க்ருஹலக்ஷ்மி

 

 

graha_lakshmi

ம்ருகங்களுக்கில்லாத அன்பு, அந்த அன்போடேயே துணை சேர்ந்து வருகிறவையான தியாகவுணர்ச்சி, பணிவு, பொறுமை, ஈகை, தாக்ஷிண்யம் முதலான அநேக குணங்கள், குணநலன்கள் மநுஷ ஜாதிக்கு இருக்கின்றன; இருக்க வேண்டும். இருந்தாலும் வெளி வியவஹாரங்களில் நிறைய மொத்துப்பட வேண்டிய ஸ்வதர்மத்தைக் கொண்டவன் புருஷன் என்பதை உத்தேசித்து புருஷ ஸ்ருஷ்டி தர்மமானது அவனை இவற்றில் ரொம்பவும் நைஸ் பண்ணி விடாமல் கொஞ்சம் சொரசொரவாகவே விட்டிருக்கிறது! ஸகல வியவஹாரத்திலும் அன்பு அவச்யந்தான் என்றாலும், நடைமுறை லோகத்தில் வெளி வியவஹாரங்களில் நாலா தினுஸூ ஜனங்களுக்கும் ஈடுகொடுக்க வேண்டியிருக்கிற சூழ் நிலையில் அன்பே மூலச்சரக்கு என்று வைத்துக் கார்யம் பண்ண முடியாது. மழ மழ மட்டும் இங்கே பலிக்காது. சொர சொர, கடு கடு எல்லாமும் வந்து சேரத்தான் செய்யும். அதைப் புருஷன் தன் பெளருஷத்தினால் – அதாவது ஆண்மையின் வன்மையினால் – காட்டிச் சமாளித்துக் கொள்வான். ஆனால் உள் வியவஹாரம் – அகத்து நிர்வாகம் – என்று வருகிறபோதோ இங்கே சொந்தக் குடும்பமே நிலைக்களனாக இருப்பதால், அன்பே இங்கே முழுக்க முழுக்க ஆளுகை செலுத்த வேண்டும். இங்கேயும் கண்டிப்பு – தண்டிப்புகள் வரத்தான் செய்யுமானாலும், அது விரோத பாவத்தில் கொண்டு விடாமல், கெட்டதை நல்லதாகச் சீர்திருத்தும் உயர்ந்த் நோக்கத்தை நிறைவேற்றுவதாகவே இருக்கும். அறம் மாதிரி மறத்துக்கும் துணையாகும் அன்பைப் பற்றித் திருக்குறளில் சொல்லியிருப்பது இதைத்தான். இப்படி அன்பே மையமாகத் தானும் வாழ்ந்து, குடும்பத்தாரையும் வாழ்விப்பது ஸ்த்ரீயால்தான் முடியும். அன்பும், அன்பின் ஸஹபாடிகளாக இருக்கிற தியாகம், ஸேவை, அடக்கம், தயா – தாக்ஷிண்யங்கள், எளிமை, இன்னும் இதுபோல ஸ்ருஷ்டியிலே உத்தம அம்சங்களாக இருக்கப்பட்ட குண ஸம்பத்துக்கள் முழுக்க ஒன்றுசேர்கிற இடம்தான் ஸ்த்ரீவம் – பெண்மை. அதுதான் ஸ்வபாவம் என்கிற தன்னியற்கையாக எந்த பொம்மனாட்டிக்கும் இருப்பதால், இப்போது ஸ்வேச்சையால் அந்த ஸ்வபாவத்துக்கு வித்யாஸமாகப் போவோமே என்று அவளுக்குத் தோன்றினாலும், அவள் மட்டும் கொஞ்சம் மனஸூ வைத்துவிட்டால் போதும், ஸ்வபாவ ஸ்வதர்மமான பெண்மையை மீளவும் பெற்று அகத்தை அன்புக் கோயிலாக ஆக்கிவிட முடியும்.

இயற்கையிலிருந்து  பிய்த்துக்கொண்டு போவது இப்போது ஸுலபமாகத் தோன்றுகிறது. மனஸ் வைத்துவிட்டாலோ இயற்கையிலேயே போய் ஒட்டிக்கொண்டு சேர்வதுதான் அதை விட ஸுலபம். அதுவே தனக்கும் நிறைவு தந்து மற்றவர்களுக்கும் நிறைவு தருவது என்று தெரியும்.

“அகத்துக்கு, ஸம்ராஜ்ஞியாக – அதாவது ராணியாக – இரு” என்று வேதம் கலியாணப் பெண்ணை வாழ்த்தி, இன்று வரை விவாஹத்தில் அந்த மந்திரத்தைச் சொல்லி வருகிறோம். அப்படி அன்பினால் – அதிகாரத்தினால் அல்ல – அவள் ராணியாக இருப்பாள். அவளுக்குத்தான் ‘க்ருஹ லக்ஷ்மி’ என்ற பேரே தவிர அவனுக்கு ‘க்ருஹ விஷ்ணு’ என்று பேரில்லை. ஏனென்றால் தர்ம சாஸ்திரப்படி வீடு அவளுக்கேயான துறை. புருஷனுடைய வன்மையால் ஸாதிக்க முடியாததை அவளுடைய மென்மையே இங்கே ஸாதித்துத் தந்துவிடும். அப்படி இருப்பதுதான் அவளுக்கான ஸ்வதர்மம். அதனால்தான் அகத்துப் பணி அவளுக்கே, அவள் அகத்துப் பணிக்கே என்று தர்ம சாஸ்திரம் அழகாக வரம்பு போட்டுக் கொடுத்திருக்கிறது.



Categories: Upanyasam

Tags:

3 replies

  1. YA DEVI SARVA BOOTHESHU MATRU ROOPENA MATRU ROOPENA SAMSTHITHA , NAMA THASYaAI NAMA THASYaAI NAMA THASYaI NAMO NAMAHA ||

  2. There is chapter called ‘பராசக்தியின் உதாரணம்’ before “க்ருஹலக்ஷ்மி” in the பெண்மை என்பதைக் காப்பாற்ற வேண்டும் book.

Leave a Reply

%d bloggers like this: