சற்குரு சிந்தாமணி மாலை

பெரியவாளுக்கு சமர்ப்பணம்.
– எழுதுகோல் சங்கர தாஸ் நாகோஜி

இந்த சதகத் தொகுப்பு, பெரியவாளின் அனுக்ரகத்தால் எழுதப் பட்டதேயன்றி
அடியேனுடைய முயற்சி இதில் ஒன்றும் இல்லை என்பது தெளிவு. ஒரு எழுதுகோலாக
இருக்க அடியேனுக்குக் கிடைத்த இப்பேறு விளக்கவொண்ணாதது.

இக்கதம்பத் தொகுப்புக்கு விஷ்ணுபுரம் ஜார்ஜ் உயர்நிலைப் பள்ளி முன்னாள்
தமிழாசிரியர், எனக்குத் தமிழ் போதித்தவர், திரு. இரா. கந்தசாமிப் புலவர் “சற்குரு
சிந்தாமணி மாலை” என்று பெயர் சூட்டினார்கள். இந்த நூல், 1998ஆம் வருடம் ஆடி மாதம்
பூரட்டாதி நக்ஷத்திரம் அன்று மாலை, தேதியூர் தாத்தாவின் குமாரர், என் தகப்பனார்,
திரு. வா. பிச்சுமணி அவர்களின் சஷ்டி அப்த பூர்த்திக்கு முதல்நாள்,
தேதியூர் ஸ்ரீ சங்கரா பள்ளியில், தமிழாசிரியர்கள், கிராமவாசிகள் முன்பு
அரங்கேற்றப் பட்டது.

 

Rare one

 

பெரிய பெரியவாள் காஞ்சி மஹா ஸ்வாமிகள் ஸ்ரீ சந்திர சேகரேந்திர ஸரஸ்வதி
ஸ்வாமிகள் மேல் இயற்றப் பட்ட நூறு பாடல்கள் கொண்ட சதகத் தொகுப்பு.

குரு என்னும் ஸ்தானத்தில் அமர்சான்றோர் அனைவருக்கும் சமர்ப்பணம்

குருவைப் பற்றிய பாடல் என்பதால், மாதா பிதா குரு தெய்வம் என்கிற
வரிசையில் பாடல்கள் வரிசைப் படுத்தப் பட்டுள்ளன. இறைவணக்கம்
நூலின் கடைசியில் இடம் பெற்றுள்ளது.

அன்னை வணக்கம்

எங்கோ உழன்றோனைத் தாங்கி உலகினில்
தங்ககுருச் செம்மல் புகழ்பாட என்னையும்
இங்கீந்த அன்னாய்வா ழீ.

தந்தை வணக்கம்

வழியிதுவே என்றுணர்த்திச் சின்னாள் பொழுதைக்
கழி-நன்றாய் என்றிடித்துக் கார்படர்ந்த என்றன்
விழிதிறந்த எந்தாய்வா ழீ.

குரு வணக்கம்

கழற்சிறப்பு

சங்கரன் சீரடி சாலத் தொழுவார்க்குச்
சங்கடம் தீரும் விரைந்து. (1)

எண்ணம் குருவின் திருவடி என்றிட்டால்
திண்ணம் புவிமேல் மகிழ்வு. (2)

குற்றமில் நற்றவப் பொற்குருதாள் பற்றிடின்
வற்றிடின் வெற்றாய்ச் செறு. (3)

(செறு – பகை)

ஆற்றல் அளப்பரி தாகும் குருவின்றாள்
போற்றிப் பணிவார் எனில். (4)

காலனும் நாணும் கவரக் குருவடி
சாலத் தொழுவார் தமை. (5)

நாளொடு கோள்வினைக் கூற்றும் வெருளுமவர்
தாள்தனைப் பற்றி டினே. (6)

கடல்கூடக் காலள வன்றோ குருவின்
இடர்தீர்க்கும் தாள்பணி வார்க்கு. (7)

ஓர்முறை தாள்தொழினும் காக்கும் எழுபிறப்பில்
சீரருட் செங்கலம் கொண்டு. (8)

(அருள் – கலம்; பிறவி – கடல்).

காலடக்கிக் கால்மேலாய்ச் செய்தவத்தின் காஞ்சிமுனி
தாளைப் பணிதற் சிறப்பு. (9)

(கால் – மூச்சு. கால்மேலாய் – தலை கீழ்)

விதியும் சதியுமென் செய்யும் குருவின்
வினைதீர் கழல்பற் றிடின். (10)

திருவெட்டும் தேடி அகம்புகும் சத்குருவின்
நற்கழல் நித்தம் தொழின். (11)

சுழல்புவியிற் தீங்கெவையும் சூழா குருவின்
கழல்பணியும் பக்தர் தமை. (12)

திருபொழியும்; தாக்கும் செருவழியும்; உள்ளத்
திருளகலும்; மெய்ம்மலடும் திண்ணம் கருத்தரிக்கும்;
நற்சான்றோர் சுற்றமும் கிட்டும்; குருவின்றன்
நற்பாதம் நாடுவா ரேல். (13)

தழல்மேலே வீழ்-நெய்யாம் துன்பம் குருவின்
கழல்தன்னைப் பற்றி விடின். (14)

(தீயில் விழும் நெய் எரிவது போல் துன்பம் தொலையும்)

குழலிசையும், தேனுடன் ஒன்றெனச் சேர்முப்
பழமும், மணந்தரு பூவும், சுழலொடு
வீழ்-நீரும் நல்கும் புறச்சுவை; நற்கழலை
வாழ்த்தல் சுவைக்கும் அகத்து. (15)

புரைதீர் தவஞ்செய் குருவடி பட்டால்
கரைசேரும் வாழுயிர் ஆங்கே; நுரைக்கும்
திரைகடல் சூழ்புவிமேல் செம்மல் நடவாத்
தரைக்குண்டு பொல்லாக் குறை. (16)

(குருவின் பாதம் படாத நிலம் குறை கொண்டது)

கல்வி பெருக்கும் தருக்கைக் குருவின்
கழலே கொடுக்கும் குணம். (17)

(தருக்கு – கர்வம். குணம் – நற்குணம்)

மறைமுடி பத்தில் மறைபொருள் ஈடோ
குறைவிலா போகச் சுவர்க்கமும் ஈடோ
விதம்பல வாகவே வேட்டலும் ஈடோ
நிதம்-நிஜ யோகங்கள் செய்தலும் ஈடோ
குருபதம் பற்றும் தொழிற்கு. (18)

(மறைமுடி – வேத சிரஸ் – உப நிடதம்கள்; வேட்டல் – வேள்வி செய்தல்)

பல-நாட் புவிச்சுகம் ஓர்கணமாம் விண்ணில்
பல-நாட் சுவர்க்கமும் ஒர்கணமாம் தன்னிலே
தன்னை அறிதலும் ஒக்குமோ சீர்கழல்
தன்னைப் பணியும் சுகம். (19)

(தன்னை அறிதல் – ஆத்மாவை உணர்தல். அதை விட குருவின் பாதம் பணிதலே சுகமானது.)

முத்தொழில் தன்னில் பெரிதன்றோ காஞ்சிவாழ்
முத்தெய்வம் முன்பணியும் பேறு. (20)

(மூன்று பெரியவாளையும் ஒருங்கே பணிதல் மிகவும் பெரிய பேறு)

பாதகங்கள் முன்னறியாச் செய்யினும் பின்குருவின்
பாதம் பணிதல் தலை. (21)

அருட்குருவின் நற்சீர்த் திருவடிகள் தேவாழ்
கருவறையின் மெத்தப் புனிது. (22)

தவகுருவின் தாளைத் தருக்காற் தொழாதான்
சவமென்றே சொல்லப் படும். (23)

பசியில்லை; மெய்வருத்தும் தீராப் பிணியில்லை;
பொல்லாப் பகையும் தொடர்பிறவி யும்மில்லை;
பாருலகில் எந்நாளும் காஞ்சி முனியைப்
பணிவாருக் கில்லை பழி. (24)

அறத்தில் சிகரமாய், நற்றவத்தில் ஆழ்கடலாய்,
அன்பாம் அருமருந்தை வற்றா தளியூற்றாய்த்,
தொல்லுலகில் தெய்வமாய் வாழும் குருவைத்
தொழுவாரை அண்டுமோ நோய். (25)

தினவுற்று மாயையில் ஆழ்ந்தே-நீ பேய்போல்
குணத்தில் குலைந்தாய்; சினந்தாய்; கணத்தில்
தனத்தால் மிகமகிழ்ந்தாய்; தற்செருக் குற்றாய்;
மனமே குருவைப் பணி. (26)

தீவளர்த் தலேன்-நன் னீர்தனில் குளித்தலேன்
சீருறு தலம்பல விழைந்தே செல்லலேன்
தாவெனக் கேட்போர்க்குத் தாழா தளித்தலேன்
நான்மறை தன்னைத் தடங்கா தோதலேன்
மோஹம் அறுத்து யோஹம் பழகலேன்
சோஹம் தொலைத்துச் சொர்க்கம் புகவே
தூய நற்குரு கழல்தனைத்
தொழலெனும் ஓர்செயல் செய்யின் செவ்வனே. (27)

தவச் சிறப்பு

தலத்திற் தெரிதெய்வம் ஒன்றே அது-நற்
தவத்திற் பொலிந்த குரு. (28)

நால்வகைப் பாவில் அடங்குமோ நற்குருசெய்
மோனத் தவத்தின் சிறப்பு. (29)

முப்பத்து முக்கோடி விண்ணவர் ஆற்றலும்
முக்குரு செய்தவமும் நேர். (30)

குருவென்னும் ஈரெழுத்தின் சீர்தன்னை முற்றும்
கருத்தாய் வழுத்தும் திறனில்லை; சின்னாட்கள்
கற்றும் பலனில்லை; என்செய்வேன் எங்குருவின்
நற்றவ நோன்பையேத் தற்கு. (31)

புலனைந்தும் அஞ்சும் குணத்தால் குருவைப்
புதமைந்தும் சேர்ந்தே தொழும். (32)

(புதம் – பூதம். குறுக்கல் விகாரம்)

சிறுபிறை சூடும் சிவத்தின் பிறப்பே
சினத்தைச் சினந்த குரு. (33)

அருந்தவம் தன்னால் அகவிருள் நீக்கும்
குருவே கலிதனில் தேவு. (34)

எண்சித்தும் எண்டிசையில் நோற்கும் குருவிளிக்க
எண்குணம் கொண்டமை யான்.(35)

(சித்திகள் குரு அழைக்க மாட்டாரா என்று தவம் செய்து நிற்கும்)

சித்தெட்டும் பெற்றிருந்தும் செய்யாக் குரு-நிலை
வித்துள்ளே தூங்குயி ரற்று. (36)

(சித்திகள் இருப்பினும் குரு அவற்றை வெளிக் காண்பிப்பதில்லை. விதையின் உள்ளே
உயிர் எப்படி வெளியில் தெரியாமல் இருக்கிறதோ அதைப் போல)

பற்றும் குருவினை விட்டமையால் ஞாலத்தில்
செற்றமே இல்லை யவர்க்கு. (37)

(குருவை விட்டு பற்றும் விலகி விட்டது. செற்றம் – பகை)

புரிந்திடுமோ ஓர்-நாள் பொரியென் உணவால்
பொறிவெல் குருவின் முறை. (38)

(பொரி என்கிற உணவால் புலங்களை எல்லாம் அடக்கி விட்டார் குரு)

அருட்சிறப்பு

அருளாகி அன்பாகி நம்மை யுயர்த்தும்
இருள்-நீக்கும் மூத்த குரு. (39)

தேவினும் தோதாய்ப் பொழியும் அருள்தனைத்
தீயினும் தூய குரு. (40)

(குரு நெருப்பை விடச் சுத்தமானவர். தேவு – தெய்வம்)

மாமழையும் காலத்தால் மட்டாகும் தாழாதே
மாசில் குருவின் அருள். (41)

(மழை கூடப் பொய்த்துப் போகும். ஆனால் குருவருளோ குறையவே குறையாது)

கருவேழ் கடலிற் பெரிதே குருவின்
அருளூறும் அன்புச் சுனை. (42)

பன்மொழிச் சொற்கடலும் பற்றுமோ பொற்குருவின்
இன்னருள் பாடல் எனில். (43)

அருளென் திருவொன்றால் பாரோர் குறைதீர்
குருவே நிகரில் அரசு. (44)

பொன்பொருள் தூசெனத் தோன்றுமே பொற்குருவின்
அன்பருள் கிட்டி யவர்க்கு. (45)

எண்ணில் தவஞ்செய் குருவின் அருளொன்றே
மண்விண் இரண்டிற் றுணை. (46)

நசையறு சற்குரு நல்லருள் நாடின்
விசையொடு வீழும் வினை. (47)

ஒழியாத ஊழெனும் சாகரத்திற் காக்கும்
குருவின் அருளென் பிணை. (48)

அமுதே எனினும் அருந்தார் குருவின்
அருட்சீர் உணர்ந்திட் டவர். (49)

அரன்முடி காணப் பெறினும் குருவின்
அருள்முடி காணல் அரிது. (50)

முத்தெய்வம் நான்மறை ஐம்பொறி மூவிரு
சுத்தத் திருமதங்கள் ஏழ்-நன்னீர் சித்திகள்
எட்டாலும் கிட்டா உயர்-நிலை ஓர்கணத்தில்
கிட்டும் குருவருளொன் றால். (51)

முத்தியே இல்லை முதுகுருவுக் கென்றுநீ
சத்தியே ஓர்வரம் தாராயேல் மிக்குள்ள
பேர்கலியில் மீண்டுமவர் தோன்றாமல் நல்லருள்போய்க்
காரிருளே மிஞ்சும் உயிர்க்கு, (52)

(குரு மீண்டும் மீண்டும் இவ்வுலகில் அவதரித்து எல்லோருக்கும் அருள்
வழங்க வேண்டும் என்ற பேராசையால் இவ்வரம் கேட்கத் தோன்றிற்று.)

புறவொளி காட்டும் கதிர்தண் ணருளால்
அகவொளி காட்டும் குரு. (53)

பெறுபொருள் பற்பல வாயினும வற்றுள்
உறுபொருள் ஒன்றவர் கேழ்பு. (54)

(கேழ்பு -ஆசி)

பாசிமனக் காரகற் றும்மே குருவின்றன்
ஆசியெனத் தூக்கிய கை. (55)

புத்தேள் எழுத்தையும் மாற்றும் நிகரிலா
வித்தக வாற்குருதன் கேழ்பு. (56)

(புத்தேள் எழுத்து – பிரமன் மனிதர்தம் தலையில் எழுதும் விதி. வாற்குரு – மிக உயர்ந்த குரு)

நிறைதூக்கி விண்ணும் அகற்றும்; குருவோ
பொறைகாட்டி விண்ணே தரும் (57)

(புண்ணியம் தீர்ந்தால் சுவர்க்கமும் கீழே இறக்கி விட்டு விடும். ஆனால்
குருவோ தன் பொறையினால் சுவர்க்கத்தையே தருவார்.)

அருள்வாக்கு

இருப்பதற் குப்பயனாம் கேட்டல் குருவின்
திருவாய் மலர்ந்த மொழி. (58)

அன்பே உருவாய்த் திகழ்குருவின் சொல்லே
கலிதனில் நோய்தீர் மருந்து (59)

துடைக்கும் இருள்மனத்தை நற்குருசொல் சீர்அத்
துவைதம் எனுமோர் கருத்து (60)

பேதம் அறியாக் குருவின் ஒருசொல்லே
வேதம் ஒருநான் கனைத்து (61)

மறைந்திலவே மாமறையுள் நாமிழந்த சாகை
மறைத்துளதே யாவுமவர் வாக்கு. (62)

(நால் வேதங்களிலும் எண்ணற்ற சாகைகள் நமக்குக் கிட்டவில்லை.
ஆனாலும் அவை எல்லாம் குருவின் அருள்வாக்கிலே பொதிந்துள்ளன)

கீழ்க்கணக்கும் மேற்கணக்கும் காட்டாத் தெளிவினைக்
காட்டிடுமே நற்குருவின் வாக்கு. (63)

(கீழ்க்கணக்கு – குறள் முதலான பதினெண்கீழ்க் கணக்கு,
மேற்கணக்கு – பத்துப் பாட்டு எட்டுத்தொகையான பதினெண் மேற்கணக்கு)

பொது

மாந்தர் குலமுய்ய நோக்குமே மாகுருவின்
சாந்தம் தவழும் முகம். (64)

துணையென ஒன்றுமே வேண்டாம் குருவின்
நினைவொன்றே காட்டும் வழி. (65)

வெற்றி எளிதிலே கிட்டும் குருதரு
நெற்றிநீறு இட்டி டினே. (66)

மாடும் மழையாய்த் தருமே குருவினை
நாடும் முயற்சி செயின். (67)

(மாடு – செல்வம்)

எத்தவமும் கைகூடக் காஞ்சிமுத் தெய்வத்தைச்
சித்தத்தில் சீராய் நிறுத்து. (68)

துறவியாம் தூய குருபத்தி தீர்க்கும்
பிறவியிற் பட்ட கடன். (69)

நல்லதை வல்லதை எல்லார்க்கும் நல்குமே
எல்லாம் உணர்ந்த குரு. (70)

உறுதவம் செய்குருவை எண்ணாமை தன்னை
இறக்கும்கால் தான்மறத்தல் அற்று. (71)

பார்வையாற் காரெனத் தண்ணருட் செய்குருவே
பாருலகைக் காக்கும் ஒளி. (72)

வினைவிளை விரண்டிலும் வேலெனவே காக்கும்
விதியும் தொழுசீர்க் குரு. (73)

மின்னலின் வேகமாய் நல்குமே நல்லறிவைத்
தன்னை யறிந்த குரு. (74)

திக்கெட்டில் தீயெனவே காக்குந்தன் நோக்காலே
முக்காலம் காண்ட குரு (75)

பொறையருள் அன்பறமே என்றும் குருவின்
நிறைகடன் நோன்பு நெறி. (76)

(பொறை அவரது நிறை, அருள் அவரது கடன்,
அன்பு அவரது நோன்பு, அறம் அவரது நெறி)

உணவொன்றும் வேண்டாம் குருமிசைப் பத்தி
உணர்வொன்றே போதும் உயிர்க்கு. (77)

நலமெதிர் நோக்காது நாடின் குருவை
நலமதே நாடும் நமை. (78)

கதிர்கோடி காட்டுமொளி நெஞ்சில் குருவுடைய
கண்கோடி காட்டி விடும் (79)

கணமே யெனினும் குருவை நினைப்பின்
கடிதே விலகும் வினை. (80)

மறைவழி நின்றே குறைதீர் குருவின்
பொறையிப் புவியிற் பெரிது. (81)

பிணியெதுவும் அண்டுமோ வாழ்நாளில் காஞ்சி
முனிதனைப் போற்றுவா ரேல். (82)

மாநிலத்து மாந்தர்க்கு நீங்கிடுமே சோகம்நின்
காவியுடை கண்ட வுடன். (83)

செருக்கொடு வெகுளி புகழ்கொல் மறவி
திருவிரட்டும் தூக்கமொடு காழ்ப்பும் கருகிடுமே
ஓர்கணத்தில் யாவும் குருமிசைப் பத்தியெனும்
ஓர்குணம் கொள்வா ரெனில். (84)

உவந்தருட் செய்தற் கடமை; இணையில்
சிவநெறி ஒன்றே நினைவு; தவமென்
அறமே அணிகலன்; மண்மேல் நசையில்
துறவே யுறவாம் அவர்க்கு. (85)

தீயினை வெம்மையும் சூதினை வீழ்ச்சியும்
தாயினைப் புத்திரப் பாசமும் சாயும்
கதிரினைச் செம்மையும் நீங்கா; குருவைத்
துதிப்பாரை நீங்கா தறம். (86)

தானென்ற ஆணவம் ஓடிடுமே காதம்நின்
தண்டமதைக் கண்ட வுடன். (87)

முற்றாப் பிறவி ஒருகோடி வேண்டும்சொல்
வற்றா மொழிகோடி வேண்டுமோர் குற்றமில்
பாக்கோடி பொற்குருமேல் யான்பாட வேண்டுமின்றேல்
சாக்காடும் வாழ்வும் சமம். (88)

முப்பத்து முக்கோடி தேவர்தம் நாமத்தைச்
செப்பித்து வாழும் நரரேநீர் இப்புவியில்
எப்போழ்தும் நோன்பிருக்கும் சீர்குருவின் ஓர்நாமம்
செப்பீரேல் வாரா திடர். (89)

(செப்பித்து – செபித்து. விரித்தல் விகாரம்)

பின்னாள் சுவர்க்கத்தில் கிட்டும் சுகம்தேடிப்
பன்னாள் தவஞ்செய் மதியிலியே என்னையன்
செஞ்சடை யோன்றன் அவதார நற்குருவை
நெஞ்சாரப் போற்றல் மதி. (90)

நேரறி வாறில் முழுதாக ஆய்ந்திட்டால்
பேர்கடலாம் தீராக் கலிமிக்க பார்தன்னில்
சீரறிவாம் பொற்குருவின் நாமம் நவில்கின்ற
ஓரறிவே போதும் உயிர்க்கு. (91)

பூதமாய் ஆகிநில் ஐந்நிலம் தன்னிலும்
பூரணச் சோதிலிங் கத்தலம் தன்னிலும்
காவிதரி ஞானியாய்த் தஞ்சம் புகுந்தமையாற்
காஞ்சியே மண்ணிற் புனிது. (92)

(ஐந்நிலம் – பஞ்ச பூத க்ஷேத்திரங்கள்)

தூயனே மாமுனியே சங்கரனாய் வந்தவனே
தூணைப் பிளந்தோனைத் துல்லியமாய்க் கண்டவனே
தூலமொடு சூக்குமம் முற்றும் உணர்ந்தோனே
செம்மலே பெம்மானே நின்னைப் பணிந்தேனே
என்மனக் காரை அகற்று. (93)

மனத்துள்ளே மாசற்றான் சான்றோன் அவனைத்
தினந்தோறும் போற்றீரேல் உண்டாம் சிறப்பு
சினம்தோற்ற போரில்வெல் சற்குருவைச் சேரின்
இனத்துக்கே இல்லை பிறப்பு. (94)

(குருவைச் சேர்ந்தால் சேர்வோரது குலத்துக்கே மறு பிறப்பு இல்லை)

வேலொடு வில்லும் கொடுவாளும் கூர்முனைச்
சூலமொடு வட்டத் திகிரியும் கொல்மழுவும்
நாணிடும் நற்காப்பை நல்குமவர் மெல்லிய
நாணல் துணிமுடித் தண்டு. (95)

(குருவின் தண்டத்தின் நுனியில் துணி கட்டி இருக்கும்.
அந்தத் தண்டத்துக்கு இணை வேறு ஆயுதமே இல்லை)

அரவும் மயிலும் விடையும் புலியும்
அரியும் களிறும் கழுகிவை மாத்திரம்
கொண்டோர் விண்ணவர்; எங்கள் குருவுக்கோ
உண்டிப் புவிவா கனம். (96)

(உண்டிப் – உண்டு + இப். குருவுக்கு இந்தப் பூமியே வாகனம்)

பொற்குத் தழலுண்டு; வாக்கிற்கு வாய்மையே;
கற்பொன்றே மாந்தர் செயலுக்காம்; அற்பப்
பொருள்மிசைத் தாவிடும் பாழ்மனத் துக்குக்
குருவின் நினைவே புடம். (97)

புலச்சுவை தன்னை வெறுத்த முனியுள்
புலனை வெறுத்தோர் சிலரே; உலகினில்
கண்ணால் தருமம் வழுவாக் குருவுக்கோ
திண்ணனே ஈண்டு நிகர். (98)

(திண்ணன் – கண்ணப்ப நாயனாரின் இயற்பெயர். பெரியவாளுக்குக் கண் அறுவை
சிகிச்சை ஆன பின், அவரை சில அனுஷ்டான விதிகளைச் செய்யக் கூடாது என்று
மருத்துவர்கள் கூறினார்கள். கண்ணின்மேல் உள்ள பற்றினால் தன்னுடைய
சன்னியாச விதிகளில் இருந்து பிறழ முடியாது என்று இருந்ததனால், அவர் ஒரு
கண்ணையே இழக்க நேர்ந்தது.)

சங்கர சங்கர என்றொரு நாமம்
எங்குள போழ்தும் மங்கலம் நல்கும்
திங்களைப் போலத் தண்ணருட் பரப்பும்
பங்கம் வரினோ பறந்திடச் செய்யும்
திங்குசெய் ஊழை முந்தி வருத்தும்
மங்காப் புகழை மண்ணில் நிறுத்தும்
வங்கக் கடலென நம்மனம் விரிக்கும்
கங்கையில் அமிழ்ந்த புண்ணியம் சேர்க்கும்
சிங்கம் நிகர்த்த வல்லமை அருளும்
தங்கத் திருவைச் சொல்லப் பொழியும்
இங்கிவை யாவும் கிட்டிடச் செய்யும்
சங்கர சங்கர என்னும் பதமே. (99)

(திங்கு – தீங்கு. தங்கத் திரு – கனக தாரா ஸ்தோத்திரத்தை நினைவில் கொள்ளவும்)

கச்சிக்கொரு முத்துக்குரு வித்தைதரு வித்தைத்தரும்
இச்சையறு பிச்சைபெறு சந்நியாசி
நச்சின்மன சர்ச்சையறு நச்சாமர வைச்சூடிடும்
அப்பித்தனின் அம்சப்பெரு மெய்ஞ்ஞானி
மக்கட்குலம் எக்காலமும் திக்கெட்டிலும் சுத்தம்பெறத்
தித்தித்திடும் நல்வாழ்வினைத் தாராயோ
நக்கீரனை வெப்பாலெரி முப்பத்தொடு முக்கோடியர்
நித்தம்தொழு சுத்தக்குரு சங்கரனே. (100)

(வித்தைதரு வித்து – வினயம் பக்தி என்பவையே வித்தையைக்
கற்றுக்கொள்ள அவசியம் வேண்டிய குணங்கள். )

இறை வணக்கம்

ஓங்கார வேழமுகன் ஐங்கரன் பொற்பாதம்
நீங்காது சிந்தித்தால் தீங்கோடும் – பாங்காய்
முதற்கடவுள் முன்சென்று முன்வினைகள் ஓடப்
பாதம்போற்றிப் பாடித் தொழு.

பன்னிருதோள் கந்தனது ஆறுமுகம் என்றென்றும்
சென்னிதன் சிந்தனையைச் சுத்திசெயும் – இப்பிறப்பில்
செய்வினைகள் எல்லாமே நன்றாக்கும் வேலேந்தும்
தெய்வத்தைப் பாடித் தொழு.

(சென்னி – தலை)

பத்தியின் சீர்தன்னால் மூலமெழு கால்தன்னை
முக்தியென ஆயிரமாம் பூச்சேர்ப்பாள்; பூமியில்வி
ரக்தியாய் எப்பிறப்பும் கிட்டா திருக்கவச்
சக்திதனைப் பாடித் தொழு.

(மூலமெழு கால் – மூலாதாரச் சக்கரத்தில் இருந்து மேலே எழுகின்ற காற்று.
ஆயிரமாம் பூ – தலை உச்சியில் இருக்கின்ற சகஸ்ரார பத்மம். மூலாதாரத்தில்
எழுகின்ற காற்றை சகஸ்ரார பத்மத்தில் கொண்டு சேர்ப்பதே குண்டலினி யோக
சூத்திரப் படி முக்தியாம்)

பிழைபொறுக்க வேண்டும்

மழையன்ன மாகுருவே பாவில் மலிந்த
பிழைகளைப்பொ றுத்தருள்வீர் நீர்.

பெரியவாளுக்கு சமர்ப்பணம்.
– எழுதுகோல் சங்கர தாஸ் நாகோஜி

இந்த சதகத் தொகுப்பு, பெரியவாளின் அனுக்ரகத்தால் எழுதப் பட்டதேயன்றி
அடியேனுடைய முயற்சி இதில் ஒன்றும் இல்லை என்பது தெளிவு. ஒரு எழுதுகோலாக
இருக்க அடியேனுக்குக் கிடைத்த இப்பேறு விளக்கவொண்ணாதது.

இக்கதம்பத் தொகுப்புக்கு விஷ்ணுபுரம் ஜார்ஜ் உயர்நிலைப் பள்ளி முன்னாள்
தமிழாசிரியர், எனக்குத் தமிழ் போதித்தவர், திரு. இரா. கந்தசாமிப் புலவர் “சற்குரு
சிந்தாமணி மாலை” என்று பெயர் சூட்டினார்கள். இந்த நூல், 1998ஆம் வருடம் ஆடி மாதம்
பூரட்டாதி நக்ஷத்திரம் அன்று மாலை, தேதியூர் தாத்தாவின் குமாரர், என் தகப்பனார்,
திரு. வா. பிச்சுமணி அவர்களின் சஷ்டி அப்த பூர்த்திக்கு முதல்நாள்,
தேதியூர் ஸ்ரீ சங்கரா பள்ளியில், தமிழாசிரியர்கள், கிராமவாசிகள் முன்பு
அரங்கேற்றப் பட்டது.

பெரும்பான்மையான பாடல்கள் குறட்பாக்கள்.
தாய் தந்தை வணக்கங்கள் சிந்தியல் வெண்பாக்கள்.
நேரிசை இன்னிசை பஃறொடை வெண்பாக்களும் உள்ளன.
சில ஆசிரியப் பாக்களும் 100ஆவது பாடல் சந்த விருத்தமாகவும்
பயின்று வந்துள்ளன.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
காஞ்சீ சங்கர காமகோடி சங்கர
காலடி சங்கர கௌரீ சங்கர
சம்போ சங்கர சிவசிவ சங்கரCategories: Bookshelf

Tags:

5 replies

  1. Great poem of devotion. Will be useful for PaaraayaNam and prayers to Maha Periyava. Many thanks to the Kavi. Jaya Jaya Shankara, Hara Hara Shankara!

  2. HARA HARA SANKARA, JAYA JAYA SANKARA.

  3. Blessed r those who could get to even glance thru this great piece leave alone doing papaya am
    Shankar

  4. This is just wonderful.It is truly divinely inspired. We do not get to read such genuine poetry now a days. The allusions to various puranic incidents are inspiring. That Mahaperiyava is like Thinnan- how exciting this idea is! On the whole, this work reminds us of the works of Muruganar on Bhagavan Ramana! We feel so happy on reading this. Thanks for the upload.

  5. Simply amazing work! Pranams

Leave a Reply

%d bloggers like this: