தலைப்பைக் கண்டதும் வியப்பு மேலிடுகிறதா? ஆனால், இது உண்மை! சேலத்தில், தனக்கென ஒர் இடத்தைக் கேட்டு வாங்கி, அதில் பல ரூபங்களில் தோற்ற மளித்து, பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார், மகா பெரியவா!
சுவாரஸ்யமான அந்தப் புனித நிகழ்வைத் தெரிந்துகொள்வோமா?
பெரியவாளின் பரம பக்தரான ராஜகோபால், இந்தியன் காபி போர்டில் உத்தியோகம் பார்த்துக்கொண்டு இருந்த நேரம் அது. அப்போது அவரின் பெற்றோர் சென்னையில் இருந்தார்கள். அவர்களின் வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு குடும்பத்தின் மாப்பிள்ளைதான், காஞ்சி மகானின் தீவிர பக்தரான பிரதோஷம் மாமா.
ராஜகோபால் தம்பதி, காஞ்சி மகானிடம் பக்தி கொண்டு இருந்தார் களே தவிர, அவ்வளவு நெருக்கம் இல்லை. பிரதோஷம் மாமா ஒரு தடவை இவரைத் தன் வீட்டுக்கு அழைத்துப்போய், மகானைப் பற்றி விவரமாக உபதேசித்த பின்புதான், இவர் உள்ளத்தில் பெரியவா மீது அளவற்ற பக்தி தோன்றியது.
உத்தியோகம் நிமித்தமாக அடிக்கடி இடம் மாறிக்கொண்டு இருந்த ராஜகோபால், சேலத்துக்கும் மாறுதல் கிடைக்கப்பெற்றார். சேலத்துக்குத் தனக்கு மாற்றல் கிடைத்த விஷயத்தைப் பெரியவாளிடம் ராஜகோபால் சொன்னபோது, ”சேலத்தில் உனக்கு வீடு இல்லையா?” என்று ஒரு கேள்வியைக் கேட்டார் பெரியவா.
”சென்னையில் பூர்வீக சொத்து இருக்கிறது” என்று ராஜகோபால் சொல்ல… ”சேலத்தில் வீடு இருக்கிறதா என்றுதான் கேட்டேன்” என்றார் மகான் அழுத்தம்திருத்தமாக.
”இல்லை!” என்று மெல்லிய குரலில் பதில் சொன்ன ராஜகோபாலின் மனத்தில் அப்போதே ஓர் எண்ணம் ஓடியது… சேலத்தில் எப்படியாவது ஒரு வீட்டை வாங்கிவிட வேண்டும் என்று!
சேலத்தில், அவர் உமா நகரில் குடியிருந்தார். அதுவரை சேலத்தில் வீடு வாங்க நினைக்காதவர், மகானின் கேள்வியால் வீடு வாங்கும் உறுதிகொண்டார். எங்கெங்கோ தேடி, கடைசியில் ஒரு நண்பர் மூலமாக, ரகுராம் காலனியில் ஒரு வக்கீலின் வீட்டைப் பார்த்துப் பேசி முடித்தார். அதை வாங்கும்பொருட்டு சென்னை வீட்டை நல்ல விலைக்கு விற்றுவிட்டார்.
அதன்பின், காரியங்கள் அசுர வேகத்தில் நடக்க, ஒரு நல்ல நாளில் வீட்டை வாங்கி, தன் மனைவி கீதாவின் பேரில் ரிஜிஸ்தரும் செய்துவிட்டார் ராஜகோபால்.
”சொந்த வீடு இருக்கிறதா?” என்று மகான் கேட்டதை நிறைவேற்றிவிட்ட திருப்தி அவருக்கு. வீட்டுப் பத்திரத்தை எடுத்துக்கொண்டு, தன் மனைவியுடன் காஞ்சிக்குச் சென்ற ராஜகோபால், மகானின் முன்னால் போய் நின்றார்.
இதற்கு முன் நடந்த சம்பவத்தை இங்கு சொல்லியாக வேண்டும்.
வீட்டைப் பார்த்துப் பேசி முடித்ததுமே, நேராக காஞ்சிக்குப் போன ராஜகோபால், மகானிடம் பவ்வியமாக, ”ஒரு வீட்டை சேலத்தில் பார்த்திருக்கிறேன்” என்றார்.
மகானின் அடுத்த கேள்வி, ராஜகோபாலை வியப்பில் ஆழ்த்தியது… ”வடக்குப் பார்த்த வீடுதானே? வாங்கிடு!”
வீடு எப்படி இருக்கிறது, எந்தத் திசையை நோக்கி இருக்கிறது என்கிற விவரம் எதையும் மகானிடம் சொல்லவே இல்லை ராஜகோபால். ஆனால், அந்த மகான் கேட்டார்… ”வடக்குப் பார்த்த வீடுதானே?”
அவரது அடுத்த கேள்வி: ”என்ன விலை சொல்றான்?”
ராஜகோபால் சொன்னார்.
”அவன் இன்னமும் குறைச்சுக் கொடுப்பான். வாங்கிடு!” என்று ஆசி வழங்கினார் மகான்.
மகான் சொன்னபடியே, வீட்டின் சொந்தக் காரர் அதன் விலையில் மேலும் 10 ஆயிரம் ரூபாய் குறைத்துத் தர முன்வந்தார். வீடும் கைமாறியது.
இதோ… ராஜகோபால் தம்பதி, மகானுக்கு முன்னே நிற்கிறார்கள். ஒரு தட்டில் பழம், தேங்காய், பூவுடன், பத்திரத்தை அவர் முன் வைக்கிறார்கள். தட்டைக் கையில் எடுத்து மகானிடம் நீட்டும்போது, தன்னை அறியாமல் ராஜகோபால் சொல்கிறார்…
”மகா பெரியவா அனுக்ரஹத்தில், மகா பெரியவா கிரஹம் வாங்கப்பட்டு இருக்கிறது!”
‘தங்கள் வீடு’ என்று அவர் சொல்ல வில்லை. ‘பெரியவா கிரஹம்’ என்று தன்னிச்சையாக அவர் வாயிலிருந்து வார்த்தைகள் வந்து விழுந்தன.
மகான் ஒரு புன்சிரிப்போடு நிமிர்ந்து, ராஜகோபால் தம்பதியைப் பார்த்தார். பிறகு, சிறிய டார்ச் வெளிச்சத்தில் பத்திரம் பூராவையும் படித்தார். அதன்பின் கேட்டார்… ”எனக்கே எனக்கா?”
”பெரியவா அனுக்ரஹம்” என்றார் ராஜ கோபால். பத்திரத்தை மகான் உடனே திருப்பித் தரவில்லை. சற்றுநேரம் கழித்து, அந்தத் தம்பதியை தன் அருகில் அழைத்து, பத்திரத்தின் மீது தாமரை இதழும் வில்வமும் வைத்துத் தந்தார்.
வீட்டின் சாவியைக் கையில் எடுத்த மகா பெரியவா, சாவியை ராஜகோபாலின் கையில் தந்து, ”சாவியை அவகிட்டே கொடு! அவதானே வீட்டுக்காரி” என்றார் புன்னகை புரிந்தபடி.
உண்மைதான்! வீட்டுக்காரி என்னும் சொல் மனைவி என்கிற அர்த்தத்தில் மட்டுமல்ல… வீட்டைத் தன் மனைவியின் பேரில்தானே பதிவு செய்திருந்தார் ராஜகோபால்! எனவே, வீட்டுக்கு உரிமையாளர் என்கிற அர்த்தமும் அதில் உள்ளடங்கியிருந்தது.
அடுத்தபடியாக பெரியவா சொன்ன விஷயம் யாரும் எதிர்பார்க்காதது.
”உனக்கும் உன் குழந்தைகளுக்கும் சௌகர் யமாக மேலே வீட்டைக் கட்டிக் கொள்; கீழே நான் இருக்கேன்!”
இவை எப்படிப்பட்ட வார்த்தைகள்! ராஜ கோபால் கொஞ்சம் ஆடித்தான் போனார். ‘பெரியவாளை கீழே விட்டுவிட்டு, மேலே போய் எப்படிக் குடித்தனம் பண்ணுவது!’ என்று கவலை வந்தது.
மகானுக்கு அவரது எண்ண ஓட்டம் புரியாதா?
”நான் எல்லா இடத்திலும் இருப்பேன்” என்பதைப்போல கையைத் தூக்கி ஆசி வழங்கினார்.
”எத்தனையோ பேர் கோடி கோடியாகக் கொட்டிக் கொடுக்கக் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். பெரியவா உன் வீட்டை எடுத்துக்கொண்டது, உன் மீது அவர் வைத்துள்ள அபிமானத்தையே காட்டுகிறது!” என்ற பிரதோஷம் மாமா, அந்தத் தம்பதிக்கு தன் வீட்டில் தடபுடலாக விருந்து வைத்து அனுப்பினார்.
இதுதான் சேலம் காந்தி ரோடு, ரகுராம் காலனியில் உள்ள மகா பெரியவா கிரஹத்தின் வரலாறு.
இந்தக் கிரஹம் இப்போது ஏராளமான பக்தர்கள் ஒரே சமயம் வந்து தரிசனம் செய்யவும், உணவருந்தவும் வசதியாக, மிகவும் விசாலமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
புனிதமான கோயிலாகக் கருதப்படும் இந்தக் கிரஹத்தில், பிரதோஷ நாள்களில் வரும் கூட்டத்தைச் சமாளிக்கமுடியாமல் திணறிப் போகிறார்களாம்!
மகா பெரியவா இங்கே பல உருவங்களில் காட்சி தருகிறார். ஸ்ரீவிநாயகரும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியும் விக்கிரக வடிவில் இருக்க, கயிலாசபதியும் நந்தியும் இங்கே கொலுவிருக்கிறார்கள்.
புதிதாக 4 அடி உயரமுள்ள ஆஞ்சநேயரும் இங்கு காட்சி தருகிறார். சுமங்கலி பூஜையும் இங்கே நடைபெறுகிறது. அவ்வப்போது ராமபக்த ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தப்படுகிறது.
மகானின் பல்வேறு உருவப் படங்கள் இங்கே ஒரே இடத்தில் காணக் கிடைப்பது மிகவும் சிறப்பு! காலையும் மாலையும் கற்பூர தீபாராதனை நடக்கும்.
சேலத்தில் உள்ள மகா பெரியவா கிரஹம் ஒரு புண்ணிய ஸ்தலம். அவசியம் ஒருமுறை அந்த கிரஹத்துக்கு விஜயம் செய்து, காஞ்சி மகானின் பேரருளைப் பெறுங்கள்!
Categories: Devotee Experiences
Can we get the Addresss to visit.
Rom a punniyam senjava. Ungalukku yengal Namaskarangal. Assirvadhikkanum.
MahaPeriyava padma padham Saranam
Next I should visit MahaPeriyava temple in Salem. Hope MahaPeriyava gives AnuGraham to visit His Graham
Its the Blessings of Sri Sri Sri Maha Periyava. Hara Hara Sankara jaya jaya Sankara.
Can you please give the address and contact no
regards
S.Sambamoorthy
ssmiyer@gmail.com
really superb and unimaginable by the devotee (sri Rajagopal) himself