சந்திர சேகரரும் சூரியகுல சேகரரும் – Parts VII and VIII

சந்திர சேகரரும் சூரியகுல சேகரரும் – VII ஸ்ரீ. ரா. கணபதி அவர்கள் (நன்றி: யோகி ராம் சுரத் குமார் கும்பாபிஷேக சிறப்பு மலர்).

=============================================================================

ஒரு மஹான் மற்றொரு மஹானிடம் அக்கறை காட்டினார், அவருக்காக கவலைப்பட்டார், அவரோடு அனுதபித்தார், அவர் நலனுக்காக தவ சக்தியை செலுத்தினார் என்றெல்லாம் சொன்னால் அசம்பாவிதம் என்று தோன்றக்கூடும். ஆயினும், இப்படியும் நிகழ்வதுண்டு. மஹானை மக்கள் புரிந்து கொள்ளாமல் கொடுமை இழைப்பதும் உண்டு தானே? அச்சமயங்களில் அவர் தமது சொந்த ரக்ஷணைக்காக தமது தவ சக்தியை பயன்படுத்தி கொள்ள மாட்டார். கொடுமைகளையும் இனியவையாக ஏற்பார். எனினும் மானுட சட்டையுள் இருப்பதால் ஒரொரு சமயங்களில் வருந்தி தவிக்கவும் செய்வார். இம்மாதிரி சந்தர்ப்பத்தில் பிறிதொரு மஹான் அவரிடம் அக்கறை கொண்டு கவலைப்படுவதுண்டு. இவர் தவிக்கையில் இவரோடு அவர் அனுதபிப்பார். இவருக்கு கொடுமை தீர்ந்து, உலக வாழ்வு என்று இவருக்கும் லேசாக இருக்கும் ஒன்றில் இவர் சௌக்கியமாக நிலை கொள்ள அவர் தமது தவத்தை பயன்படுத்துவார்.

ஸ்ரீ பெரியவாளுக்கு அணுக்கமாக இருந்து பணிபுரிந்த இருவரிடம் அவர் விதேகமுத்தி அடைந்த பின் நான் கேட்டறிந்ததில் இருந்து, அருணாச்சலத்து யோகியார் குறித்து பெரியவாளே இவ்வாறெல்லாம் செய்ததாக ஓரளவு வெளிப்படையாகவும் ஓரளவு அனுமானமாகவும் தெரிய வந்தது.

திருவண்ணாமலையில் யோகியாரை தங்க விடாமல் ஒரு கோஷ்டி அவருக்கு மிகவும் தொல்லை கொடுத்த கால கட்டம் ஒன்று உண்டாம். அப்போது, ‘ஒரு நிஜ யோகியின் அருமை தெரியாமல் சிறுமை படுத்துகிறார்களே!’ என்று ஸ்ரீ சரணர் வெளிப்படவே அக்கறை கவலையுடன் கூறியதுண்டாம். தமது வழக்கப்படியே தியானம் என்று வெளிக்காட்டாது கண் மூடியிருப்பதும் உண்டாம். எதிர்ப்புகள் நீங்கி அருணாச்சலமே ஸ்வஸ்தானம் என்று யோகியார் ஸ்வஸ்தமாக அமர்ந்த போது பெரியவாள் ‘நிம்மதி’ எனக்கூடிய மகிழ்ச்சி காட்டினாராம். இதிலிருந்து அனுமானம், எதிர்ப்பு நீங்க அவரே தமது தவ சக்தியை பயன் செய்திருக்கலாம் என்பது.

பெரியவாள் விதேக முக்தியுற்ற 1994 – ஆம் ஆண்டில் ‘அமுத சுரபி’, ‘கல்கி’ தீபாவளி மலர்களில் முறையே அவருக்கு வாயில்லா ஜீவன்களிடமும், சின்னஞ்சிறுவர்களிடமும் உள்ள அபரிமிதமான அன்பு குறித்து கட்டுரைகள் எழுதியிருந்தேன். அக்கட்டுரை ஒவ்வொன்று குறித்தும் யோகியாரின் ஆசிரமத்திலிருந்து அடியாரொருவரின் மடல் வந்தது. யோகியார் வெகுவாக சந்தோஷித்ததாகவும், கட்டுரைகள் ஆசிரமத்தில் திரும்ப திரும்ப படிக்கப்படுவதாகவும் மடல்கள் கூறின. பெரியவாளிடத்தில் இப்பெரியாருக்கு எத்துணை ஈடுபாடு என்று வியந்தேன்.

இரு மடல்களின் அடியிலும் யோகியாரே ஓரிரு வரியால் எழுதியிருந்தார். நம்பவொண்ணா விநய பாங்குடன் தமது ஆசியையே வணக்கமாக உருமாற்றி தெரிவித்திருந்ததுடன் அவற்றிலொன்றில் திருக்கை ஒப்பமும் இட்டிருந்தார் – தேவநாகரி லிபியில் தெளிவாக ‘ராம்ஸுரத்குமார்’ என்று! குறில் ‘ஸு’ தான், சந்தேகமில்லை.

‘அவரே தம் பேரை எப்படி சொல்லிக்கறார்?’ “ஸுரத்குமாரா, ஸூரத்குமாரா”, என்னன்னு சொல்லிக்கிறார் னு தெரியலை’ என்று பத்தாண்டுகளுக்கு முன்பு கூறிய ஸ்ரீ சரணரிடம் விஷயம் தெரிவிக்க இன்று அவர் ஸ்தூல உருவில் இல்லையே என்ற எண்ணம் க்ஷணகாலம் நெஞ்சை உறுத்தியது.

தொடரும்

சந்திர சேகரரும் சூரியகுல சேகரரும் – VIII ஸ்ரீ. ரா. கணபதி அவர்கள் (நன்றி: யோகி ராம் சுரத் குமார் கும்பாபிஷேக சிறப்பு மலர்).

=============================================================================
பிற்பாடு யோகியரது அடியார்களின் தொடர்பு ஏற்பட்ட பின், இவ்விஷயமாக மேலும் தெரிந்து கொண்டேன். அவர் பெயர் ராம் ஸுரத்குமாரே எனினும் அவர் ஸூரத்குமாரும் தான். அதாவது சூரிய வம்ச வழித்தோன்றலும் தான் என்பதை ஸ்ரீ மஹா பெரியவாள் வெளிப்படவே கூறியதும் உண்டாம்.

அதாவது, உத்தரப்பிரதேசத்தில் சூரிய வம்சத்தின் வழி வழி வந்துள்ள குடியில் பிறந்தவர் அவர். அக்குடியினராக இன்னும் பல சூரிய குலத்தோன்றல்கள் இன்றும் இருக்கவே செய்வர். அவர்களில் தலைமையுற்ற சூரியகுலசேகரர் இவர் எனலாம்.

யோகியாரின் அடியார்களின் தொடர்பு எனக்கு எப்படி ஏற்பட்டதெனில் அவரேதான் அவர்களை அனுப்பி வைத்தார். குறிப்பாக, அடியேனை கருவியாக கொண்டு வெளி வரும் பெரியவாளின் அருளுரை தொகுப்புகளான ‘தெய்வத்தின் குரல்’ பகுதிகளில் தாம் பெறும் நிறைவை தெரிவிக்கவே யோகியார் அந்த அடியார்களை அனுப்பி வைத்தார்.

ஆன்ம நிறைவே கண்ட அவருக்கு வேறு ‘சுய’ நிறைவு ஒன்றில்லைதான். எனவே இது அஞ்ஞானத்தில் அவதியுறும் மக்களுக்கு ஞான ஒளி காட்டும் உபதேச நூல்கள் வெளியாகின்றன என்பதில் அவரது அருட்தாபம் தீர்ந்த நிறைவு தான்!

வந்த அடியார்கள் இது தொடர்பாக பல சொன்னார்கள். யோகியார் தம்மிடம் வருவோருக்கு ‘தெய்வத்தின் குரலை’ யே வழிகாட்டும் பிரமாண சாஸ்திரமாக பரிந்து உரைக்கிறாராம். (முன்னாள் நீதிபதி ஸ்ரீ டி.எஸ். அருணாசலத்துக்கும், எழுத்தாள சகோதரர் ஸ்ரீ பாலகுமாரனுக்கும் தமது பிரதிகளையே படிக்க கொடுத்து, அதோடு நில்லாது அடுத்த முறை அவர்கள் வரும் போது இன்ன பகுதி வரை முடித்து வர வேண்டும் என்று அன்புக்கட்டளையும் இட்டிருக்கிறார்!) தம்மையே குருவாக, தெய்வமாக போற்றி உபதேசம் வேண்டும் சிலரிடம், ‘இந்த பிச்சைக்காரனுக்கு என்ன உபதேசிக்க தெரியும்? பரமாச்சார்யாதான் (மஹா பெரியவாளை யோகியார் ‘பரமாச்சார்யா’ என்றே சொல்கிறார்) இக்காலத்துக்கு உபதேசிப்பதற்கென்றே வந்தவர். அவரது அருளுரை நூல்களுக்கே போங்கள்’ என்பாராம்.

இதிலிருந்து தம்மளவில் யோகியார் தர்மாசார விதி முறைகளை கருதாவிடினும், உலகினருக்கு அவற்றின் தேவையை மறுக்காமல், மதிக்கவே செய்வதை உணர்ந்தேன். (நாம உபாசனையே அவர் அடியாருக்கு முக்கியமாக வழங்கும் சாதனை.)

இன்னும் சொன்னார்கள், ‘பரமாச்சார்யா ஒருவர் இல்லையேல், இன்று தர்மமா, பக்தியா, வேதமா, சாஸ்திரமா, புராணமா, ஸத்விஷய உபன்யாசங்களா, பாராயணமா, ஆலய உத்சவாதிகளா எதுவுமே உயிர் பெற்றிரா. சுருங்க சொன்னால், ஆன்மீகம் என்பதே அவரால் தான் நவஜீவனம் கண்டிருக்கிறது’ என்றெல்லாம் யோகியார் சாற்றுகிறாராம். (பின்னாளில் நானே காத்து நிரம்ப கேட்டேன். தன் ‘தந்தை’ பற்றி அவர் என்ன சொல்வாரோ, அதையே பெரியவாளை குறித்தும் திரும்ப திரும்ப உணர்ச்சியுடன் கூறியதை, ‘பரமாச்சார்யா இங்கே, அங்கே, எங்கேயும் இருக்கிறார்!’).

அவரது ஆசிரமத்தில் அதிகம் ஒலிக்கும் கீதம் ஸ்ரீ பெரியவாளின் ‘மைத்ரீம் பஜத’ தானாம்! அதற்கு பொருளும் விளக்க செய்கிறாராம். அங்கு அதிகம் படிக்கப்படும் சத்விஷயம் பெரியவாள் குறித்த நூல்கள் தாம். (பின்னாளில் ஆசிரமத்தின் மைய மன்றத்தில் பெரியவாளின் திருவுருவ படமே வைக்கப்பட்டு அதற்கு அகண்ட தீப உபசாரமும் நடந்து வருகிறது.)

பெரியவாளிடம் யோகியாரின் பெருமதிப்பு பற்றி கேட்க கேட்க எனக்கு அவரிடமே பெருமதிப்பு ஓங்கியது. ஆன்மவுலகில் இன்று இவரே ஒரு சுடர் தாரகையாக ஜ்வலிப்பவர். ஆயிரமாயிரமவர் – வெளிநாட்டாரும்கூட – இவரே ரக்ஷகர், குரு, தெய்வம் என்று அனுபவ பூர்வமாக கண்டு ஆசிரயிக்கும் உயர்வு பெற்றவர். தென் பாண்டி நாட்டில் காணிமடம் என்ற இடத்தில் இவருக்கு ஆலயம் அமைக்கப்பட்டு, இவரது விக்கிரகம் பிரதிஷ்டையாகி, நம்பூதிரி அர்ச்சகரை கொண்டு யதோக்தமாக நித்திய பூஜை நடந்து வருகிறது. அப்படிப்பட்டவர் தம்மையே புகல் எனக்கொண்டோரிடம் பெரியவாளின் புகழ் கூறி, அவர் புகன்றதையே அவர்கள் படித்து பயின்று பயனுற வேண்டுமென பணிக்கிறார் என்றால்? ஒரு மஹான் தமக்கு சம காலத்தவரான இன்னொரு மஹானை இந்த அளவுக்கு கொண்டாடியதாக நான் வேறு எடுத்துக்காட்டு கண்டதில்லை.

தொடரும்

******

Thanks a ton to Shri Karthi Nagaratnam for typing all these painstakingly and lovingly and having posted it in Sage of Kanchi group in Facebook.



Categories: Devotee Experiences

Tags:

2 replies

  1. Please, Parts 4 and 5 do not open. I have followed all instructions of Google. But no luck. Can you please post it again or at least a link? Thank you very much.

  2. Still the same problem remains, please.

    2012/10/31 Sage of Kanchi

    > ** > Panchanathan Suresh posted: “சந்திர சேகரரும் சூரியகுல சேகரரும் – VII > ஸ்ரீ. ரா. கணபதி அவர்கள் (நன்றி: யோகி ராம் சுரத் குமார் கும்பà” >

Leave a Reply

%d bloggers like this: