வெள்ளிச் சொம்பில்… குங்குமப் பிரசாதம்!

கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது திப்பிராஜபுரம். அழகிய இந்த கிராமத்தின் சிறப்பு- அக்ரஹாரம். வேத பாடசாலையும் அமைந்துள்ள இந்த கிராமத்தில், வேத விற்பன்னர் கள் மற்றும் சாஸ்திர பண்டிதர்கள் ஆகியோர் வாழ்ந்தனர்.
கட்டுக் குடுமியும் கழுத்தில் ருத்திராட்சமுமாக மாணவச் சிறுவர்கள் பலர் இங்கும் அங்குமாக ஓடியாடி விளையாடுவதே அத்தனை அழகு! அது மட்டுமா? அக்ரஹார வீட்டு வாசல்களில்… காலை- மாலை இரண்டு வேளையும் காவிக் கோலங்கள் நிறைந்திருக்கும். அக்ரஹாரப் பெண்கள், தீபமேற்றி சுலோகங்களைப் பாடுவர். இதே போல் திருவிசநல்லூர், திருவிடைமருதூர், கோவிந்தபுரம் ஆகியவையும் அழகு தவழும் கிராமங்கள். காஞ்சி மகா பெரியவாள் இந்த கிராமங்களை பெரிதும் நேசித்தார்.

ஒருமுறை, திப்பிராஜபுரத்தில் முகா மிட்டிருந்தார் பெரியவாள். இந்த கிராமத்து மக்கள், மகா பெரியவாளிடம் மிகுந்த பக்தி வைத்திருந்தனர். ஒரு நாள்… ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர’ எனும் கோஷம் முழங்க, மேனாவில் (பல்லக்கு) வீதியுலா வந்தார் காஞ்சி பெரியவாள். வழிநெடுக வாழைமரமும் மாவிலைத் தோரணங்களும் கட்டப்பட்டிருந்தன. வீடுகள் தோறும் வாயிலில் கோலமிட்டு, தீபமேற்றி வைத்திருந்தனர்.

ஒவ்வொரு வீட்டு வாசலிலும் மேனா நின்றது. அந்தணர்கள் வேத மந்திரங்களை முழங்கினர்; பூர்ண கும்பத்தைத் தொட்டு ஆசிர்வதித்தார் பெரியவாள். அனைவரும் அவரை நமஸ்கரித்தனர்.

மெள்ள நகர்ந்து கொண்டிருந்தது மேனா. இந்த நிலையில்… தனவந்தர் ஒருவர், தனது வீட்டில் பரபரப்பும் பதட்டமுமாக இருந்தார். ‘பெரியவாளை தரிசிக்க வேண்டும்’ என்று எண்ணி, பூர்ண கும்பத்துக்காக பெட்டிக்குள் வைத்திருந்த வெள்ளிச் சொம்பை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டாலும் ‘ஊரே கூடியிருக்கும் இந்த வேளையில் வாசலுக்கு வந்து பெரியவாளை தரிசிக்க வேண்டுமா?’ என்று சிந்தித்தபடி தவித்து மருகினார்.

அவரது வீட்டு வாசலின் முன் நின்றது மேனா. வீட்டுக்குள் இருந்து தயக்கத்துடன் எட்டிப் பார்த்த தனவந்தரைப் பார்த்து, ‘வா இங்கே…’ என்பது போல் சைகை காட்டினார் பெரியவாள்!

பதறிப் போன தனவந்தர், கையில் வைத்திருந்த வெள்ளிச் சொம்புடன், ஓடி வந்தார். பெரியவாளை நெருங்கி பவ்யமாக நின்றார். அவரின் கையிலிருந்த சொம்பை ‘வெடுக்’கென பிடுங்கினார் பெரியவாள்.

தனவந்தருக்குத் தூக்கிவாரிப் போட்டது. ‘இந்த சொம்பை அலம்பவோ, தீர்த்தம் (தண்ணீர்) நிரப்பவோ இல்லையே…’ எனும் குற்ற உணர்ச்சியில் கூனிக் குறுகி தலை கவிழ்ந்து நின்றார் தனவந்தர்.

பல்லக்கில் வைத்திருந்த குங்குமப் பிரசாதத்தை ஒரு பிடி அள்ளி எடுத்த பெரியவாள், தனவந்தரின் வெறும் வெள்ளிச் சொம்பினுள் போட்டு, அவரிடம் வழங்கி, ”«க்ஷமமா இரு” என்று ஆசிர்வதித்தார்.

உடனே பெரியவாளின் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்தார் தனவந்தர். அவரால் பேசவே முடியவில்லை. பொலபொலவென கண்ணில் நீர் பெருகிற்று. சில நிமிடங்களுக்குப் பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட தனவந்தர், ‘குரு மகா தெய்வமே…’ என்று பேச முற்பட்டார். ஆனால், மெல்லிய புன்னகையுடன், ‘போகலாம்’ என்பது போல் சைகை காட்டினார் மகா பெரியவாள். மேனா நகர்ந்தது.

ஊர் மக்களுக்கு ஆச்சரியம்! ‘அட… பக்தி சிரத்தையுடன் எல்லோரும் பூரணகும்பம் அளித்தபோது, அவற்றைத் தொட்டு மட்டுமே ஆசீர்வதித்த பெரியவாள், இந்த தனவந்தருக்கு மட்டும் குங்குமம் கொடுத்து ஆசீர்வதிக்கிறாரே? பரவாயில்லை… தனவந்தர் அதிர்ஷ்டசாலிதான்’ என்று பேசிக் கொண்டனர்.

உண்மைதான்! சீரும் சிறப்புமாக வாழ்ந்த தனவந்தர், சமீபத்தில் நொடித்துப் போய் விட… இதையடுத்து வெளியே வருவதும் இல்லை; எவரையும் சந்திப்பதையும் தவிர்த்து வந்தார். அவமானத்தால் வீட்டிலேயே அடை பட்டுக் கிடந்தார். அதனால்தான் பெரியவாள் வீதியுலா வந்தபோதும் வெளியே வர தயங்கினார் தனவந்தர்.

இதை உணராமலா இருப்பார் பெரியவாள்? அந்த தனவந்தர் வாழ்ந்து கெட்டவர் என்பதை அறிந்தவர், வீதியுலாவின் போது அவரை அழைத்து, அவர் கையில் இருந்த சொம்பில் குங்குமத்தையும் வழங்கி அருள் புரிந்தார்.

சில மாதங்களில்… தனவந்தரின் குடும்பம் மெள்ள முன்னேறியது. படிப்படியாக செல்வம் சேர… மீண்டும் தழைத்தோங்கியது தனவந்தரின் குடும்பம். பழைய நிலையை விட இன்னும் பல படி முன்னேறினார்!

இதையறிந்த திப்பிராஜபுரம் மக்களுக்கு பெரியவாள் மீது இருந்த பக்தியும் அன்பும் பல மடங்கு அதிகரித்தது.



Categories: Devotee Experiences

Tags:

2 replies

  1. Pls give us periyava’s sri chakra vilakkam

  2. Please translate to English all that is in Tamil.Thank you.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading