பதியிடம் சரணாகதி – அடிமையல்ல; உற்ற ஸகா

108 Divya Darshans of Mahaperiyava

அமர நிலைக்கு உய்விக்கும் அடக்கம்

அந்த ஸ்த்ரீ தர்மம் என்பது முக்யமாக அடக்கத்தில்தான் இருக்கிறது என்பதுதான் திரும்பத் திரும்ப நினைவு படுத்திக்கொள்ள வேண்டிய விஷயம்; கடைப்பிடிக்க வேண்டிய லக்ஷ்யம்.

அடக்கம் அமரருள் உய்க்கும் என்பது திருக்குறள். ஆனாலும் சராசரி  புருஷப்ரஜையால் அப்படி ஒரளவுக்கு மேலே இருப்பதற்கு முடியாமல் அவனுடைய பெளருஷ இயற்கை இருக்கிறது.  இந்த லோக நாடக விசித்திரத்தில் அன்றாட வாழ்க்கை நடத்த அவனுடைய அந்தப் பெளருஷமும் வேணடித்தானிருக்கிறது. அதே ஸமயத்தில்  ஸ்த்ரீயோ மனஸ் வைத்தால் அவளுடைய இயற்கைக் குணத்தால் அவனைவிட இந்த அம்சத்தில் ரொம்பதூரம் முன்னே போக முடியும்  என்பதையும், அப்படி இருப்பதே லோக நாடகத்தில் தவிர்க்க முடியாமல் புருஷர்களால் சேர்கிற மிளகாய்ப் பொடியை சமனம் செய்யும் நெய்யாக இருக்கும் என்பதையும் கருத்தில் கொண்டுதான் சாஸ்த்ரங்கள் அமர நிலைக்கே கதவைத் திறந்துவிடும் அடக்கத்தைக் குறிப்பாக ஸ்த்ரீகள் கடைப்பிடிக்க வேண்டிய தலையாய தர்மமாக விதித்திருக்கின்றன. அதாவது, அடக்கத்தை விதித்ததனால் ஸ்த்ரீகளை ஒரு இருட்டு உலகத்தில் அடைத்து வைக்காமல் அமரத்வம் என்ற ஜ்யோதி லோகத்திலேயே சேர்ப்பதுதான் சாஸ்த்ரகாரர்களின் உத்தேசம்.

சாஸ்த்ர லக்ஷ்யம், ஆண்-பெண் யாரானாலும் முடிந்த மட்டும்  அடங்கியிருக்கணும் அந்த ‘முடிந்த மட்டும்’ என்பது பெண்கள் விஷயத்தில், தனக்கென்று எதுவுமேயில்லை என்று ஆகி விடுகிற சரணாகதி வரையில் ‘ஈஸி’யாகப் போக முடியும் என்பதால்தான் ஐடியல் நிலையில் ஒரு ஸ்த்ரீ பதியின் சித்தப்படியே பணிந்து நடக்கவேண்டும் என்று வைத்தது.

மஹான்கள் தங்களுக்கென்று எதுவுமேயில்லை, எல்லாம் ‘தெய்வசித்தம்’  என்று சரணாகதி செய்துதான் தாங்களே தெய்வமாகியிருக்கிறார்கள். புருஷர்களில் தேடித் தேடி துர்லபமாகக் கிடைக்கக்கூடிய மஹான்கள் அப்படி  ஆனவர்கள். கண்ணுக்குத் தெரியாத ஒரு தெய்வத்திடம் சரணாகதி செய்வது சிரமமாயிருக்கிறது என்பதால் புருஷனுக்கு குரு என்பவரையும், அதே குரு ஸ்தானத்தில் ஸ்த்ரீக்குப் பதி என்பவரையும் சாஸ்த்ரங்கள் காட்டிக் கொடுக்கின்றன. ஆனாலும் நடைமுறையிலோ உத்தம குணம் பொருந்திய  குருவிடமுங்கூடப் புருஷ சிஷ்யர்களால் பரிபூர்ண சரணாகதி செய்யமுடியாமலே இருந்திருக்கிறது. அதே ஸமத்தில் அதமனான பதியிடமும் சரணாகதி பண்ணி அவன் எத்தனை கஷ்டப்படுத்தினாலும் பொருட்படுத்தாமல் பொறுமையோடு அவனுக்குப் பணிவிடை செய்து  வந்திருக்கிற பதிவ்ரதா சிரோமணிகள் தலைமுறை தோறும் நிறையப் பேர் இருந்திருக்கிறார்கள். இன்றைக்கும் அப்படி எங்கேயாவது நிச்சயம் இருப்பார்கள். அவர்களுடைய பழைய  கர்மாவுக்காகவே அவர்கள் பதியிடம்  கஷ்டப்படுவது. அதை எதிர்த்துப் போகாமல் அவர்கள் பொறுத்துக்கொண்டு, ‘தன்செயலில்லை’ என்று இருப்பதால் அவர்களுக்குப் புது கர்மா எதுவும் சேராது. இப்படிப் புது கர்மா சேராமல், பழைய கர்மாவை முழுக்க அ நுபவித்துக் தீர்த்துவிட்டால் அதுவே கர்ம நாசம். அதனால் ஸ்ம்ஸார பந்த நாசம், எதற்கு மேலாகவோ ஈடாகவோ ஒரு ஆத்ம லாபம் கிடையாதோ, எதற்காகத்தான் ஞானிகளும் யோகிகளும் படாதபாடு படுகிறார்களோ, அந்தப் பெரிய லக்ஷ்யத்தை ஒரு ஸாதாரணப் பெண்ணே ஸாதித்து விடுகிறாள். அவள் ‘உதிக்காதே!’ என்று ஆக்ஞை பண்ணினால் ஸூர்யனே உதிக்காமலிருக்கிறான்; ‘பதியின் உயிரைத் திருப்பித் தா!’ என்று அவள் கேட்டால் யமன் அப்படியே பண்ணுகிறான்; அவளுடைய பாதிவ்ரயத்தை (கற்பு நெறியை) சோதிக்க வந்த த்ரிமூர்த்திகளின் மேல் அவள் தீர்த்த ப்ரோக்ஷணம் பண்ணினால் அவர்கள் பச்சைக் குழந்தைகளாகி விடுகிறார்கள்; * அவள் ‘பெய்’யென்று சொன்னால் வருண பகவான் மழையைக் கொட்டுகிறான் – ‘பெய்யெனப் பெய்யும் மழை’ என்று திருவள்ளுவர் சொல்கிறார்;  மழை பெய்வது மட்டுமில்லை – ஊரே நெருப்புப் பிடித்துக் கொள்ளட்டும் என்று அவள் சபித்தால் உடனே அக்னி பகவான் அப்படிப் பண்ணுகிறார் என்று கண்ணகி கதையில் படிக்கிறோம்; ஹநுமாரின் வாலில் நெருப்பு வைத்தபோது அது குளிர்ந்திருக்க வேண்டும் என்று ஸீதை சொன்னால், அப்படியே அங்கே அக்னி பகவான் (சிரித்து) தன்னுடைய வாலைச் சுருட்டிக் கொள்கிறான்! (*ஸ்ரீசரணர் இங்கு குறிப்பிடும் மூன்று கற்புக்கரசியர் முறையே நளாயினியும் சாவித்திரியும்  அநஸூயையும் ஆவர்.)

இந்த மாதிரி ஒரு பெண்ணைத் தெய்வமாக உயர்த்து வதற்காகத்தான் அவனை சாஸ்த்ரம் பதியிடம் சரணாகதி செய்ய வேண்டும் என்று சொல்கிறதே தவிர, இஷ்டப்படிக் கொடுமைப்படுத்தும் புருஷர்களைக் கொண்டு ஸ்த்ரீகளை அடக்கி நசுக்கி வைப்பதற்காக இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மநுவும், தர்ம சாஸ்த்ரங்களைச் செய்த மற்ற ரிஷிகளும் ஸம்ஸ்த ப்ராணிகளுக்கும் நல்லதையே நினைத்துக் கருணை காட்டியவர்கள். அப்படிப்பட்டவர்கள் ம்ருதுவான ஸ்வபாமுள்ள ஸ்த்ரீகளை ஹிம்ஸிக்க வேண்டுமென்று ஸ்வப்னத்திலும் நினைத்திருக்க மாட்டார்கள். தாடகை மாதிரியான துஷ்ட ராக்ஷஸியைக் கொல்லக் கூட ராமர் போன்றவர்கள் -குரு ஸ்தானத்திலிருந்த விச்வாமித்ரர் மாதிரியாவனர்கள் ஆஜ்ஞை பண்ணியும்கூட – யோஜனை பண்ணுமளவுக்கு ஸ்த்ரீ வதையைத்தடுத்து அவர்களுக்குக் கூடுதலாக தயா தாக்ஷிண்யம் காட்ட வேண்டும் என்று அவர்கள் எழுதி வைத்திருப்பதை மறந்து  வாயில் வந்தபடி பேசக்கூடாது. ஆனதால், ‘ஸாதிப்பதற்குப் பரம கஷ்டமான சரணாகதியையும் ஸாதித்து அதனால் தெய்வமாக உயர்வதற்கு ஒரு ஸ்த்ரீயால் முடிகிறதே! முடிகிற அதை அவர்கள் செய்து மேன்மையைப் பெறட்டுமே!’ என்பதால்தான் அதை விதியாகக் கொடுத்தார்கள்.

அடிமையல்ல; உற்ற ஸகா

பதி செய்வதை எதிர்க்கேள்வியே கேட்காமல், ஏற்றுக்கொள்வதுதான் ரொம்பவும் ச்லாக்யம் என்றாலும், மஹா பதிவ்ரதைகளில் சில பேரும் அவனுடைய அபிப்ராயத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் தங்களுக்கு நல்லதாகத் தோன்றுவதை அவனுக்கு எடுத்துக் சொன்னதுண்டு. அப்படிப்பட்டவர்களை சாஸ்த்ரங்களும் எடுத்துக் காட்டாகச் சொல்லி ஸ்தோத்ரிப்பதுண்டு.

ஸீதையைவிட ஒரு பதிவிரதை உண்டா? ஸாக்ஷாத் மஹாலக்ஷ்மியே அவள், வனவாஸத்துக்கு  அவளை ராமர் அழைத்துக்கொண்டு  போகமாட்டேன் என்றபோது அவள் பயப்படாமல் அவருக்கு எதிர்வாதம் பண்ணித்தானே கடைசியில் அவரும் ஒப்புக்கொள்ளும்படி ஆயிற்று? அப்புறம் தண்டகாரண்யத்தில் ரிஷிகள் ராமரிடம் வந்து தங்களை ஹிம்ஸிக்கும் ராக்ஷஸ வர்க்கத்தை அவர் நாசம் செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்கள். அவரும் அப்படியே செய்வதாக  வாக்குக் கொடுக்கிறார். அதற்கு ஸீதை ஆக்ஷேபம் தெரிவிக்கிறாள். ‘வனவாஸம் என்று வந்தோம். அதற்கேற்ப இங்கு நாம் தபஸ்விகளாக ஸாத்விக ஜீவனம் நடத்துவதுதான் முறை. ராக்ஷஸ வதத்தில் இறங்க வேண்டியதில்லை’ என்கிறாள். தன்னுடைய பதிபக்திக்கு அழகாக, ஸ்மாரயே த்வாம் ந சிக்ஷயே (வால்மீகி ராமாயணம், அரண்ய காண்டம், ஸ்ர்கம் 9) அதாவது. ‘உங்களுக்கே தெரிந்ததைத்தான் ஞாபகப்படுத்துகிறேனே தவிரப் புதுசாக நான் ஒன்றும் உபதேசிக்கவில்லை’ என்றும் சொல்கிறாள், ஆகக்கூடி, அவர் எது சொன்னாலும் அப்படித்தான் என்று இல்லாமல்தானே அவள் ஒரு மாற்று அபிப்ராயம் எழுப்பியிருக்கிறாள்? அவள் சொன்னதற்கு ராமர் ஸந்தோஷப்பட்டு அவளை ‘தர்மஜ்ஞே!‘ – ‘தர்மம் தெரிந்தவளே!’ – என்று கூப்பிட்டு, ஆனாலும் தாம் செய்ததுதான் க்ஷத்ரிய தர்மம், அதுவும் அவளுக்குத் தெரிந்ததுதான் என்று அவள் பாணியிலேயே பதில் சொல்கிறார். (வால்மீகி ராமாயணம், அரண்ய காண்டம், ஸ்ர்கம் 10) அப்புறம் அவளும் அதை ஒப்புக் கொள்கிறாள்.

வதை கார்யம் வேண்டாமென்கிற இடத்தில் ஸீதை, ‘உங்களிடம் ஸ்நேஹத்தினாலேயே (ஸ்நெஹாய) சொல்கிறேன்’ என்கிறாள். ‘ஸ்நேஹம்’ என்பது கவனிக்க வேண்டிய ‘பாயிண்ட்’. பதிக்குப் பத்னி ஸ்நேஹிதை – ஸகா – companion; அடிமையில்லை என்கிற பாயின்ட் விவாஹத்தில் வருகிற ‘ஸப்தபதி’ முதலான வேத  மந்த்ரங்களைப் பார்த்தாலே போதும், பெண்டாட்டி புருஷனுடைய slave இல்லை; அவனுடைய companion தான் என்பதற்கு, பெண்டாட்டியைப் புருஷனுக்கு அடிமையாக வேத தர்மம் நினைக்கவேயில்லை; ‘வாழ்க்கைத் துணை நலம்’ என்று அதிகாரப் பெயரே கொடுத்து திருவள்ளுவர் சொல்கிறபடி இரண்டு பேரும் கைகோத்துக்கொண்டு துணையாக ஒருவரையொருவர் வாழ்க்கைப் பாதையில் முன்னேற்றிக் கொண்டு போகிறார்கள் என்றே நினைத்தது. ஸ்ப்தபதி முடிவில் வரன் (மணமகன்) வதூவிடம் (மணமகளிடம்) ‘இந்த ஸப்தபதியினால் நாம் ஸ்நேஹிதர்களாகி விட்டோம். பரஸ்பரம் நாம் இந்த ஸ்நேஹத்திலிருந்து எந்நாளும் பிரிக்கப்படாமலிப்போமாக! நாம் ஒன்று  சேர்ந்தே ஸங்கல்பங்கள் செய்வோம். வாழ்க்கையின் ஸகல அம்சங்களையும் ஒன்று சேர்த்தே அ நுபவிப்போம் என்றெல்லாம் ஸ்பஷ்டமாகச் சொல்கிறான். ‘க்ருஹத்துக்கு ராணியாக இரு!’ (ஸம்ராஜ்ஞீ பவ) என்றே வதூவுக்குச் செய்கிற வேத மந்த்ர ஆசீர்வசனம்: ‘அடிமையாய் இரு’ என்றில்லை.

விவாஹ ஸம்ஸ்காரத்தில் இன்னொரு வேத மந்த்ரம் இதற்கு முன்னதாக இருக்கிறது. அதைப் பார்த்தால் இந்தக் காலத்து women’s lib – காரர்களையும் (பெண்கள் சுதந்திர இயக்கத்தினரையும்) வேதம் மிஞ்சி விடுகிறது என்று கூடத் தோன்றும்! அதில் ‘அகமுடையான் தலையில் ஏறி உட்கார்ந்து கொள்’ – மூர்தானம் பத்யு: ஆரோஹ – என்றே வருகிறது! வாஸ்தவத்தில் (இதன்) தாத்பர்யம், பதியைப் பத்னி தனக்கு அடிமையாக்கிக் கொள்ள வேண்டும் என்பதல்ல. ஒருவரை நாம் ரொம்பவும் அளவுக்கு மீறி மெச்சுவதைத் ‘தலையில் தூக்கி வைத்துக்கொள்வது’ என்கிறோம்மல்லவா? அந்த மாதிரி, ஒரு க்ருஹிணி க்ருஹத்தை நன்றாகப் பரிபாலனம் செய்து பதி ரொம்பவும் மெச்சிக் கொண்டாடும்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதே தாத்பர்யம். அப்படியானாலும் ஒரு பதி தன் பத்னியை அடிமையின் ஸ்தானத்தில் வைத்திருக்காமல், தலையில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறான் என்று சொல்லுமளவுக்கு மெச்சி, போற்றி, கெளரவம் கொடுத்தே நடத்த வேண்டும் என்றுதானே இதிலிருந்து ஆகிறது?



Categories: Upanyasam

Tags:

2 replies

  1. Periyava sollukku maru sol kidayadhu. Everyone should learn and spread these interpretations. Periyava saranam.

  2. “பதிக்குப் பத்னி ஸ்நேஹிதை – ஸகா – companion; அடிமையில்லை!” If these Golden Words of Maha Periyava are remembered by every couple, there will be no room for differences, separations and divorces. Maha Periyava ThiruvadigaLee CharaNam! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

Leave a Reply

%d bloggers like this: