஒரு முறை இந்த இருக்கையில் அமர்ந்தால், இந்த மன்றம் புத்துணர்வும் பொலிவும் பெற்றதாக நான் கருதுவேன்’ என்று மீண்டும் உணர்ச்சிப் பிரவாகமாகச் சொன்னார் சங்மா.

புதுப் பெரியவா ஒரு புன்னகையுடன் மீண்டும் மறுத்து விட்டு, அந்த மன்றத்துக்கும் சபாநாயகருக்கும் தன் ஆசிகளை வழங்கி விட்டு வெளியே வந்தார்.

சகல ஜாதியினர் மீதும் அன்பு கொண்டவராக புதுப் பெரியவாளை நான் தரிசித்திருக்கிறேன்.

சகல மதத்தவர் மீதும் பேரன்பு கொண்டவராக புதுப் பெரியவாளை நான் கண்டிருக்கிறேன்.

மேலே சொன்ன சம்பவங்களுக்கு சாட்சியாக புதுப் பெரியவாளுடன் நானும் இருந்தேன் என்பதே என் பாக்கியம்!

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர



Categories: Devotee Experiences

9 replies

  1. Reblogged this on kahanam and commented:
    Sri Jayendra Saraswathi Maha SwamigaL(Sri Periyava) has done exceptional service to Sanathana Dharama. His Services and Kindness to Devotees, Poor and Downtrodden are well known. Three unique experiences with Sri Jayendra Periyava are shown here. You will see Maha Periyav acting through Sri Jayendra Periyava. hara Hara Shankara, Jaya Jaya Shankara!

  2. Maha Periyava’s Disciple shows His Apaara KaruNai to Devotees! In many instances, one can see Maha Periyava acting in the Roopam of Sri Jayendra Periyava! Shri Gurubhyo Namaha! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

  3. MahaPeriayava’s Son How He can be different!!?

    PudhuPeriyava padma Padham Charanam Saranam

  4. Just waiting for the book to get released

  5. Thanks for sharing these superb incidents.
    Pradosham Mama used to narrate similar incidents involving Maha Periyavaa.

    Such incidents are also lesson for all of us to understand that all men are equal before God
    .

  6. These are all, not known to us. Thanks a lot for this.

  7. Getting difficult to fill up stars viz e mail etcc!!!!!!!!!!!

    N. Ramaswami

  8. Impressive recollection by Mr Krishnamurthy.And a welcome initiative by the Bombay devotees.
    Sri Jayendra Periyava is one of the the most vibrant ‘active and socially oriented and visible Madathipathis today.
    I have had His dharshan just a few times.His speed of blessing devotees even while giving attention to a host people around is amazing.And I Ihave read that Paramacharya was an admirer of this skill set.
    Avar kai kunkumam koduthu koduthu sivandha kai.

    Personally I sought His Blessings while in distress,and believe me, my prayers materialised very soon.
    PRA AMS.
    R Balasubramanian,Chennai-59.

  9. ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர

Leave a Reply to ramaswami nCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading