அருட்சிவ குருவே!!

A beautiful poem written by Shri Nagarajan.

 

namavali081

 

 

குருஅரு  ளாலே குருதாள் வணங்கி, இக்கவிதையைப் பெரியவாளுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.

கவிதை என்றால் (என்னைப் பொருத்தவரை) சப்தம், எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை,
அணி எல்லாம் இலக்கணத்துக்கு உட்பட்டோ படாமலோ இறைவனைப் போற்றி நல்வழி காட்டி அமைவனவாம். தமிழின் பல்வகைப்பட்ட பாடல்கள், அமைப்புகள், இவற்றை எல்லாம் தொடுத்து, குருவுக்கு அடியேன் சூட்டும் மாலை இது.

தமிழ்க் கவிதைகள் யாவும் எனக்குக் குருவாகவே தெரிகின்றன.

இறை/குரு வணக்கம்

சாதுவாம் காஞ்சித் தவகுருவின் சந்தமிகு
பாதம் பணிதல் பணி.

சந்தம் – அழகு. சந்தம் – வேதாங்கம்; வேதத்தின் யாப்பு. வேதத்தின் கால் என்று கருதப்படுகிறது.

அவைக்கு வணக்கம்

வாயில்லாப் பூச்சியெற்கும் வாய்ப்பளித்த வள்ளல்காள்!
நோயின்றி வாழ்கநீர்  நூறு.

கவிதை எனக்குக் காஞ்சி மகான்

அருட்சிவ குருவே அருட்சிவ குருவே
இருள்தனை எரிக்கும் அருட்சிவ குருவே (2)

ஒலியில் ஓங்கா ரமதாய் விளங்கும்
கலியில் கலிதீர் அருட்சிவ குருவே  (4) —  ஓசை

விழுத்தவ முனிவன் வியாதன் தந்த
எழுத்தினும் இனிய அருட்சிவ குருவே  (6)  — எழுத்து

நசையில் வழியினில் நானிலம் புரக்கும்
அசையா மௌனி  அருட்சிவ குருவே  (8)  — அசை

பேர்தனக் காகப் பீற்றும் உலகில்
சீர்கெடு சினம்தவிர் அருட்சிவ குருவே  (10)  — சீர்

பிறவித் தளையை அறுக்கும் பெரிய
துறவின் துரையாம் அருட்சிவ குருவே (12)  — தளை

அடிபடு மண்ணில் அன்பை விளைத்துச்
செடிதனைத் தீர்க்கும் அருட்சிவ குருவே  (14)  — அடி

முதுமை என்னும் முருகு தன்னை
எதுகையாய் ஏற்கும் அருட்சிவ குருவே  (16)  — எதுகை

மோனை யென்னும் முதன்மைக் கிணையாம்
மோனத்தில் முகிழ்க்கும் அருட்சிவ குருவே (18)  — மோனை

முரணே இல்லா முறுவல் தன்னை
அரணாய்க் கொண்ட அருட்சிவ குருவே  (20)  —- முரண்

தொடுக்கும் பாட்டில் தொக்கும் உயிராய்
மிடுக்கொடு விளங்கும் அருட்சிவ குருவே (22)  —தொடை

பொருள்தனை இகத்தில் பொருப்பென வழங்கும்
அருளுனக் கணியாம் அருட்சிவ குருவே (24)  — அணி

செப்பைந்  தெழுத்தால்  சேர்வார் குலத்தின்
வெப்பை விலக்கும் அருட்சிவ குருவே (26)  – செப்பல் – வெண்பா

அகவும் மயிலின் ஆட்டம் போல
அகத்தில் அழகுடை அருட்சிவ குருவே (28)  — அகவல் – ஆசிரியப்பா

துள்ளலும் துஞ்சலும் இல்லா நிலையை
உள்ளிலே உணர்ந்த அருட்சிவ குருவே (30)  — வஞ்சிப்பா, கலிப்பா

கருநாள் தொடங்கிக் கருகிடு நாள்வரை
மருளை மாய்க்கும் அருட்சிவ குருவே (32) — மருட்பா

அரனின் புகழை அழகாய்ச் சொல்லும்
மரபில் மகிழும் அருட்சிவ குருவே (34)  —- மரபுப்பா

வரம்பிலா வரிகளும் அரன்பெயர் சொல்லிடின்
சிரத்தினில் சூடும் அருட்சிவ குருவே (36)   —- இலக்கணமில்லா வரிகள்

புன்மொழி தனையும் பொன்னெனக் கொள்ளும்
தன்மை தனையுடை அருட்சிவ குருவே (38)   — வசை

கீழும் மேலும் காணக் கிடையான்
வாழ்ந்தென வந்த அருட்சிவ குருவே (40)  —- 18 மேல் கணக்கு, 18 கீழ்க் கணக்கு

ஐந்தில் சுருங்கி ஐந்தாய் விரியும்
ஐந்திணை அண்ணலாம் அருட்சிவ குருவே  (42)

(5 எழுத்து சிறுகாப்பியம், 5பூதம் – 5ம் பெருங்காப்பியம்,
ஐந்து + இணை =  சிவன் + உமை + மால் + கங்கை + நிர்க்குணம்)

பன்னிரு மறையின் பண்ணில் மகிழும்
முன்னிய முனியாம் அருட்சிவ குருவே  (44)  —- திருமுறைகள்

நாலா யிரமும் நாடும் நடுவாம்
மாலான் வழிவரு அருட்சிவ குருவே (46) —- 4000 திவ்யப் பிரபந்தம்

கந்தன் கழலைப் பாடும் புகழில்
சந்தமாய்த் தவழும் அருட்சிவ குருவே (48)  —- திருப்புகழ்

வள்ளல் வழங்கிய அருட்பா காட்டும்
தெள்ளத் தெளிந்த அருட்சிவ குருவே  (50)  —- திருஅருட்பா

அறியாக் கவிக்கும் எழுதா அடிக்கும்
நெறியாய் நிற்கும் அருட்சிவ குருவே (52) —- யாரும் அறியாத பாடல்கள்

அருட்சிவ குருவே அருட்சிவ குருவே
அருள்பொழி வாயே அருட்சிவ குருவே  (54).

ஆதலால்,

கவிதை எனக்குக் காஞ்சிம கானே.

— சங்கர தாஸ்Categories: Bookshelf

Tags:

2 replies

  1. Very nice song. Grammer or no grammer, Maha Periyava ThiruvadigaL PooRRi! Sri Gurubhyo Namaha! Jaya Jaya Shankara, Hara Hara Shankara!

  2. Sooooperb… No words to express the feeling….
    HARA HARA SHANKARA
    JAYA JAYA SHANKARA

Leave a Reply

%d bloggers like this: