சந்திர சேகரரும் சூரியகுல சேகரரும் – Final Parts IX, X and XI

சந்திர சேகரரும் சூரியகுல சேகரரும் – IX ஸ்ரீ. ரா. கணபதி அவர்கள் (நன்றி: யோகி ராம் சுரத் குமார் கும்பாபிஷேக சிறப்பு மலர்).

=============================================================================

தமக்கு மதிப்பெண்ணே கொடுத்து கொள்ளாமல் அவர் பூஜ்யமாக நின்ற அந்த எளிமையிலே என் பெருமதிப்பிற்குரிய பூஜ்யரானார். நாம ஜபயோக சித்தியை விட அவரது இந்த வினய யோகசித்தி என் நெஞ்சை தொட்டதில் அதுவரை ‘யோகியா’ ராக இருந்தவர் ‘யோகிராஜ’ராக ஏற்றம் கொண்டார்.

அவரது பணிவு எனக்கும் அவரிடம் பணிவு ஏற்படுத்தலாயிற்று. அது வளர வளர பணிவு மூர்த்தமான பெரியவாளிடமிருந்து அவர் பிரித்து சொல்ல முடியாதவர் என்ற உணர்ச்சி தோன்றலாயிற்று. அதையொட்டி, ‘என் ரக்ஷிப்புக்கென்றே ஏற்பட்டவர்கள்’ என்று முன்பு குறிப்பிட்டேனே, அவர்களில் இவரும் ஒருவர் என்ற கருத்து குருத்து விடலாயிற்று. குருத்திலிருந்து பாளை வெடித்து பூவும், காயும் தோன்ற ஸ்தூல தரிசனம் அவசியமில்லைதான் எனினும், பெரும்பாலும் அது நிகழவே செய்கிறது. அதற்கேற்ப, சென்ற (1995) நவம்பர்-இலிருந்து அவரது ஆசிரமம் என்னை இழுக்க தொடங்கியது.

‘யோகி ராஜர்’, ‘யோகிபகவான்’ ஆக என்னுள்ளே உயர்ந்தார்.பெரியவாள் சொன்னது, அதைவிட அதிகமாக சொல்லாமற் சொன்னது யாவும் நூற்றுக்கு நூறு சத்தியமென காணலானேன். அன்று நிச்சயப்படாத ஆழ்ந்த ஊகங்களாகவே நின்றவை இன்று நிலைத்த உண்மைகளாக உறுதிப்பட்டன.அன்று அடியாரம்பத்தில் பெரியவாள் அபிநயத்து காட்டினாரே, கணநாதன் கன்னத்து மதநீர் மீது செவிகளால் இரட்டை விசிறி வீசிக்கொண்டு ஜிலீர் அனுபவித்ததை! அந்த ஜிலீரை இவர் எத்தனை சத்தியமாக அடியாருக்கு ஊட்டுகிறார் என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்தேன். பிரேமை மதம் பிடித்த இவர் அந்த நீரை நம் மீது சொரிந்து, அதன் மீது ஒரு விசிறி போதாதென்று ஜோடியால் விசிறி ஜிலீர் செய்கிறார்! ஸூரதர் என்றால் சாந்த சுபாவி, ‘ஜென்டில்’ என்று பெரியவாள் சொன்னதை பிரத்தியக்ஷமாக மெய்ப்பித்து காட்டுகிறார். மெய் காதல் பித்து பிடித்த ஸுரதரும் தான் இவர். தந்தையிடம் மெய்க்காதல் கொண்டு அவனுக்கு என்றும் குழந்தையாய் இருக்கிறார். பெரியவாள் அபிநயித்த கண நாதனாகிய அந்த தெய்வ குழந்தையாக ‘குமார்-ங்கறதுக்கு ஏத்தாப்பல கொழந்தையாக’ இருக்கிறார்.அன்று பெரியவாள் அக்னி, சூரிய, சந்திரர்களை சொன்னதையும், சத்தியமாக்கி காட்டுபவர் இவர். ராம நாம ஜெபத்தில் மூண்ட யோகாக்னி, ராமனையே அனைத்து மடங்கும் ஏகமாக காணும் ஞான சூரிய பிரகாசமாகி பின்னர் அந்த ஏகத்தையே அனைவரிடமும் கண்டு அன்பமுது (மதநீர் என்றதும் அதுதான்!) பேருக்கும் சந்திரனாகவே ‘குளுந்……து’ நிறைந்திருக்கிறது. (அச்சூரிய குல திலகனுமே இராமச்சந்திரன் தானே? யாகாக்னியில் அவன் பாயச ரூபத்தில் உதித்தான் என்றால் அப்பாயசம் ப்ரேமாம்ருதம் தானே?)
மொத்தத்தில் சூரிய குல சேகரர் ஆன யோகிராஜர் சந்திர சேகர பெரியவாளுடனேயே இணைந்துவிட்டவராக தான் என் நெஞ்சில் இடம் கொண்டார். ஆசார நெறிகளை மட்டுமே வைத்து முன்பு முரண்பட்டவர்களாக கண்ட இருவரிடையே இப்போது உள் அனுபவத்தையும் வெளி அனுக்கிரகத்தையும் வைத்து அற்புத ஒற்றுமை கண்டேன்.
தொடரும்சந்திர சேகரரும் சூரியகுல சேகரரும் – X ஸ்ரீ. ரா. கணபதி அவர்கள் (நன்றி: யோகி ராம் சுரத் குமார் கும்பாபிஷேக சிறப்பு மலர்).
=============================================================================

இன்னும் சில ஒற்றுமைகள். முதலில்,’மலையினும் மாண பெரிதாக’ இவர்களை உயர்த்தும் அந்த அடக்கம். இதில் ஓர் இனிக்கும் மாறுபாடும்! தமது அடக்க பாங்கையும் அடக்கமாகவே காட்டுபவர் ஸ்ரீ மஹா பெரியவாள். யோகி பகவானுடைய பிரேம மதத்திலோ அடக்கம் அடங்காமலே வெளி வந்து தம்மை பிச்சைக்காரன் என்றே எப்போதும் சொல்லி கொள்ள வைக்கிறது.

அட, இங்கே கூட ஓர் ஒற்றுமை! பெரியவாளும் தம்மை ஒவ்வொரு சமயம் அப்படி சொல்லி கொள்வதுண்டுதான்! ஸ்ரீ மடத்தில் பிஷை செய்வோரை பிக்ஷைக்காரர் என்பர். ஸ்ரீ சரணரோ, ‘பிஷைக்காரர்-ன்னா கௌரவமா இருக்கு. ‘பிக்ஷை’ தான் ‘பிச்சை’ ஆயிருக்கு. அதுக்காக அவாளை பிச்சைக்காரான்னா கேட்டுப்பாளா? வாஸ்தவத்திலேயும் பிஷை போடற அவாளா பிச்சைக்காரா? வாங்கிக்கிற நான்தான் பிச்சைக்காரன்’ என்பார்.

ஆக இருவரும் அன்பு பிச்சை, அகந்தை பலி கேட்கும் பிக்ஷாண்டார்கள் தாம்!
யோகி பகவான் ஸ்ரீ ராம நாமத்தை நானிலம் எங்கணும் பரப்புவதில் ஊக்கமாயிருக்கிறார். பெரியவாளுந்தான் வெள்ளிகாசாகவும், பொற்காசாகவும் வழங்கி எத்தனை ஆயிரம் பேரை எத்தனை கோடி ராம நாமம் எழுத வைத்திருக்கிறார்?

என் உளம் கவர்ந்த இன்னோர் ஒற்றுமை, தமது தொண்டர்களுக்கு உயர்வளிப்பதில் இருவருக்குமுள்ள அதிசய நாட்டம். என்னிடம் யோகி பகவான்,’இந்த பிச்சை காரனை பற்றி எழுத ஒன்றுமில்லை. எழுதத்தான் வேண்டுமெனில், இந்த நாலு தாய்மார்களை பற்றி சொல்லவும்’ எனக்கூறி, நான்கு மாதரசிகளை காட்டினார். தொண்டை அடைக்க தொடர்ந்தார். ‘இந்த தாயார்கள் இருக்கை தந்து பேணி இராவிட்டால் நோயுற்றிருந்த இந்த பிச்சைக்காரனின் உடல் நசித்தே போயிருக்கும்’. தேவகி, விஜயலக்ஷ்மி, ராஜலக்ஷ்மி, விஜயாக்கா என்று அவர்கள் பெயரையும் கைகுவித்து கூறினார்.

தோற்றத்திலேயே தூய்மையும் பணிவுமாக உள்ள அந்நால்வரை ‘ஸுதாமா சகோதரியர்’ என்கிறார்கள். அவர்களில் முதலிடம் பெற்றவரான சகோதரியை மா தேவகி என்று ஆசிரம அன்னையாகவே போற்றுகிறார்கள். நன்கு படித்து பதவிகள் வகித்த இவர்கள், அவற்றை உதறிவிட்டு நமது யோகியே சகலமும் என்று சரண் செய்து, தாஸ்ய பக்தியினால் ஆன்மீகத்தில் ஆழங்கால்பட்டிருக்கிறார்கள். அண்ணாமலையில் ஸுதாமா என்ற வீட்டில் ஒன்று கூடி வாழும் இவர்களே, குறிப்பாக, மா தேவகியே, சில ஆண்டுகட்கு முன் மிகவும் பிணியுற்றிருந்த யோகியை பிடிவாதமாக சுதாமாவாசியாக்கி, அரும்பாடுபட்டு அவரது உடலை காத்து கொடுத்தவர்கள். அவரது ஸ்திர வாசம் அன்றிலிருந்து இன்றுவரை (இனியும்) ‘ஸுதாமா’ வுக்கு கிட்டி, அது பெயருக்கேற்ப ‘உத்தம இல்ல’மாக, கோயிலாக விளங்குகிறது.
தாம் எவரது உயிரை அனவரதமும் பேணி காக்கிறாரோ, அவர்களே தமது உடலை காப்பதை அவர் மகத்தாக மதித்து தமது புத்திரிகளை போன்ற அவர்களை தாயாராக போற்றுகிறார். உலகம் தம்மை விட அவர்களை அறிவதையே அவசியமென கருதுகிறார்.

முப்பதாண்டுகளுக்கு முன்னால், ஸ்ரீ மஹா பெரியவாள் மஹா சரிதத்தை எழுதி பரப்ப நான் ஆர்வமுற்ற காலம். அப்போது அவர், ‘ஒனக்கு எப்படி பெரியவாளை பத்தி லோகத்துக்கெல்லாம் தெரியணும்னு இருக்கோ, அப்படியே, ஒன்னோட அந்த பெரியவாளுக்கும் இன்னும் அனேக பெரியவாளை பத்தி லோகத்துக்கு தெரியணும்னு இருக்கு’ என்று சொல்லி சற்று தள்ளி போய் கொண்டிருந்த பாராக்கார (காவலாள்) மரக்கண்ணுவை காட்டினார். எதிர்புறத்திலிருந்து வந்த சந்தனம் அரைக்கும் சுப்புணியை காட்டினார். ‘இந்த ரெண்டு பேரும் கூட, அந்த பெரியவா லிஸ்ட் ல சேந்தவா தான். இன்னும் இப்படி ஆதியிலேருந்து இன்னி வரை எனக்கு, இந்த மடத்துக்கும் அந்தரங்க சுத்தமாக கைங்கர்யம் பண்ணின அனேக பெரியவா மட்டும் இல்லைன்னா, நானும் ஒரு பெரியவனாக்கும் ன்னு பெத்தபேர் வாங்கிண்டே இருக்க முடியாது’ என்றார்.
இவ்விரு மகநீயர்களின் சந்திப்பு ஒன்றை வாசகர்களுக்கு சொல்லாது விடலாமா?
தொடரும்

சந்திர சேகரரும் சூரியகுல சேகரரும் – XI ஸ்ரீ. ரா. கணபதி அவர்கள் (நன்றி: யோகி ராம் சுரத் குமார் கும்பாபிஷேக சிறப்பு மலர்).

===========================================================================

சந்திரமௌலி என்று ஸ்ரீ மஹா பெரியவாளின் அடியாரொருவர். திருவண்ணாமலை வாசியாகும் பேறு அவருக்கு கிடைத்தது. அப்போது பெரும்பேறாக யோகி பகவானின் அணுக்கமும் வாய்த்தது. அவர் காஞ்சி செல்லும் போதெல்லாம் ஸ்ரீ சரணர் ‘விசிறி மட்டை சாமியார்’ பற்றி அவரிடம் தவறாமல் விசாரிப்பார். உடன் சில நிமிஷம் கண் மூடி தியானத்தில் இருப்பார்.
1985 டிசம்பர் மாதம் சந்திரமௌலி காஞ்சி சென்ற போது பெரியவாள் அவரை ஏகம்பன் ஆலயத்தில் நடந்த ஹோமத்துக்கு போய் பிரசாதம் பெற்று வர செய்தார். அதோடு ஸ்ரீ காமாக்ஷியின் பிரசாதத்தையும் சேர்த்து கொடுத்து, யோகிக்கு அனுப்பி வைத்தார். அதை பெற்று கொண்ட யோகி உணர்ச்சிவசமாகி கண்ணில் ஒற்றி கொண்டார். சிரசில் நெடுநேரம் வைத்துக்கொண்டார். பின் உடன் இருந்தோருக்கு விநியோகித்தார்.

ஆச்சிரியம் என்னவெனில், அன்று தான், யோகியின் -உலகமறிந்திராத – ஜெயந்தி நன்னாள்!
சுமார் மூன்று மாதம் பின்னர், சந்திரமௌலி காஞ்சி சென்ற போது, சந்திர சேகர இந்திரர், அவரிடம் வழக்கமான யோகி விசாரிப்பு செய்யவில்லை. எடுத்த எடுப்பிலேயே, ‘ நீ ஒடனே ஊருக்கு திரும்பி போய் விசிறி மட்டை ஸ்வாமியாரை டாக்ஸி வெச்சு கோவிந்தபுரம் அழைச்சிண்டு போ. அவருக்கு போதேந்திராள் சமாதி தரிசனம் பண்ணி வெச்சு திரும்ப திருவண்ணாமலைக்கு கொண்டு விடு’ என்று உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி, டாக்ஸி செலவுக்கானதை அடியார்களிடம் இருந்து திரட்டி சந்திரமௌலியிடம் கொடுத்தார்.
நாம மகிமையை, குறிப்பாக ஸ்ரீ ராம நாம வைபவத்தை தக்ஷிண தேசத்தில் பரப்பியவர்களுள் முதல் ஸ்தானம் வகிப்பவர் ஸ்ரீ போதேந்திரர்கள். கும்பகோணத்துக்கு அருகான கோவிந்தபுரத்தில் உள்ள அவரது சமாதியில் இருந்து சதாவும் ராம நாமம் ஒலித்து கொண்டிருப்பதை இன்றைக்கும் சித்த ஒருமை வாய்ந்த அடியார்கள் கேட்கின்றனர்.
அருணைக்கு திரும்பிய சந்திரமௌலி, காஞ்சி முனிவர் கூறியதை யோகி பகவானுக்கு தெரிவித்தார்.

சிறிது நேரம் கண்மூடி தியானத்தில் இருந்த யோகி, ‘பரமாச்சார்யா எங்கே இருந்தாலும் அதுவே இந்த பிச்சைக்காரனுக்கு கோவிந்தபுரம்’ என்றார்.

சந்திரமௌலி க்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

டாக்ஸி வரவழைக்கப்பட்டது. யோகி அதில் ஏறி அமர்ந்தார். சந்திரமௌலியையும் ஏற்றிக்கொண்டார்.

டிரைவரிடம் ‘காஞ்சிபுரம் போவோம்’ என்றார்.

மாலை நாலரை மணிக்கு டாக்ஸி ஸ்ரீ மடம் சேர்ந்தது.

யோகியை புரிந்து கொள்ளாத பணியாளர்கள் அப்போது ஸ்ரீ சரணரை பார்ப்பதற்கு இல்லை என்று கூறினர்.

அவர்கள் வாய் மூடுமுன்பு சாக்ஷாத் அந்த ஸ்ரீ சரணர் அங்கு வந்து யோகி பகவானுக்கு நேரெதிரே நின்றார்.

யோகி விழுந்து வணங்கினார். (‘பிச்சைக்காரன் அப்படியே தூங்கி விட்டான்’ என்று அவர் நமது எழுத்தாள சகோதரரிடம் சொன்னாராம்’. அச்சகோதரர், ‘அது என்ன தூக்கம் ன்னு நமக்கு தெரியாதா என்ன?’ என்கிறார்)

விழுந்தவர் எழுந்தார்.

எதிர்ப்பு உணர்ச்சியே இல்லாத இதய இசைவு கொண்ட இரு மஹா புருஷர்கள் எதிரெதிரே நின்றனர். இருவரும் இரு கரங்களையும் உயர்த்தினர். உள்ளமொட்டிய அவ்விருவரும் உள்ளங்கைகளை விரித்து அப்படியே நின்றனர். ஒருவரது இரு கரங்களும் எதிர் எதிரே மற்றவரது இரு கரங்களுமாக சிலையென நின்றனர்.

கனத்த மௌனத்தில் கரங்களோடு கரங்கள் பேசி கொண்டனவா? அவர்களது உட்சாரம் கரங்களின் வழி பெருகி கங்கையும், யமுனையுமாக கலந்து உரையாடினவா?

காஞ்சி கங்கை – அருணை யமுனை களின் சங்கமமா அது?

சங்கரனின் சேகரத்தில் உள்ள சந்திரன் பெருக்கும் அமுதுதான் கங்கை. யமுனையோ சூரிய புத்திரி- சூரிய தேஜஸில் இருந்து பெருகியவள்.

ஞான கதிரொளியும் கருணை நிலவொளியும் கலந்தே மக்களுக்கு அபய வரத ஹஸ்தங்களின் உரையாடல் தொடர்ந்தது.

பெரியவாள் திரும்பி ஸ்ரீ மடத்தின் உட்புறம் நடந்தார்.

யோகி திரும்பி ஸ்ரீ மடத்தின் வாயிலுக்கு நடந்தார்.

‘அவர் ஸூர்ய வம்சம்’ என்று சந்திரசேகரர் உடனிருந்தவரிடம் கூறுவது காதில் கேட்டது.
முற்றும்.

குறிப்பு: கட்டுரை மட்டும் தான் முற்றும், அருளாளர்களின் பேரருள் என்றும் எப்போதும் தொடரும்…

******

Thanks a ton to Shri Karthi Nagaratnam for typing all these painstakingly and lovingly and posted it in Sage of Kanchi group in Facebook.


Categories: Devotee Experiences

Tags:

5 replies

  1. beyond ones comprehension

  2. Iru Perum Deivankalum Inainthu thantha Divya Darisanam ………Janma Pabha Vimochanam………

  3. Not able to express in words. Tiruvilayadal Mahimai of MahaPeriyavayaa and Yogi RamSurath Kumar. Sahasra Koti Namaskarams to Venerated Sages

  4. the tamil font is not there in the mail received by me v.sundaram

    ________________________________

  5. கண்கள் பனிக்கின்றன! நாவடைக்கிறது! அற்புதம்! நன்றி!

Leave a Reply

%d bloggers like this: