குருபக்தியின் அநுகூலங்கள்

(From Volume 5)

Periyava_KanagabishekamOur namaskaram to our Bhooloka Chakravarthi Sri Sri Sri Mahaperiyava.

ஸரி;ஆனால், வாஸ்தவத்திலேயே தோஷமில்லாமல், கொஞ்சங்கூட குணஹீனமில்லாமல், பரிபூர்ண சக்தி மயமாக ஒரு ஈச்வரன் இருக்கும்போது, அவனையே நேராக பக்தி பண்ணாமல், இந்த அம்சங்களிலெல்லாம் நம்மைவிட எவ்வளவு உசந்தவரானாலும் அவனைப்போல முழுக்க perfect என்று சொல்ல முடியாத ஒருவரை perfect -தான் என்று நம் பாவனையால் பூர்த்தி பண்ணுவித்து பக்தி செலுத்துவானேன்-என்று கேட்டால்…

ஈச்வர பக்தியைவிட குரு பக்தியில் இருக்கிற அட்வான்டேஜைச் சொல்கிறேன். முன்பே சொன்னேன். இன்னம் கொஞ்சம் சேர்த்துச் சொல்கிறேன். ஈச்வரன் கண்ணுக்குத் தெரியவில்லை. இவரோ தெரிகிறார். இவரோடு கலந்து பழகமுடிகிறது. நமக்கான நல்லது, பொல்லாததுகளை ஈச்வரன் வாய்விட்டுச் சொல்வதில்லை. இவர் கர்ம ச்ரத்தையாக எடுத்துச் சொல்லி முட்டிக் கொள்கிறார். நாமும் இவரிடம் ‘இப்படிச் செய்யலாமா, அப்படிச் செய்யலாமா?’என்று நன்றாக வழிகேட்டுப் பெறமுடிகிறது. ஈச்வரனிடமிருந்து அப்படிப் பெற்றுக்கொள்கிற அளவுக்கு நமக்குத் தீவிர பக்தி ச்ரத்தை இருக்கிறதா?

அப்புறம், ஈச்வரன் என்றால் எங்கேயோ எட்டாத நிலையிலிருப்பதாலேயே, ஒரு பக்கம் அவனோடு நாம் கலந்து பழக முடியாது என்பதோடு, இன்னொரு பக்கம், கண்ணுக்கு -வாக்கு, மனஸு எல்லாவற்றுக்குமேதான்-எட்டாத நிலையிருக்கிற அவன் நாம் செய்வதையெல்லாம் பார்த்துக் கொண்டேயிருக்கிறான்;அதனால் தண்டிக்க வேண்டியதற்கு தண்டிப்பான், அநுக்ரஹிக்க வேண்டியதற்கு அநுக்ரஹிப்பான் என்ற எண்ணமும் நமக்கு இல்லை. அவனுடைய பார்வையிலேயே இருக்கிறோமென்று தெரியாததால்தான் துணிந்து மனம் போனபடி எதுவும் பண்ணுகிறோம். தப்பு பண்ணினால் தண்டனை என்ற பயமில்லாமல் பண்ணுகிறோம். அப்படியே, நல்லதுசெய்வதென்றால் எந்த நல்லதானாலும் அதற்கு நாம் தேஹத்தாலோ த்ரவியத்தாலோ ஏதாவது விதத்தில் கொஞ்சமாவது ஸாக்ரிஃபைஸ் செய்யாமல் முடியாது இப்படி ஸாக்ரிஃபைஸ் பண்ணுவானேனென்று இருந்துவிடுகிறோம். ‘அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’என்று பழமொழி இருக்கிறது. கொல்வது மட்டுமில்லை, நல்லது பண்ணுவதென்றாலும் அரசன் உடனே பொன், பொருள், ராவ்பஹதூர்-திவான் பஹதூர்-ஸர் வரைக்கும் பட்டம் கொடுக்கிறதுபோல தெய்வம் உடனே கொடுப்பதாகத் தெரியவில்லை. நம் புண்ய-பாப கர்மங்களின் நல்ல-கெட்ட பலன்கள் எத்தனையோ ஜன்மாந்தரங்களில் கோத்து வாங்கிக்கொண்டு போகும்படியாகத்தான் ஈச்வர தர்பார் நடக்கிறது. இப்படி எப்பவோ பண்ணியதற்கு எப்பவோ பலன் என்பதால், நாம் இப்படிப் பண்ணியதற்குத்தான் இது பலன் என்றே நமக்குத் தெரியாமல் போய்த் தப்பு பண்ணுவதிலும் குளிர்விட்டுப் போகிறது;நல்ல பண்ணுவதற்கும் உத்ஸாஹமில்லாமல் போகிறது.

குரு எப்படி இருக்கிறார்?நாம் தப்புப் பண்ணினால் உடனேயே எடுத்துச் சொல்லிக் கண்டிக்கிறார். நமக்கு உறைக்கும்படிக் கரித்துக்கூடக் கொட்டுகிறார். நாம் ஒரு தப்புப் பண்ணக்கூடிய நிலைமை ஏற்படும்போது, “இது குருவின் காதுக்குப் போய்விட்டால் என்ன ஆவது?”என்ற பயம் ஏற்பட்டு நம்மைக் கட்டிப்போடும். அவர் ஆத்மசக்தி நிறைந்த குருவாயிருந்தால் நாம் எங்கே என்ன தப்புப் பண்ணினாலும் அவர் தாமாகவே தெரிந்துகொண்டு விடுவார். அவ்வளவு சக்தியில்லாவிட்டாலும், அல்லது சக்தி இருந்தும் அதை வெளியில் காட்டாதவராக இருந்தாலும்-மநுஷ்ய விளையாட்டு விளையாடுவதில் பல குருக்கள் இப்படித் (தெரிந்தும் தெரியாத மாதிரி) இருப்பது முண்டு, இப்படி இருந்தாலும்-வேறே யாராவது சொல்லி நம் தப்பு அவருக்குத் தெரிந்துவிட்டால் அப்புறம் நம் கதி என்ன என்ற பயம் இருந்து கொண்டேயிருக்கும். அது நம்மைத் தப்பிலிருந்து தடுக்கும்.

இதேபோல நாம் ஒரு நல்லது பண்ணினாலும் குரு அதை உடனே தாமாகவேயோ, இன்னொருத்தர் சொல்லியோ தெரிந்துகொண்டு-அல்லது இது நாம் பண்ணிய நல்லதல்லவா?அதனால் நாமே எப்படியாவது அது அவர் காதில் விழுகிற மாதிரி செய்துவிடுவோம்!இப்படி ஏதோ ஒரு விதத்தில் அவர் தெரிந்துகொண்டு-நம்மை மெச்சி, விசேஷமாக ஆசீர்வாதம் அநுக்ரஹம் பண்ணி, மேலும் மேலும் உத்ஸாஹப்படுத்துவார். ஒரேயடியாக மெச்சினால் நமக்கு மண்டைக் கனம் ஏற்படுமென்பதால், ‘தப்புக்காக சிஷ்யனை வெளிப்படக் கண்டிக்கிறதுபோல, அவன் செய்யும் நல்லதற்காக வெளிப்பட ச்லாகிக்கக் கூடாது’என்று வைத்துக் கொண்டிருக்கும் குருகூட ஸ¨க்ஷ்மமாக, ஆனாலும் சிஷ்யனுடைய மனஸுக்கு நிச்சயமாகத் தெரிகிறவிதத்தில், ஏதோ ஒரு மாதிரி தம்முடைய ஸந்தோஷத்தைக் காட்டி, அதற்காக ஒரு அநுக்ரஹம் செய்யத்தான் செய்வார்.

நாம் கடைத்தேற வேண்டுமானால் அதற்கு நம்முடைய பாப கர்மாக்களைக் குறைத்துக் கொண்டு, புண்ய கர்மாக்களைக் பெருக்கிக் கொண்டாலொழிய எப்படி ஸாத்யமாகும்?இதில் புண்ணிய கர்மாவைப் பெருக்கிக் கொள்வதற்கு ‘இன்ஸென்டிவ்’ (போனஸ் மாதிரி நம்மை உத்ஸாஹப்படுத்துவது) , பாப கர்மாவைக் செய்தால் ‘டிஸ் இன்ஸென்டிவ்’இரண்டுமே நமக்கு உடனுக்குடன் குருவின் தீர்ப்பில் தெரிவதுபோல ஈச்வரனின் தீர்ப்பில் தெரிவதில்லை.

இதற்கும் மேலே, நம்முடைய பாப சித்தத்தைக்கூட குரு என்ற ஒருவர் இருக்கும்போது அவரே, நாமாக சுத்தி செய்து கொள்வதைவிடச் சிறப்பாக நமக்காக சுத்தி செய்துதருகிறார். பாபத்தில் கொஞ்சத்தைத் தாமே கூட வாங்கிக் கொண்டு தீர்த்து வைக்கிறார். நம்மைவிடக் கெட்டியாக நமக்காக ப்ரார்த்திக்கிறார். நமக்காக ஈச்வரனிடம் முறையிடுகிறார், வாதிக்கிறார், ஸ்வாதீனமாக உத்தரவு போடுகிறார், சண்டைகூடப் பிடிக்கிறார்- என்றெல்லாம் சொன்னேன்.

இதனாலெல்லாம்தான் ஈச்வரனைக் காட்டிலும் அபூர்ணமான குருவாக இருந்தாலுங்கூட அவரையே பூர்ண ஈச்வரன் என்று வழிபடச் சொல்லி “குரு வாத்” (Guru-vad) என்றே (வட இந்தியாவில்) உயரக் கொண்டு வைத்திருப்பது.

இப்படி அன்பும், அசைக்க முடியாத நம்பிக்கையும் குருவிடமே வைத்து விட்டவர்களுக்குத் தெரியும். பகவத் ஸ்மரணையை விடவும் குரு ஸ்மரணையிலேயே அதிக சாந்தி என்று.

அதெப்படி (பகவத் ஸ்மரணையைவிட குரு ஸ்மரைணயில் அதிக சாந்தி) இருக்க முடியுமென்றால்,

நம் பிரார்த்தனையை பகவான் கேட்கிறானா, நாம் பண்ணும் நல்லது கெட்டதுகளை அவன் பார்க்கிறானா என்றே நிச்சயமாகத் தெரியாதபோது, ‘நமக்கு அவன் விமோசனம் அளிப்பான்’என்ற உறுதியில் உண்டாகிற சாந்தி, நிம்மதி எப்படி ஏற்படமுடியும்?’அநுக்ரஹிப்பானா, அநுக்ரஹிப்பானா?’என்று வெதுக்கு, வெதுக்கென்று மனஸ் அடித்துக் கொள்வதாயிருக்குமே தவிர ‘நமக்கென்ன பயம்?அவன் பார்த்துக் கொள்கிறான்’என்ற த்ருட உறுதி, அதனாலே விச்ராந்தி, சாந்தி எப்படி ஏற்படும்?அப்பப்போ ஏற்பட்டாலும் ஸந்தேஹத்தில், அழுகையில், பயத்தில் அது அடித்துக் கொண்டு போய்விடுகிறது.

குரு சுச்ருஷைக்கு என்றே தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் பயம், ஸந்தேஹம், அழுகை இல்லாமல் அவர்கள் பாட்டுக்கு நிம்மதியாக, “அவர் பார்த்துக்கொள்கிறார்”என்று இருப்பார்கள்.

பகவத் ஸ்மரணை என்னும்போது, அந்த பகவான் ஸமஸ்த ப்ராணிகளுக்கும் ஆனவர். எண்ணி முடியாத அத்தனைகோடி ஜந்துக்களில் நம்மைக் குறிப்பாகக் கவனித்து அவர் செய்வாரா, செய்வாரா என்றிருக்கிறது. அவர் பட்டுக்கொள்ளாமல் எங்கேயோ இம்பெர்ஸனலாக உட்கார்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. குருவோ நமக்கென்றே ஏற்பட்டிருப்பவராகத் தெரிகிறார். நம்மைக் கடைத்தேற்றவே இவர் கங்கணம் கட்டி கொண்டிருக்கிறார். உலகம் முழுதையும் கவனித்துக் கொள்கிற பெரிய ஆபீஸ் இவருக்கு இல்லாமல், தாம் நல்வழிப் படுத்தக் கூடியவர்களையே தம்மிடம் சேர்த்துக் கொள்பவராக இருப்பதால் அப்படிச் சேர்ந்த நம்மிடம் ‘பெர்ஸனல் அடென்ஷன்’காட்டுபவராக இருக்கிறார். இவர் நமக்கு ரொம்பப் பெர்ஸனல்!நம் கஷ்டங்களிலெல்லாம் கலந்து கொள்கிறவராக இருக்கிறார். நம்மை கவனிப்பாரோ மாட்டாரோ என்றில்லாமல், “நமக்குன்னே ஏற்பட்டவர்”என்று உறவு கொள்கிறோம்.

ஈச்வரன் பண்ணுவதெல்லாம் நம்முடைய ஞானமில்லாத பார்வையில் ஏதோ யந்த்ர கதியில் இயற்கை பண்ணுகிறாற்போலவே தெரிகிறது;அவன் கர்த்தா என்று தெரியவில்லை. நமக்கு ஞானம் வருகிற வரையில், அவன் அநுக்ரஹம் செய்கிறபோதுகூட, யத்ருச்சையாக (தற்செயலாக) நடந்திருக்குமோ, என்னவோ என்று ஸந்தேஹமாக இருக்கிறது. ‘பெர்ஸனல் டச்’குரு செய்வதில்தான் பிரகாசித்துக் கொண்டு தெரிகிறது;அதனால் நமக்குத் தெம்பும், விச்ராந்சியும் தருகிறது.

அத்தனை தினுஸான பக்ஷணம் பணியாரங்களும் கொட்டிக் கிடக்கிறது, ஆனால் ஆள் யாருமில்லை, நாமே எடுத்துத் தின்கிறோம் என்றால் எப்படி இருக்கிறது?ஏதோ கொஞ்சம் கூழ்தான் என்றாலுங்கூட ஒரு தாயார்க்காரி, “அப்போ கொழந்தே, சாப்பிடு”என்று தன் கையால் கொடுக்கிறாள் என்னும்போது அது எப்படி இருக்கிறது?இந்த ‘பெர்ஸனல் டச்’சுக்கு இருக்கிற ஆனந்தம், பஞ்ச பக்ஷ்ய ஆஹாரத்தில் கிடைக்குமா?அதையும் யாரோ பண்ணித் தான் இருக்கிறார்கள். நாம் சாப்பிட வேண்டுமென்றே கொட்டிவைத்தும் இருக்கிறார்கள். ஆனால் பண்ணினவர் தெரியாவிட்டால் பண்டத்தின் ரஸாநுபவம் ரொம்பக் குறைந்துவிடுகிறது. ஈச்வராநுக்ரஹத்துக்கும், குரு அநுக்ரஹத்துக்கும் இதுதான் வித்யாஸம்.

ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகளைப் போல, இன்னம் பல மஹான்களைப் போல அவனுடைய அநுக்ரஹத்தை அவனே ஸாக்ஷ£த்தாகச் செய்வதாகக் கண்டு கொண்டு பெறுகிற வரையில், எத்தனை அருள் கிடைத்தாலும் கொஞ்சம் ஸந்தேஹம், கேள்வி புறப்பட்டுக்கொண்டுதான் இருக்கும்.

இன்னொன்று வேறே!நல்லது கெட்டது எல்லாமே அவனிடமிருந்துதான் என்கிறார்கள். மாயையை ஏவி விட்டு இத்தனை கஷ்டங்களை உண்டாக்குவதும் அவனுடைய விளையாட்டுத்தான் என்கிறார்கள். பராசக்தி ஞானியைக்கூட பலவந்தமாகப் பிடித்திழுத்து மோஹத்திலே துள்ளுகிறதுண்டு என்று பயமுறுத்துகிறார்கள். ஈச்வர ஸங்கல்பம் நமக்குத் தெரியவே தெரியாது;புரியவே புரியாது என்று முடித்து விடுகிறார்கள். ‘குடைராட்டினத்தில் பொம்மைகளை வைத்து இஷ்டப்படி சுற்றுகிற மாதிரி ஈச்வரன் ஸர்வ ப்ராணிகளையும் மாயையில் வைத்து ஆட்டுகிறான்’என்று பகவானே சொல்கிறான். ஆனதினாலே, அவனை ஸ்மரிக்கும் போது, ‘நம்மகிட்ட எப்படி விளையாடுவானோ?கரைதான் சேர்ப்பானோ?இன்னும் நன்னாதான் அமுக்குவானோ?’என்றும் பயம் ஏற்பட இடமிருக்கிறது.

குரு இப்படியில்லை. ஈச்வரன் ஞானம் மாயை இரண்டுமாக இருக்கிறாற்போல அல்ல, குரு. ஞானத்துக்கு மாத்திரமே அவர் இருக்கிறார். மாயையைப் போக்கி ஞானத்தைத் தரவே ஏற்பட்டதுதான் அவருடைய ஆபீஸ். கெடுதலானதற்கும் ஆச்ரயமாயிருப்பவர், மாயையை ஏவி விட்டுக் கஷ்டங்களையும் கொடுத்து வேடிக்கை பார்ப்பவர்-என்று அவரைப் பற்றிச் சொல்லவே முடியாது. நமக்குக் கொடுதாலானவற்றை நீக்கி, நம்முடைய கஷ்டங்களைப் போக்கி, மாயையிலிருந்து நம்மை இழுத்துப் போடவே வந்துள்ள அவரைப் பற்றி ஸந்தேஹம், பயம் தோன்ற இடமேயில்லை.

இதனாலெல்லாந்தான் பகவத்ஸ்மரணையைக் காட்டிலும் குரு ஸ்மரணை அதிக சாந்தி என்பது. மரித்து, த்யானித்துப் பார்த்தவர்களுக்குத் தெரியும். ஒருவரை ஸ்மரிப்பது, த்யானிப்பது என்றால் என்ன?அவருடைய ரூபத்தை, கார்யத்தை, குணத்தை நினைத்துப் பார்த்துப் பார்த்து மனஸை அப்படியே அவரிடம் கரைந்து நிற்கும்படியாகச் செய்வது. கார்யமென்று எடுத்துக் கொண்டுதான் இத்தனை நாழி சொன்னேன். ஈச்வரனின் கார்யம் எதுவும், ‘இது அவனுடையதுதான்’என்று நமக்குத் தீர்மானமாகத் தெரியாததாகவே இருக்கிறது. நமக்கும் அவனுக்கும் நேர் ‘டச்’இல்லை. வேறு பக்தர்களுக்கு அவன் செய்த அநுக்ரஹ கார்யங்களையே நினைக்கும்படிதானிருகிறது. அது நம் மனஸை நிரப்பிவிட்டால் விசேஷம்தான். த்ரௌபதிமான ஸம்ரக்ஷணம், குசேலாநுக்ரஹம், கஜேந்த்ர மோக்ஷம்-இப்படி எத்தனையோ, எல்லா தெய்வங்களைப் பற்றிய புராணங்களிலும் இப்படி அநேக அநுக்ரஹங்கள், இன்னம் பலவிதமான லீலா கார்யங்கள்… ராஸ லீலை, ஈச்வரனானால் ஆனந்த நடனம் என்றிப்படி;ஞானோபதேசம்:க்ருஷ்ண பரமாத்மா அர்ஜுனனுக்குப் பண்ணியது, தக்ஷிணாமூர்த்தி ஸநகாதிகளுக்குப் பண்ணியது-என்றிப்படி பலவிதமான கார்யங்கள் இருக்கின்றன. ஆனால் நம்முடைய அரைவேக்காட்டு நிலையில் அவற்றில் நம்மால் எவ்வளவு தூரம் முழுக முடிகிறது?வேறே யார் யாருக்கோ அவன் பண்ணியதில் நம்மால் எவ்வளவுக்கு மன நிறைவு பெற முடிகிறது?’அவர் எங்கே, நம்ப எங்கே?அதெல்லாம் நமக்குக் கிடைக்குமா?’என்று குறைந்துகொண்டு வருத்தப்படுவதாகக்கூட ஆகலாம். ஆனால் குரு ஸ்மரணை என்று நினைத்துப் பார்த்தால் நமக்கே அவர் நேராக எத்தனை செய்திருக்கிறாரென்று-நாம் மட்டும் நன்றியறிவு மறக்காதவர்களாக இருந்தால்-அநேகம் அகப்படாமல் போகாது. நாம் யோக்யதை eP ஆசைப்படுவதில் அநேகம் அவர் பூர்த்தி செய்யாமலும் இருக்கலாம். ஆனால் நம் vFF என்ன என்கிற நினைப்பு இருந்து, நன்றியறிவும் இருந்துவிட்டால் நமக்கு அவர் செய்து அதிகப்படி என்று தெரியும்.

நாம் சீர்ப்பட வேண்டுமென்று எவ்வளவு முட்டிக் கொள்கிறார்?அது தவிர, எத்தனை வைராக்யம் சொன்னாலும் இந்த மநுஷ ரீதியில் ஒரு வாஞ்சை, வாத்ஸல்யம் என்று நம் நிலையில் ஆலம்பனம் வேண்டியிருக்கிறதே, இதையும்கூட எவ்வளவு நன்றாகப் பூர்த்தி செய்கிறார்?நம்முடைய யோக க்ஷேமங்களை எவ்வளவு அக்கறையாகக் கேட்டுக் கொள்கிறார்?நாம் மறந்து போயிருக்கும்போதுகூட, (அவரிடம்) போயிருந்தவர்களிடம் நம்மைப்பற்றி விசாரித்து ப்ரஸாதம் கொடுத்தனுப்பியிருக்கிறாரே!’வெயில்லே போகாதேடா!பட்டினியாப் போகாதேடா!’என்று எத்தனை ப்ரியமாகச் சொன்னார்!-என்று இப்படி நம்மைப் பற்றியதாகவே குரு செய்திருக்கும் அநேக கார்யங்களைப்பற்றி ஸ்மரித்து ஆனந்தமாக நிறைந்திருக்க முடிகிறது.

ரூபம் என்று ஸ்மரிக்கும்போது, ஈச்வரனை தெய்வத்தின் ஒரு குறிப்பிட்ட மூர்த்தியாக த்யானம் செய்யும்போது, அந்த மூர்த்தி பற்றி ஏற்கெனவே கொடுத்திருக்கிற வர்ணனைப்படி பண்ணிப் பார்க்கிறோம். அப்படியே மனஸ் போய் அந்த ரூபத்திலே ஒட்டிக்கொண்டு நின்றுவிட்டால் உசத்திதான். நமக்கு அப்படி முடிகிறதா?புராணங்களிலும், மந்த்ர சாஸ்த்ரங்களிலும் வர்ணனை என்று கொடுத்திருப்பதில் பாதாதிகேசம், கேசாதி பாதம் விஸ்தாரமாக அங்க அங்கமாக லக்ஷணங்களைச் சொல்லியிருக்கும். ‘பாதாதி கேசம்’என்றால் காலிலிருந்து தலைவரையில். புருஷ ரூபத்தில் உள்ள தெய்வங்களை இப்படித்தான் வர்ணிப்பார்கள். பாதத்தில் ஆரம்பித்து வரிசையாக மேலே கணுக்கால், முழங்கால், இடுப்பு, மார்பு, கழுத்து, முகம், என்றுபோய் சிரஸின் வர்ணனையோடு முடிப்பார்கள். கேசாதி பாதம் என்ற முறையிலே ஸ்த்ரீ தெய்வங்களை வர்ணிப்பார்கள் இது சிரஸில் ஆரம்பித்து வரிசையாகக் கீழே நெற்றி, கண், மூக்கு, வாய், கழுத்து, இடுப்பு என்று பாதம் வரையில் வர்ணிப்பது. இப்படி எந்த தெய்வமானாலும், இத்தனை கை… நாலு, எட்டு பதினெட்டு என்று வகைகள்;ஒவ்வொரு கையிலும் இன்ன ஆயுதம்;இப்படியிப்படி அலங்காரம்:கங்கை, சந்த்ரன், பாம்பு, புலித்தோல்-பீதாம்பரம், வனமாலை, கௌஸ்துபம்;இன்ன வாஹனம்-ரிஷபம், ஸிம்ஹம், கருடன், மூஷிகம், மயில் என்று எதுவோ ஒன்று, என்பதாக நீள நெடுக details (விவரங்கள்) சொல்லியிருக்கும். ஒவ்வொரு ரூபத்தைப் பற்றியும் இப்படிப் பெரிய லிஸ்ட் வைத்துக்கொண்டு நாம் த்யானிக்கும்போது, ‘இன்னம் அந்த அம்சம் இருக்கே, இந்த அம்சம் இருக்கே!’என்று மனஸு அலை பாய்ந்தபடியும் ஆகலாம். சாஸ்த்ரங்களில் என்ன சொல்லியிருக்கிறதென்றால் -க்ருஷ்ண பரமாத்மாவும் உத்தவ ஸ்வாமியிடம் அப்படித் தான் சொல்லியிருக்கிறார்-அங்க அங்கமாக முழு ரூபத்தையும் கொஞ்சம் ரஸித்துவிட்டு அப்புறம் புன்சிரிப்போடு விளங்குகிற முக மண்டலத்திலேயே ‘கான்ஸென்ட்ரேட்’பண்ண வேண்டுமென்று சொல்லியிருக்கிறது. ஆனால் நாம் த்யானம் என்று உட்காரும் சித்தே (சிறிது) நாழியிலே அங்க அங்கமாக நின்று ரஸிக்கப் பொழுது இருக்குமா என்பதே ஸந்தேஹம். அப்புறம், மந்தஹாஸம் (புன்சிரிப்பு) அல்லது கருணா கடாக்ஷம் என்று ஒன்றிலேயே சித்தத்தை நிறுத்த முடியுமா என்பதும் அதைவிட ஸந்தேஹம். இத்தனை புஜங்கள், ஆயுதங்கள், அணிபணிகள் வாஹனம் என்றிருப்பதில் ஒன்றை நினைத்தால், ‘இன்னொண்ணை மறந்துவிட்டோமே!’என்று சித்தம் நாலா திசையில் ஓடலாம் கங்கையை நினைக்கும்போது, சந்த்ரன் போச்சே என்று!நெற்றிக் கண்ணை நினைத்தால், நீலகண்டம் போச்சே என்று!மானை நினைத்தால் மழு போகிறது!சங்கத்தை நினைத்தால் சக்கரம் மறைந்து போகிறது!கௌஸ்துபத்தை நினைத்தால் ஸ்ரீவத்ஸம் மறைந்து போகிறது! கமலக்கண்ணை நினைத்தால் சிரித்த வாய் மறைகிறது!இந்த மாதிரி ஆவதால், நின்று, நிலைத்து, நிறைவுண்டாகும்படி ரூப த்யானம் பண்ண முடியாமல் ஆகலாம். சாஸ்த்ர ப்ரகாரமான இத்தனை வர்ணனை நமக்குத் தெரியாமலிருந்தாலே தேவலை போலிருக்கிறதே என்று நினைக்கும்படிகூட ஆகலாம்.

ஆனால் குரு என்று எடுத்துக்கொண்டு ரூப த்யானம் செய்ய ஆரம்பித்தால் நேரே பழகின ஸமாசாரமானதால் பூர்ணமாக ஒரு ஆகாரத்தில் (வடிவத்தில்) மனஸ் அப்படியே நின்றுவிடுகிறது. அம்மா, அப்பா, ஸ்நேஹிதர், ஆபீஸர்- நேரிலே பார்த்துப் பழகுகிற யாரானாலும் அவர்களை நினைக்கும்போது, தனித்தனியாகக் கண், மூக்கு என்றா நினைக்கிறோம்?ஆயுதம்- (சிரித்து) அம்மாவானால் கரண்டி, ஆபீஸரானால் ஃபௌண்டன் பேனா என்று இப்படியா சித்தத்தில் கொண்டுவந்து பார்க்கிறோம்?இப்படியெல்லாமில்லாமல் மொத்தமாக ஒரு ‘ஐடியா’வாகத்தானே பார்க்கிறோம்?

இன்னம் சொல்லப்போனால், முழு ரூபத்தையும் ஒருமாதிரியாகப் பார்ப்பது மட்டுமில்லை, அவர்களுடைய கார்யம், அவர்களுடைய ஸ்வபாவம், மனப்பான்மை நம்மிடத்தில் அவர்களுடைய பாவம், அவர்களிடத்தில் நம்முடைய பாவம் என்று எல்லாமாகக் கலந்து ஒரு total effect ஏற்படும் விதத்திலேயே நமக்கு நேரிலே தெரிந்தவர்களைப் பற்றிய சிந்தனை ஏற்படுகிறது. இப்படித்தான் குருவை ஸ்மரிக்கிறோம். ரூபத்தில் பல அம்சங்களென்று ஒன்றுக்கொன்று மனஸ் பாயாதது மட்டுமில்லை;ரூபம், கார்யம், குணம் என்ற பிரிவுகூட இல்லை! Total ஆக ஒரு பாவம், ‘ரொம்ப பெர்ஸனல், ரொம்ப உறவு, நாம் கடைத்தேறுவதற்கென்றேயான கருணை’என்று சித்தம் ஒன்றிலேயே போய்-சிதறியோடாமல்-குரு த்யானத்தில் ஆனந்தமாக நின்றுவிடுகிறது. தெய்வ மூர்த்திகளின் ரூபத்தை கர்ணாந்த விச்ராந்த நேத்ரம் (காதளவோடிய கண்கள்) , ஆஜாநுபாஹ§ என்றெல்லாம் வர்ணித்திருக்கிறது போல இல்லாமல் ஒரு குரு கண் நொள்ளையாக, கட்டை குட்டையாக, கரடுமுரடான சரீரமாக இருந்தால்கூட அந்த ரூபத்தை நினைத்தாலே ஒரு சாந்தி, ஒரு ஆனந்தம் ஏற்படுகிறது. அம்மா அழகாக இருக்கிறாளா, எம். ஏ. டிகிரி வாங்கியிருக்கிறாளா என்று பார்த்தா அவளிடம் ப்ரியமாயிருக்கிறோம்?அப்படி குருவிடமும் ஏற்படுகிறது. எத்தனை குரூபியாயிருந்தாலும் அம்மாவுக்குக் குழந்தையிடம் வாத்ஸல்யம் மாதிரி குருவுக்கு சிஷ்யனிடம் காருண்யம் பொங்குகிறது. அவள் உடம்புக்குப் பால் கொடுத்தால் இவர் ஞானப் பாலூட்டுகிறார். அவரை ஸுலபமாகச் சித்தத்தில் நிறுத்தி, ஸ்மரித்து, ஆனந்தப்பட முடிகிறது.

ஒன்றுதான்-பகவான், ஆசார்யன் வேறே வேறே இல்லை. ரொம்ப மேலே போய்விட்டால் சிஷ்யன்கூட வேறே இல்லை. ஆனால் அது இப்போது நாமிருக்கும் தசையில் வெறும் சவடால்தான். நன்றாகப் பக்குவப்பட்டவர்களுக்கே என்ன சொல்லியிருக்கிறதென்றால், “எல்லாவற்றிடமும் (அவை தன்னையின்றி வேறில்லை என்னும்) அத்வைத பாவனையை வைத்துக்கொள். ஆனாலும் இதற்கு ஒரு விலக்கு இருக்கிறது. குருவிடம் மட்டும், ‘அவர் பெரியவர், நான் சின்னவன்’என்று த்வைதமாகவே பழகு. குருவோடு அத்வைதம் பாராட்டுவதென்று ஒருபோதும் வைத்துக் கொண்டுவிடாதே”என்றே உபதேசித்திருக்கிறது. அப்படியிருக்கும்போது நம் விஷயத்தைச் சொல்லவே வேண்டாம். நாம் குருவை வேறேயாகத்தான் பார்க்கமுடியும். அதில் தப்பில்லை. ஆனால் அவர் ஈச்வரனுக்கு வேறேயில்லை என்று பார்க்கப் பழகவேண்டும்.

ஈச்வரனும் குருவும் வேறு இல்லை. ஈச்வரனே தன்னைக் காட்டிக்கொடுக்கிற குரு ரூப்த்தில் வருகிறான். இப்படி நம்பி ஒருவரை குருவாக வரித்துவிட்டால் பலன் நிச்சயம்.



Categories: Deivathin Kural, Upanyasam

Tags:

6 replies

  1. HariH OM! Mahā Periyavā PādaŚaraṇam ! “இன்னம் சொல்லப்போனால், முழு ரூபத்தையும் ஒருமாதிரியாகப் பார்ப்பது மட்டுமில்லை, அவர்களுடைய கார்யம், அவர்களுடைய ஸ்வபாவம், மனப்பான்மை நம்மிடத்தில் அவர்களுடைய பாவம், அவர்களிடத்தில் நம்முடைய பாவம் என்று எல்லாமாகக் கலந்து ஒரு total effect ஏற்படும் விதத்திலேயே நமக்கு நேரிலே தெரிந்தவர்களைப் பற்றிய சிந்தனை ஏற்படுகிறது. இப்படித்தான் குருவை ஸ்மரிக்கிறோம்” Perfect sayings of a realized soul! However, in the real world we see many sporting Guru roles but doing lot of unwanted controversial acts that drive away many sincere and well-meaning followers, and also make a mockery of the institution of Āchārya. This fact is exploited by rationalist and atheist elements in todays context. When will we see another Āchārya like Paramāchārya ? – Kalivaradhan

  2. Right message on right Day. Thanks Mahesh

  3. very great teaching of mahaperiyava… gurve saranam …. Please bless us and be with us always.

  4. Great teaching of Sri Periyava about Guru and Eswaran. Who else than Sri Periyava can teach us like this.

    Blessed to read this on Maha Anusham day.

    Sri Periyava saranam

  5. Shankaraaaaaaaaaaa I miss you 😞 come to tell more and remove as much agnam as possible in the few days or months left for this sareeram if not give gnanam

Leave a Reply

%d