1935 அக்டோபர் 27 ஆம் தேதி அமாவசை, கல்கத்தாவுக்கு தென்மேற்கில் சுமார் அறுபது மைல் தூரத்தில் உள்ள மிட்னாபூருக்கு விஜயமானார்கள். அப்போது அவ்வூரில் பயங்கர இயக்கங்கள் தோன்றி வந்தன. மிட்னாபூர் மக்கள் எவ்வகையிலும் தங்கள் ஊருக்கும் சுவாமிகளை அழைத்து வர வேண்டும் என்று தீர்மானித்தார்கள். ஒரு வரவேற்பு கமிட்டி நியமிக்க பட்டது. அப்போது அவ்வூரில் கடும் ஊரடங்கு உத்தரவு, இரவு ஒன்பது மணிக்கு மேல் வீதிகளில் எவரும் நடமாடக்கூடாது என்பது சர்க்கார் உத்தரவு.
சுவாமிகள் அவ்வூர் சென்று அம்மக்களை ஆசீர்வதிக்க, அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள். சுவாமிகள் அவ்வூருக்கு விஜயம் செய்த அன்றைய தினம் மட்டும் ஊரடங்கு சட்டத்தின் சில ஷரத்துகளை ஜில்லா அதிகாரிகள் தளர்த்தி மக்களை மகிழ்விக்க செய்தனர். பல நாட்களாய் கிடைக்காத சுதந்திரம், ஒரு சுதந்திர திருநாளாகவே கொண்டாடினர், அவ்வூர் மக்கள்.
ஊரெங்கும் ஒரே தோரணம், பந்தல் மயம், புஷ்பாலங்காரம்.
1935 அக்டோபர் 27 காலை, சுவாமிகள் அவ்வூர் விஜயம், முக்கிய வீதிகளில் பட்டண பிரவேசம், பன்னிரண்டு இடங்களில் கோலாஹலமான வரவேற்பு. சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தி யில் பதிலளித்து சுவாமிகள் தர்மம், பக்தி பற்றி உபதேசம் செய்தார்கள். அதன் பின், பூஜை, தீர்த்த பிரசாத விநியோகம்.
அவ்வூரில் சிறைக்கும் செய்தி பரவியது. நாட்டின் சுதந்திரத்திற்கு தங்கள் வாழ்வையே அர்ப்பணம் செய்த தேச பக்தர்கள் பலர் அச்சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர் அப்போது. கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், இப்படி பற்பல தொழில் புரிவோர். அவர்கள் அனைவரும் தேச விடுதலைக்கு தங்களை ஈடுபடுத்திக்கொண்டவர்கள். அவர்களில் சிலருக்கு சுவாமிகளை தரிசிக்க வேண்டும் என்னும் பேரவா.
சிறை அதிகாரி ஓர் ஆங்கிலேயர். அவரிடம் தங்கள் எண்ணத்தை விண்ணப்பித்தனர். அவருக்கும் தெரிந்திருந்தது, மதத்தலைவர் ஒருவர் அவ்வூர் விஜயம் செய்திருந்தது. அக்கைதிகளின் மத உணர்ச்சியை மதித்து சில நிபந்தனைகள் பேரில், அவர்களை அவ்வதிகாரி வெளியில் சென்று வர அனுமதித்தார். கூட்டு கிளிகள் வெளியேறியவுடன் பறந்து விடாமால் இருக்க, அவர்களை கண்காணிக்க கையில் துப்பாக்கி ஏந்திய காவல் வீரர்கள் அவர்களை தொடர்ந்து வந்தனர். மாலை ஆறு மணிக்குள் சிறைக்குள் திரும்ப வேண்டும் என்பது ஒரு நிபந்தனை. எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு இளைஞர்களான சில காவல் கைதிகள் சுவாமிகள் முகாம் வந்து சேர்ந்தனர்.
மாலை மணி ஐந்தரை, சிறிது போதுக்கு முன் தான், சுவாமிகள் ஒரு தனிமையான இடத்துக்கு நித்திய பூஜை முடிந்து சற்றே ஓய்வெடுக்க சென்றிந்தார்கள். அச்சமயம் சுவாமிகளுக்கு சிரமம் கொடுக்க மடத்தின் அதிகாரிகள் விரும்பவில்லை. ஆயினும் எதிர்பார்த்திருந்தனர். அதுவரை காத்திருக்கும் படி, கைதிகளிடம் காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆறுமணிக்குள் சிறை திரும்ப வேண்டும், இல்லையெனில் பிரத்யேக தண்டனை கிடைக்கும் என்று கூறி, மிகுந்த ஏமாற்றத்துடன் சிறை நோக்கி திரும்பினர்.
சில நிமிடங்களில் சுவாமிகள் தாமாகவே, வெளியில் வந்தார். மடத்தின் அதிகாரி, சற்று முன் கைதிகள் தரிசனத்துக்கு வந்த விஷயமும், சற்று முன் தான் திரும்பினர் என்றும், சிறிது தூரம் தான் சென்றிருப்பார்கள் என்றும் தெரிவித்தார். சுவாமிகள் உடனே அவர்களை திரும்ப அழைத்து வரும்படி ஆள் அனுப்பினார்.
அவர்கள் வந்தவுடன்,சுவாமிகளை வணங்கி, நாடு சுதந்திரம் அடைந்து மக்கள் யாவரும் துன்பம் நீங்கியவர்களாகி இன்பமுற வாழ வேண்டும் என சுவாமிகள் அனுக்கிரகம் புரிய வேண்டும் எனவும் அதுவே அவர்கள் கோரிக்கை என்று கூறி சுவாமிகளை வணங்கி விரைவில் சிறை திரும்பினர், சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்ற மகிழ்ச்சியுடன்.
சுவாமிகள் அந்த கைதிகளின் தேச பக்தியை கண்டு மிகவும் மகிழ்ச்சியுற்றார்கள்.
இப்போது சொல்லுங்கள் பக்த அன்பர்களே –
நமஸ்காரங்கள் யாருக்கெல்லாம்?
ஐயனுக்கு, தன்னலம் கருதா அந்த தியாகிகளுக்கு, அந்த ஆங்கிலேயே அதிகாரிக்கு, அவ்வூர் மக்களுக்கு, இன்றும் இச்சரிதம் பரப்பி கம்பீரமாய் நிற்கும் அந்த சிறைக்கு…
இல்லையா?
இன்னொரு சம்பவம். ஓரிரு நாட்கள் முன்னர் ஸ்ரீ கணேச சர்மா அவர்கள் சங்கரா தொலைகாட்சியில் அருளிய உரை…
மிட்னாப்பூர் பெரியவா
மிட்னாப்பூரில் ஒரு துறவி பெரியவாளை தரிசித்தார். மறு தரிசனம் எப்போது என்று அந்த துறவி உள்ளம் உருகி கேட்ட பொழுது, தக்ஷண தேசத்தில் இன்னும் பதினைந்து வருஷங்கள் கழித்து வந்து என்னைப் பார் என்றது அந்த பரம்பொருள்.
அந்த துறவியும் ஒவ்வொரு நாளையும் எண்ணிக் கொண்டே இருந்தார்…எப்பொழுது பதினைந்து வருஷங்கள் முடியும் என்று…
அந்த நாளும் வந்தது…
விழுப்புரம் அருகில், முகாம். அன்று ஐயன் வடவாம்பலம் சென்றிருந்தார். இந்த துறவி வந்து ஐயனைக் காணாது தாம் தூம் என்று குதித்து, என்னை வரச் சொல்லிவிட்டு இங்கே இல்லை என்றால் எப்படி…நான் போகிறேன்…என்று குதி குதி என்று குதித்தார்.
ஐயனுக்கு பணிவிடை செய்யும் அன்பர் ஒருவர், நீங்கள் துறவி, சற்று காத்திருங்கள். இதோ, இப்போது வந்து விடுவார். நீங்கள் கோபம் காட்டலாமா என்று கூறி இருக்கிறார். நீங்கள் என்ன கொக்கா? என்றும் விசனப் பட்டிருக்கிறார்.
இதற்கு இடையே, ஐயன் வெகு வேகமாக வேகு வேகு என்று வயல் வரப்புகள், கரும்புக் காடுகள் வழியாக மிக வேகமாக நடந்து வந்து முகாம் அடைந்தார்.
அந்த துறவிக்கு அத்தனை சந்தோஷம். எங்கேயோ, எப்போதோ, கொடுத்த வாக்கை காப்பாற்ற இன்று இத்தனை சிரமப்பட்டுக் கொண்டு வந்து தனக்கு தரிசனம் கொடுக்கும் மஹா பிரபுவிடம் தர்சனம் பெற்று திரும்பப் போகிறார்.
எந்த அடியார் சற்று முன் இந்த மிட்னாப்பூர் துறவியிடம் கோபம் கொண்டாரோ, அவரையே அழைத்து, ஐயன், ‘நீ இவருக்கு வழியிலே ஏதாவது வயித்துக்கு வாங்கிக் கொடுத்து, சேந்தனூர் ரயிலடியிலே வண்டி ஏத்தி விட்டுடு’ என்று கூறி அனுப்பி வைத்தார்.
வழியில் அந்த மிட்னாப்பூர் துறவி கேட்டார், நம் அடியாரிடம்…
‘நீ யாருக்கு கைங்கர்யம் பண்ணிண்டு இருக்கே தெரியுமா? மத்தவாளுக்கு எல்லாம் அவ்வளவு சுலபமா கிடைக்காத பாக்கியம். நீ பக்கத்தில் இருந்து கைங்கர்யம் பண்றே. நான் பதினைந்து வருஷம் கழிச்சு இந்த தர்சனதுக்கு ஏங்கி இன்னிக்கு கிடைச்சுது.
நீ கைங்கர்யம் பண்றது அந்த பரமேஸ்வரனுக்கே தான்.’
Categories: Devotee Experiences
Mahaswamigal’s wonderful speech and good dharshan during the British period. It is slso reflects his thoughts and goodwill evev today.
yes there is no doubt.