சென்னையில் வள்ளுவர் கோட்டம், கன்யாகுமரியில் 133 அடி உயர வள்ளுவர் சிலை, டெல்லியில் மலைமந்திர் சுவாமிநாத சுவாமி கோவில், ஹவாயில் உள்ள இறைவன் கோவில் – இவற்றில் எதைப் பார்த்திருந்தாலும் நீங்கள்கணபதி ஸ்தபதி அவர்களின் பிரம்மாண்டக் கலைத் திறனைப் பார்த்திருக்கிறீர்கள். தவிர, லண்டன், அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, ஃபிஜி, ஸ்ரீலங்கா என்று எங்கெல்லாம் உலகில் இந்துக்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் ஸ்தபதியார், அவர்களுக்குக் கோவில்களை அமைத்துக் கொடுத்திருக்கிறார். அமெரிக்காவில் வாஷிங்டனில் சிவ-விஷ்ணு, ஐயப்பன், வெங்கடேஸ்வரா ஆலயங்கள், இல்லினாய்ஸ் ஸ்ரீ ராமர் கோவில், சிகாகோ கணேச சிவ துர்கை ஆலயம் என்று இவர் நிர்மாணித்த கோவில்களின் பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம். 82 வயது ஆன போதிலும் இன்னும் படைப்பும் ஆய்வும் தொய்வில்லாமல் செய்துவருகிறார்.
மகரிஷி மகேஷ் யோகியின் மஹரிஷி வேதப் பல்கலைக் கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. ‘Building Architecture of Sthapatya Veda‘, ‘Quintessence Of Sthapatya Veda‘, ‘Who Created God‘ போன்ற 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். சில்ப குரு, துளசி சம்மான், கலைமாமணி, சில்ப கலாநிதி, தென்னக மயன், வாஸ்து வியாசன், பத்மபூஷண் உட்பட பல்வேறு விருதுகள் பெற்ற இவரைத் தென்றலுக்காக நேர்காணல் செய்தபோது…
கே: காஞ்சிப் பெரியவருடன் நெருங்கிப் பழகிய அனுபவங்களைச் சொல்ல முடியுமா?
ப: பல ஆண்டுகளுக்கு முன்னரே வேத, ஆகம, வாஸ்து, வித்வ சதஸ்ஸை அவர் காஞ்சிபுரத்தில் நடத்தியிருக்கிறார். நான் சிற்பக் கலைக் கல்லூரி முதல்வராக இருந்த போது அதில் கலந்து கொண்டிருக்கிறேன். அவர் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் தயங்காமல் விளக்கமான பதில் சொன்னதால் என்மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். கிட்டத்தட்ட 20 ஆண்டுக்கும் மேல் அவருடன் தொடர்பு இருந்தது. காஞ்சிப் பெரியவர் வெறும் சன்யாசி மட்டுமல்ல. அவர் திரிகால ஞானி. பல்வேறு சாஸ்திரங்கள் தெரிந்தவர். மிகப் பெரிய ஆத்ம ஞானி. அவர் ஒரு மகா வித்வான். ஆர்க்கியாலஜிஸ்ட். அவரைப் போன்றவர்களின் அருளாசி கிடைத்தது எனது பாக்யம்தான்.சுவாமிகளின் அருளாசியோடு அமைக்கப்பட்டது புதுதில்லியில் உள்ள சுவாமிநாத சுவாமி ஆலயம்.
“அமோகமாக இருப்பாய்” என்று ஆசிர்வதித்தார் காஞ்சி மகாபெரியவர்.
சிறு வயதில் காஞ்சிப் பெரியவரை நான் சந்தித்தது மறக்க முடியாத அனுபவம்.
1957ல் எனது தந்தையார் சிற்பக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வந்தார். அப்போது திடீரென்று வாத நோய் அவருக்கு ஏற்பட்டது. இதை நான் எனது வளர்ப்புத் தந்தை கம்பனடிப்பொடி சா. கணேசன் அவர்களிடம் கூறியபோது அவர் காஞ்சி மகா பெரியவரைப் போய்ப் பார்க்கச் சொன்னார். அப்போது சுவாமிகள்இளையாற்றங்குடியில் தங்கியிருந்தார். அது ஒரு குக்கிராமம். நான் போகும்போதே மணி இரவு ஒன்பதாகிஇருந்தது. சுவாமிகள் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று, மேனேஜர் மூலம் தகவல் தெரிவித்தேன். உடனடியாக என்னை அழைத்து வரச் சொன்னார்கள். சுவாமிகளைச் சுற்றி நிறைய பக்தர்கள் கூட்டம் இருந்தது. அனைவரையும் விலக்கி என்னை அழைத்தார்கள். சுவாமிகளிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, என் தந்தையின் நிலையைப் பற்றிச் சொன்னேன். அவருக்கு குணமாகுமா, ஆகாதா, பலப்பல கோயில்களைக் கட்டிய இவருக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்றெல்லாம் சுவாமிகளிடம் கேட்டேன்.
சுவாமிகளோ அதற்கு பதில் ஏதும் கூறாமல், என்னைப் பற்றி, என் கல்வி பற்றி, நான் பார்க்கும் வேலை பற்றியே விசாரித்துக் கொண்டிருந்தார். எனக்கு மிகவும் கவலையாகி விட்டது. தந்தையைப் பற்றி இவர் எதுவுமே கூறவில்லையே அவருக்கு ஏதேனும் ஆகிவிடுமோ, உயிர் பிழைக்க மாட்டாரோ என்றெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் சுவாமிகளோ திடீரென்று ‘வா என்னுடன்’ என்று கூறி விட்டு நடக்கத் தொடங்கினார்.
வெகு தூரம் நடந்து மூத்த சுவாமிகளின் அதிஷ்டானம் அருகே சென்றவர், ‘இங்கேயே இரு’ என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார். நான் வெகு நேரம் காத்துக் கொண்டிருந்தேன். மணி 12ஐக் கடந்து விட்டது. கூட்டம் கலைந்து சென்று விட்டது. நான் மட்டும் தனியே, வெளியில் காத்துக் கொண்டிருந்தேன். வெகு நேரம் சென்றிருக்கும், ‘எங்கே அந்தப் பையன்?’ என்று கேட்டுக் கொண்டே அதிஷ்டானத்தில் இருந்து வெளியில் வந்தார்சுவாமிகள். ‘இங்கே இருக்கிறேன் சுவாமி’ என்றேன் நான். சுவாமிகள் உள்ளே செல்லும் போது பாரம்பரிய தண்டத்தோடு மட்டுமே சென்றார். வரும்போது அவர் கையில் இரண்டு தேங்காய் மூடிகள் இருந்தன. வியப்புடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். பிரகாரத்தின் ஒரு மூலையில் நின்று, தண்டத்தைப் பிடித்துக் கொண்டசுவாமிகள், என் தந்தையின் நிலையைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.
நான் சொல்லச் சொல்லக் கேட்டுக் கொண்டவர், ‘உன் அப்பாவுக்கு வந்திருப்பது பிராரப்த கர்மாவால். நீ மிகவும் அமோகமாக இருப்பாய்’ என்று சொல்லி ஆசிர்வதித்தார். இரு தேங்காய் மூடிகளையும் என்னிடம் கொடுத்து, ‘இந்த வழியாகப் போ. போகும் போது ஆஃபிஸில் போய் மேனேஜரைப் பார்த்து விட்டுப் போ’ என்றார்.
அதுவோ பயங்கரமான இருள் பிரதேசம். சுவாமிகள் சொன்ன வழியில் எப்படிச் செல்வது என்று புரியாமல் திகைத்துப்போய் நின்று கொண்டிருந்த போது, ஒரு சிறுவன், சுமார் எட்டு வயதிருக்கும். குடுமி வைத்துக் கொண்டு முன்னால் வந்தான். முகத்தில் தெய்வீகக் களை. ‘ஸ்தபதி, இந்த வழியாக என் பின்னாலேயே வாருங்கள்!’ என்று சொல்லி நடக்கத் தொடங்கினான். எனக்கு மிகவும் ஆச்சரியம். யார் இவன், எங்கிருந்து வந்தான் என்று. ஏதாவது பேய், பிசாசாக இருக்குமோ என்று சற்று பயமாகக் கூட இருந்தது. மயானக் கரை வேறு அருகில் இருந்தது. ஆனாலும் அவன் பின்னாலேயே நடக்கத் தொடங்கினேன். அவன் உருவத்தைப் பார்க்கும்போது கோபுலு வரைந்த ஆதி சங்கரர் ஓவியம் நினைவுக்கு வந்தது. அந்த உருவமே நேரில் வந்திருப்பது போலத் தோன்றியது. சில நிமிடங்களில் மேனேஜர் இருப்பிடத்தை அடைந்ததும், அவரிடம் அந்தச் சிறுவன் ஏதோ கூறிவிட்டு இருட்டில் சென்று மறைந்து விட்டான்.
பின்னர் மேனேஜர் என்னிடம் ஒரு ரசீதில் கையொப்பமிட்டு ஐம்பது ரூபாயைப் பெற்றுக் கொள்ளும்படிச் சொன்னார். நான் மறுத்தேன். ‘இது சுவாமிகளின் உத்தரவு. அவசியம் வாங்கிக் கொள்ள வேண்டும்’ என்றார். நானும் மறுக்க மனமின்றி அதை வாங்கிக் கொண்டேன். அதன்பின் என்னை உள்ளே சென்று உணவருந்திவிட்டுச் செல்லுமாறு கூறினார். அப்போதோ நேரம் இரவு 1 மணிக்கு மேல் இருக்கும். நானும் நல்ல பசியில் இருந்தேன். உள்ளே சென்றால் சாதம், சாம்பார், ரசம் என எல்லாம் சுடச்சுட இருந்தது. சாப்பிட்டுவிட்டு, அகால வேளை என்பதால் அங்கேயே இரவு தங்கி விட்டுப் புறப்பட்டேன்.
பிற்காலத்தில் காஞ்சிபுரத்தில் சுவாமிகளிடம் இதைத் தெரிவித்த போது, ‘எங்களுக்கெல்லாம் கிடைக்காத பாக்கியம் உனக்குக் கிடைத்திருக்கிறது. நாங்கள் எல்லாம் சங்கரரைப் பற்றிப் படித்துத் தான் இருக்கிறோம். ஆனால் உனக்கு அவரைப் பார்க்கும் பாக்யமே கிடைத்திருக்கிறது’ என்று கூறி சிலாகித்தார். ‘காமகோடி‘ என்ற இதழில் இது குறித்து எழுதியிருக்கிறார்கள். இது என்னால் மறக்க முடியாத ஒரு அனுபவம்.
– கணபதி ஸ்தபதி
Categories: Devotee Experiences
Dear All,
Please enjoy this wonder on the holy occassion of SHIVARATHRI.
PERIAVA THIRUVADI SARANAM.
GURUBYAO NAMAHA
SARVESWARANAHGA IRUNDHU ELLORUKKUM ARUL PURIA PRARTHIKKIREN.
Seshadri
2014-02-26 20:54 GMT+05:30 Sage of Kanchi :
> mahesh posted: ” “