சந்திர சேகரரும் சூரியகுல சேகரரும் – XI Last Part


சந்திர சேகரரும் சூரியகுல சேகரரும் – XI ஸ்ரீ. ரா. கணபதி அவர்கள் (நன்றி: யோகி ராம் சுரத் குமார் கும்பாபிஷேக சிறப்பு மலர்).

===========================================================================

சந்திரமௌலி என்று ஸ்ரீ மஹா பெரியவாளின் அடியாரொருவர். திருவண்ணாமலை வாசியாகும் பேறு அவருக்கு கிடைத்தது. அப்போது பெரும்பேறாக யோகி பகவானின் அணுக்கமும் வாய்த்தது. அவர் காஞ்சி செல்லும் போதெல்லாம் ஸ்ரீ சரணர் ‘விசிறி மட்டை சாமியார்’ பற்றி அவரிடம் தவறாமல் விசாரிப்பார். உடன் சில நிமிஷம் கண் மூடி தியானத்தில் இருப்பார்.
1985 டிசம்பர் மாதம் சந்திரமௌலி காஞ்சி சென்ற போது பெரியவாள் அவரை ஏகம்பன் ஆலயத்தில் நடந்த ஹோமத்துக்கு போய் பிரசாதம் பெற்று வர செய்தார். அதோடு ஸ்ரீ காமாக்ஷியின் பிரசாதத்தையும் சேர்த்து கொடுத்து, யோகிக்கு அனுப்பி வைத்தார். அதை பெற்று கொண்ட யோகி உணர்ச்சிவசமாகி கண்ணில் ஒற்றி கொண்டார். சிரசில் நெடுநேரம் வைத்துக்கொண்டார். பின் உடன் இருந்தோருக்கு விநியோகித்தார்.

ஆச்சிரியம் என்னவெனில், அன்று தான், யோகியின் -உலகமறிந்திராத – ஜெயந்தி நன்னாள்!
சுமார் மூன்று மாதம் பின்னர், சந்திரமௌலி காஞ்சி சென்ற போது, சந்திர சேகர இந்திரர், அவரிடம் வழக்கமான யோகி விசாரிப்பு செய்யவில்லை. எடுத்த எடுப்பிலேயே, ‘ நீ ஒடனே ஊருக்கு திரும்பி போய் விசிறி மட்டை ஸ்வாமியாரை டாக்ஸி வெச்சு கோவிந்தபுரம் அழைச்சிண்டு போ. அவருக்கு போதேந்திராள் சமாதி தரிசனம் பண்ணி வெச்சு திரும்ப திருவண்ணாமலைக்கு கொண்டு விடு’ என்று உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி, டாக்ஸி செலவுக்கானதை அடியார்களிடம் இருந்து திரட்டி சந்திரமௌலியிடம் கொடுத்தார்.
நாம மகிமையை, குறிப்பாக ஸ்ரீ ராம நாம வைபவத்தை தக்ஷிண தேசத்தில் பரப்பியவர்களுள் முதல் ஸ்தானம் வகிப்பவர் ஸ்ரீ போதேந்திரர்கள். கும்பகோணத்துக்கு அருகான கோவிந்தபுரத்தில் உள்ள அவரது சமாதியில் இருந்து சதாவும் ராம நாமம் ஒலித்து கொண்டிருப்பதை இன்றைக்கும் சித்த ஒருமை வாய்ந்த அடியார்கள் கேட்கின்றனர்.
அருணைக்கு திரும்பிய சந்திரமௌலி, காஞ்சி முனிவர் கூறியதை யோகி பகவானுக்கு தெரிவித்தார்.

சிறிது நேரம் கண்மூடி தியானத்தில் இருந்த யோகி, ‘பரமாச்சார்யா எங்கே இருந்தாலும் அதுவே இந்த பிச்சைக்காரனுக்கு கோவிந்தபுரம்’ என்றார்.

சந்திரமௌலி க்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

டாக்ஸி வரவழைக்கப்பட்டது. யோகி அதில் ஏறி அமர்ந்தார். சந்திரமௌலியையும் ஏற்றிக்கொண்டார்.

டிரைவரிடம் ‘காஞ்சிபுரம் போவோம்’ என்றார்.

மாலை நாலரை மணிக்கு டாக்ஸி ஸ்ரீ மடம் சேர்ந்தது.

யோகியை புரிந்து கொள்ளாத பணியாளர்கள் அப்போது ஸ்ரீ சரணரை பார்ப்பதற்கு இல்லை என்று கூறினர்.

அவர்கள் வாய் மூடுமுன்பு சாக்ஷாத் அந்த ஸ்ரீ சரணர் அங்கு வந்து யோகி பகவானுக்கு நேரெதிரே நின்றார்.

யோகி விழுந்து வணங்கினார். (‘பிச்சைக்காரன் அப்படியே தூங்கி விட்டான்’ என்று அவர் நமது எழுத்தாள சகோதரரிடம் சொன்னாராம்’. அச்சகோதரர், ‘அது என்ன தூக்கம் ன்னு நமக்கு தெரியாதா என்ன?’ என்கிறார்)

விழுந்தவர் எழுந்தார்.

எதிர்ப்பு உணர்ச்சியே இல்லாத இதய இசைவு கொண்ட இரு மஹா புருஷர்கள் எதிரெதிரே நின்றனர். இருவரும் இரு கரங்களையும் உயர்த்தினர். உள்ளமொட்டிய அவ்விருவரும் உள்ளங்கைகளை விரித்து அப்படியே நின்றனர். ஒருவரது இரு கரங்களும் எதிர் எதிரே மற்றவரது இரு கரங்களுமாக சிலையென நின்றனர்.

கனத்த மௌனத்தில் கரங்களோடு கரங்கள் பேசி கொண்டனவா? அவர்களது உட்சாரம் கரங்களின் வழி பெருகி கங்கையும், யமுனையுமாக கலந்து உரையாடினவா?

காஞ்சி கங்கை – அருணை யமுனை களின் சங்கமமா அது?

சங்கரனின் சேகரத்தில் உள்ள சந்திரன் பெருக்கும் அமுதுதான் கங்கை. யமுனையோ சூரிய புத்திரி- சூரிய தேஜஸில் இருந்து பெருகியவள்.

ஞான கதிரொளியும் கருணை நிலவொளியும் கலந்தே மக்களுக்கு அபய வரத ஹஸ்தங்களின் உரையாடல் தொடர்ந்தது.

பெரியவாள் திரும்பி ஸ்ரீ மடத்தின் உட்புறம் நடந்தார்.

யோகி திரும்பி ஸ்ரீ மடத்தின் வாயிலுக்கு நடந்தார்.

‘அவர் ஸூர்ய வம்சம்’ என்று சந்திரசேகரர் உடனிருந்தவரிடம் கூறுவது காதில் கேட்டது.
முற்றும்.

குறிப்பு: கட்டுரை மட்டும் தான் முற்றும், அருளாளர்களின் பேரருள் என்றும் எப்போதும் தொடரும்…

******

Thanks a ton to Shri Karthi Nagaratnam for typing all these painstakingly and lovingly and posted it in Sage of Kanchi group in Facebook.


Categories: Devotee Experiences

Tags:

2 replies

  1. Dear sir 5th and 6th part is missing please check it out

  2. Not available, please.

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: