‘பெரியவா, பாம்பு… பாம்பு…’

இன்னொரு நாள்… பெரியவா தன்னோட ஒத்தை ரூம்லே உட்கார்ந்து ஜபம் பண்ணிண்டிருந்தார். எப்பவும் ஜபம் பண்றபோது கண்ணை மூடிண்டிருப்பார். நாங்க ஜன்னல் வழியா அவரைத் தரிசனம் பண்ணுவோம்.ஒரு நாள், பெரியவா ஜபம் பண்ணிக் கொண்டிருக்கிறபோது, ஒரு பாம்பு மெதுவா ஊர்ந்து போய், அவர் மடியிலே ஏறிப் படுத்துண்டுது. அதைப் பார்த்ததும், நாங்க நடுநடுங்கிப் போயிட்டோம். பெரியவாளை அது ஒண்ணும் பண்ணிவிடக் கூடாதே என்று பயந்தோம். அதிகம் சத்தம் கித்தம் செய்யாமல், ‘பெரியவா, பாம்பு… பாம்பு…’ என்று சொன்னோம். பெரியவா உடனே கண்ணை விழிச்சுப் பார்த்தா. உடுத்தியிருந்த காஷாயத் துணியை அப்படியே பாம்போடு சேர்த்து, தூக்கிப் போட்டுட்டு, கௌபீனத்தோடு வெளியிலே வந்தார். வேற ஆடை கொடுத்தோம். எங்களுக்கு அப்போதுதான் ஆசுவாசமாக இருந்தது.

‘நீங்க இன்னிக்குத்தான் இதைப் பார்க்கறேள். அது இங்கே வர்றதை நான் நாலஞ்சு நாளாவே பாத்துண்டுதான் இருக்கேன்’ என்றார் பெரியவா. எங்களுக்குத் தூக்கிவாரிப் போட்டுது. ‘அடிச்சுடலாமே’ என்று சிலர் சொன்னபோது, ‘கூடாது’ என்று தடுத்துவிட்டார். ‘எந்தப் பிராணிக்கும், எந்த ஜீவராசிக்கும் தீங்கு இழைக்க மாட்டேன்னு, சந்நியாசியாகிறபோதே சங்கல்பம் பண்ணியிருக்கேன். அதைக் காப்பாத்த வேண்டாமா நான்?’ அப்படின்னு எங்களை சமாதானம் பண்ணினார்.

அப்படித்தான், தேனம்பாக்கத்தில் நிறைய நாய்கள் அங்கேயும் இங்கேயும் அலைஞ்சுண்டிருக்கும். கணக்கே சொல்ல முடியாது. ஏகப்பட்ட நாய்கள். ஒருமுறை, ஒரு பாம்பு படமெடுத்து நிக்கறது. மூணு நாலு நாய்கள் குரைச்சிண்டே அதைச் சுத்தி சுத்தி வருது. பெரியவா முதல்ல பாம்பை பத்திரமா விரட்டிடுன்னார். அது எப்படியோ தப்பிச்சுப் போயிடுத்து. ஆனா, நாய்கள் அட்டகாசம் ஓயவே இல்லே. முனிசிபாலிடியிலே சொல்லி பிடிச்சுண்டு போக ஏற்பாடு பண்ணலாமே என்று சொன்னபோது, தடுத்துவிட்டார் பெரியவா. அந்தப் பாபத்தைச் செய்யக் கூடாதுன்னுட்டார். ‘எச்சில் இலைகளை வெளியே போட்டுடுங்கோ. எல்லாம் அங்கே போயிடும். இங்க அதுகள் சுத்தி வந்து உங்களுக்கு உபத்திரவம் தராது’ன்னு சொல்லிட்டார். பெரியவா வெளியிலே கிளம்பினா, அம்பது அறுபது நாய்களும் அவரோடு கிளம்பிடும். அதுகளுக்குத் தெரியும், யார் இங்கே எஜமானன்னு!

எப்பவும் கை- காலை சுத்திகரிக்கிற போது, பூமியில ஒரு சின்னக் குழி தோண்டி, அதுலதான் மண்ணால கை கால் எல்லாம் தேச்சு, வாய் கொப்பளிச்சுத் துப்புவார், பெரியவா. ஒரு நாள், கீழே குனிஞ்சு அந்தக் குழியிலே இருந்து எதையோ கையால எடுத்து மெள்ள தூக்கி வெளியில விட்டார்.

அது, கட்டெறும்பு!

******

Thanks a ton to Shri ‘Well Bred’ Kannan who had posted this in Sage of Kanchi group in Facebook.Categories: Devotee Experiences

Tags: , ,

2 replies

  1. Karunyamurthi Maha Periyava!

Leave a Reply

%d bloggers like this: