Paramacharya on Dhanam

ஆடிட்டர் ஒருவர் தர்மகாரியங்களில் ஆர்வமாக ஈடுபடுவார். ராமநவமி, கிருஷ்ணஜெயந்தி, சங்கர ஜெயந்தி என்று எந்த விழாவாக இருந்தாலும் அவர் முதல் ஆளாக முன்னிற்பார். ஏழை எளியவர்கள் மீது இரக்கம் கொண்டு உதவி செய்வார். அவரை ஊர்மக்கள் “பெரியவர்’ என்று தான் அழைப்பர். காஞ்சிப்பெரியவரிடத்தில் ஆடிட்டருக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு.
ஆடிட்டரின் மூத்த மனைவி காலமானபின், பெரியவரின் ஆசியுடன் இரண்டாம் கல்யாணமும் செய்து கொண்டார். நான்கு பையன்களும் ஒரு பெண்ணுமாக ஐந்து பிள்ளைகள் இருந்தனர். பெரியவரைத் தரிசிக்க வரும்போதெல்லாம் , ஆடிட்டரைப் பார்த்து,””கர்ணன் மாதிரி எல்லாருக்கும் தானதர்மம் செய்றே!” என்று அன்போடு சொல்வார். காலம் ஓடியது. ஆடிட்டரின் பிள்ளைகளும் ஆடிட்டர்களாகவே பணியாற்றினர். பெண்ணும் ஒரு ஆடிட்டரையே திருமணம் செய்து கொண்டு செல்வச்செழிப்போடு வாழ்ந்து வந்தார். அவருக்குப் பிறந்த பையனும் ஆடிட்டர் தான்.
பெற்றோர் மறைவுக்குப்பின், பிள்ளைகள் எல்லாம் தானதர்மம் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனாலும், அப்பா வகித்து வந்த தர்ம ஸ்தாபனப் பதவிகளில் மூத்தமகன் இருந்து வந்தார். தான தர்மம் என்று யாரும் கேட்டால், “”அது என்ன விலை? எந்த கடையில் கிடைக்கும்?” என்று கேட்கும் அளவுக்கு அவருடைய நிலை மோசமாக இருந்தது.

ஒருசமயம், அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. பரிசோதித்ததில், “கேன்சர்’ என்று சொல்லிவிட்டார்கள். அவருக்கு பேர் சொல்ல ஒரு பிள்ளையும் இல்லை. அவரது மனதை கவலை வாட்டியது. குடும்பத்தின் மதிப்பிற்குரிய மகானான காஞ்சிப்பெரியவரைத் தரிசித்து வருவதென்று முடிவெடுத்து காஞ்சி மடத்திற்குப் புறப்பட்டார்.

“”சுவாமி! அடியேனின் பணிவான நமஸ்காரம்! எனக்கு ரத்தஅழுத்தம், சர்க்கரைநோய் ரொம்ப காலமாக இருக்கு! இப்போ கேன்சரும் வாட்டி வதைக்குது! மனசாலும், உடம்பாலும் நான் படும் அவஸ்தைகளை சொல்லி முடியாது. பெரியவா நீங்க தான் எனக்கு நல்வழிகாட்டி அனுகிரஹம் பண்ணணும்!” என்று சொல்லி அழுதார்.

“”உன்னை ரொம்ப நன்னாவே எனக்குத் தெரியும்! உங்கப்பா தானதர்மங்களை கர்ணன் மாதிரி செய்து வந்தார். அதனால் ஜனங்களெல்லாம் “பெரியவர்’ என்று அவரை மதிப்போடு கூப்பிடுவாங்க. விதியை யாராலும் மாத்தி எழுத முடியாது.
கிணத்திலே தண்ணீர் இருக்கு! ஆனால், அது தண்ணீரை தன்னுடையது என்று சொல்லி சொந்தம் கொண்டாடுவதில்லை! மரத்திலே பூக்கள் அடுக்கடுக்கா பூத்துக் குலுங்குது! ஆனால், பூவெல்லாம் எனக்குத்தான் என்று மரம் ஆர்ப்பரிப்பதில்லை! பசு பால் தருகிறது. பால் முழுவதும் தனக்கு தான் என்று பசு உரிமை பாராட்டுவதில்லை! உனக்கும் பட்டம் பதவிகள் இருக்கிறது. ஆனால், அந்த பதவியின் பயனாக நாலுபேருக்கு நீ நல்லது செய்யவில்லை. அதனால் தான் இந்த வேண்டாத கஷ்டமெல்லாம் உனக்கு வந்துவிட்டது. பணத்தோடு மனுஷனுக்கு குணமும் மிக அவசியம். உங்கிட்ட இருக்கும் பணத்துக்கு நீ டிரஸ்டி மட்டும் தான். சொந்தக்காரன் இல்லை என்பதை புரிந்து கொள்,” என்று அவரது மனதில் பதியும்படி எடுத்துச் சொன்னார்.

அந்த ஆடிட்டர், தான் நடத்தி வந்த வாழ்க்கை முறையை எண்ணி வருந்தியதோடு இனிமேல் தந்தையைப் போல தானதர்மங்களை செய்து வாழ்வது என்ற முடிவுடன் அங்கிருந்து கிளம்பினார்.



Categories: Devotee Experiences

Tags:

2 replies

  1. Great lesson to all of us

  2. GREAT

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading