“நெறைய நேரம் இருக்கற மாதிரி வரியா?”

Pollachi Jayam Paatti2

நேற்று ஓர் அற்புதமான நாள்.

மாலை மாது ஸ்ரீ பொள்ளாச்சி ஜெயம் பாட்டி அவர்களை பெங்களூரில் அவர்கள் இல்லத்தில் சந்திக்கும் வாய்ப்பு. அவர்கள் இல்லம் அருகில் நாங்கள் குடியிருந்ததால், என் தாய், மனைவி, என் பெரியவள் எல்லோருக்கும் பாட்டி அவர்களிடமும், அவர்கள் குமாரர்(ஸ்ரீ சந்திரசேகர் மாமா) மற்றும் அவர்கள் துணைவியார், மற்றும் அனைவரிடமும் ஏக உரிமை. ஒரு மணிநேரம் பக்கம் அங்கே இருந்தேன். ஐயனின் இருப்பை உணர்ந்தேன். எங்கள் சிறிய மகள் அவர்களை பற்றியும் மிக்க வாஞ்சையுடன் விசாரித்தார்.

வெகு நேரம் பேசவே இல்லை. என்ன பேசுவது. அனுபவித்துக்கொண்டு இருக்கும்போது?

‘எல்லாம் அவர் தான் என்று உணர்கிறேன் பாட்டி, என் ஸ்மரணை ஆகவே இரு. உன் லௌகீகங்களையும் நான் பார்த்துக்கறேன் – என்று அவரே எல்லாவற்றையும் பார்த்துக்கறார், பாட்டி’ என்றேன் நான்.

மேலேயும் கீழேயும் பார்த்தார் பாட்டி. ஒரு நிமிடம் கண் மூடி யோசித்தார். ஐயனிடம் உத்தரவு கேட்டிருப்பாரோ? இந்த நாய் அடிமையிடம் பேசலாமோ என்று?

மடை திறந்தது அன்பு வெள்ளம். பக்தி பேராறு. திக்கு முக்காடினேன்.

ஐயனே, என்ன கருணை, எங்கள் மேல் தான்…

பாட்டி திருவாய் மலர்ந்தார்…

‘உண்மை தான் அப்பா, நான் அப்போ சொல்வேன், பெரியவா, இதை என் கிட்ட விட்டுடுங்கோ, நான் பார்த்துக்கறேன்.

அதுக்கு அவா சொல்வா, ‘ஆமாம், இங்கே இப்படி சொல்லிப்பிட்டு, ‘பெரியவா, பெரியவா’ ன்னு நீ திரும்ப திரும்ப சொல்லிண்டே இருப்பே. அந்த காரியமும் நன்னா நடந்துடும். நீயும் லோகத்துலே எல்லாம் போய் ‘பெரியவா என் கிட்ட இந்த ஜோலியை கொடுத்தார். நான் தான் பண்ணினேன், நான் தான் பண்ணினேன் ன்னு சொல்லிண்டு திரியுவே. தெரியும் போ’.

பாரத்தை எல்லாம் அவர் மேலே போட்டுட்டு, லேசா இருக்கணும் அப்பா. அவரை தெரிய தெரிய இன்னும் நன்னா புரியும். நம்ம எத்தனம் எதுவும் இல்லே. எல்லாம் அவர். அவர் பரமேஸ்வரன். அவரால தான் எல்லாம்.’

எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்… போகிற போக்கில், அதுவும் இவ்வடிமையின் நம்பிக்கையை உறுதிப்படுத்த,

ஏதோ நான் சொல்லப்போக அது பற்றி ஐயன் 50, 60 வருடங்கள் முன்னரே ஸ்ரீமதி பாட்டி அவர்களுக்கு ஊர்ஜிதம் செய்த பெரும் கருணையை…

என்னவென்று சொல்ல?

இன்னும் வரும்…
நேற்று ஓர் அற்புதமான நாள். – பகுதி இரண்டு.

‘பாட்டி, திருப்பதியில் உங்களை அந்த கருணை தெய்வம் தான் எப்படி ஆட்க்கொண்டது?’ என்றேன் நான்.

வழக்கம் போல், சில வினாடித்துளிகள், பாட்டி அவர்களிடம் இருந்து பதில் எதுவும் இல்லை. கண்கள் மூடி…அதை தியானம் என்பதா? ஐயனிடம் உத்தரவு என்பதா? நிகழ்வுகளை பின்னோக்கி ஒட்டி செல்கிறார் என்று மட்டும் சொல்ல இயலவில்லை? ஏன் தெரியுமா? அவர் எப்போது தான் அந்த நினைவுகளில் இல்லாமல் இருக்கிறார்?

இரண்டாவது போகம் விளைச்சலுக்கு, மடை திறந்தாயிற்று.

‘அப்போ நாங்க திண்டுக்கல் லே…பழனி யிலே, ஒரு அபிஷேகத்துக்கு கொடுத்து இருந்துது. நான், மாமா அப்புறம் சேகர் எல்லோரும் போயி, நன்னா அபிஷேக ஆராதனைகள் எல்லாம் பண்ணி, நல்ல மலை வாழைப்பழம் வாங்கி ரொம்ப மடியா பஞ்சாம்ருதம் பண்ணி, தண்டபாணிக்கு அபிஷேகம்…அதை ஒரு வெள்ளி கூஜா ல போட்டு எடுத்துண்டு வந்தோம். எப்போ அடுத்த தரிசனம் பண்ணினாலும் பெரியவாளுக்கு எடுத்துண்டு போகணும் ன்னு…(என்ன நம்பிக்கை. மெய் சிலிர்க்கிறது).

அப்படியே கோவிலிலே தண்டபாணி தெய்வத்துக்கு சாத்தின கௌபீனம் ஒண்ணும் ப்ரசாதமா கொடுத்தா. அதையும் ரொம்ப ஜாக்ரதையா எடுத்துண்டு வந்தோம். பெரியவா கிட்ட சமர்ப்பிக்கணும் அப்டின்னு.

திண்டுக்கல் வந்து ஆத்து கதவை திறக்கச்சேயே ஒரு தந்தி. திருப்பதியில இருந்து.

உடனே பொறப்பட்டு வரவும்,பெரியவா உத்தரவு ன்னு மடத்து மேனேஜர் தான் கொடுத்து இருந்தார்.

சரின்னுட்டு ஒடனே கிளம்பி, அப்படியே நாங்க மூணு பேரும் திருப்பதி வந்து சேந்தோம்.

உள்ளே பெரியவா 2, 3 காட்டேஜ் தாண்டி அங்கே வாசம். நான் முதல் காட்டேஜ் தாண்டி நடந்து போயிண்டு இருக்கேன். அப்போ யாரோ மடத்து மேனேஜர் கிட்ட சொல்லிண்டு இருக்கார். ‘இன்னிக்கு பிக்ஷை சோமயாஜி ஸ்ரீவத்ஸ சர்மா அவாளோடது, ஏதோ காரணம், அதை பின்னாடி ஒரு நாள் வெச்சுக்க முடியுமா?’ ன்னு.

ஒடனே நான் அங்கே போய், ‘நாங்க ஊர்ல இருந்து இப்போதான் வர்றோம். வேணும்னா நாங்க பிக்ஷாவந்தனம் பண்ணலாமா?’ அப்டின்னேன். அதெல்லாம் தெரியாது, பெரியவா பூஜைல ஒக்காந்துட்டா. வேணும்னா, புது பெரியவா கிட்ட ஒரு உத்தரவு வாங்கிண்டுடுங்கோ. அப்டின்னார்.

புதுபெரியவாளும், ஒடனே ‘ஜெயா, நீ வந்துட்டியோன்னோ? அப்புறம் என்ன? போ, சீக்ரம் ஸ்நானம் பண்ணிட்டு பூஜை கட்டுக்கு வந்துடுங்கோ’ அப்டின்னுட்டார்.

அன்னிக்கு அப்போ சந்தன அபிஷேகம் நடந்துண்டு இருக்கச்சே கரெக்ட் ஆ நேரத்துக்கு போய் பிக்ஷாவந்தனம் பண்ண முடிஞ்சுது.

அப்புறம் பெரியவா பிக்ஷை எல்லாம் பண்ணிப்பிட்டு, விஸ்ராந்தி பண்ணிக்கற சமயத்திலே பழனி பிரசாதம் எல்லாம் அவர் முன்னாடி சமர்ப்பணம் பண்ணினோம்.

அந்த கௌபீனத்தை தலையிலே சுத்திண்டா. (மனக்கண் முன் ஒரு கணம் நினைத்து பாருங்கள். ஸ்வாமிநாத கடவுளுக்கு தண்டபாணி கடவுளின் கௌபீனம் சிரசில் பரிவட்டமாய், எப்படி இருந்திருக்கும்?) ஒரு கரண்டி கொண்டு வர சொல்லி, கொஞ்சம் பஞ்சாம்ருதம் தானும் எடுத்துண்டு, எங்களுக்கும் கொடுத்தார்.

‘ஒங்க குல தெய்வம் திருப்பதி பாலாஜி யோன்னோ? குல தெய்வ சந்நிதிலே, ஒன் குல குருவுக்கு பிக்ஷை பண்ணினா விசேஷம், அதனால நான் தான் தந்தி கொடுத்து ஒன்னை வர பண்ணினேன்.

நீ என்னடான்னா பழனி ப்ரசாதத்தோட வந்துட்டே, இன்னும் விசேஷம் தான் போ’ என்று சர்வ சாதாரணமாக சொன்னார்.’

பாட்டி குழந்தையாய் கேட்கிறார், ‘அது சரி, ஸ்ரீ வத்ஸ சர்மா அவாளோட பிக்ஷாவந்தனம் வேற ஒரு நாளைக்கு ன்னு ஆக போறது முன்னாடியே அவருக்கு எப்படி தெரியும்?’.

தெரியாத மாதிரி கேட்கிறீர்களே பாட்டி?

உங்களுக்கே தெரியவில்லை என்றால், எங்களுக்கு மட்டும் தெரிந்து விடுமா என்ன?

– இன்னும் வரும்
நேற்று ஓர் அற்புதமான நாள். – பகுதி மூன்று.

பாட்டி, உங்களை 2000 வருஷத்திலே இருந்து பழக்கம். 2000 வருஷத்திலே தான் எங்க கல்யாணம். அப்போல்லாம் அந்த தெய்வத்தை தெரியாம எப்படி எப்படியோ இருந்துட்டேன். இருந்தாலும் ஒங்க பக்கத்திலே வாசம், அவரை கொண்டாடின ஒரு குடும்பத்துலே இருந்து இவ எனக்கு. எப்படியெல்லாம் விளையாடறார் அவர், பாட்டி’.

என்னைப்பார்த்து சிரித்தார், வெள்ளையாய், பாட்டி.

அவளிடம் கேட்க ஆரம்பித்தார். அவள் குடும்பம், எந்த மாதிரியான உறவு, மடத்துடன், ஐயனுடன், மற்ற பெரியவர்களுடன் என்றெல்லாம், பல விஷயங்கள் பேசினார்கள்.

நான் சொன்னேன், கரக்பூர் ல பெரியவா 25 நாள் தங்க வேண்டி வந்துடுத்து. மிட்னாப்பூர் ல கூட ஒரு நாள் தான் இருந்தா.

அப்போ, நான் போகலே. பாட்டி அவர்களின் குரலில் இன்றும் அந்த வருத்தம் தொனித்தது.

ஏன் பாட்டி? என்றேன் நான்.

எனக்கு ஒடம்பு முடியாம இருந்தது. நாங்க அப்போ தஞ்சாவூர் ல வாசம்.

அப்போ, மடத்திலே யானை, குதிரை, ஒட்டகம் ன்னு எல்லாம் நிறைய இருந்தது.

அங்கே இருந்து பெரியவா சொல்லி இந்த ஒட்டகத்தோட சாணம் ரொம்ப நன்னா பேக் பண்ணி கூட்ஸ் ரயில் ல போட்டு வந்துண்டே இருக்கும்.

கேட்டே விட்டேன். எதுக்கு பாட்டி?

அந்த ஒட்டக சாணத்தை காலுக்கு வெச்சு ஒத்தடம் கொடுத்து அந்த தண்ணீர்ல அலம்பி விட்டா வலி கொறையும்.

அதுக்காக பெரியவா, வழிலே எப்போ எல்லாம் முடியறதோ அப்பெல்லாம் சொல்லி, அனுப்பி கொடுத்திண்டே இருப்பா.

என்னால் கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை. இதோ, இந்த வரிகளை இங்கே இப்போது எழுதும் போதும்.

நாமாய் இருந்தால் என்ன செய்திருப்போம்?

அங்கே பக்கத்திலே சர்க்கஸ் எதுவும் வந்தால், ஒட்டக சாணி கிடைத்தால், வாங்கி நீவிக்கோ – என்று தானே?

கண்மூடித்தனமான பக்தி தான் நாம் கேள்விபட்டிருக்கிறோம்.

இங்கே, தன் உடல், பொருள், ஆவி அனைத்தும் ஐயனே என்று சமர்ப்பணம் செய்த அந்த உத்தம பக்தைக்கு, அவர்களின் பக்திக்கு பரிசாக, ஐயனின் கண்மூடித்தனமான அன்பை, அருளை என்னவென்று சொல்வது?
நேற்று ஓர் அற்புதமான நாள். – பகுதி நான்கு.

அண்ணா ஸ்ரீ ரா கணபதி அவர்கள் சொல்வது போல், ‘ஹித ஸுஹமாய்’ எங்கள் சம்பாஷணை தொடர்ந்து கொண்டிருந்தது.

‘பாட்டி, பெரியவாளுக்கு தேவாரம் ன்னா ரொம்ப இஷ்டமோ?’.

என்னை ஒரு மாதிரியாகத் தான் பார்த்தாள் என் மனைவி. என் குழந்தைகளோ சொல்லியே விடுவார்கள். அதிலும் பெரியவள்…

‘அப்பா, ஒம்மாச்சி தாத்தாவே சொல்லியாச்சு…எனக்கும் தேவாரம் திருவாசகம் எல்லாம் ரொம்ப இஷ்டம் அப்டின்னு. ஒன்னை தினம் பாராயணம் பண்ண சொல்லி இருக்கா. அதோட நிறுத்திக்கோ. யாரை எல்லாம் பார்க்கறயோ, எல்லார் கிட்டயும் திரும்ப திரும்ப ஏன் கேக்கறே?’.

நான் சொல்வேன், ‘இல்லே, ஒவ்வொத்தர் கூடவும் அந்த தெய்வம் எதுவும் அனுபவம் கொடுத்து இருக்கும்’.

என் தனியான அனுபவங்கள், வேத ரக்ஷண நிதி ஸ்ரீ சுப்பராமன் மாமா அவர்கள் என் சந்தேகங்களை நிவர்த்தி செய்து உறுதி செய்து கெட்டிப்படுத்தியது எல்லாம் சொன்னேன்.

மாதுஸ்ரீ பாட்டி அவர்கள் ‘தூவெண்மதி’யை சிரித்தார்.

‘ஆமாம், மடத்துக்கு ஒதுவா மூர்த்தி வந்தா, அவா கிட்ட பெரியவா இந்த திருமுறை, இந்த ஊர் பதிகம் ன்னு கேட்டு, அவாளை பண்ணோட ஓத சொல்வா. அந்த மாதிரி நிறைய கேட்பா. சில சமயம் உள்ளே இருந்து புத்தகம் எடுத்துண்டு வர சொல்லி, ஓத சொல்வா.

அப்புறம் அங்கே இருக்கறவா கிட்ட, ரொம்ப அதிக பக்ஷம் 1 ரூபா, இல்லேன்னா எட்டணா, நாலணா ன்னு தட்டு காட்ட சொல்லி சொல்வா. அதுவே நிறைய சேந்துடும். அப்படியே அதை ஒதுவா மூர்த்தி கிட்ட கொடுக்க சொல்லி சந்தோஷப்படுவா. ஒரு ரூபா க்கு மேலே பெரியவா எப்பவும் கேட்டதே இல்லே’.

இன்னும் வரும்.
நேற்று ஓர் அற்புதமான நாள். – பகுதி ஐந்து.

மாதுஸ்ரீ பொள்ளாச்சி ஜெயம் பாட்டி அவர்களோடு பேசிக்கொண்டிருந்த போது சுவற்றில் திருவருணை மஹான் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளைக் கண்டேன்.

ஜெய ஜெய ஜெய ஜெய காமாக்ஷி, ஜெய ஜெய ஜெய ஜெய காமகோடி, ஜெய ஜெய ஜெய ஜெய சேஷாத்ரி என்றேன்.

‘திருவண்ணாமலைக்கு போவியோ?’

‘போவேன் பாட்டி, சேஷாத்ரி, ரமணர் இவாளை பாத்துட்டு, நேரே யோகியார் ஆஸ்ரமம் போயிடுவேன். அங்கே போயி அவர் முன்னாடி ராம நாமம் ஜபிச்சிண்டு இருப்பேன்.’

பாட்டி சொன்னார் ‘பெரியவாளை, எப்படி கொண்டாடின மஹான் அவர்’…

இன்று ‘அவர்’, என் அப்பன், என் குழந்தைகளின் பச்சை தலைப்பா தாத்தா…யோகி ராம் சுரத் குமார் அவர்களின் ஆராதனை தினம்.

20ஆம் தேதி பிப்ரவரி 2001.
நேற்று ஓர் அற்புதமான நாள். – பகுதி ஆறு.

மேட்டூர் சுவாமிகளை பாத்திருக்கியோ? என்றார் பாட்டி.

திருவிடைமருதூர் ல தைப்பூசம் அன்னிக்கு வேத பாராயணம் பூர்த்தி. குருவாரம் மாமா அவாளோட குமாரர் ஸ்ரீ ரமணி மாமா அவாளோட, நானும், பிரசாதம் எடுத்துண்டு அவாளை போய் பாத்து நமஸ்காரம் பண்ணினோம் பாட்டி.

அப்போகூட திருமுறை பத்தி பேசினேன். ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டார்.

பாட்டி சொன்னார், ‘அவர் வேற என்ன பத்தி பேசுவார்?’.

அவர் நினைவுகள் கண்டிப்பாக பற்பல ஆண்டுகள் பின்னோக்கி சென்றிருக்கும்.

ஸ்ரீ லலிதா மாமி அவர்கள் சொன்னார்கள், ‘பூர்வாச்ரமம் ஸ்ரீ ராஜகோபாலன் ஆக ஸ்வாமிகள் இருக்கறச்சே இருந்து பாட்டிக்கு பழக்கம். பெரியவா கூட ஸ்வாமிகள் அப்படி நாலு வேதம், உபநிஷத், புராணங்கள், பன்னிரு திருமுறைகள், ப்ரபந்தம் ன்னு ஒன்னு விடாம பேசிண்டு இருப்பா.’

திடீர் என்று லக்ஷ்மியிடம் ‘பின்னாடி இருக்கற ஒரு பாக்கெட் ஐ எடும்மா’ என்றார்.

தப்புதப்பாக ரெண்டு தடவை முயற்சிக்கு பின், சரியாக எடுத்து கொடுத்தோம்.

அது ஸ்ரீ மேட்டூர் சுவாமிகள் பாட்டிக்கு அனுப்பித்தந்த இனிப்பு(மைசூர் பாகு) பொட்டலம்.

எத்தனை வாஞ்சை, அன்பு? அதை எடுத்து, பிரித்து எங்கள் எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சம் கொடுத்தார் பாட்டி.

நாயன்மார்கள் இருவரின் அன்பு பரிமாறல்களில் நனைந்த சிறுபுல்லானோம் நாங்கள்.

இன்னும் வரும்
நேற்று ஓர் அற்புதமான நாள். – பகுதி ஏழு.(நிறைவு பகுதி)

இரவு மணி ஒன்பதை நெருங்கியது.

விடை பெற்றாகிவிட்டது, ஏற்கெனவே. இப்போது விடை பெறும் நேரமும் நெருங்கியது.

சில சமயங்களில் கடிகார முள்ளும் நெருஞ்சி முள்ளாய் குத்தும், வேக வேகமாக சுற்றி.

அப்படிப்பட்ட ஒரு கனத்த கணம்.

ரொம்ப நேரம் ஆகிவிட்டது பாட்டி, ஒங்களுக்கு ரொம்பவே ஸ்ரமம் கொடுத்துட்டோம். நமஸ்காரம் பண்ணிக்கிறோம் பாட்டி. கிளம்பறோம்.

என்னவென்று சொல்வது? எப்படி எழுதுவது?

‘கிளம்புறியா? அப்பறம் எப்போ வரே? நெறைய நேரம் இருக்கற மாதிரி வரியா? வார கடைசிலே வந்தேன்னா கார்த்தாலே இருந்து ரொம்ப நேரம் இங்கேயே இருக்கலாமே, அப்படி வாயேன்..’

என்னால் வந்த, வரும் அழுகையை கட்டுப்படுத்தவே முடியவேயில்லை. அந்த சமயம் பார்த்து அமெரிக்கா வில் இருந்து ஒரு பக்தை அழைத்ததால் நாங்கள் விடை பெற்று வெளியே வந்தோம்.

ஸ்ரீமதி லலிதா மாமி சொன்னார்கள். ‘பாட்டிக்கு இது சிரமம் அல்லவே அல்ல. இந்த மாதிரி உள்ளம் உருகி பேசிண்டு இருக்கறவா கிட்ட பாட்டி பேசிண்டு இருந்தா அதுவே அவாளுக்கு பெரிய டானிக்.’

ஐயனே, உமக்கு தெரியும் என் யோக்யதை.

மணிவாசக பெருந்தகை சொல்வது அப்படியே அல்லவா எனக்கு பொருந்தும்.

நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நான்நடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்
ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்புனக்கென்
ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம் உடையானே.

இதற்கு விளக்கம் :

நான் உன்னிடத்து அன்பு இல்லாதவனாய் இருந்தும் உன் அன்பர் போல் நடித்து முத்தி உலகத்தில் புகும் பொருட்டு விழைகின்றேன். ஆதலால் இனியாயினும் உன்னிடத்து அன்பு செய்யும்படி எனக்கு அருள் செய்யவேண்டும்.

ஐயனே, தங்கள் உண்மை அடியாரை எல்லாம் எனக்கு காட்டிக்கொடுத்து ‘பாரப்பா, பார், இப்படி இருப்பாயா நீ? உன்னால் ஒரு நாளும் முடியுமா? முயற்சி செய். நீ எப்படி வேண்டுமானால் இருந்து விட்டு போ, ஆனால், நான் என் கருணா விலாசத்தை உனக்கும் தான் காட்டுவேன்’ என்றல்லவா காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.

பாட்டி கேட்டுக்கொண்ட படி, பூஜை உள்ளுக்கு சென்று ஐயனின் ‘பார்த்தவுடன் பாவம் போக்கும் பரமனடி’யாம் பாதுகா தரிசனம் செய்து, ஐயன் சூடிக்கொடுத்த இரு கிரீடங்களின் திவ்ய தரிசனம் கண்டு, ஸ்ரீமதி மாமி தந்த காமாக்ஷி குங்குமம் நெற்றியில் தரித்துக்கொண்டு, கிளம்பினோம், எங்கள் இதயங்களை, அங்கேயே விட்டுவிட்டு.

காரில் யாரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. எங்களால் இன்னும் அந்த அன்பு வட்டத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை.

ஒரு நான்கு/ஐந்து கிலோ மீட்டர் தூரம் வந்திருப்போம். அது ஒரு போக்குவரத்து நாற்சந்தி.

நாங்கள் இடது பக்கம் திரும்ப வேண்டும். நான் வாகனத்தின் இடது விளக்குகளை திரும்ப எத்தனித்து முடுக்கியும் விட்டேன். எங்கிருந்தோ ஒரு பத்து சக்கர சரக்கு வாகனம்(truck) எங்களை மிக வேகமாக கடந்து எங்கள் முன் சென்று பின்பு நின்று நிதானமாக வலதா, இடதா அல்லது நேராகவா என்று யோசித்துக்கொண்டு இருந்தது.

வண்டியை பார்த்தேன்.

‘ஐயனே, காருண்ய பிரபுவே, கருணா மூர்த்தியே, கற்கண்டு மலையே, உன் லீலை தான் எல்லாம் என்று காட்டத்தான் இந்த அவசரமா?’

குழந்தைகளை வண்டியை பார்க்க சொன்னேன்.

பெரியவள் தான் சத்தம் போட்டு படித்தாள்.

‘HIS GRACE’.

சிறியவள் கேட்டாள். ‘அப்டினா?’

எல்லோரும் சேர்ந்தே சொன்னோம்…

‘அவர் அருள்’…

பாரம் இறக்கிய வாகனம் போல, நாங்களும் பாரத்தை எல்லாம் ஐயனிடம் இறக்கி, இலகுவாக இல்லம் திரும்பினோம்…

அவர் அருள்….

என்றும் வரும்.

******

Pollachi Jayam Patti reminisces about Him in a loving conversation with Shri Karti Nagaratnam who has narrated this brillantly from The Heart.  He had posted this in seven parts in Sage of Kanchi group in Facebook here http://www.facebook.com/groups/Periyavaa/. Thanks a million Karti!Categories: Devotee Experiences

19 replies

 1. No words, but since i am typing i am able to type. Apara Karuna Murthy Alway our Maha periyava. He is always with us and His Grace is always will be there for us. Maha Periyava saranam-

 2. Pollachi patti spends most of her time in Kanchi Mutt.Though i have seen her from distance, i have not interacted with her. in my next visit to mutt, i shall contact and collect some more details on her time with Mahaperiyava and post for all. Jaya jaya sankara. Hara Hara sankara
  Prakash

 3. When we understand our Periyava live and spend his Life in the presence of people who are all really devoted to him is like the Githacharya who spend his time along with young boys who graze cows in those days..Our Periyava is “LEELA MANUSHA VEGRAHAYA NAMAHA :” endra Mudraku , udaranamaka VandherukerAar endru Elai Marai Kai pol irundhi rukirar. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Periyava Pon Adikale Saranam.,Saranam,Saranam.

 4. Great ,more we want tears in my eyes I read this article

  Karthikeyan
  Camp;MILAN (ITALY)

 5. Pollachi jayam patti is great jaya sankra hara sankra

 6. பஞ்சநாதன் சுரேஷ் என்ன அற்புதமான் வர்ணனை. மாணிக்கவாசகர் சொல்வது உங்களுக்கு மட்டுமா பொருந்தும் ? நாங்கள் எல்லாம் எங்கே போவது? பெரியவாளின் கருணையின் முன் நாமெல்லாம் எம்மாத்திரம்.
  நான் உன்னிடத்து அன்பு இல்லாதவனாய் இருந்தும் உன் அன்பர் போல் நடித்து முத்தி உலகத்தில் புகும் பொருட்டு விழைகின்றேன். ஆதலால் இனியாயினும் உன்னிடத்து அன்பு செய்யும்படி எனக்கு அருள் செய்யவேண்டும். ஐயனே, தங்கள் உண்மை அடியாரை எல்லாம் எனக்கு காட்டிக்கொடுத்து ‘பாரப்பா, பார், இப்படி இருப்பாயா நீ? உன்னால் ஒரு நாளும் முடியுமா? முயற்சி செய். நீ எப்படி வேண்டுமானால் இருந்து விட்டு போ, ஆனால், நான் என் கருணா விலாசத்தை உனக்கும் தான் காட்டுவேன்’ என்றல்லவா காட்டிக்கொண்டிருக்கிறீர்கள். (எத்தனை சத்தியமான வார்த்தைகள்)
  பெரியவா சொன்னது >>> வைதேய பக்தி ராக பக்தி என்று இரண்டு உண்டு. விதிப்படி சாஸ்திர வழியிலே உபாசனை செய்வது வைதேய பக்தி. இப்படி வழிபாட்டுக் கிரமம் என்று இல்லாமல் நம் அன்பில் எப்படியெல்லாம் பகவானிடம் பிரார்திக்கவும் உறவு கொண்டாடவும் தோன்றுகிறதோ அப்படியெல்லாம் பக்தி பண்ணுவது ராக பக்தி. அனுராக பக்தி என்றும் சொல்லுவார்கள் . தற்காலத்தில் எந்த விதிமுறைக்கும் கட்டுப்படக்கூடாது என்ற மனப்பான்மை பரவியிருப்பதால் எல்லாரும் தங்களுக்கு ராக பக்தி இருக்கிறதாகவும், அதனால் விதிப் பிரகாரம் ஒன்றும் பண்ணத் தேவையில்லை என்று நினைப்பதாக ஏற்பட்டிருக்கிறது. உண்மையில் நமக்கு அப்படியெல்லாம் ஒன்றும் சுத்த பிரேமை பகவானிடம் பொங்கிக்கொண்டு வந்துவிடவில்லை. அதுமட்டும் வந்திருந்தால் நாம் இருக்கிற தினுசே வேறாக இருக்கும். பரித்யாகத்தில் எல்லா உறவுகளையும் முற்றிலும் தியாகம் செய்வதில் ஏற்படும் சரணாகத பாவம், ஈஸ்வரனிடம் வைக்கிற பிரேமையின் பிரதிபலிப்பாக அனைத்து உயிர்களிடமும் அன்பு என்ற உத்தமமான குணங்களோடு இருப்போம்.

  இப்படி எல்லாருக்கும் பாகுபாடு இன்றி அருள் செய்யும் பெரியவா முன்பு நமது பக்தியை சொல்லவே மனம் வெட்க படுகிறது. ஜெயம் பாட்டி மற்றும் பல அடியார்களின் பக்தியின் முன்னால் நம் பக்தியை நினைக்கவே முடியவில்லை

 7. Padikka Padikka Pullarikkum Vizhayangal. Nandri.

 8. Thank you very much Sir for sharing a very valuable and interesting information. I offer my Namaskarams
  to Pollachi Jayam Patti through this forum. Jaya Jaya Shankara, Hara Hara Shankara

  Balasubramanian NR

 9. nostalgic again!!! there used to be a virtual fight between me/my wife and jaya paatti i those days because she used to insist that she should be the first to have viswaroopadarsanam and karpoora arti while we used to say HH is common and she can take arti but we will if necessary be even blocking. Karunamurthy laughingly used to give always preference to jaya mamis karpoora arti!!! what a devotion and what an attachment. we stand………n.ramaswami

 10. koti namaskaranagal…… arpuda aananda anubhavam …. periva should bless you to continue…. great job

 11. பரமாச்சார்யாளின்  கருணைக்குரிய பக்தையை  நேரில்  சந்தித்து  ஆசீர்வாதம்  பெற்ற  அனுபவம்  உன்  எழுத்தின்  மூலம்  கிடைத்தது. எப்படி  பாராட்டுவது  என்றே  தெரியவில்லை.   

 12. Blessings of Maha Periyaval was showered on my family & myself while reading & experiencing Madhu Sri Jayam Patti’s narration.
  Hara Hara Sankara,
  Jaya Jaya Sankara..

 13. What a Grace ‘His Grace’. Be continue to be Blessed by this Holy Grace, His Grace. Arpudham, Aanandam, Pujya Sri Jaya Paattikkum avargalaich chandiththa ungalukkum punniyam. Adaik ketta engalukkum thaan. Thanks.

 14. படிக்கப் படிக்கத் திகட்டாத நடையில் ஒரு அற்புத தரிசனமும், அதனுள்ளே ஆழ்ந்திருக்கும் பொருள் வன்மையும் மெய்சிலிர்க்கச் செய்தது! எல்லாம் அவன் அருளே!

 15. Indeed this narration is a blessing to people like me who have come very late to Mahaperiyava’s charanam to understand and hail His Thaniperunkarunai to His devotees. Even I like to meet paati when I go to Bangalore next time.pls give her contact.
  Meena

 16. Can you please send me Bangalore contacts for Pollachi Paati? I want to meet her with my family

 17. Thanks for sharing. Namaskaarams to PoLLachi Jayam Paatti! She will get us also Blessings from Maha Periyava! Great experiences of Paatti! Jaya Jaya Shankara, Hara Hara Shankara!

 18. Yes. A brilliant naration inded

 19. We are much blessed to read this.
  Ellam Antha Sri Ma Prabhu Arul.

Leave a Reply

%d bloggers like this: