Thanks to Raghunathan Chandrasekaran for FB sharing.
ஒரு நாள் பம்பாயிலிருந்து செல்வச்செழிப்புள்ள ஓர் அம்மாள் ஸ்ரீசரணரின் தரிசனத்திற்கு வந்தாள். தன் குடும்பத்தினர் செய்யும் பிஸினஸில் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் ஸ்ரீசரணருக்கென்று எடுத்து வைத்து, உடன் கொண்டு வந்திருப்பதாகவும் அதை ஸமர்ப்பிக்க விரும்புவதாகவும் விக்ஞாபனம் செய்து கொண்டாள்.
பெரிய தொகை!
அதிசய மடாதிபதியாகத் திரவிய காணிக்கைகளை அவசியத்திற்குக் கட்டுப்படுத்தியே ஏற்கவும், மறுக்கவும் செய்தவர் ஸ்ரீசரணர்! இப்போதோ அவர் மடத்தை விட்டுத் தனியாகச் சில பணிவிடையாளருடன் இருக்கிறார். அவ்வளவு பெருந்தொகை ஏற்பாரா?
அதில் சிறிதளவே ஏற்றுக்கொண்டார். அதுவும் ரொக்கமாக ஏற்காமல், அந்த மாதரசியையே வருகிற அடியார்களுக்குச் சமைத்துப்போடச் சாமான்களாக வாங்கிப் போட்டுவிட்டுப் போகுமாறு சொன்னார்.
முழுவதையும் அவர் ஏற்காததில் அம்மையாருக்கு மிகுந்த ஏமாற்றம்
“கவலைப்படாதே! பாக்கிப் பணமும் ஏதாவது நல்ல கார்யத்துக்கு ப்ரயோஜனமாகும். சித்த ( சிறிது ) நாழி இங்கேயே இருந்து விச்ராந்தி பண்ணிண்டு போகலாம்” என்றார் ஸ்ரீசரணர்.
அம்மாள் அவ்வாறே தங்கினார்.
சிறிது நேரத்தில் ஒரு புது பக்தர் வந்தார். தம்மை முதலியார் வகுப்பைச்சேர்ந்தவராக அறிமுகம் செய்து கொண்டார். அவருடைய தோற்றத்திலேயே துக்கத்தின் அழுத்தமும் அதை விஞ்சும் பயப்பிராந்தியும் பிரதிபலித்தன.
ஸ்ரீசரணர் சந்தணத்தின் தண்மையுடன் அந்த வெந்த நெஞ்சினரை அருகழைத்து அமர்த்திக்கொண்டார்.
“ஒனக்கு என்னப்பாவேணூம்?” என்று பன்னீராகச் சீதம் சொரிந்து வினவினார்.
“சின்னக் கம்பெனி ஒண்ணுலே உபாயமா ( சிறியதான ) ஒரு வேலையிலே இருக்கேனுங்க. சம்பளம் பத்தறதே இல்லீங்க. .கடனா. வாங்கிக்கிட்டே போயி, வட்டி கூடக் கட்டமுடியல்லேங்க…..” என்று மேலே பேசவொண்ணாது வந்தவர் குழறினார்.
“கடன்காரன் பிடுங்கல் தாங்கமுடியாம வந்திருக்கியாக்கும்!” என்று நெஞ்சார்ந்த பரிவுடன் பரமர் கேட்டார்.” இப்ப இந்த க்ஷணத்துல என்ன நெலவரம்? தயங்காம பயப்படாம சொல்லு’” என்று அபயப் பிரதானம் செய்து ஊக்கினார்.
அழுகை ஊளை வெடிக்கும் குரலில் வந்தவர் “ ஈட்டிக்காரன் தொரத்திக்கிட்டே வந்திருக்காங்க! இங்கேயேதான் வாசல்ல நிக்கறானுங்க!” என்றார்.
கடன் தொகை எவ்வளவு என்று அவரைக் கேட்டு ஸ்ரீசரணர் தெரிந்து கொண்டார். அம்மாள் கொண்டு வந்தது அதற்கு மிக அதிகமாயிருந்தது. ஸ்ரீசரணர் தம்மைச் சேர்ந்தோரின் பொருட்டாக அனுமதித்த பொருட்களை வாங்கத் தேவைப்படுவதைக் கூட்டினாலும் மிகுதி நின்றது.
அப்புரம் என்ன? பம்பாய் தனிகையின் திரவியம் முதலியார் கைக்கு—அவர் கையிலிருந்து பட்டாணியன் கைக்குப் போவதற்காக—சேர்ந்தது.
ஸ்ரீசரணர் அம்மாளை நோக்கி இன்னருளுடன் “ நான் கேட்ட ஸாமான்—–சப்பட்டை வாங்கினவிட்டும் மீதி நிக்கக் கூடியதையும் இவர் கையிலேயே போடு. கடன் அடைஞ்சா போதுமா? மாஸம் முடியக் குடும்பம் சாப்பிட்டாகணுமே? எல்லாம் ஒன் உபாயமாகவே இருக்கட்டும்!” என்றார்.
எத்தனை கரிசனம், அங்கலாய்ப்பு!
அம்மாளும் அவ்விதமே செய்தாள்.அவளது மனம் நிரம்பியிருந்தது பார்த்தாலே தெரிந்தது.
நிறைவை மேலும் நிறைவித்து நிறையறிவாளர், நிறையருளாளர், “ ஸமய ஸஞ்சீவியா வந்தே! ஆபத்துக் காலத்திலே வந்து இவரை விடுவிச்சே! ரொம்பப் புண்ணியம், நன்னா இருப்பே!’ என்று ஆசிமொழிந்தார், பொழிந்தார்.
நிறை நன்றியில் கண் நிறைந்து விம்மிக்கொண்டிருந்த முதலியாரிடம், “ ஸ்வாமி ஒனக்காகவே எங்கேயிருந்தோ இந்தப் புண்ணீயவதியைக் கொண்டு வந்து சேத்து ரக்ஷிச்சிருக்கார். அவரை ஒரு போதும் மறக்காம கஷ்டமோ, நஷ்டமோ, அவர் தாங்கிக்கிறார்ங்கிற நம்பிக்கையோட, முடிஞ்ச மட்டும் சிக்கனமா வருமானத்துக்குள்ளேயே செலவைக் கட்டுப்படுத்திண்டு கடன் கஸ்திலே மாட்டிக்காம இருக்கப் பாருப்பா!” என்று ஹிதோபதேசம் செய்தார். எத்தனை ஹிதமாக!
கடன் பட்டவர், பாரத்தின் அழுத்தம் நீங்க நிம்மதியாக விடைபெற்றார்.
அவர் சென்றபின் பெரியவாள் “அப்பாடா!” என்று சொன்னதுண்டே! முன்னறிமுகமில்லாத ஒருவருக்கு ஸமய ஸஞ்சீவியாக உதவியது மாத்திரமின்றி அவரது பாரத்தையும் ஸ்ரீசரணரே எவ்வளவுக்குப் பகிர்ந்து கொண்டு இப்பொது சுமை நீக்கத்தில் நிம்மதி காண்கிறார் என்பதைத் தெரிவிப்பதாக இருந்தது அந்த ஆசுவாச அப்பாடா!
ஸகல ஜீவர்களுடனும் அப்படி ஒன்றிக் கலந்த அன்பு மூர்த்தி அவர்! .
Categories: Devotee Experiences
பெரியவாளை பார்த்துக்கிட்டே இருக்கத் தோணுது…
Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
அவரை போன்ற தீர்கதர்ஸி உண்டா? ஸர்வம் பெரிவா மயம். ஜய ஜய ஸங்கர… ஹர ஹர ஸஙகர…