பணியற்ற நாள் பாழே !

How simply He says!

தினமும் தூங்கப்போகுமுன்பு இன்று ஜன ஸமுதாயத்துக்கு நாம் ஏதாவது கைங்கர்யம் பண்ணினோமா என்று கேட்டுக்கொள்ள வேண்டும். ஈஸ்வரனைப் பற்றிப் ” பேசாத நாளெல்லாம் பிறவா நாளே ” என்று தேவாரத்தில் சொல்லியிருக்கிறது. அந்த மாதிரி நாம் பரோபகாரம் பண்ணாமலே ஒருநாள் போயிற்று என்றால், அது நாம் பிறவா நாளே — அன்றைக்கு நாம் செத்துப் போனதற்கு ஸமம்தான் — என்று வருத்தப்பட வேண்டும். பந்துக்கள் செத்துப்போனால் நமக்கு தீட்டு என்று, ஒரு புண்ய கார்யத்துக்கும் உதவாமல் ஒதுக்கிவிடுகிறார்கள். நாமே செத்த மாதிரி என்றால் இதுதான் பெரிய தீட்டு; பரோபகாரம் செய்யாத ஒரு தினத்தில் புண்யத்தின் பக்கத்திலேயே நாம் போகவில்லை, தீட்டுக்காரர்களாகி விட்டோம் என்று feel பண்ணவேண்டும்.

நாம் எத்தனை சின்னவர்களாக இருந்தாலும் நம்மாலும் முடியக்கூடிய சின்னத் தொண்டு இல்லாமலில்லை. இப்படி அவரவரும் தனியாகவோ, ஸங்கமாகச் சேர்ந்தோ ஏதாவது பொது நலக்கைங்கர்யம் பண்ணியே ஆகவேண்டும். தண்ணீரில்லாத ஊரில் ஒரு பத்து பேர் சேர்ந்து கிணறு வெட்டுவது; ஏதோ ஒரு பிள்ளையார் கோயில் மதில் இடிந்திருந்தால் அதை நாலு பேராகச் சேர்ந்து கட்டுவது;பூஜை நின்று போன ஒரு க்ராமக் கோயிலில் ஒரு காலப் பூஜைக்காவது நாலு பேரை யாசித்து மூலதனம் சேகரித்து வைப்பது;பசுக்கள் சொறிந்து கொள்வதற்கு ஒரு கல்லேனும் நாட்டுவது; நாம் படித்த நல்ல விஷயங்களை நாலுபேருக்குச் சொல்லுவது, எழுதுவது இரண்டு ஸ்லோகமாவது பாசுரமாவது நாமாவளியாவது பாடி நாலு பேர் மனஸில் பகவானைப் பற்றிய நினைப்பை உண்டாக்குவது; குப்பை கூளங்களைப் பெருக்குவது — இந்தமாதிரி ஏதாவது தொண்டு அன்றன்றும் செய்யவேண்டும். ஓசைப்படாமல் செய்ய வேண்டும் என்பது முக்யம்.

குடும்பக் கடமைகளை விட்டுவிட்டு ஸோஷல் ஸர்வீஸ் என்று கிளம்ப வேண்டியதில்லை. அதையும் விடாமலே, இதுவும் கடமை என்ற உணர்வோடு சேர்த்துக்கொண்டு செய்ய வேண்டும்.Categories: Upanyasam

Tags:

Leave a Reply

%d bloggers like this: