சந்திர சேகரரும் சூரியகுல சேகரரும் – Parts I and II

சந்திர சேகரரும் சூரியகுல சேகரரும் – I ஸ்ரீ. ரா. கணபதி அவர்கள் (நன்றி: யோகி ராம் சுரத் குமார் கும்பாபிஷேக சிறப்பு மலர்).

1984 ஆகஸ்ட் இறுதி நாள்களில் ஒன்று. பல ஆண்டுகளுக்கு பிறகு காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவாளை தரிசிக்கிறேன். அந்நீண்ட இடைவெளிக்கு ஈடு செய்தாற்போல பரம ஏகாந்தத்தில் கருணாமூர்த்தியுடன் பேரின்ப உரையாடல் கிடைத்தது. அந்த இடையாண்டுகளில் நான் நெருங்கி பக்தி பூண்டிருந்த ஸ்வாமி ஸ்ரீ சத்ய சாயிபாபா பற்றி பேச்சு படர்ந்து ஹித சுகமாக முடிந்தது.

சட்டென ஸ்ரீ பெரியவாள், ‘இங்கே நம்ம பக்கத்துலேயே ஒத்தர் ரொம்ப பிரக்யாதி ஆயிண்டு வராரே! நாளுக்கு நாள் நெறய பேர் போயிண்டு, நல்லபடியா சொல்லிண்டு வராளே! அதைப்பத்தி ஏதாவது தெரிஞ்சுண்டிருக்கியா?’ எனக் கேட்டார்.

யாரை குறிப்பிடுகிறாரென்று புரியவில்லை. என்னை விசேஷமாக ஈர்த்த ஓரிரு ஆன்மீக பெரியவர்கள் தவிர மற்றவர் குறித்து நான் தெரிந்து கொள்வது ஸ்வல்பமே.ஆயின் பெரியவாள் குரலிலிருந்தும் முகபாவத்திலிருந்தும் அவர் குறிப்பிட்ட அப்பெரியாரிடம் அவருக்கிருந்த ஆழ்ந்த நல்லபிப்ராயம் தெற்றென தெரிந்ததால், அவரை நமக்கு அடையாளம் புரியவில்லையே, என்பதில் சற்றே வருத்தத்துடன், ‘பெரியவா யாரை சொல்றா தெரியலையே?’ என்றேன்.பெரியவாள் குழந்தையாக மாறினார். தமது இரு செவிகளுக்கும் அருகாக இரு கைகளையும் தூக்கி முன்னும் பின்னும் அழகுற ஆட்டினார். யானை இரு காதுகளையும் ஆட்டிக்கொள்ளும் அபிநயம்!ஸ்ரீ கணநாதன் தனதிரு செவிகளையும் இப்படி விசிறி போட்டுக்கொண்டு, கன்னத்தில் பெருகும் மதநீர் அதில் குளிர ‘ஜிலீர்’ இன்பம் பெருகுவதையும், மதநீரை பருகும் வண்டுகள் செவியாட்டத்தில் பறந்தோடுவதும், மீண்டும் வந்து மொய்ப்பதுமாக அல்லாடுவதையும், பெரியவாள் ரசமாக வர்ணிப்பதுண்டு. எனவே, கணபதியுபாசகர் எவரையோ குறிப்பிடுகிறார் என எண்ணினேன். அப்படிப்பட்ட ஒருவரை நினைவு கொண்டேன். ஆனால், உடனேயே ‘பிரக்யாதி’; நாளுக்கு நாள் நெறைய பேர் போயிண்டு’ என்பதெல்லாம் அவருக்கு பொருந்தாது என்றும் கண்டேன். அந்த அடைமொழிகளுக்கு பொருத்தம் உள்ளவராக கணபதி என்றே பெயர் தொடங்கும் வேறொரு பெரியாரின் நினைவு வந்தது.

அவரா என்று பெயரை சொல்லி கேட்டேன்.

‘அவர் மைசூர்ன்னா? நான் நம்ம பக்கத்துலேயே இருக்கறவர் ன்னு சொல்லலை?’ என்றார் ஸ்ரீ சரணர்.

யோசித்தேன். பயனில்லை.

‘தெரியலை’ என்றேன்.

‘விசிறி மட்டை ஸ்வமியார்’ என்றார் அவர்.

தொடரும்

சந்திர சேகரரும் சூரியகுல சேகரரும் – II ஸ்ரீ. ரா. கணபதி அவர்கள் (நன்றி: யோகி ராம் சுரத் குமார் கும்பாபிஷேக சிறப்பு மலர்).

===========================================================================அப்படி ஒருவரை நான் கேள்விப்பட்டதேயில்லை. என் தோற்றத்திலிருந்தே என்னுடைய தெரியாமையை புரிந்து கொண்ட ஸ்ரீ சரணர், ‘ஒட்டிக்கு ரெட்டியா விசிறி, அதோட கொட்டாங்கச்சியும் வெச்சுண்டு திருவண்ணாமலையிலே’ என்று பலமாகவே ‘க்ளூ’ கொடுத்தார்.’ஸுரத்குமார்’ என்றேன்.

ஒப்புதலை தலையாட்டலால் தெரிவித்த ஸ்ரீ சரணர், ‘அங்கே உனக்கொன்றும் ‘டச்’ இல்லையாக்கும்’ என்றார்.என் ரக்ஷிப்புக்கென்றே ஏற்பட்டவர்கள் என நான் நம்புபவர்களை தவிர மற்ற பெரியார்களுடன் தொடர்பு கொள்வதில்லை என்பது அவர் அறியாததில்லை.நான் இந்த அருணாச்சல யோகியாரிடம் ‘டச்’ வைத்து கொள்ளாவிடினும் அவர் என்னை இருமுறை ‘டச்’ செய்திருக்கிறார். என்னுடைய இரண்டு கட்டுரைகளை படித்து திருப்தி பெற்ற இரண்டு சமயங்களில் தமது இரண்டு சென்னை அடியார்களை என் வீட்டிற்கு அனுப்பி வைத்து தம்முடைய மகிழ்ச்சியையும், ‘தந்தை’ என்று தாம் கூறும் இறைவனின் ஆசியையும் தெரிவித்திருக்கிறார். நான் அவரிடம் தொடர்பு கொள்ளாத போதிலும் உயர் ஸ்தானத்திலுள்ள அவர் மெனக்கிட்டு என் முகவரி கேட்டறிந்து மகிழ்ச்சி தெரிவித்து வர ஆள் அனுப்பிய உத்தம பண்பு அந்த இருமுறையும் என் இதயத்தை ‘டச்’ செய்தது. ஆயினும் என் வழக்கபடியே அதற்காக நான் அவரிடம் தொடர்பை வலுப்படுத்தி கொள்ளவில்லை.இதை ஒருவாறு பெரியவாளிடம் கூறினேன்.

அதற்கு அவர், ‘ஒரு தரம் பாராட்டி சொல்லியனுப்பினார். அப்படியும் நீ அங்கே போகலை. ஆனாலும், ரெண்டாந்தரமும் சொல்லி அனுப்பினாராக்கும்!’ என்றார். தம்மை மற்றவர் கௌரவிக்க வேண்டும் என்பதை கருதாமல் தாம் மற்றவரிடம் நல்லதாக ஒன்று கண்டால் அதை பாராட்ட வேண்டும் என்று மட்டுமே கருதிய அருணாச்சல யோகியின் உத்தம பாங்கில் பெரியவாளுக்கு இருந்த ரசிப்பு அவரது குரலில் ததும்பியது.

தொடரும்

******
Thanks a ton to Shri Karthi Nagaratnam for typing all these painstakingly and lovingly in Sage of Kanchi group in Facebook.Categories: Devotee Experiences

Tags:

1 reply

  1. Hitha sukham!! This explains that it went off well! More over, Sri. Raa. ga. is no more to throw more light on this, I think!

%d bloggers like this: