வீட்டுக் கார்யம் பண்ணுவதில் ஒரு க்ருஹிணி – இல்லக் கிழத்தி என்பாள் – வேலைக்காரி மாதிரியிருந்தாலும் அதனால் அவள் பதிக்கு அடிமை என்று அர்த்தமில்லை. பதிக்கு வேலைக்காரியாக இருப்பதோடு நிற்காமல் இன்னும் பலவாகவும், ஸகலமாகவுமே இருப்பவள் அவள் என்று ‘நீதி சாஸ்த்ர’த்தில் சொல்லியிருக்கிறது (ச்லோகம் 50). வைதிகர்களுக்கு ‘ஷட்கர்மம்’ என்று ஆறு உண்டு: வேதம் ஒதல் – ஒதுவித்தல், யாகம் செய்தல் – செய்வித்தல், தானம் வாங்குதல் – கொடுத்தல் என்று ஆறு. அதே மாதிரி இங்கே (நீதி சாஸ்திரத்தில்) ஸ்த்ரீகளுக்கும் ஷட்கர்மா சொல்லியிருகிறது, என்னென்ன?
ஒன்று : கார்யேஷு தாஸீ – வேலைக்காரியாகக் காரியம் பண்ணுவது.
இரண்டு: கரணேஷு மந்த்ரீ – பதிக்கு ஆலோசனை சொல்வதில் மந்த்ரியாக் இருக்க வேண்டும். தான் வைத்ததே சட்டம் என்று பதி இல்லாமல் பத்னியின் ஆலோசனை கலந்தே எதுவும் பண்ண வேண்டும் என்ற அபிப்ராயம் இங்கு ஸ்பஷ்டமாக வருகிறது மந்த்ரி ஸ்தானத்தில் யோஜனை சொல்லுமளவுக்கு ஸ்த்ரீகளுக்கு புத்தி கூர்மை இருப்பதாக நம்முடைய ஆன்றோர் மெச்சியதும் தெரிகிறது.
கார்யேஷு தாஸீ, கரணேஷு மந்த்ரீ –
மூன்றாவதாக, ரூபேஷு லக்ஷ்மீ – தோற்றத்தில் லக்ஷ்மியாக, அதாவது லக்ஷ்மீகரமாக, இருக்கவேண்டும். மநுதர்ம சாஸ்த்ரத்திலும் ‘க்ருஹிணிக்கும் மஹாலக்ஷ்மிக்கும் பேதமில்லை’ என்று வருகிறது (அத்யாயம் 9, ச்லோகம் 26).
அப்புறம் நாலாவதாக, க்ஷமயா தரித்ரீ – ரூபத்தினால் ஸ்ரீதேவியாக இருப்பவள் பொறுமையால் பூமாதேவியாக இருக்கவேண்டும்.
ஸ்நேஹே ச மாதா என்பது ஐந்தாவது. இங்கேதான் ஸ்த்ரீக்கு நம் தர்மம் எவ்வளவு உச்சஸ்தானம் கொடுத்திருக்கிறது என்று தெரிகிறது. அன்பு காட்டுவதில் ஒரு தாய் குழந்தையிடம் எப்படியிருப்பாளோ அப்படியே பத்னி பதியிடம் இருக்கவேண்டும் என்று அர்த்தம். அதாவது ஒரு பதிக்கு அவனுடைய பத்னியையே மாத்ரு ஸ்தானத்தில் உயர்த்திக் காட்டுகிறது. ஆதி மூல வேதமும் ஸ்த்ரீயை ஆசீர்வதிக்கும்போது “பத்துக் குழந்தையைப் பெற்றுக்கொள். அப்புறம் பதியையும் பதினோராவது குழந்தையாக்கிக்கொள்” என்கிறது. அடிமை யாயிருந்தால் அப்படிச் சொல்லுமா?
இப்படி ஐந்தைச் சொன்னபின் கடைசியாகத்தான் அவள் பதிக்குச் சிற்றின்பம் அளிப்பவளாயும் இருக்க வேண்டும் என்று சொல்லி, அதில் வேசிகள் மாதிரி இருக்கவேண்டும் என்று (நீதி சாஸ்த்ரத்தில்) சொல்லியிருக்கிறது. சயநே து வேச்யா.
கார்யேஷு தாஸீ, கரணேஷு மந்த்ரீ , ரூபேஷு லக்ஷ்மீ,க்ஷமயா தரித்ரீ |
ஸ்நேஹே ச மாதா, சயநே து வேச்யா ஷட்கர்மயுக்தா குலதர்ம பத்நீ ||
அடிமைத்தனமல்ல; ரக்ஷணையே
நடுவிலே மநுவைப் பற்றிச் சொன்னேன்; அவர் க்ருஹிணியை மஹாலக்ஷ்மியாகச் சொல்லியிருப்பதாகச் சொன்னேன். அவர் பேரில்தான் நவீனக் கொள்கைக்காரர்களுக்கெல்லாம் ஒரே கோபம். ‘ஸ்த்ரீகள் ஸ்வாதந்த்ரியம் (சுதந்திரமாயிருக்கும் நிலை) பெறத்தக்கவர்களல்ல; அவர்கள் பால்யத்தில் தகப்பனாரின் ரக்ஷணையிலும், நடுவயஸில் பதியின் ரக்ஷணையிலும், விருத்தாப்யத்தில் புத்திரர்களின் ரக்ஷணையிலும் இருக்க வேண்டும்’ என்று அவர் சொல்லியிருப்பதாலேயே கோபம். ஆனால் நான் முன்னேயே சொன்ன மாதிரி ஸ்வாதந்த்ரிய்த்துக்கு நேர் எதிரான சரணாகதியும், அதற்கான அடக்கமும்தான் சாஸ்த்ரங்களின் பரம லக்ஷ்யமாகையால் அப்பேர்ப்பட்ட லக்ஷ்யத்தை அதிகம் கஷ்டப்படாமல் ஸ்த்ரீகள் ஸாதிக்க முடிவதைத்தான் மநு மனஸில் கொண்டு அதையே அவர்களுக்குக் கண்டிப்பான விதியாகப் போட்டுக் கொடுத்தார். அப்போதும் பிதாவோ, பர்த்தாவோ, புத்திரர்களோ அந்த ஸ்த்ரீயை அடிமைப்படுத்திக் கொடுமைப்படுத்தும்படிச் சொல்லாமல் காப்பாக ரக்ஷிக்க வேண்டும் என்று நல்ல வார்த்தையாகவே போட்டிருக்கிறார்.
பிதா ரக்ஷதி கெளமாரே பர்த்தா ரக்ஷதி யெளவநே|
ரக்ஷந்தி வார்தகே புத்ரா: ந ஸ்த்ரீ ஸ்வாதந்த்ர்யமர்ஹதி || (மநுஸ்ம்ருதி 9.3)
ஸாதாரணக் கல் இறைபடுகிறமாதிரி நவமணிக்கற்களை இறைபடவிடுவார்களா? நவமணி மாதிரிதான் பெண்கள். அதனால்தான் பெண்மணி, நாரீமணி என்றே சொல்வது. புருஷமணி, ஆண்மணி என்று சொல்கிற வழக்கமேயில்லை. ‘அந்தப் புருஷர்கள் லோக வியவஹாரத்தில் வெளியிலே இறை படட்டும்; ஸ்த்ரீகளை அப்படி ஸ்வந்த்ரம் கொடுத்து இறைபட விடவேண்டாம். ஸ்வதந்த்ரத்தினால் அவர்கள் தங்களுக்குத் தாங்களே கெடுதி விளைவித்துக் கொள்ளலாம். அவர்களை வெளியில் விட்டால் புருஷர்களாலும் அவர்களுக்குக் கெடுதி விளையலாம். இதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் நவமணிகளைக் காப்பாகப் பெட்டியில் வைத்து ரக்ஷிக்கிற மாதிரி ஸ்த்ரீகளையும் க்ருஹத்தில் காப்பாக அந்தந்த பிராயத்துக்கு ஏற்ப, அப்பா, அகமுடையான், பிள்ளை என்பவர்களின் ரக்ஷணையில் வைத்துவிடுவதான் ஸரி’ என்றே மநுதர்ம சாஸ்த்ரம் அப்படி விதி பண்ணிற்று.
எந்த அப்பாவும் குமாரியை அடிமை மாதிரி பாவித்துக் கொடுமை பண்ண மாட்டார்தான். பிள்ளையும் அம்மாவை அப்படியே! சாஸ்த்ரப்படிப் பார்த்தாலும் ஒரு புத்ரனானவன் அப்பாவுக்கும் முந்தைய ஸ்தானம் அம்மாவுக்குத்தான் தரவேண்டும். அப்படிப்பட்டவன் அவளைக் கொடுமை பண்ணினால் அது ப்ராயச்சித்தமேயில்லாத பாபமாகத்தான் சாஸ்த்ரத்தில் வரும். மநுவின் ச்லோகத்தில் ஒரு ஸ்த்ரீயை பர்த்தாவும் அவளுடைய அப்பா-பிள்ளைகள் போலவே ரக்ஷிக்க வேண்டும் என்றுதான் இருக்கி தவிர, ‘ஆட்-ஊட்’ அதிகாரம் செய்து அடிமை – கொடுமைப்படுத்தணும் என்று இல்லை – பர்த்தா ரக்ஷதி யெளவநே என்றே இருக்கிறது.
கொடுமைப்படுத்தணும் என்று அவர் சொல்லாதது மட்டுமில்லை. இன்னோரிடத்தில் ஸ்பஷ்டமாகவே அவர்களை ரொம்பவும் கெளரதையாக, பூஜிதையாக நடத்த வேண்டும் என்றும் சொல்கிறார்.
யத்ர நார்யாஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா: |
யத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ராபலா: க்ரியா:|| (மநுஸ்ம்ருதி 3.56)
‘எங்கே பெண்கள் பூஜிதையாக நடத்தப்படுகிறார்களோ, அங்கேயே தெய்வங்கள் ஸந்தோஷம் அடைந்து ப்ரீதி செய்கிறார்கள். எங்கே அப்படி நடத்தவில்லையோ, அங்கே எடுத்த காரியம் எதுவும் பலிக்காது’ என்று அர்த்தம்.
Categories: Upanyasam
“FANTASTIC”
MahaPeriyava Padma Padham charanam Saranam
No other human culture in the world define a wife like this. Our Girls should understand before taking up an European stand
Hara Hara Shankara, Jaya Jaya Shankara!