ஆகிவிட்டது… தரிசனம் ஆகிவிட்டது

csimg19

Thanks to Hariharan, FB.

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் கூறுகிறார்…

அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு அதிகாரி, சன்னியாசத்தின் மேல் பற்று கொண்டு சன்னியாசியாக ஆகிவிட்டார். காவியும் உடுத்திக் கொண்டு கையில் த்ரிதண்டத்துடன் சன்னியாசிக்குண்டான லட்சணங்களோடு அவர் யாத்திரை புரிந்தபடி இருந்தார். அப்படிப்பட்டவருக்கும் ஒரு சோதனை! அவருடைய சன்னியாச தண்டம் காணாமல் போய்விட்டது. இப்படி ஒரு சன்னியாசிக்கு நிகழ்ந்தால் அவர் உடனே இன்னொரு சன்னியாசியைச் சந்தித்து அவரிடம் இருந்து புதிய தண்டத்தை தீட்சையுடன் பெற்றுக்கொள்வது என்பதுதான் வழக்கம். அவருக்கு உடனே பெரியவர் நினைவுதான் வந்தது. காஞ்சிபுரத்தை நோக்கிப் புறப்பட்டு விட்டார்.

ஒரு சன்னியாசியின் த்ரிதண்டம் காணாமல் போகிறது என்பதைக் கேள்விப்படும் போதே நமக்கு வியப்பாக இருக்கும். அது ஒன்றும் விலை மதிப்புள்ளதல்ல… அதாவது, லௌகீகப் பார்வையில்! ஆனால், பக்தியுடன் பார்த்தால் அதற்கு விலை மதிப்பே கிடையாது. இதுதான் யதார்த்தம்! கிடைப்பதை எல்லாம் அபகரிக்க நினைப்பவர்கள் கூட சன்னியாசியிடம் கை வைக்க அஞ்சுவார்கள். இருந்தும் அது காணாமல் போனதுதான் பெரிய விந்தை. இந்த விந்தைக்குப் பின்னாலே ஒரு நல்ல விஷயமும் இருந்ததுதான் ஆச்சரியம்.

அந்த சன்னியாசி பெரியவரை தரிசனம் பண்ண வந்தபோது, பெரியவருக்கு சரியான காய்ச்சல்! பக்தர்களுக்குத் தான் பெரியவரைப் பிடிக்க வேண்டுமா? காய்ச்சல், குளிருக்கும் கூட பெரியவரை மிகப் பிடித்துவிட்டது போலும். உடம்பு எவ்வளவு படுத்தினாலும் பெரியவர் அதைப் பொருட்படுத்த மாட்டார்.

அதிகபட்சம் கஷாயம் வைத்து சாப்பிடுவார். அவ்வளவுதான்! இரண்டொரு நாளில் தானாகச் சரியாகி விடும். ஆனால், அந்த சமயத்தில் அந்தக் காய்ச்சல் அவரை விடுவதாக இல்லை. உடம்பெல்லாமும் வலி எடுக்கத் தொடங்கி விட்டது. இந்த நிலையில் அவருக்கு சேவை செய்ய எவ்வளவோ பேர் தயாராக இருந்தாலும் அவரைத் தீண்டி எதையும் செய்ய முடியாது.

சன்னியாசிகளுக்குண்டான ஆசாரத்தில் – எதன் மேலும், எவர் மேலும் படாமல் இருப்பது என்பது முக்கியமான ஒன்றாகும். பட்டுவிட்டால், தீட்டு ஏற்பட்டு பின் சுத்தப்படுத்திக் கொள்ள மிகவே பிரயத்தனப்பட வேண்டும்.

இந்த ஆசாரமான விஷயத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கும், சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட சாரார் மேல் காட்டப்பட்ட தீண்டாமைக்கும் நிறைய வேற்றுமை உண்டு. நுட்பமாகச் சிந்தித்து உணர வேண்டிய ஒரு விஷயம் இது.

பெரியவரைத் தொட்டுத் தூக்கி, அவர் உடம்பைத் துவட்டி அவருக்கு உதவ எல்லோர் மனமும் துடித்த போதுதான், த்ரிதண்டத்தை இழந்துவிட்ட சன்னியாசி கடவுளாலேயே அனுப்பப்பட்டவர் போல வந்து சேர்ந்தார். சன்னியாசிக்கு சன்னியாசி, ஸ்பரிசம் படுவதில் பாதகமில்லை. அவர் வரவும், மடத்தில் உள்ளோர் மகிழ்ந்தனர். பெரியவர் அவருக்கு த்ரிதண்டத்தை வழங்கி, அவர் தன்னைத் தீண்ட வழி செய்தார். அவரும் அவருக்கு உதவிட, பெரியவர் வெகு சீக்கிரம் குணமாகி எழுந்தார். அதன்பின் சில காலம் அந்த சன்னியாசி பெரியவருடன்தான் இருந்தார்.

அந்த வேளையில் திருப்பதிக்கு யாத்திரை செல்லவும் நேர்ந்தது. பெரியவர் எப்போதும் விறுவிறுவென்று நடக்கக் கூடியவர். ஒடிசலான அவர் உடலமைப்பும் அவரது உணவுக் கட்டுப்பாடும் அவரை எப்போதும் சுறுசுறுப்பாகவே வைத்திருந்தது தான் காரணம். அப்படிச் சென்ற பெரியவர், பெருமாளின் திருச்சன்னிதிக்குள்ளும் விறுவிறுவென்று சென்று விட்டார். அங்கே அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டது. அவரும் ஏகாந்தமாக பெருமாளை எப்பொழுதும் தான் பிறர் கேட்கும்படியாக உச்சரிக்கும் நாராயணா எனும் நாமத்துக்குரிய விஷ்ணுபதியை மனம் நெகிழ வணங்கிவிட்டு வெளியே வரும் போதுதான் அந்த த்ரிதண்ட சன்னியாசியின் ஞாபகம் வந்தது.

‘அடடா! அவரை விட்டுவிட்டு வேகமாக வந்து விட்டோமே…’ என்று தோன்றவே, அவரைத் தேடியபடி வெளியே வந்தார். வெளியே அந்த சன்னியாசியும் வந்து கொண்டிருந்தார். அப்படி வந்தவர், பெரியவரைப் பார்த்த மாத்திரத்தில் அப்படியே சிலிர்த்துப் போய்விட்டார்.

பெரியவர் பெரியவராகக் காட்சி தராமல், அந்த வேங்கடவனாகவே சங்கு சக்ரதாரியாகக் காட்சியளித்ததுதான் காரணம்! அதன்பின் பெரியவரே அவரை உள்ளே போய் சேவிதம் பண்ணச் சொல்லியும் அவர் கேட்கவில்லை.

‘ஆகிவிட்டது… தரிசனம் ஆகிவிட்டது… திவ்ய மங்கள ரூபமாக உயிர்த்துடிப்புடன் தரிசனம் செய்துவிட்ட நிலையில் உள்சென்று ஸ்தூலமான அந்த சிலாரூப தரிசனம் காண எனக்கு இப்போது தேவையில்லை!’ என்று கூறிவிட்டார். அவருக்கு ஏதோ பிரமை… அவர் கண்களுக்கு அப்படித் தெரிந்திருக்கிறது என்று இதற்கொரு அர்த்தம் கற்பிக்கலாம்தான். ஆனால், பிரமை எல்லாம் நம் போன்றோர்களுக்குத்தான்! சன்னியாசிகள் நம்மைப்போல உலக ருசிகளில் சிக்கி தங்களை இழந்தவர்கள் அல்ல; உலக ருசிகளை எல்லாம் வென்று தங்களை அடிமைப்படுத்தி விடாமல் செய்தவர்கள்.Categories: Devotee Experiences

Tags:

4 replies

 1. Meenakshi Sudara Sasthrigal
  Nameskaram.

  There are so many people in You tube about Periyava experience — Which are much more delightful than the serial — they do not even speak the way MahaPeriyava did — Not that I am affliated to Bhramana Bhasai — but that would wonderful amzaing experience. some of Youtube such as “Vazhudhvur Ramamurthy”, “Agobhalimadam Jeeyar”, Balu four part about an hour each “thiyago thatha:, Palakadai Kumbakonam mama, and so on — watch them — I tried to spend at least an hour in week to listen to them — Delightful

 2. Respected mahesh sir,I am meenakshi sundara sastrigal from Toronto aadhiparasakthy hindu temple,Canada.pls find out why vijay tv stops telecasting the mahaangalum adhisayangalum programma about mahaperiavaa.isthere any other channels telecasting.what is the future plan.my prayers towards periyavaa that the prOgramme should be telecast at least for 5 yrs so that all the people in this world should be blessed by mahan atleast once in their lifetime by his darshan through this programmes.thanks

 3. Dear Mr Mahesh, this is a latest experience of a devotee which i came across in youtube. i dont think its been blogged here before. I am pasting the you tube link for further proceesings.

  https://www.youtube.com/watch?v=CcIoQxrNWvY

  thanks in advance.

 4. Great Experience. We learn about Jeevan Mukhthaas LakshaNam through this episode. Maha Periyava and Lord Venkateswara are One and the Same. Jaya Jaya Shankara, Hara Hara Shankara! Om Namoo NaaraayaNaaya! MahaangaL ThiruvadigaLukku Namaskaaram!

Leave a Reply

%d bloggers like this: