சிறுகக் கட்டி பெருக வாழ்வது / வேலையில்லாத் திண்டாட்டம்

 

30 Mahaperiyava with Rudhrakshamalai 05122013

 

ஸ்த்ரீகளுக்கு அவச்யமான உழைப்பை மெஷின்கள் அபஹரிப்பதையும், அதோடு அவை பணத்தையும் அபஹரிப்பதையும் சொல்லிக் கொண்டிருந்தேன்.

இப்படிப் புதுப் புது மோஸ்தரில் உற்பத்திப் பண்டங்கள் நாளுக்குநாள் வந்து கொண்டிருப்பதால் இன்றைக்கு வாங்கினது அடுத்த வருஷம் பழசாகி, புது மோஸ்தர் வாங்க வேண்டியிருக்கிறது!

துணிமணிகளிலோ செலவு கேட்கவே வேண்டாம் என்கிறார்கள்! ஸ்த்ரீகள் இவ்வளவுதான் என்றில்லாமல் பீரோ கொள்ளாமல் ஏகமாக அடுக்கிக் கொண்டே போகிறார்களென்று தெரிகிறது.

‘சிறுகக் கட்டிப் பெருக வாழ்வது’ என்ற உத்தம் லக்ஷ்யம் போய்விட்டதுதான் பெரிய அனர்த்த ஹேதுவாக நம் குடும்ப வாழ்க்கையையும், ஸமுதாய வாழ்க்கையையும் பாழ் பண்ணிக் கொண்டிருக்கிறது. எத்தனை ஸுக போக ஸாதனங்கள் இருந்தும் அதிருப்தியே படுகிற இப்போதைய மனப்பான்மை போய், ‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்று பழையபடி எளிய வாழ்க்கை வாழ்ந்து, அதிலேயே த்ருப்தி காணப் பழக்கிக் கொண்டுவிட்டால் போதும்; ‘செட்டும் கட்டுமாக’ என்று சொல்வது – அப்படி, தாம்-தூம்களை அடியோடு தள்ளி, ‘இது இல்லாமல் நம்மால் முடியாதா?’ என்று ஒவ்வொன்றாக ஆலோசித்துப் பார்த்து அநுபோகங்களைக் குறைத்துக் கொண்டு, மனஸை ஸந்துஷ்டியாக வைத்துக் கொண்டால், பொருளாதாரப் பிரச்னை என்று காரணம் காட்டிப் பெண்டுகள் உத்யோகத்துக்குப் போகத் தேவையே இருக்காது.

வேலையில்லாத் திண்டாட்டம்

இவர்கள் உத்யோகத்துக்குப் போவதாலேயே இன்னொரு விதத்தில் பொருளாதாரப் பிரச்னை பயங்கரமாக வலுத்துக் கொண்டே போவதையும் கவனிக்க வேண்டும்.  வேலை இல்லை என்று ஏராளமான புருஷ ப்ரஜைகள் தவிப்பதைத்தான் சொல்கிறேன். என் தொண்ணூறு வருஷ வாழ்க்கையில் அன்றிலிருந்து இன்று வரை இந்த வேலையில்லாத் திண்டாட்டம் இருந்து கொண்டே இருப்பதைப் பார்க்கிறேன். புதுப் புது ஸர்க்கார் ஆஃபீஸ்கள், கம்பெனிகள், இண்டஸ்ட்ரிகள் நாள்தோறும் தோன்றி லக்ஷம் லக்ஷ வேலைகள் பெருகினாலும், நம்முடைய ஜன ஸங்கியையும் (மக்கள் தொகை) ஏறிக்கொண்டே போவதால், அத்தனை லக்ஷமும் fill up-ஆகி அதற்கப்புறமும் பத்து லக்ஷக் கணக்கில் புருஷர்கள் வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதே ஸமயத்தில் பெண்டுகள் ஏராளமாக வேலைக்கு சேர்கிறார்கள். ‘ரிஸப்ஷனிஸ்ட்’ போன்ற சில வேலைகளுக்குப் பெண்களையேதான் ‘ஸெலக்ட்’ செய்வதாகவும் இருக்கிறது. இதைப் பற்றி ஸ்த்ரீகளேதான், நடு நிலைமையிலிருந்து கொண்டு ந்யாய ரீதியில் நினைத்துப் பார்க்க வேண்டும். ந்யாய ரீதியோடு அவர்களாலேயே முடியக்கூடிய த்யாக ரீதியிலும் நினைத்துப் பார்க்க வேண்டும். ‘புருஷர்களை வேலையில்லாமல் முட்டாக்குப் போட்டு வீட்டில் உட்கார்த்தி வைத்துவிட்டு நாம் அவர்களுடைய இடத்தைப் பிடித்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன?’ என்று நினைத்துப் பார்க்க வேண்டும். ‘உத்யோகம் புருஷ லக்ஷணம்’ என்ற வசனத்தை மாற்றி ‘உத்யோகம் ஸ்த்ரீ லக்ஷணம்’ என்று தாங்கள் பண்ணப் பார்ப்பதால், எத்தனை புருஷர்களின் வயிற்றிலடிக்கிற கொடுமையைச் செய்ய வேண்டியிருக்கிறது என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.

 



Categories: Upanyasam

Tags:

2 replies

  1. i like the article of mahapariyava

  2. JAYA JAYA SANKARA HARA HARA SANKARA

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading