‘மஹா பெரியவாளின் கமல பாதங்களில் நான் முழுமையாக சரணாகதி அடைந்துவிட்டேன். எனக்கு எல்லாமே அவர் தான்’ என்று சொல்லும் கடம் வித்வான் விநாயக ராம் இல்ல பூஜை அறையில் திரும்பும் இடமெல்லாம் மஹாபெரியவா படங்கள்தான்.
பூஜை அறையின் அலமாரியில் ஒரு பிள்ளை யாரைக்காட்டி, பிள்ளையார்தான் எனக்கு தாயும், தந்தையும். நானும், என் சகோதரியுமாக இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தோம். எனக்கு ராமசேஷன் என்றும் என் சகோதரிக்கு சீதா லட்சுமி என்றும் பெயர் வைத்தார்கள். எங்கள் இரண்டு பேருக்கும் அடிக்கடி உடம்புக்கு வரும்; அதாவது, ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கும் வரும். பெற்றோர்களுக்கு ஒரே கவலை. ஒரு குழந்தையை வேறு யாருக்காவது ஸ்வீகாரம் கொடுக்கும் படி ஆலோசனை சொன்னார் ஒரு ஜோசியர். என் பெற்றோர்கள் வேறு யாருக்காவது ஸ்வீகாரம் கொடுப்பதை விட, இறைவனுக்கே ஸ்வீகாரம் கொடுக்க முடிவு செய்தார்கள். அதன் பேரில் சாஸ்திரப்படி, பிள்ளையார் கோயிலில் வித்து, பிள்ளையாருக்கே என்னை ஸ்வீகாரம் கொடுத்தார்கள். அப்போது எனக்கு வைக்கப்பட்ட பெயர் தான் வினாயக ராமன். ஆக, எனக்கு தாயும், தகப்பனாரும் பிள்ளையார்தான். நான் பிள்ளையாரின் பிள்ளை.
பதினாலு, பதினஞ்சு வயசில் இருந்தே பெரிய வித்வான்களுடைய கச்சேரிகளுக்கு கடம் வாசிப்பேன். அப்படி ஒரு தடவை திருச்சியில் தியாகராஜ பாகவதர் கச்சேரி. அப்போது எனக்கு உடம்பு சரியில்லை. அப்பாவுக்கு திருச்சிவரை என்னை தனியாக அனுப்பத் தயக்கம். ‘பையனை என் கூடவே காரில் அழைத்துக் கொண்டுபோய், கச்சேரியை முடித்துவிட்டு, பத்திரமாக வீட்டில் கொண்டு வந்து சேர்த்து விடுகிறேன்’ என்று பாகவதர் சொன்னதன் பேரில், என்னை அனுப்பி வைத்தார். இரவு காரில் புறப்பட்டோம். அதிகாலை ஐந்து மணி இருக்கும். காரின் பின் சக்கரத்தில் ஏதோ வித்தியாசமான சப்தம் வருவதை கவனித்து, காரை நிறுத்தச் சொன்னார் பாகவதர். இறங்கிப் பார்த்தால், பின் பக்க சக்கரங்களில் ஒன்றின் எல்லா நாட்களும் லூசாகிக் கழன்று விழுந்துவிட்டன. இன்னும் கொஞ்ச தூரம் சென்றிருந்தாலும், ஒரு சக்கரம் கழன்று, கார் விபத்துக்குள்ளாகி இருக்கும். அப்போதுதான் கவனித்தோம், காரை நிறுத்திய இடத்துக்கு பக்கத்தில் சிறிய பிள்ளையார் கோயில். எங்கள் உயிரைக் காத்த பிள்ளையாரை நன்றியோடு வணங்கிவிட்டு, அடுத்து வந்த ஒரு பஸ்ஸில் ஏறி திருச்சி சென்றடைந்தோம்.”
பூஜை அறையின் நடுவில் ஓர் ஊஞ்சல். அதிலும் பெரிதாக இரண்டு மஹா பெரியவா படங்கள். அதனை ஒட்டினாற் போல ஒரு பூஜா மண்டபம். அதில் ஒரு கடம். அதன் முன்பாக வெண்கலத்தில் செய்த ஒரு கடம். பக்கத்தில் சின்னஞ் சிறு மஹா பெரியவா உருவம். இதன் பெருமையைச் சொல்லட்டுமா? மானா மதுரையில்தான் நல்ல முறையில் கடம் செய்வார்கள். அப்படி மானாமதுரையில் புது கடம் ஒன்றை வாங்கிய சில தினங்களில் காஞ்சீபுரம் சென்றபோது, அந்த கடத்தையும் எடுத்துக் கொண்டு போயிருந்தேன். என்னை ஆசிர்வதித்த பெரியவா, அந்த கடத்தை வாங்கி இரண்டு தட்டு தட்டினார். எனக்கு ரொம்ப சந்தோஷம். மஹா பெரியவா தொட்டு ஆசிர்வதித்த அந்த கடத்தை கச்சேரிக்கு வாசிக்கக் கூடாது என முடிவு செய்தேன். என் பூஜை அறையில் அதற்கென ஒரு மண்டபம் செய்து, அதிலே வைத்து, பூஜித்து வருகிறேன்.
ஒருமுறை, அமெரிக்காவுக்குக் கச்சேரிக்குச் சென்றபோது, ஒரு தடவை என்னுடைய கடம் உடைந்து போய்விட, நான் மனம் நொந்துபோனேன். ஆனால் மஹா பெரியவாளின் ஆத்மார்த்தமான பக்தரும், என் சகோதரருமான பிரதோஷம் வெங்கட்ராம ஐயர் சொன்னபடி, அங்கேயே பெரியவாளை ஆத்மார்த்தமாக பிரார்த்தித்துக் கொண்டு, அவரது படத்தை வைத்து வலம் வந்து வணங்கினேன். என்னோடு சேர்ந்து அமெரிக்காவில் கச்சேரி செய்வதற்காக லண்டனிலிருந்து அமெரிக்கா வந்த தபலா கலைஞர் ஜாகிர் உசேன், அப்படியே லண்டன் பாரதிய வித்யாபவனில் விசாரித்து, லண்டன் ரசிகர் ஒருவரிடமிருந்து ஒரு கடத்தை வாங்கி எடுத்துக் கொண்டு வந்துவிட்டார். எனக்கு இன்னொரு ஆச்சரியமும் காத்திருந்தது. முந்தைய முறை லண்டனில் கச்சேரி செய்த போது, நான் அந்த ரசிகருக்கு அன்பளிப்பாகக் கொடுத்ததுதான் அந்த கடம்.
நன்றி: “தீபம்” ( ‘கல்கி’ வழங்கும் ஆன்மீக இதழ்)
*****
Thanks a ton to Shri Srinivasan Subramanyam who had posted this Sage of Kanchi group in Facebook.
Categories: Devotee Experiences
What a blessed soul.
SARVESWARN ARUL,
Aanandamanaana anubhavam
Very nice. every experience is unique. I want to upload some rare paintings and the video of abhisegam to Mahaperiyava at his adhistanam on 27th sep 2012 Pradosham. Pl let me know how to reach you
Prakash
HARA HARA SANAKARA, JAYA JAYA SANKARA. HARA HARA SANKARA, JAYA JAYA SANKARA. HARA HARA SANKARA, JAYA JAYA SANKARA. HARA HARA SANKARA, JAYA JAYA SANKARA. THENNADUYA PERIAYAVAA POTRI, ENNATTAVARUKUM IRAIVA POTRI, SARVAGNA SARVAVAYAPI PERIYAVAA CHARANAM, MAYAPIRAPAGATRUM MAHAPERIYAVAA MALARADI POTRI. RADHE KRISHNA.